கவிஞர் தமிழ்க்காதலன்
கவிஞர் தமிழ்க்காதலன் மரபுக் கவிதைகளே அதிகம் எழுதுவார். நண்பர்களுடன் இணைந்து ‘தமிழ்க்குடில்’ என்ற அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய பிள்ளைகளுக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார். சினிமாவில் பாடல் எழுத முயற்சித்துக் கொண்டிருந்தாலும் ஊரில் விவசாயம் செய்வதை மிகவும் விரும்புவதால் தற்போது முழுநேர விவசாயியாக இருக்கிறார். கவிஞர் எழுதிய முதல் சிறுகதை இது.
******
காதல் என்பது என்ன..?
உணர்வா…?
உணர்ச்சியா…?
பருவமா..?
பக்குவமா..?
வருவது தெரியாமல் வந்து உயிர் குடிக்கும் மதுவா..?
வந்து அமர்ந்து கொண்டு மனம் தின்னும் கழுகா..?
வாழ் நாட்களில் நாட்களை பலிக்கொண்டு வாழ்க்கையை திசை திருப்பும் விதியா..?
உள்ளத்துள் மூளும் கேள்விகளுக்கு விடைத் தெரியாத ஒரு தருணத்தில் அவன் அவளை சந்திக்கிறான். அவனுள் விழுந்து கிடக்கும் கேள்விக்கு விடையாய் அவள் நிற்பது போல் ஒரு எண்ணம் அவனுக்கு.
வசந்தங்கள் யாவும் சுமக்கும் பருவத்துள் பூத்த பளிங்கு மலராய் அவள்….
உலகத்தை அலட்சியமாய், அனாயாசமாய் எதிர்நோக்கும் அவள் இயல்புக்கு சற்றே முரண்பாடாய் அவன்…
எல்லாவற்றையும் சாதாரணமாய் எடுத்துக்கொள்ளும் அவளுக்கு ‘அவனை’ அப்படி கொள்ள முடியவில்லை.
அவன் அவளை ஈர்க்கின்றானா..? அல்லது அவளை அவனிடம் இருக்கும் ஏதோ ஒன்று ஈர்க்கிறதா..? குழப்பமாய் இருப்பது போல் தோன்றினாலும் மனதுக்குள் அவனை இரசிப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
மௌனமாய் இரசிக்கிறாள்.
மெல்ல அவனை விழுங்கி தன்னை சீரணிக்கிறாள்.
வெட்கம் உதடுகளில் வழிகிறது.
யார் தொடங்குவது…?
எங்கே தொடங்குவது..?
எப்படித் தொடங்குவது…?
இருவருக்குமே இந்த குழப்பம்…(!)., இன்றேனும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆதங்கம்… இருவருக்குள்ளும்.
யார் சொல்வார்…? என்கிற தவிப்பு தாகமெடுக்க….
இனிமை வேகமெடுக்கிறது.
இவர்கள் சந்திக்க சிந்திக்கிறார்கள். அதற்குள் இவர்களுக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுப்போம்.
அவன் : ரவிவர்மா
அவள் : ரதி
ரவிவர்மாவின் மௌனம் கலைக்கும் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.
இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியா இன்ப வெள்ளம் கரைபுரள… அணைபோட முயன்று தோற்றதின் அடையாளமாய் ‘வெட்கம்’.
அந்தப் பூங்காவின் அமைதியான இடத்தில் ரதியும், ரவிவர்மாவும். அவள் முழங்காலைக் கட்டிக்கொண்டு பதற்றம் மறைக்கிறாள்.
அவன் உதட்டையும் நகத்தையும் மாறிமாறிக் கடித்த வண்ணம் இவளை அவ்வப்போது ஓரக்கண்ணால் உற்று நோக்குகிறான். கசிகிறது காதல்.
‘ம்ம்க்கும்…’ என செருமிக்கொண்டு., அவளிடம் பேச எத்தனிக்கிறான் ரவிவர்மா. ரதியோ அவனின் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளவே வாழ்வது போல் கூர்மையாகிறாள். மனம் தவித்து.. மருகுகிறாள்.
இருவரும் ஒரு முறை பார்த்துக் கொண்டு இதழ் பிரிக்காமல் சிரிக்கிறார்கள். அவன் இதழ் பிரிக்க… அவள் இமைத் துடிக்கிறாள்.
சொல்லிவிடத் துடிக்கும் மனதின் போராட்டத்தை மௌனமாய் சீரணிக்கிறான் ரவிவர்மா. அவள் அவனை ஆசுவாசப் படுத்த முயல்கிறாள். தண்ணீர்ப் பாட்டிலைத் திறந்து தருகிறாள். அவனும் அதை வாங்கிக் குடிக்க, அந்த அழகை ரதி இரசிக்கிறாள். அவனோ தன்னை சரியாகப் புரிந்து கொள்ளும் அவளை பெருமையாய் பார்க்கிறான். எங்கே அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் உளறி விடுவோமோ என்கிற அச்சத்துடன் பார்வையை சற்றே தாழ்த்திக்கொள்கிறான். பேச எத்தனிக்கிறான்.
சில நிமிட வார்த்தைச் சிறைபிடித்தலுக்குப் பின் “பிடிச்சிருக்கு..” என்கிறான் மெல்ல. இந்த ஒற்றை வார்த்தையை உதிர்க்க இத்தனை பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது அவனுக்கு.
அவளோ ரவிவர்மனைச் சீண்டிப்பார்க்க விரும்பி “என்ன பிடிச்சிருக்கு..?” என்கிறாள்.
ரவிவர்மன் மௌனமாய் அவள் கண் பார்த்து “உன்னைப் பிடிச்சிருக்கு” என்கிறான் அழுத்தமாய்… இப்போது அவனுக்கு ரதியின் கண்ணைப் பார்ப்பதில் இருந்த அச்சம் இல்லாதிருந்தது.
ரதியோ சந்தோசத்தின் உச்சியில் நின்றுக்கொண்டு “எனக்கும்” எனச் சொல்லி வெட்கினாள்.
ஒருவழியாய் உள்ளுக்குள் நிகழ்ந்த உணர்வு போராட்டத்தில் விடுதலைக் கிடைத்த சந்தோசம் அவர்களுக்கு.
அவர்களின் மனம் முடிவு செய்த இக்காதல் தொடர்ந்ததா… சேர்ந்ததா என்பதை சாதியும், மதமும், மனிதர்களும் முடிவு செய்வார்கள். அதுவரை அவர்கள் இப்படியே ரசனையுடன் காதலித்துக் கொண்டிருக்கட்டும்.
நன்றி : படம் இணையத்திலிருந்து