அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றிய நம்பிக்கை இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்றாகும். எனவே அவை பற்றித் தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருப்பது நம்மனைவர் மீதும் கடமையாகும். அல்லாஹ்வின் இலக்கணங்கள், பெயர்கள், பண்புகள், அவனுக்குரிய தனித்தன்மை பற்றி ஒரு முஸ்லிம் அறிவது, அல்லாஹ்வை சீராகப் புரிந்து அவனைச் சரியாக வணங்கிட வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாத்தின் பெயரால் உருவாகிய பிரிவுகள் மத்தியில் அஸ்மா, ஸிஃபாத் பற்றிய விஷயத்தில்தான் பெரும் வழிகேடுகள் தோன்றியுள்ளன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அஸ்மா, ஸிஃபாத் பற்றிய தெளிவின்மை படித்தவர், பாமரர், மௌலவிகள் என்ற வித்தியாசமின்றி அனைவர் மத்தியிலும் பொதுவாகக் காணப்படுவது மிகப்பெரிய துர்பாக்கியமாகும். இக்குறைகளை நீக்கி சரியான அகீதாவை அடையாளம் காட்டிடவே இந்நூலை வெளியிடுகிறோம். |