‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பின் தலைப்புக் கதை. அலுவலகநண்பர்கள் ஆறுபேர் குட்டை மேசையில் குழுமி அமர்ந்து
கொண்டாட்ட மதுபாவிப்பில் உரையாடும் கதை. பாலியல்தொடர்பான செய்திகள் விளம்பப்படும் உரையாடல். ஆனால்
ஒருசொல்லும் வாசகனை வக்கிரத்தின்பால் இட்டுச் செல்வதில்லை. வட இந்திய ‘சாய் கா துக்கான்’ என்று அழைக்கப்படும் சாயாக்கடைகளில், வாடிக்கையாளர்கள் சிலர் கேட்பார்கள் ‘கொஞ்சம் மலாய் சேர்த்துப் போடுங்கள்’ என்று பாலியல்சம்பவங்கள் வரும் கதைகளில், நாவல்களில், எழுதியவரைப் பார்த்து, படைப்பாளப் பதிப்பாளர்கள், பாலியல் சம்பவங்களை
‘கொஞ்சம் ஏத்தி எழுதிக்கொடுங்கள்’ என்று கேட்பதுண்டு எனும் செய்தி நினைவுக்கு வருகிறது.
எட்டு மாதங்களாக, வாரம் முன்று நாட்கள் மட்டும் மென்பொருள் நிர்வகிக்க நண்பர்களின் அலுவலகத்துக்கு வரும் இசூமி எனும் இளம் பெண்ணிலிருந்து பகரும் மேனி வாசம் பற்றிய உரையாடலே
மேற்சொன்ன சிறுகதை. அற்புதமான கடைசி வரிகளுடன் கதைமுடிகிறது. அறிவார் அறிவார், அறியார் அறியார் அந்த மணத்தின் தனித்துவத்தை.
‘தானிவத்தாரி’ எனும் கதைத் தலைப்பு ஜப்பானியச் சொல்.
அதன் பொருள் கவிதை போலிருக்கிறது – அடர்ந்த பள்ளத்ததாக்கைக்
கடந்து மற்றொரு பள்ளத்தாக்குக்குச் செல்லும் பாடல். இந்த
கதையின் கதாபாத்திரம் கஷூமி சிறப்பான படைப்பு.