‘கூறியது கூறல்’, ‘போலச் செய்தல்’ இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்பு உலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல். யதார்த்தக் கதைகளின் வழியே வாசகனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்கலைஞனைப்போல ஸ்ருதி பிசகாமல் மீட்டும் சு.ரா, நேற்றின் வழித்தடத்திலிருந்து விலகி புதியக் கருக்களைத் தேடிக் கண்டடைந்து முன்னோக்கிச் சென்ற பயணத்தை துலக்கமாக வெளிப்படுத்தும் தொகுப்பு இது. சுந்தர ராமசாமி: சுந்தர ராமசாமி (1931 – 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.