பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டிக் கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் ‘கழிமுகம்’ பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக்கத்தையும் பதற்றத்தையும், பழைமைக்குள் மூழ்கித் தொலையாமல், புதுப்புனலாடும் தீவிரத்தோடும் சுழிமாறிப்போகாத மூச்சிழுப்போடும் இப்புனைவு கடந்திருக்கிறது. இயற்கைக்கும் மனிதனுக்குமான தொல்லுறவின் அபேதத்திலிருந்து இருப்பின் பரபரப்பை எதிர்கொள்ளும் எளிய ஒளி கூடும்போது, மகனும் தந்தையும் அவரவர் இடத்தில் காலூன்றியபடியே காலத்தையும் கல்வியையும் பார்த்துச் சிரிக்கிறார்கள். இப்புன்னகையின் உக்கிரமே ‘கழிமுகம்’. பெருமாள்முருகன்: பெருமாள்முருகன் (பி. 1966) படைப்புத்துறைகளில் இயங்கிவருபவர். அகராதியியல், பதிப்பு ஆகிய கல்விப்புலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.