இப்படியெல்லாம் எழுதவே வேண்டாம் என்பதற்கும் இப்படி எழுத வேண்டியுள்ளது என்பதற்கும் இடையில் எழுந்த கவிதைகள் இவை. ஒரு வகையில் இதுவே ஒரு ஆய்க்கினைதான். ஆனால், மறுவகையில்
இது விடுபடலுக்கான வழியும் கூட. வேறு கதியில்லை. எனக்கு, உங்களுக்கு, நம் காலத்துக்கு எல்லாவற்றுக்குமே. எதெல்லாம் நடக்கக் கூடாது என்றாலும் அதெல்லாம் நடந்து விடுகின்றது. அப்படித்தான் ஈழப் போராட்டமும் அதனுடைய கனவும்.
விடுதலை பற்றிய கனவை விதைத்து விட்டுப் பார்த்தால் பதர்களும் முட்புதர்களுமாகவே விளைந்தது நிலம். விளைந்த நிலமோ கொலைக் களமானது. ஒடுக்கு முறைக்கு எதிரான பயணம் அப்படியே நேரெதிராகத்திரும்பி ஒடுக்குமுறையாகியது. விடுதலைக்கான நடையும் அப்படித்தான். எதிர் நிலையானது. எல்லாமே நேர் – எதிர், எதிர் – நேர் என மாறிமாறிக் குழப்பமாகியது. இன்னும் இந்தக் குழப்பம் தீரவில்லை.
அப்படித்தான் நானும் நீங்களும் நம் காலமுமானது. இது மத்தியூவின்
காலம். சரியாகச் சொன்னால், மத்தியூவை உருவாக்கியதே இந்தக் காலம்தான். இந்தக் காலத்தில் நிகழ்ந்தவை, நிகழ்த்தப்பட்டவை.
நிகழ மறுத்தவை எல்லாம்தான் இந்தக் கவிதைகள். இதற்கு மேலென்ன சொல்ல?
– கருணாகரன்