ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணிப்பில் எடுத்துக்கொள்ளப்படாத ஒன்று. லாட்வியாவைப் பொருத்தவரை நாஸிகளோடு உடன்போன நாடு என்றே அது அறியப்படுகிறது. ஸான்ட்ரா கால்னியடேயின் ‘ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்…’ நூல் ரஷ்யக் கம்யூனிஸ அரசு லாட்வியாவை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான லாட்விய யூதர்களையும் மற்ற லாட்வியர்களையும் கொன்று, ஆயிரக்கணக்கானவர்களை ஸைபீரியாவுக்கு நாடுகடத்திய லாட்விய வரலாற்றுடன் ஸ்டாலின் என்ற கொடுங்கோலனின் ஆட்சி முறையையும் அதில் சிக்குண்டு அலைக்கழிக்கப்பட்டக் குடும்பம் ஒன்றின் வரலாற்றையும் நினைவுகளையும் கூறுவது. கால்நடைகளுக்கான சரக்கு வண்டிப் பெட்டிகளில் ஏற்றப்பட்டு ஸைபீரியாவின் கடும் பனியில் வாழ்ந்தும் இறந்தும்போன குடும்பத்தின் உண்மை வரலாறு. பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள், பிரிக்கப்பட்ட காதலர்கள், தந்தை ஒரு புறமும் தாயும் குழந்தைகளும் ஒரு புறமும் மீண்டும் சந்திக்கவே முடியாதபடி பிரிக்கப்பட்ட அவலம், சிறை முகாம்களில் நோயால் பீடிக்கப்பட்டு ரத்தம் கக்கி உயிர்விட்டவர்களின் சோகம், பட்டினியிலிருந்து மீள எலிகளையும் இறந்த மிருகங்களையும் புல்லையும் மரப்பட்டைகளையும் புசித்து வாழ்ந்த குலாக் என்னும் கொடுமை இவற்றைக் கூறும் நூல் இது.