யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது. கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை – திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை இப்புதினம் விவரிக்கின்றது. கதையின் நாயகன் சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன். இளஞ்செழியன் தன் முறைப்பெண் பூவழகியின் மீது கொண்ட காதலையும், யவன ராணி (கிரேக்க ராணி) இளஞ்செழியன் மீது கொண்ட மாசறு காதலையும் விவரிகின்றது. தமிழகத்தில் (பூம்புகார் நகரில்) தமிழருக்கு யவனர்கள் சேவகம் செய்து வந்ததையும், பூம்புகாரின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் தமிழர் பங்கையும், இப்லாஸ் என்ற யவனன் இளஞ்செழியன் மீது கொண்ட விசுவாசத்தையும், டைபிரியஸ் என்ற யவன கடற்படைத் தலைவன் போர் திறமைகளையும் இப்புதினம் விவரிக்கின்றது.