Description
உன்மத்தம்
இந்த நாவல் ஒரு நாடக நடிகர் ராஜவேலுவின் வாழ்வை, அவரின் நினைவுகளை, அவரின் எண்ணத்தைப் பற்றிப் பேசும். ஒரு மனிதன் தான் நேசித்துச் செய்த ஒரு வேலையை சாகும் வரை மறக்க முடியாது. சில நேரங்களில் சிறுபிள்ளை போல் அதைச் செய்து பார்க்கலாமே என்ற எண்ணம்கூட எழும். அப்படியான உன்மத்த மனநிலையில் நாயகன் என்ன செய்கிறார் என்பதே இந்த நாவல்.
கதையின் நாயகன் ராஜவேலு என்கிற கலைஞன், தன் கலை மீது வைத்திருந்த பக்தியையும், கலைக்கு கடைசி வரை நேர்மையாக இருந்தததையும், ஆனால் அதுவே ஊராரின் பார்வையில் எங்ஙனம் பதிவானது என்பதையும் இந்நூலில் வாசித்து முடிக்கும்போது மனம் கனத்துதான் போகிறது. கதையின் நாயகன் தன்னுடைய ஆதங்கமாக பதிவு செய்திருக்கும் சில தகவல்கள், அந்த வயதிற்க்கே உரிய கிராமத்து மனிதர்களின் ஆதங்கமாகவும் இந்த எழுத்தின் வழியாக நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
விதவிதமான கதைக்களங்களை எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்து பயணிக்கையில், கிராமியக் கலைகளில் மிக முக்கியமான அதே வேளையில் அருகி வரும் கலையான நாடகக்கலையைப் பற்றிய இந்த ‘உன்மத்தம்’ நாவல் நிச்சயமாக வாசகர்களை ஈர்க்கும். மேலும் இந்த நூலை வாசித்து முடிக்கையில், கலைத்தாகம் கொண்ட மனிதன் கடைசி வரை அதிலேயே வாழ்ந்து மறைவான் என்கிற உண்மையும் உறுதி செய்யப்படும்.
gbsadmin –
#உன்மத்தம்
நாடகம் என்பது பொழுதுபோக்கின் மேடை மட்டுமல்ல. அது மனித சமூகத்தின் பிரதிபலிப்பு, அதன் கலாச்சாரம், மனித உணர்வுகளின் மொழி. இந்த மனித சமூகத்தில் நடக்கும் நீதி நியாயங்களை சுட்டிக்காட்டும் சக்திவாய்ந்த கலை வடிவம்,
இந்தக் கலை, தொன்னூறு காலகட்டத்தில் தொலைக்காட்சி ஊடகம் பட்டி தொட்டியெல்லாம் பரவி வளர்ந்ததன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. பல முன்னணி நாடக சபாக்கள் நட்டத்தில் இயங்கியதால் மூடப்பட்டன. இன்னும் சில கிராமங்களில் நாடக சபாக்கள் உயிர்ப்புடன் இருந்தாலும், சில நாடகக் கலைஞர்கள் இந்தக் கலையை அருவருப்பாகவும், ஆபாசமாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனைக்குறிதது!
ஆனால் நாடக மேடை என்ற பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக அரந்தாங்கி தாலுகா லெ. கவிராஜ் வீரமங்கலம் அவர்களின் நாடகங்களை சில நாட்களாக தொடர்ந்து பார்க்கிறேன்!
என்ன அற்புதமான கலைஞர்! தன் வாசிப்பு அனுபவத்தை நாடகக் கலை மூலம் சமூகத்திற்கு நல்விதையாக வழங்கி வருகிறார். அவருடைய ஒவ்வொரு மேடை நிகழ்ச்சியும் சமூகத்தின் கலாச்சாரச் சிந்தனையின் பிரதிநிதியாக திகழ்கிறது. பார்வையாளர்களை சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கிறார்.
நாட்டில் நடக்கும் அநீதிகளை தன் கலை மூலமாக கேள்விக்குள்ளாக்கி, மாற்றத்திற்கான தீர்வை நம்மிடமே விட்டுவிடுகிறார். இப்படிப்பட்ட கலைஞர்களின் வாழ்வியலை பதிவு செய்வதும், அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்துவதும் மிக முக்கியமானது.
நாடகக் கலைஞர்களின் வாழ்வியல் குறித்து அண்ணன் நித்யக்குமார் (பரிவை சே.குமார்) அவர்களின் உன்மத்தம் நாவல் வெளிவந்திருப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது!
– Balkarasu Sasikumar