நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
எழுத்தாளர் நத்தம் எஸ்.சுரேஷ்பாபு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் இருக்கும் நத்தம் என்னும் சிறிய கிராமத்தில் வசிப்பவர். நத்தம் ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயக் குருக்களாக இருக்கும் இவருக்கு எழுத்தின் மீது தீராக்காதல். 1993 முதல் எழுதி வரும் இவர் நகைச்சுவை, சிறுவர் கதைகள், ஒரு பக்க கதைகள் அதிகம் எழுதியிருக்கிறார், எழுதி வருகிறார். கோகுலம் சிறுவர் இதழ், கல்கி, குமுதம், பாக்யா, ஆனந்தவிகடன், குங்குமம், இந்து தமிழ் போன்ற இதழ்களிலும் பல இணைய இதழ்களிலும் இவரது படைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தளிர் என்னும் வலைப்பூவிலும் எழுதி வருகிறார். தேன்சிட்டு என்னும் மின்னிதழைத் தனியாளாய் சிறப்பாய் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*********************************
நம்முடைய வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிறருக்காக நம்முடைய வாழ்க்கையில் ஒரு நிமிடமாகவாது வாழ்ந்திருக்கிறோமா? என்று மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கள். உங்கள் மனசாட்சி வாழ்ந்திருக்கிறாய் என்று சொன்னால் உண்மையில் நீங்கள் உயர்ந்தவர்தான், இல்லை என்று சொன்னால் வெட்கப்படுங்கள். இனிமேலாவாது பிறருக்காக கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள். அதன் அருமையும் சந்தோஷமும் உங்களுக்குப் புரியவரும்.
அதிகாலையில் எழுந்து கொள்ளும் போதே நம் குடும்பம் குழந்தைகள், மனைவி, பெற்றோர், இன்றைய வேலைகள், அலுவலகம், அலுவலகத்தில் பணி, அடுத்த நாளுக்கு என்ன செய்யவேண்டும்..? அடுத்தவாரம் உறவுமுறையில் கல்யாணத்திற்கு என்ன சீர் செய்வது..? குழந்தையை எந்த பள்ளியில் சேர்ப்பது..? அங்கே நன்றாக சொல்லிக் கொடுப்பார்களா..? பள்ளிப் பேருந்தை நம்பலாமா..? அல்லது தானே அழைத்து வர முடியுமா…? இப்படி தன்னைப் பற்றியும் தம் குடும்பத்தை பற்றிய எண்ணங்கள். அதற்காகவே எந்த நேரமும் சிந்தனை.
டும்பத்திற்கான செலவுகள் போக சேமிப்பை எதில் முதலீடு செய்வது..? காப்பீடு எதில் செய்வது..? இப்படி எப்போதும் சுய சிந்தனையில் உழலும் பலருக்கு எளிமையான மனிதர்கள் பலர் பிறருக்காக வாழ்வது கண்ணில் படுவது இல்லை. அவர்கள்தான் எளிமையாக வாழ்ந்து சேவை செய்த அன்னை தெரசாவைக் கூட இழிவு படுத்துகிறார்கள்.
உங்களைப்பற்றி மட்டும் சிந்தனை செய்வதை விட்டுவிட்டுப் பிற உயிரிகளுக்காக ஒரு நிமிடம் செலவழித்தால் கூட நீங்கள் உயர்ந்த மனிதர்தான். எத்தனையோ நல்ல உள்ளங்கள் தன் பணத்தையும் நேரத்தையும் இன்றும் செலவழித்து பிறருக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் தீப்பிடித்து எரிந்தால் கூட உதவச் செல்லாமல் ரசித்துக் கொண்டிருப்பவர்கள் வாழும் உலகில் பிறருக்காக வாழ்வது என்பதெல்லாம் மிகப்பெரிய பண்பே..! அவர்களை போற்றாவிட்டாலும் தூற்றாமல் இருக்க வேண்டும்.
நாள்தோறும் செய்தித் தாள்களில் இப்படிப்பட்ட மனிதர்களை பற்றி படிக்கும் போதெல்லாம் மனதில் ஓர் இனம்புரியா மகிழ்ச்சி குடிகொள்ளும். சாலையில் அலைந்து திரியும் மனநோயாளிகளை அழைத்துச் சென்று குளிப்பாட்டி முடிதிருத்தி விடுபவர்கள், தினமும் அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பவர்கள், அரசு மருத்துவ மனைக்கு பிரசவத்திற்கு வந்த பெண்மணிக்கு மதிய சாப்பாடு வாங்கி கொடுப்பவர்கள். ஊர்கள் தோறும் மரக்கன்றுகள் நடுபவர்கள். அனாதை ஆசிரமங்களுக்குச் சென்று சம்பளம் இன்றி தொண்டு செய்பவர்கள். இரத்த தானம் கொடுப்பவர்கள், குறைந்த விலையில் சிற்றுண்டி அளிப்பவர்கள் இப்படி எளிமையாக சத்தமின்றி தொண்டு செய்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
உலகம் கெட்டுவிட்டது..! மனிதத் தன்மையே இல்லை..! எல்லோரும் சுயநலமிகள் என்றெல்லாம் பேசுகின்றோம்..! உலகை குறை சொல்லும் முன் நம் குறையை கவனிப்போம். வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே?
எப்படி?
பேருந்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருக்கும் நாம் யாராவது முதியவர்கள் வந்தால் எழுந்து நின்று இடம் கொடுக்கலாம்… பயணச்சீட்டு வாங்க உதவி புரியலாம்…
வங்கிகளில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் விண்ணப்பங்களை நிரப்ப சிரமப்படுகையில் நிரப்பிக் கொடுக்கலாம்…
மருத்துவ மனைகளில் மருந்துகள் வாங்க அல்லல்படுவோருக்கு மருந்துகள் வாங்கி கொடுக்கலாம்…
வாகனத்தில் செல்லும்போது நடந்து செல்பவர்களுக்கு லிப்ட் கொடுக்கலாம்…
ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுக்கலாம்…
மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கலாம்….
இப்படி நம்மால் செய்ய முடிந்த சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.
மேலும் ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் மாதத்தில் ஒருநாளோ வருடத்தில் ஒரு நாளோ அருகில் உள்ள வசதி குறைந்த அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நாள் உணவு வழங்கலாம்…
இருண்டு கிடக்கும் கோயில்களுக்கு ஒருநாள் தீபம் ஏற்றி வைக்கலாம்…
இப்படி இன்றைய அவசர யுகத்திலும் நம்மால் இயன்ற செய்ய முடிகின்ற சிறு உதவியை பிறருக்கு செய்யலாம். நமது பிள்ளைகளையும் அப்படிச் செய்யப் பழக்கலாம்.
அப்போதுதான் ஓர் மாறுபட்ட சமுதாயம் உருவாகும். உதவி என்று கேட்பவர்களுக்கு தகுதி அறிந்து உதவலாம். இப்போதெல்லாம் இதில் ஏமாற்று பேர்வழிகள் பெருகிவிட்டார்கள்தான், ஆனால் இல்லாதவர்களுக்கு உதவும்போது அவர்கள் மனதார வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்து நம் குடும்பத்தை பாதுகாக்கும்.
நம்மைப் பற்றி நினைக்காமல் பிறரை பற்றியும் கொஞ்சம் சிந்தித்து பிறருக்காகவும் கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்! அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து