களம் என்பது இங்கே வேறுவேறானதுதான். மாடுகளுக்கு ஜல்லிக்கட்டு. மனிதர்களுக்கு வாழ்க்கை. ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் மிருகங்களும், மனிதர்களும் ஒரே நேர்கோட்டில் இணைந்து பயணிக்கிறார்கள். அது ஆதியிலேயே குருதியில் கலந்த பிறப்பின் குணம். சில நேரங்களில் மிருகங்களிடம் கூட தர்ம, நியாயங்களைக் காண முடியும். வளர்ந்த மனிதனோ, எல்லா தீய குணங்களையும் செடிகளின் இடையில் வளரும் களையின் தாக்கமாய் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு சுற்றி வருகிறான்.
இதோ, ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டின் உள்ளே புதைந்து கிடக்கும் நிகழ்வுகளையும், நெகிழ்வுகளையும், அதே ஆட்டக்களத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், வாடிவாசலில் நிற்கும் ஒவ்வொரு வீரனும், வெளியில் வரவிருக்கும் வெறுப்பு ஊற்றப்பட்ட மிருகத்தினை அடக்கக் காத்திருக்கும் இன்னொரு மிருகம் என்பதையும் வர்ணனைகளுடன் கண் முன்னே காட்சிப்படுத்துகிறது சி.சு.செல்லப்பா அவர்களின் ‘வாடிவாசல்’.
’மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு; மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!’