Description
மனாமியங்கள்
சல்மாவின் மனாமியங்கள் நாவல் முழுமையாகப் பெண்ணுலகத்தால் நிரம்பியிருக்கிறது. புற உலகம் அறியாத பெண்களின் உள் உலகத்தை விரிக்கும் எழுத்து. துயர் நிரம்பிய உள்ளுக்குள் பெருகும் உணர்வுகளையும் அவற்றில் இருந்து காலத்தின் கைப்பிடித்துத் தாங்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் திறனையும் இயல்பாகக் காட்டிச் செல்கிறது நாவல். அவர்கள் உலகமும் மொழியும் புதிது. மரபான மனங்களுக்கு அவ்வளவாக உவப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் மரபின் போர்வையில் மறைக்கப்பட்ட ஓர் உலகம் வெளியாகும்போது பொங்கிப் பெருகும் உடைப்பைத் தவிர்க்க இயலாது. இந்நாவலில் நிகழ்வதும் அத்தகைய ஒரு பிரவாகம்தான்.
சல்மா
சல்மா இயற்பெயர் ராஜாத்தி (எ) ரொக்கையா. திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி சிறப்பு ஊராட்சி மன்றத் தலைவியாகவும் சமூக நலத்துறை வாரியத் தலைவியாகவும் பணியாற்றினார். இரண்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன. ‘கனவுவெளிப் பயணம்’ என்ற பயணநூலும் வெளியாகி உள்ளது. இவருடைய ‘இழப்பு’ சிறுகதை ‘கதா – காலச்சுவடு’ போட்டியில் பரிசு பெற்றது. சேனல் 4 தயாரிப்பில் இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சல்மா என்கிற ஆவணப்படம் கிம் லாங்கினாட்டோ என்கிற பிரிட்டிஷ் இயக்குநரால் இயக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 14 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு ஃபிராங்பர்ட் புத்தக விழா, 2009 லண்டன் புத்தகக் கண்காட்சி, 2010 சீனாவின் பெய்சிங் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றார். சல்மாவின் படைப்புகளை முன்வைத்து நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் 2007 மே மாதம் நடைபெற்றது. ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஜெர்மன், கடாலன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வோடோ போன் (vodafone) க்ராஸ்வோர்டு பரிசு, மான் ஆசியா பரிசு ஆகியவற்றின் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றது. ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பு மலையாளத்திலும் வெளிவந்துள்ளது. பெற்றோர் சர்புனிஷா, சம்சுதீன். கணவர் அப்துல் மாலிக். மகன்கள் சலீம், நதீம். தொலைபேசி : 9444918604 மின்னஞ்சல் : tamilpoetsalma@gmail.com
Reviews
There are no reviews yet.