Description

அழகர் கோயில்

மண்ணின் வரலாறும், பண்பாட்டின் வரலாறும் இணைந்ததே கோயில் வரலாறு.  ஆனால் பல  பெருங்கோயில்களின் வரலாறுகள் புராணங்கள் புனைந்ததாக மாறி தெய்விகத் தன்மை அடைந்துவிட்டன.

கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு, கோயில் கட்டடத்தின் அமைப்பை விவரிப்பது என்ற சட்டகத்தில் அமைந்துள்ள ஏராளமான கோயில், ஆய்வுகள் அந்தந்தக் கோயிலைப் பற்றி அறியும் தம்முடைய பக்தர்களுக்கு மட்டுமே ஆர்வமூட்டக் கூடியவை. ‘அழகர் கோயில்’ நூலோ, தலைப்பு ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கக் கூடியது. இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மட்டுமல்லாமல், நாட்டார் வழக்காறுகள், கள ஆய்வுச் செய்திகள் முதலானவற்றின் அடிப்படையில், குடியிருப்புகளுக்கு வெளியே தனித்து நிற்குமொரு சமூகப் பண்பாட்டு நிறுவனத்திற்கும் சமூகத் தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சாதிகள் இடையிலான உறவைப் புதிய கோணத்தில் ஆராய்கின்றது. நூலின் மைய இழைக்கு அரணாகவும் இடைப்பிறவரலாகவும் ஆங்காங்கே இறைந்து கிடக்கும் நுட்பங்களும் இடை வெட்டுகளும் நூலுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கின்றன. தற்பொழுது அந்நூல் பெற்றிருக்கும் கவனத்தை விட மேலதிகமான கவனத்தைப் பெறும் தகுதியுடையது என்பதோடல்லாமல், அதே சட்டகத்தை ஒட்டியும் வெட்டியும் பிற கோயில்களை ஆய்வு செய்வதற்கும் அதனை முன் மாதிரியாகக் கொள்ளலாம்.

ஒரு கோயில் குறித்த ஆய்வு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல, ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் இந்த நூல் ஒரு சான்று. இந்த நூலுக்காக மிகப்பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் தொ.ப.

சித்திரைத் திருவிழா குறித்து பழைய மரபுக் கதைகளும் நம்பிக்கைகளும் மிக விரிவாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய செய்திகளும் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. கதைப்பாடல்கள். நம்பிக்கைகள்,  கருப்பசாமியின் வைணவத் தொன்மையுடைய தோற்றம் குறித்தும் தொ.ப ஆய்வு செய்துள்ளார்.

மக்களுக்கு நெருக்கமான,பழமையான கோயில் குறித்த ஆய்வு நூல். புனிதத்தன்மை குலையாமல் அதை ஒரு வட்டார வரலாற்று நூலாக மாற்றியதுதான் தொ.ப வின் தனித்தன்மை. தமிழ்த் தொன்மத்தை, வழிபாட்டு மரபை, சமூக நடைமுறைகளை,  அடுத்து அடுத்தென்று வளர்ந்து கிளைத்து நிற்கும் நம்பிக்கையை புரிந்துகொள்ள அவசியமானது இந்த நூல்.

Additional information

Book Title

Author

தொ.பரமசிவன்

ISBN

9788196038205

Language

தமிழ்

Book format

Paperback

Category

கட்டுரைகள் | Essay & Articles

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.