எம். வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’, தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட சௌராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாக கண்ணன் உருவானவிதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே, சௌராஷ்டிர சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தையும் எம்.வி.வி. தந்துவிடுகிறார். ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் காலவோட்டத்தில் காணாமல்போன நாவல்களில் ஒன்றாகக் கரைந்து போயிருக்கும். அப்படியின்றி, புறவாழ்வின் சவால்களுக்கு நடுவிலும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் குறிப்பாக யதார்த்தமாகவும் கொண்டிருப்பதன் காரணமாக இந்த நாவல் இன்றும் பொருட்படுத்தத்தக்கதாக அமைந்துள்ளது. எம்.வி. வெங்கட்ராம்: எம். வி. வெங்கட்ராம் (1920 – 2000) மணிக்கொடி எழுத்தாளரான எம்.வி.வி. கும்பகோணத்தில் 18 மே 1920இல் பிறந்தார். தந்தை வெங்கடாசலம், தாயார் சரஸ்வதி. பி.ஏ. (பொருளாதாரம்) மற்றும் ஹிந்தியில் விஷாரத் படித்தார். ‘சிட்டுக்குருவி’ என்ற முதல் சிறுகதை அவரது 16ஆம் வயதில் மணிக்கொடியில் வெளியாயிற்று. அப்போது அவர் கல்லூரியில் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு தொடர்ந்து கதைகள், நாவல்கள், குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள் முதலியன எழுதினார். பிரபல பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் அவை வெளிவந்தன. 1948இல் தேனீ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். தமிழின் சிறந்த எழுத்தாளர்கள் அனைவரும் அதற்குப் பங்களித்தனர். பாலம் என்ற தமிழ் இலக்கிய இதழுக்கும் எம்.வி.வி. கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். ‘காதுகள்’ என்ற அவரது நாவல் அதில் தொடராக வெளியாயிற்று. சொந்தப் படைப்புகள் தவிர ஆங்கிலத்திலிருந்தும் ஹிந்தியிலிருந்தும் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் பலவற்றைக் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார். அவருடைய நூல்கள் இருநூறுக்கு மேல் இருக்கும். 1993இல் சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். 14.1.2000 அன்று கும்பகோணத்தில் காலமானார்.