‘மாற்றம்’ குறுநாவல் வடிவத்தில் உள்ள ஒரு சுயசரிதை அல்லது சுயசரிதை வடிவத்தில் உள்ள ஒரு குறுநாவல் என்று விவரிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஆட்சி மாற்றங்களையோ தலைவர்களின் பட்டியலையோ சாராமல் ஒரு சமூகத்தில் தனக்கு நெருங்கிய மனிதர்களின் வாழ்வை உற்றுப் பார்ப்பதன் மூலம் ஒரு நாட்டின் வரலாற்று மாற்றங்களைப் பதிவுசெய்ய முடியும் என்று வெற்றிகரமாக நிறுவுகிறது. சீனாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நடந்த மாற்றங்களை, பள்ளிக்கால நண்பர்களின் வாழ்வில் நடந்த மாற்றங்களைப் பதிவு செய்வதன் வழியாகச் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் மோ-யான். • கற்பனையும் நிஜமும் வரலாற்றுப் பார்வையும் சமுதாயப் பார்வையும் கலந்து மோ-யான் ஒரு உலகை உருவாக்குகிறார். அவ்வுலகின் செறிவுப் பின்னல் வில்லியம் ஃபாக்னரையும் கேப்ரியல் கார்சியா மார்கேஸையும் ஞாபகப்படுத்துகிறது. அதேநேரத்தில் பழைய சீன இலக்கியத்திலிருந்தும் வாய்வழி மரபிலிருந்தும் பிரியும் ஒரு புள்ளியையும் கண்டுபிடிக்கிறது. இலக்கியத்துக்கான நோபல் பரிசுக் குழு, 2012. சுந்தர ராமசாமி கட்டுரை ஒன்றில் ‘பனித்துளியில் பனைமரம் தெரியும். சிறியதாகத் தெரியும்’ என்று சொல்கிறார். இந்தக் குறு நாவலிலும் மாற்றத்தின் பரிமாணங்கள் தெரிகின்றன; சிறியதாகத் தெரிகின்றன. நமக்குள்ளே அசைபோட்டு அவற்றின் பிரமாண்டத்தைப் பற்றி வியந்துகொள்ளும் வெளியை மோ-யான் அளிக்கிறார். மோ-யான் வட கிழக்குச் சீனத்தில் இருக்கும் கிராமப் பள்ளி ஒன்றைப் பற்றி எழுதுகிறார். பள்ளியில் கலாச்சாரப் புரட்சியின் தாக்கம் தெரிகிறது. ஆனால் கிராமப் பள்ளி நமது கிராமப் பள்ளிகளைப் போலத்தான் இருக்கிறது. கதையின் பாத்திரங்களோடு நம்மைச் சேர்த்துப் பார்த்து நமக்கும் அவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை என்று படிப்பவர் அனைவரும் உணர முடியும். இந்த அன்னியப்பட வைக்காத தன்மையே மொழிபெயர்ப்பின் வெற்றி என்று சொல்ல வேண்டும். பி.ஏ. கிருஷ்ணன். மோ-யான்: மோ-யான் (பி. 1955) மோ-யான் என்கிற புனைபெயருக்குச் சீன மொழியில் ‘பேசாதே’ என்று பொருள். அவரது இளம்பருவத்தில் சீனாவில் இருந்த அரசியல் புரட்சிச் சூழலில் அவரது அப்பாவும் அம்மாவும் தந்த எச்சரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டார். ஒரு வகையில் அவர் எழுதும் விஷயங்களுக்கும் இந்தப் பெயர் தொடர்புடையதாய் இருக்கிறது. அவரது இயற்பெயர் குவான்-மோ-ய. மோ-யான் ஷான்-தொங் மாநிலத்தின் காவ்-மீ எனும் ஊரில் பிறந்தார். 1966-இல் சீனாவின் ‘பண்பாட்டுப் புரட்சி’ தொடங்கியபோது பள்ளியைவிட்டு, மாடு மேய்க்க வேண்டியிருந்தது. 18 வயதில் பருத்தி ஆலையில் சேர்ந்தார். 1976-இல் ‘பண்பாட்டுப் புரட்சி’ முடிவடைந்தபோது ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் இருந்தபோதே எழுதத் துவங்கினார். 1984-இல் ஒரு எழுத்தாளராக அடையாளம் பெறத் தொடங்கிய காலத்தில் ராணுவக் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். 1986-இல் ‘சிவப்புச் சோளம்’ (Red Sorghum) நாவல் வெளியாகி தேசிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. பின்னர் அது திரைப்படமாகி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. 1991இல் பெய்-சிங் நார்மல் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் பட்ட மேற் படிப்பை முடித்தார். பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். ‘சிவப்புச் சோளம்’ தவிர, ‘பூண்டுப் பாடல்கள்’, ‘தளரச் செய்யும் வாழ்வும் சாவும்’, ‘மது தேசம்’, ‘பெரிய மார்புகளும் அகன்ற இடுப்புகளும்’ போன்ற நாவல்கள் முக்கியமானவை. மோ-யான் எழுதிய நூல்கள் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. மோ-யான் 2012-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இவரது சமீபத்திய நாவல் ‘தவளை’.