திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்.. அருள்மறை குர்ஆன் வெளிப்படுத்தும் இறைவனின் அத்தாட்சிகளை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து, தொடர்புடைய புகைப்படம் சேகரிக்க பயணம் செய்து புத்தக வடிவில் வெளிக்கொண்டு வந்த சகோதரர் அமீர் அல்தாஃப் முயற்சிகள் செயற்கரிய சாதனையாகும்… நான்கு பாகங்களாக 2800 பக்கங்களில் 1600 தலைப்புகளில் 13000 ஆதார புகைப்படம் தாங்கி “அத்தாட்சிகள்” திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் வெளியாகியுள்ளது.. முதல் பாகம் ஆதி நபி ஆதம் முதல் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல் ) வரை அத்தனை நபிமார்கள் வரலாறு சார்ந்த சம்பவங்கள், அவர்கள் சார்ந்த வரலாற்று சுவடுகள், பிற சமூக வேதங்களில் பெருமானார் குறித்து கூறப்பட்டுள்ள முன்னறிவிப்புகள், முஹம்மது நபி (ஸல் )குறித்து உலகில் பல்வேறு மொழிகளில் வெளியான புத்தகங்கள், புகைப்படத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் குர்ஆனில் வெளிப்படும் சரித்திர நிகழ்வுகள், நபிகளார் காலத்தில் நடைபெற்ற போர்கள், இஸ்லாமிய வரலாறு தொடர்புடைய கலை, கலாச்சாரம், அரசியல் சூழ்நிலை, ரோம பாரசீகம் வீழ்ந்த முன்னறிவிப்புகள், பெருமானார் காலத்து கடித தொடர்புகள் எளிய நடையில் வண்ண படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது பாகத்தில் திருக்குரான் சாட்சியம் கூறும் அற்புதங்கள் படிக்க படிக்க சிலிர்ப்பை தருகிறது. எறும்பு முதல் யானை வரையிலான உயிரினங்கள், இறைவனின் மகத்தான படைப்புகளான நீர், நிலம், காற்று, ஆகாயம், கடல் உள்ளிட்டவை குறித்த விந்தை தகவல்களுடன், மனித படைப்பில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் இறைவன் வழங்கியுள்ள கருணையுடன் கூடிய அத்தாட்சிகள் மலைக்க வைக்கிறது.. நான்காம் பாகத்தில் இன்றைய அறிவியல் உலகம் சந்திக்கும் சவால்களுக்கு திருக்குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ள தீர்வுகளை அத்தாட்சிகளாக தனது ஆய்வின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார். பிரபஞ்சம், வானில் ஏற்படும் விஞ்ஞான மாற்றங்கள், கோளங்கள், விண்ணியியல், மண்ணியல், சமீபத்திய விஞ்ஞானிகளான நியூட்டன் போன்றவர்கள் எடுத்துரைத்த புவியீர்ப்பு விசை சார்ந்த அறிவியல் அதிசயங்களை குர்ஆன் வெளிப்படுத்தும் அததாட்சிகளை, கியாமத் நாள் குறித்த ஆதார தகவல்களை மிகவும் சிறப்பாக கண்முன்னே கொண்டு தந்துள்ள அமீர் அல்தாப் முயற்சிகள் பிரமிக்க வைக்கிறது.. திருமறை குர்ஆன் உலகுக்கு சவால் விடும் அறிவியல் அத்தாட்சிகளை படிப்பவர்கள் மனதில் பதியச்செய்ய வண்ண படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது இந்த கலைக்களஞ்சியம். சகோதரர் அமீர் அல்தாப் முயற்சிகளுக்கு இறைவன் அருள் புரியட்டும்.. |