துளியை நுணுக்கமாகச் சித்திரிப்பதன் வழியாக, வெளியை அதன் விரிவோடு எழுப்பிக்காட்ட முயல்வது எழுத்தின் ஆதாரமான நோக்கங்களில் ஒன்று. இச் சிறுநாவலில் அந்த ரசவாதம் குறைந்த பக்கங்களுக்குள்ளாகவே நிகழ்ந்தேறியிருப்பதைக் காணலாம். ஒரு எளிய மீனவக் குடும்பத்தைப் பற்றியதாகத் தொடங்கும் கதையானது, முடியும் தருவாயில் அக்குடும்பம் வசிக்கும் கிராமத்தை, அது அமைந்திருக்கும் அகண்ட கரையை, அதற்கப்பால் விழிக்கெட்டாத தூரத்திற்கு விரிந்துகிடக்கும் கடலைப் பற்றின கதையாகவும் பெருகிவிடுகிற மாயம் எவ்விதப் பிரயாசையுமின்றி இயல்பாகவே நிகழ்கிறது. இது கடல்புரத்தைக் குறித்த கதை மாத்திரமல்ல; கடலைப் பின்புலமாகக் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும், பழமைக்கும் புதுமைக்கும், தந்தைக்கும் மகனுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், அன்பிற்கும் பகைக்கும், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை, அவற்றில் விழுந்துவிடுகிற முடிச்சுக்களை, அவற்றை அவிழ்க்க முயன்று தோற்ற அலைகழிகிற மனத்தின் பாடுகளை எனப் பலதையும் குறித்து ஆதூரத்துடன் பேசுகிறது. முதல்பதிப்பு வெளியாகி முப்பதுக்கும் அதிகமான வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்றும் வாசகர் கவனத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது இந்நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. வண்ணநிலவன்: வண்ணநிலவன் (பி. 1949) சமகாலத் தமிழ் இலக்கியத்தின் அரிய சாதனையாளர். 1949 டிசம்பர் 15 அன்று திருநெல்வேலியில் பிறந்தார். தந்தை உலகநாதன், தாய் ராமலட்சுமி. வண்ணநிலவனின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன். அவரின் மனைவியின் பெயர் சுப்புலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கண்ணதாசன், கணையாழி, அன்னைநாடு, புதுவை குரல், துக்ளக், சுபமங்களா ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள், நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஆறு நாவல்கள், முந்நூறுக்கும் மேல் கட்டுரைகள் என நிறைய எழுதியுள்ளார். ‘கடல் புரத்தில்’ நாவலுக்காக இலக்கியச் சிந்தனை விருதும், ‘தர்மம்’ சிறுகதைத் தொகுப்புக்காக, தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதுகளையும், புதுடெல்லி ராமகிருஷ்ணா ஜெய் தயாள் மனிதநேய விருது, ‘சாரல்’ இலக்கிய விருது, எஸ்.ஆர்.வி. தமிழ் இலக்கிய விருது, வாலி விருது, விஜயா வாசகர் வட்டத்தின் ஜெயகாந்தன் விருது, உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது போன்ற விருதுகளையும் வண்ணநிலவன் பெற்றுள்ளார். ‘கடல்புரத்தில்’ சென்னை தொலைக்காட்சியில் பதிமூன்று வாரத் தொடராக ஒளிபரப்பானது. ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் மூன்று வசனகர்த்தாக்களில் ஒருவராகப் பணியாற்றினார்.