வாசகன் கதைக்குள் நுழைய தடையாய் இருக்கும் எந்தவித ஆடம்பரமும் இன்றி நேரடியாக கதைக்களத்தை காட்சிப்படுத்தும் பாணி, நந்தனுடையது. வாசிப்பதற்கு மிக எளிமையாகவும் அதே நேரம் கதை சொல்லியாய் வாசிப்பவனை உருவகித்துக் கொள்ளவும் மிக உதவியாய் இருக்கின்றன அவரது எழுத்துக்கள். தொகுப்பு முழுவதும் எளிய நடையில் இருந்தாலும், ஆங்காங்கே விழும் தெறிப்பு வரிகள், யதார்த்தத்தோடு கொஞ்சம் புனைவுத் தன்மையையும் சேர்க்கின்றன. ”எனது அறையில் ஓர் உடும்பு இருக்கிறது”, “தேவமலர் அக்காவும் பெர்ட்ரண்ட் ரசல் அண்ணனும்”, “பதினான்கு முத்தங்கள்” ஆகிய கதைகளில் புனைவும் யதார்த்தமும் இரண்டறக் கலந்து இனிய வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.