மாதக் கடைசியில் மிச்சமிருக்கும் புன்னகையை
உன் கணக்கிற்கு மாற்றம் செய்ய விழைகிறேன்.
மீண்டும் முயற்சி செய் என்றே
மறுபடி மறுபடி வருகிறது
கட்டமைக்கப்பட்ட குறுஞ்செய்தி.
அதற்குள், புன்னகைக்கான
கால அவகாசம் முடிந்துவிடுகிறது.
இதுவரையிலான வரவு செலவைச் சரிபார்க்க
விரித்து வைத்துத் திணிக்கப்பட்ட
நம் கணக்குப் புத்தகம்
அச்சு இயந்திரத்திற்குள்ளேயே
சிக்கிக் கொண்டுவிட்டது.
ஓரம் மடிந்து மீட்கப்பட்டதை
எத்தனை முறை திணித்து எடுத்தாலும்
பதிவின்றி வெற்றுப் பக்கமே வருகிறது.
வேறுவழின்றி, இயந்திரக் கோளாறெனச் சமாதானமாகிறது
நம் வாழ்வியலின் அட்டையில் ஒட்டியுள்ள
அடையாளக் குறியீடு.