செங்கேணி ஒருவாரம் தங்கினாள். பழகப்பழக அவளுடம்பின் ஆண் தடயங்கள் அறவே மறைந்துப்போயின. மனிதவுடம்பு தசை, நரம்பு, எலும்பு, குருதி இவற்றால் மட்டுமன்று, அது மொழி என்னும் சமூகக் கூட்டு அறிவாலுமானது. செங்கேணியின் மார்பில் கைப்பிடிக்குள் அடங்கும் ஆண் காம்பு அரும்பிய முலைகள் புடைத்திருந்தன; அவை மொழியாலானவை. ஆம், மொழியின் இயங்கியல் ஓர் உடம்பின் பால் தன்மையை மாற்றியமைக்க வல்லது. இது, கல்லை நட்டு தெய்வம் என்று வணங்கும் மனவேதிமையின் பாற்பட்டது. கல்லை உயிர்ப்பிக்கும் மொழி, உடம்பில் கெட்டிப்பட்டுப்போன பாலடையாளத்தை மாற்றியமைக்காதா? விலங்கு, மனிதர், கடவுள் இவை மூன்றிற்குமிடையே நிகழும் ரசவாதம் மொழியின் விளைவு. அவளொரு ரசவாதி. அவளால் இந்த உப்புக் கடலைப் பாற்கடலாக மாற்றமுடியும். அவளுடம்பு பகலில் ஒன்றாகவும் இரவில் வேறொன்றாகவும் உருமாற்றமடைந்தது. கோயில்கொண்ட செங்கழுநீர் அம்மனின் வாடை அவளுடம்பில் கமழ்ந்தது. தன் விருப்பமில்லாமல் அவளுடம்பை யாராலும் தொடமுடியாது என்றாள். மழைக்குள் நடந்தாலும் தன்னுடைய இசைவின்றி மழையால் தன்னை நனைக்க முடியாது எனச் சொன்னபோது என்னால் நம்பாமலிருக்க முடியவில்லை. ஆம், அவளொரு மாயயெதார்த்தப் பனுவல்.