திப்பு ரஹிம்
கோபால் சாருடைய வீடு காலையிலேயே பரபரப்பாக இருந்தது.
“சாரு சீக்கிரம் கெளம்பு ஸ்கூலுக்கு நேரமாச்சு”
“இதோ கிளம்பிட்டேன் பா” என்று மகள் சாரு கூறினாள்.
அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ‘கோபால் சார்’ என்று தான் அழைப்பார்கள்.
கோபால் சார் அந்த ஊரில் இருக்கக்கூடிய அரசாங்க மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியராக இருக்கிறார்.
நேரம் தவறாமை, மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்துக் கொள்ளும் ஆசிரியர். அவரைப் பார்த்தாலே மாணவர்களுக்குச் சற்று பயம் தான்.
கல்லூரி படிக்கும் தன் மகளை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு இவர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவர் மீண்டும் சப்தமிட்டார்.
“சாரு எவ்வளவு நேரம் ஆச்சு சீக்கிரம் வரியா விட்டுட்டுப் போகவா?”
“அடாடடட… ஏன் இப்படி கத்துறீங்க? கிளம்பிட்டா கொஞ்சம் இருங்க” என்று மனைவி கூறிக்கொண்டே வந்தார்.
அப்பொழுது வீட்டில் இருக்கக்கூடிய தொலைபேசி அலறியது.
“சாரு அந்த போனை எடு யாருன்னு? கேளு” என்றார் அம்மா.
தொலைபேசியை எடுத்து பேசிய சாரு, “அப்பா உங்களுக்குத் தான் போன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கு”
“வெளிநாட்டில் இருந்து எனக்கு வந்து இருக்கா?” என்று கேள்வி கேட்டுக்கொண்டே உள்ளேப் போனார்.
“ஹலோ நான் ஆசிரியர் கோபால் பேசுறேன் நீங்க யாரு?”
தொலைபேசி எண் மறுமுனையில் “வணக்கம் ஐயா என் பெயர் ரமேஷ் உங்கள் மாணவன்”
“எந்த ரமேஷ் எனக்கு புரியலையே..”என்று இழுத்தார்.
“ஐயா நான் பத்தாம் வகுப்பில் காலாண்டு பரிட்சையோடு நின்றுவிட்டேன் புது தெரு”
தற்பொழுது கோபால் சாருக்கு நினைவுக்கு வந்து விட்டான்.
“ஆமாப்பா ஆமா எப்படிப்பா இருக்குற..? எங்கப்பா இருக்கிற..? வெளிநாட்டில் இருக்கியா..?”
“ஆமாம் ஐயா இங்க சவுதியில் தான் இருக்கிறேன். தற்பொழுது ஆடு மேச்சுட்டு இருக்கேன் ஐயா உங்க புண்ணியத்துல.” இதைக் கேட்டதும் கோபால் ஆடிப் போய்விட்டார்.
“என்னப்பா சொல்ற? என் புண்ணியத்துல ஆடு மேய்க்கிறேன் என்று சொல்ற. நான் என்னப்பா செஞ்சேன்?”
“ஐயா நான் படித்து அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். ஆனால் என்னை ஒரு நாள் நீங்கள் பெஞ்சியின் மேலே நிற்க வைத்து, பிறகு முட்டி போட வைத்து சக மாணவர்களுக்கு முன்பாக என்னை அவமானப்படுத்தினீர்கள். ஞாபகம் இருக்கா?”
“தம்பி அது நான் உங்களுடைய நன்மைக்கு தானே செய்தேன்?”
“இல்லை ஐயா நீங்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்காக பணம் கட்ட சொல்லி இந்த தண்டனையை கொடுத்தீர்கள்.” என்று ரமேஷ் சொன்னதும் கோபால் சாருக்கு பேச்சே வரவில்லை.
“ஐயா நான் எங்க ஊரிலே இரண்டு மூன்று தலைமுறையாகப் புகழோடு வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். ஏதோ இப்பொழுது எங்கள் குடும்பம் கஷ்டத்திலே விழுந்து விட்டது. நீங்கள் வெளியூரிலிருந்து இங்கே வந்தவர். என்னைப் பற்றியோ எனது குடும்பத்தை பற்றியோ உங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த ஊரில் இருக்கக்கூடிய அத்தனைப் பேருக்கும் என்னைத் தெரியும்.”
“எங்களது வறுமையை நாங்கள் வெளியே சொன்னதில்லை. இப்போதும் நாங்கள் அப்படியேதான் வெளி உலகத்துக்குத் தெரிகிறோம். பொதுத்தேர்வுக்கு பணம் கட்டக்கூட எங்களிடம் காசு இல்லை! அப்படியும் முயற்சி செய்து கொண்டு தான் இருந்தோம்.”
“என் கூட படித்த அத்தனை மாணவனும் என்னை பணக்கார தோரணையில் தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அன்று நீங்கள் ‘பணம்’ கட்டாதவர்களை பெஞ்சு மேல் ஏறி நிற்கச் சொன்னீர்கள்.”
“எனது நண்பர்கள் முன்பாக கூனிக் குறுகி நின்றது. உங்களுக்குத் தெரியுமா?”
இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி மாறாமல் கண்ணீரோடு தம்பி “என்ன மன்னிச்சிருப்பா” என்றார்.
“ஐயா என்னைப்போல் எத்தனை மாணவர்கள் உங்களது கடுமையான தண்டனைகளுக்கு பயந்து வெட்கப்பட்டு பள்ளி படிப்பை விட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?”
கோபால் சாரிடமிருந்து எந்த பதிலுமே இல்லை.
“அன்றைக்கு நீங்கள் பெஞ்சு மீது ஏறி நிற்கச் சொன்னதோடல்லாமல் முன்னாடி வந்து முட்டி போடவும் சொன்னீர்கள். அது அன்றோடு முடியவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் அதைத்தான் செய்தீர்கள். என் கூட இருந்த மாணவர்கள் அத்தனை பேரும் பணத்தைக் கட்டி அமர்ந்திருந்தார்கள். என்னைத் தவிர.”
“நான் மட்டும் தனியாக மாணவர்களுக்கு முன்பாக முட்டி போட்டு அமர்ந்திருந்த பொழுது என் உடம்பெல்லாம் புழுக்கள் மேய்ந்தது உங்களுக்கு தெரியுமா?”
“தம்பி என்னை மன்னிச்சிருப்பா நான் என்ன செய்யணும்? சொல்லுப்பா” என்று கெஞ்சினார்.
“அன்றைக்கு மேலும் ஒரு வார்த்தையை சொன்னீர்கள். நாளைக்கு ‘நீ பணம் கொண்டு வரவில்லை என்றால்… உன்னை ஹெட் மாஸ்டரிடம் கொண்டுப் போய் விட்டு விடுவேன்’. என்றீர்கள். மறுநாளும் என்னால் பணம் புரட்ட முடியாமல் அன்றையிலிருந்து எனது பள்ளிப் படிப்பையும் நான் விட்டுவிட்டேன். நான் பள்ளிக்கு வராததை கூட நீங்கள் இதுவரை ஏன்? என்று சிந்தித்து இருக்க மாட்டீர்கள். காரணம் நீங்கள் ஸ்ட்ரிட்டான ஆசிரியர் என்ற பெயரை தக்க வைக்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.”
“ஆனால் உங்களது அந்தப் பெயர் எத்தனை மாணவர்களை சீரழித்தது? என்று தெரியவில்லை. பரவாயில்லைய்யா மேலும் இதுபோல் நடந்துக் கொள்ளாதீர்கள். இங்கு ஒரே வெயிலு மண்டைய பொளக்குது. கரண்ட் இல்ல இன்னும் இரண்டு வருடத்திற்கு நான் இந்த பாலைவனத்தில் தான் ஆடு மேய்க்க வேண்டும் என்பது சட்டம். அரசு வேலையில் சேர வேண்டிய நான் இன்று உங்களால் ஆடு மேய்கிறேன் என்பதுதான் உண்மை. பரவாயில்லைய்யா இது என்னுடைய தலையெழுத்து என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.” என்று கூறி விட்டு தொலைபேசியை துண்டித்து விட்டான்.
தொலைபேசியை வைத்த ஆசிரியர் கோபாலுக்கு இலேசாக நெஞ்சு வலித்தது. அப்படியே அங்கு அமர்ந்தார்.
“அப்பா… அப்பா… என்ன ஆச்சுப்பா… யாரு போன்ல..? ஏப்பா உக்காந்துட்டீங்க..?” என்று சாரு பதட்டத்தோடு கேட்டாள்.
“ஒண்ணும் இல்லம்மா,,, நான் இன்னக்கிப் பள்ளிக்கூடம் வரல. நீ போம்மா” என்று கூறினார்.
ஆமாம் தனக்கு இருந்த அந்த பெயரை தக்க வைப்பதற்காக எத்தனை தண்டனைகளை இந்த மாணவர்களுக்கு கொடுத்துள்ளோம்? என்று அப்பொழுதுதான் அவர் சிந்தித்தார்.
‘தன்னால் ஒரு மாணவனுடைய வாழ்க்கை வீணாக போய்விட்டது’ என்பதை அப்பொழுதுதான் அவர் உணர்ந்தார். பெற்றோர்களுக்கு அடுத்து பிள்ளைகள் நம்புவது ஆசிரியர்களை தான்.
பெற்றோர்களும் தன் பிள்ளையை “இந்த பள்ளிக்கூடம் தன் பிள்ளையை நன்றாக கொண்டு வந்து விடும்” என்று நம்புகிறார்கள். ஆனால் இது போன்ற ஆசிரியர்களால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்?
கோபால் தன் தவறை உணர்ந்து ‘இனி இருக்கும் காலத்தில் ஏழை மாணவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும். எத்தனையோ மாணவர்கள் பாதித்திருக்கலாம், அதை இப்போதாவது தைரியமாகச் சொன்ன இந்த மாணவனுக்குச் செய்யும் நன்றிக்கடனாக இனிமேல் இப்படித்தான் வாழவேண்டும்’ என்று முடிவெடுத்தார்.
நன்றி : படம் இணையத்திலிருந்து