Description

‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞுபாத்தும்மாவுக்கு மணமகன் யானைமேல் வரும் கனவு. இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரைநூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம். வைக்கம் முகம்மது பஷீர்: வைக்கம் முகம்மது பஷீர் (1908 – 1994) 1908 ஜனவரி 19ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலையோலப் பரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்து உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராக சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச் செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ வார இதழையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியாவெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஐந்தாறு வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கையாற்றின் கரைகளிலும் இந்து துறவியாகவும் இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், சிறப்பு நல்கை, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். 1994 ஜூலை 5ஆம் தேதி காலமானார். மனைவி: ஃபாபி பஷீர், மக்கள் : ஷாஹினா, அனீஸ் பஷீர்.

Additional information

Author

வைக்கம் முகம்மது பஷீர் 

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.