ஆளுமைமிக்க தனிமனித வாழ்க்கை ஒன்றினூடாகச் சமகால வாழ்வின் பல தளங்களை அளாவிச் செல்லும் புதினம் இது. அதீதங்களும் சராசரிகளும் பிணைந்த மனிதர்களின் இயங்குவெளி இதன் களம். அரசியல் அதிகாரப் பின்புலம், அரச வன்முறை உள்ளிட்ட பலவும் வெகு இயல்பாகப் போகிறபோக்கில் வெளிப்படுகின்றன. மிகையான விவரணைகள் இன்றி அளவான விவரிப்புகளும் மனமொழியும் இணைந்து செல்லும் முறையில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் உரைநடை மரபுக்கு ஊறு நேராமலும் நாவலின் வாசிப்புத் தன்மை கூடும் வகையிலுமான மொழிபெயர்ப்பு. யு.ஆர். அனந்தமூர்த்தி: யு. ஆர். அனந்தமூர்த்தி (1932) நவீன இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும் ஞானபீடப் பரிசு பெற்றவருமான அனந்தமூர்த்தி கர்நாடகத்தின் மேளிகே கிராமத்தில் பிறந்தார். மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் மால்கம் பிராட்பெரியின் வழிகாட்டலில் டாக்டர் பட்டம் பெற்றார். ‘சமஸ்கார’, ‘பாரதிபுர’, ‘அவஸ்தெ’, ‘பவ’, ‘திவ்ய’ இவர் எழுதிய நாவல்கள். இலக்கிய விமர்சனம், கவிதை, சிறுகதை என எழுதியுள்ள அனந்தமூர்த்தி நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்திய அக்காதெமி ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றியவர்.