சுஶ்ரீ
நான் யார் தெரியுமா, தெரியாதா. சரி சொல்றேன். எங்க ஊர் மதுரை. என் பேர் தெரியுமா, அதுவும் தெரியாதா. என் பேர் ஆர்.பத்மஜா.ஆமாம் பெரிய கிளியோபாட்ரானு முனகாதீர்கள், பொறுமையா நான் சொல்றதை கேளுங்க.முழுசா சொல்லவா சுருக்கிச் சொல்லவா?முழுசாவே சொல்றேன் உலகத்துல பொண்ணுங்கன்னா என்ன கஷ்டம்னு அப்பதான் புரியும். பிடிக்கலைனா நாலு திட்டு திட்டிட்டு பாதில கழண்டுக்கங்க, சரியா?
நான் பிறக்கறப்ப அம்மாவோட அம்மா,பாட்டிதான் வீட்லயே பிரசவம் பாத்தாங்களாம். பாட்டி எப்பவும் சொல்வாளாம் பொண்ணா பிறக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும், தேவதை தேவதைனு சொல்றாளே, ஒவ்வொரு பொண்ணும் தேவதைதாண்டி.பிறக்கறதுல இருந்து அடுத்தவாளை சந்தோஷப் படுத்தவே பாடு படறவா அவாதான், முதல்ல தன்னை பெற்றவர்களை, கூடப் பிறந்தவாளை, நட்புக்களை, கணவனை, தன் குழந்தைகளை, இப்படி கடைசி வரை எல்லாரையும்..
பாட்டிக்கு என்னவோ தான் பெரிய Gynaecologist னு நினைப்பு.குடும்பத்துல யாருக்கும் பிரசவ வலின்னா இவங்க கிட்ட ஓடி வந்துடுவாங்களாம். சேலம் ரெண்டாவது அக்ரகாரத்துல இருந்த பெரிய வீடு கிட்டத்தட்ட பிரசவ ஆஸ்பத்திரிதான்.தாத்தா சம்பாரிச்சதுல பாதி இந்த பிரசவத்துக்கு வர சொந்தக்களுக்கு வடிச்சுக் கொட்றதுலயே ஆயிடும்னு எல்லாரும் சொல்வா.வருஷத்துல நாலு பிரசவமாவது பாக்கலைன்னா பாட்டிக்கு நிலை கொள்ளாதாம்.அந்தக் காலத்துலதான் ஒரு கட்டுப்பாடும் இல்லையே, பாட்டிக்கு குறை வைக்காம ஏதாவது ஒண்ணு வயித்தை தள்ளிண்டு குடும்பத்தோட வந்து நிக்குமாம்.
இதனால பாட்டிக்கு என்ன பிரயோஜனம் தெரியலை ஏதோ ஒரு மனதிருப்தியா இருக்குமோ, ஜாஸ்தி போனா குழந்தைக்கு பேர் வச்சு புண்யாஜனம் செய்றப்ப பாட்டியை கூப்பிட்டு ஒரு புடவை வச்சிக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிப்பா.அதுலயே பாட்டிக்கு உச்சி குளுந்துடும். வச்சுக் கொடுக்கற புடவைன்னே அந்தக் காலத்துல கிடைக்கும்.அது கட்டிக்க உதவாது, குழந்தைக்கு தூளி கட்ட, கிழிச்சு பீ, மூத்திரம் துடைக்கதான் உதவும்.
அந்த பாட்டியும் இல்லை தாத்தாவும் இல்லை இப்ப, பாவம் என் ஒரே மாமா அவ்வளவு பெரிய வீட்ல தனியா இருக்கார்.
என் கதை சொல்றேன்னு பாட்டி கதை சொல்லிட்டிருக்கேன் பாருங்க.எங்கப்பா ராமபத்திரன் மதுரைல பெரிய சிவில் லாயர்.அம்மா பர்வதம் டிகிரி படிச்சிருக்கா, ஆனாலும் ஹவுஸ் ஒய்ஃப்தான்.எனக்கு முதல்லே ஒரு அக்கா செல்வராணி ,அப்பறம் அண்ணன் ராஆஆஆசேந்திரன் எப்பப் பாரு தலைல குட்டுவான் கடங்காரன். நான் படிச்சா என்ன படிக்காட்ட இவனுக்கென்ன.
செல்வி அக்கா நல்லா படிக்கும், அண்ணாவும்தான் எப்பவும் முதல் ரேங்க். அதுக்காக நானும் அப்படி இருக்கணுமா என்ன, படிப்புல அவ்வளவு அக்கறை இல்லை, சுமாராதான் படிப்பேன்( அண்ணா,மக்குப் பிளாஸ்திரின்பான்)எங்கம்மா மாதிரி நான் நல்ல சிவப்பு,முடி கருகருன்னு நீளமா தொங்கறதை பாத்து வீட்டுக்கு வர சொந்தங்கள் கூட தடவிப் பாக்கும்,என் பிரெண்ட்ஸ்லாம் நான் ரொம்ப அழகுன்னுவாங்க. அப்பல்லாம் ஜாஸ்தி எனக்கு தெரியாது.
வைகை ஆத்தை ஒட்டி இருக்கற அக்ரகாரத்துல பெரிய வீடு எங்க வீடு.கம்பி கிரில் வச்சு ரெண்டு பக்கம் திண்ணை. முன்னால அப்பாவோட ஆபிஸ் ரூம், அப்பறம் ரெண்டு ரூம், ஒரு சமையலறை, ஸ்டோர் ரூம், கொல்லைப் பக்கம் கிணறு, துணி துவைக்கற கல்லு, குளியலரை, டாய்லட், மூணு தென்னை மரம், கம்பளிப் பூச்சிகள் குடியிருக்கும் முருங்க மரம், அவரைக் கொடி, கருவேப்பிலை செடி, பவளமல்லி, முல்லைனு சொல்லிண்டே போகலாம்.அந்த துவைக்கற கல் மேல உக்காந்து புஸ்தகம் படிக்கறது, கனவுலகத்துல சஞ்சரிக்கறது எனக்கு பிடிக்கும்.
சின்ன வயசு எப்படிப் போச்சுன்றது அவ்வளவு முக்கியமில்லை, என்னை மாதிரி பெண்களுக்கே 13 வயசுக்கு மேலேதான் வாழ்க்கைல பல சம்பவங்கள், திருப்பங்கள், அதிர்ச்சிகள், சந்தோஷங்கள், பொய், பித்தலாட்டம் எல்லாம் வரும் போல. தன் உடல் வளர்ச்சியின் ரகசியங்கள், இதை யாரிடமும் பகிர்ந்துக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. முதல்ல செல்வி அக்காதான் கேட்டாங்க என்னடினு. அக்காதான்னாலும், பயம், வெட்கம் சொல்ல, ஓவென்று அழத்தான் தெரிஞ்சது. அரவணைத்துக் கொண்ட அக்கா, “இதுதானே நடந்தது, எல்லா பெண்களுக்கும் நடக்கறதுதான் நீ வயசுக்கு வந்துட்டே, போ தனியா இரு நானே அம்மா கிட்ட சொல்றேன்.”
அந்த டயத்துல அம்மா நிறைய புத்திமதி சொன்னா, “இனிமே கண்டபடி பசங்க கூட எல்லாம் விளையாடக் கூடாது, பேசக் கூடாது, ஆண்கள் கிட்ட பேச வேண்டிய அவசியம் வந்தா தள்ளி நின்னு பேசணும், எருமை மாடு மாதிரி உரசிண்டு நிக்கக் கூடாது.”
நான் போம்மானு ஓடிப் போயிட்டேன். செல்வி அக்கா என்னை விட ஏழெட்டு வயசு பெரியவ அவ அவ்வளவு ஒண்ணும் சொல்லலை. ரொம்ப பேசினா அவ ரகசியம் ஒண்ணு எனக்கு தெரியுமே அப்பா கிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்னு பயம் அதான்.உங்க கிட்ட மட்டும் சொல்லவா, அப்பாவோட ஜூனியர் ராகவன் சார் இருக்காரே அவர் வந்து அப்பப்ப ஒரு கவர் கொடுத்து அக்கா கிட்ட தரச் சொல்வார். அதை அப்படியே அக்கா கிட்ட கொடுத்துடுவேன் , இப்பதான் தெரிஞ்சது அதெல்லாம் லவ் லெட்டர்னு. அப்பா இல்லாதப்ப ஆபீஸ் ரூம்ல அக்காவை அந்த ராகவன் சார் கட்டிப் பிடிச்சண்டதை நான் பாத்துட்டேன். அக்கா பதறிப் போய் “அப்பா, அம்மா கிட்ட ஏதும் உளறிடாதே இவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னா”
இன்னொரு நாள் ஆபீஸ் ரூம்ல அப்பா கிட்ட கையெழுத்து வாங்கப் போனா அப்பா இல்லை ராகவன்சார்தான் இருந்தார். “ ஏய் குட்டி இங்கே வா” ன்னார். பக்கத்துல போனேன் என்னனு. என் கையை பிடிச்சு இழுத்து மடில உக்கார வச்சிண்டார், இறுக்கி கட்டிப் பிடிச்சிண்டார் அக்காவை கட்டிண்ட மாதிரி.
அக்காவோட நான் நெருக்கமா இருந்ததை யார் கிட்டயும் சொல்லலைதானேன்னார். இல்லைன்னேன். என் சமத்துக் குட்டினு என்னை கட்டிண்டு கன்னத்துல முத்தம் கொடுத்தார். எனக்கு ரொம்ப கூச்சமா இருந்தது. அவர் பிடில இருந்து எந்திரிக்கப் பாத்தேன் அவர் கைகள் இன்னும் இறுகின கண்ட இடத்தையும் தொட ஆரம்பிச்சவுடனே உதறிண்டு எழுந்து ஓடிட்டேன்.
அன்னிக்கு ராத்திரி அக்கா கிட்டே “ராகவன் சாரை கல்யாணம் பண்ணிக்காதேக்கா அவர் என்னையும் கட்டிப் பிடிச்சிக்கறார்,கண்ட இடத்தை தொடறார், அம்மா சொல்லி இருக்கா ஆண்கள் யாரையும் தொட்டுப் பேசக் கூடாது, தொட விடக் கூடாதுனு”
செல்வி அக்கா ஏன் அப்படி அழுதானு எனக்குத் தெரியலை.மறுநாள் கொல்லைப் பக்கம் வெந்நீர் அடுப்புல நிறைய காகிதங்களை போட்டு எரிச்சிண்டிருக்கா கண்ணெல்லாம் கலங்கி இருக்கு சிவப்பா பயமா இருக்கு. அம்மா என்னடி ஆச்சுனு கேட்டதுக்கு ஈர விறகு கண் எறியறதுன்னா. அஞ்சாறு நாள் அதே மாதிரி இருந்தா. அப்பறம் ஶ்ரீரங்கத்துல போஸ்டிங்னு போயிட்டா, என்ன போஸ்டிங், என்ன வேலைனு அப்ப எனக்கு புரியலை. ராகவன் சாரும் பிராக்டீசை விட்டுட்டு போயிட்டார்.
இப்ப 8வது வகுப்புல நான். இஷ்டமில்லாமதான் போவேன் ஸ்கூலுக்கு.ஜானகி டீச்சரை மட்டும் பிடிக்கும், கலகலப்பா பாடம் நடத்துவாங்க. எனக்கு நெருங்கின தோழினு யாரும் இல்லை.நான் அழகு, மண்டைக்கனம் பிடிச்சவனு நினைச்சு பழக மாட்டேன்றாங்க.இந்த வருஷம்தான் நூருன்னிசா நல்லா வந்து ஒட்டிக்கறா, எனக்கும் அவளைப் பிடிக்கும். சிவப்பா, அழகா இருந்தா படிப்பாளினு நினைச்சுட்டா போல. எல்லா சந்தேகமும் என் கிட்ட கேப்பா. இவளுக்காகவே கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சேன்.
அண்ணா கிட்ட என் சந்தேகங்களை கேக்க ஆரம்பிச்சேன், யாரும் சொல்லாமலேயே படிக்க ஆரம்பிச்சேன், புரிய ஆரம்பிச்சது. ராஜு அண்ணனுக்கு ஆச்சரியம், இப்பல்லாம் தலைல குட்டறது இல்லை, என் முதல் டெர்ம் மார்க்கை பாத்துட்டு, செல்லமா தலைல குட்டினான், கன்னத்தை கிள்ளி முத்தமிட்டான், என் தங்கையாச்சேனு பெருமை வேற.
எங்க முசுடு சயின்ஸ் மிஸ் சரளா டீச்சர் கூட எனக்கு தனி கவனம் கொடுத்தாங்க.எனக்கே சந்தேகம் என்னால கூட நல்லா படிக்க முடியறதேனு. நாட்கள், மாதங்கள்னு ஓடறது. அனுவல் டேல மேடைல கூப்பிட்டு ஸ்கூல் டாப்பர்னு பரிசு கொடுத்ததை நம்ப முடியலை.என்னை விட நூருன்னிசாவுக்கு ரொம்ப பெருமை.தன் வீட்டுக்கு திரைபோட்ட சைக்கிள் ரிக்ஷால கூட்டிண்டு போனா.அவளோட அம்மா, அப்பா, அண்ணன்மார்கள் எல்லோருமே என்னிடம் பிரியமாக பழகினார்கள். எங்க நூருன்னிசாவுக்கு உன்னை மாதிரி தோழி கிடைச்சதுல எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமை என்றார்கள். அன்பை பொழிந்தார்கள், பரிசுகளை கை கொள்ளாது திணித்தார்கள்.அவர்களுக்கு தெரியல்லை நூருன்னிசா இல்லைன்னா எனக்கு படிப்புல இவ்வளவு ஆர்வம் வந்திருக்காதுன்னு.
எப்படி இத்தனை மாற்றம் என்னுள் எனக்கே தெரியலை, பள்ளி இறுதி ஆண்டு பரிட்சையில் மாநில அளவில் தரவரிசை பட்டியலில் பெயர் வந்ததும், அம்மா ஆசைப் படி மதுரை மெடிகல் காலேஜ்ல இடம் கிடைத்ததும். அம்மா உக்கார வச்சு திருஷ்டி சுத்திப் போட்டா. அண்ணா என்னைத் தூக்கி சக்கரமா சுத்தறான். அப்பா கட்சிக்காரங்க கிட்டயெல்லாம் பீத்திக்கறார். அக்கா ஶ்ரீரங்கம், திருச்சினு ஊர்ஊரா மாத்தல்ல போய் வேலை பாக்கறா, ஆடிட் ஜெனரல் ஆபீஸ் வேலையாம். கல்யாணம் பண்ணிண்டு எங்கே வேணா சுத்துடினு அம்மா, அப்பா ரெண்டு பேரும் சொல்றா,கேட்டாதானே.
நான் எம்.பி்.பி.எஸ் மூணாவது வருஷம் வரப்ப செல்வி அக்கா மதுரை வந்தா, கூட வேலை பாக்கறவர்னு கூட ஒருத்தர்,இவர் பிரகாஷ் இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்றா. அம்மாவுக்கு ஷாக், அக்காவை தனியா கூப்பிட்டு , “ஏண்டி வயசானவரா இருக்காரேடி 45 வயசு இருக்கும் போலயே”
“இல்லைம்மா 38 வயசுதான் ஆறது, நம்மவாதான்,பாவம் ஒரே ஒரு பெண் குழந்தையை வச்சிண்டு கஷ்டப் படறார்.
“ அடிப் பாவி அது வேறயா, ரெண்டாம் கல்யாணமா, உனக்கு என்னடி குறை ஏன் இப்படி போய் விழுந்தே”
“அவர் நல்லவர் எனக்கு பிடிச்சிருக்கு, என் கூட வேலை பாக்கறார்.மெட்ராஸ்ல செட்டில் ஆகப் போறோம்.”
“ எங்க சம்மதம் கேக்க வந்தாப்பல தெரியலையே, உன் முடிவை சொல்லன்னா வந்திருக்கே. எப்ப கல்யாணம் எங்கே கல்யாணம் சொல்லு அட்சதை போட்டு வாழ்த்திட்டு போறோம்.”
அப்பா ஒண்ணும் பேசாம எழுந்து போயிட்டார். அண்ணாதான் அந்த ஆளோட சாத்வீகமா பேசினான்.பிரகாஷ் உண்மைல மிக நல்ல மனிதர், UPSC ரேங்க்ல உயர்ந்த பதவில இருக்கறவர். முதல் மனைவி ஒரு பெண் குழந்தையை கொடுத்துட்டு பிரசவத்துலய போய் சேந்துட்டா. குழந்தையை கஷ்டப்பட்டு இவர்தான் வளர்க்கறார், ஒரு விதவை அக்கா கூட இருக்கா உதவிக்கு.இவ்வளவும் துருவித் தெரிஞ்சுண்டது அண்ணாதான்.
அப்பறம் என்ன,அக்காவுக்கு மதுரை மீனாட்சி கோவில்ல சிம்பிளா ஒரு கல்யாணம், பெரிய அளவுல பாண்டியன் ஹோட்டல்ல ரிசப்ஷன்.அந்த குழந்தை அனுஷா ஒரு அழகான பொம்மை. 3 வது படிக்கறதாம் என்ன ஒரு புத்திசாலித்தனம். இப்பவே இங்லீஷ்ல பொளந்து கட்றது. அக்காவுக்கு அவ மேல ரொம்ப பிரியம். இப்படியாகத்தானே எங்க குடும்பத்துல ஒரு பெண் இன்ஸ்டன்ட் அம்மாவாக செட்டில் ஆயிட்டா.
ஒரு பொண்ணுன்னா காதல் வலைல எப்பவவாது விழுந்துடணும்ன்றது எழுதப்படாத விதியோ என்னவோ தெரியலை( ஆண்களுக்கும் கூட இதே விதிதானோ தெரியலை)
சிலபேரு இந்தக் காலத்தில் தைரியமா ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள். சிலர் கடைசி வரை சொல்லாமல் மனதிலேயே வைத்துக் கொண்டு பெற்றோர் சொன்ன வரனை கட்டிக் கொண்டு இறுதி மூச்சு வரை ரகசியப் பெட்டகத்தில் வைத்து அவ்வப்போது அசை போடுகிறார்கள்.
எனக்கும் அந்த நாள் வரத்தான் செஞ்சது.
இன்டெர்ன்ஷிப் செய்யறப்ப, சீனியர் சவுந்தரபாண்டியனை பாத்தவுடனே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சு. அவன் எம்.டி.
எர்ஸ்கின் ஹாஸ்பிடல்ல மகப்பேறு வார்டில் முதல் கேஸ் எனக்கு, கைடிங் டாக்டர் சவுந்தரபாண்டியன்.ஒரு சீனியர் நர்ஸ் உதவிக்கு.
பேஷண்ட் நிறைமாச கர்ப்பிணி, 20 வயசு பொண்ணு, இப்பவோ அப்பவோனு ஆனா டெலிவரிவலி மட்டும் வராம இழுக்கறது. மஞ்சக்காமாலை வேற.தவியா தவிக்கறா சொல்லத் தெரியாம.சரியான வெயில் காலம், முதக் கேசே இப்படியா தரணும்.அந்த பேஷண்டை விட எனக்குதான் பயம் ஜாஸ்தி.
டாக்டர் சவுந்தரபாண்டியன் ரவுண்ட்ல வரப்ப கூடவே நடப்பேன், நல்ல உயரமா, சிவப்பா, கம்பீரமான ஆண்மகன்,ஆனா சரியான முசுடு சிரிப்பே முகத்துல பாத்ததில்லை. கடுவன் பூனை மாதிரி மூஞ்சியை வச்சிண்டு ஒவ்வொரு பெட்டா சுத்தி, ரிபோர்ட் அட்டையை மட்டும் பாத்துட்டு டிரீட்மெண்டை எழுதுவான். சில வார்த்தைகள் மட்டும் முத்தாய் உதிரும்.பூரா பூரா பெண்கள் வார்டு, ஆனா தவறான பார்வை எப்பவும் கிடையாது, ஜூனியர் பெண்களையோ இல்லை நர்சையோதான் விட்டு பரிசோதனை செய்யச் சொல்வான்.
“மிஸ் பத்மஜா இந்தப் பெண்ணுக்கு டிரிப்ஸ் ஏத்துங்க, மக்னீஷயம் கம்மியா இருக்கா லேப் டெக்னீஷியனை செக் பண்ணச் சொல்லுங்க, வார்டுக்குள்ள கொஞ்சம் நடக்கட்டும், இவங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொல்லி ஃபுட்டோட பப்பாளி,பைனாப்பிள் ஃபுரூட்ஸ் கொடுக்கச் சொல்லுங்க. நர்சை விட்டு வயித்துல லேசா ரெண்டு பக்கமும் ஜாஸ்தி அழுத்தாம கீழ் நோக்கி மசாஜ் பண்ணி விடுங்க, நாளைக்குள்ளே டெலிவரி பெயின் வரணும், இல்லைன்னா இன்ஜெக்ஷன் போட்டுதான் லேபர் பெயின் வரவழைக்கணும்” கடகடனு சொல்லிட்டே நடந்த அழகை ரசிச்சேன்.
“ பெட் நம்பர் 7, இது மூணாவது டிரைமஸ்டர் தெரியும் தானே 2 டேஸ்ல லேபர் பெய்ன் வரலைன்னா இவங்களுக்கு உடனே ஆபரேஷன் பண்ண டீன் கிட்ட சொல்லிடுங்க, நான் ரெண்டு நாள், மெட்ராஸ் மெடிகல் கான்பரென்ஸ் போறேன்.” ஒவ்வொரு பெட்டா பாத்துட்டே, குறிப்புகளை அந்த கிளிப் போட்ட ஷீட்ல எழுதின வேகம்.இதை பாத்து ரசிக்கதான் தோன்றியது எனக்கு.
மெதுவா, மெதுவா என் மனசுல கள்ளம் புகுந்தது.ஆனா நான் பெண்ணாச்சே இந்த முசுடு கிட்ட நானா எப்படி போய் சொல்றது.வேலை தவிர வேற பேச்சே கிடையாது, அதுவும் முகத்தை பாத்து பேசறதே கிடையாது.என்னை சரியா கவனிச்சிருப்பானா தெரியலை. மத்த ஆண்கள் எல்லாம் என் ஒரு புன்னகைக்கு ஏங்குவது எனக்கு தெரியும். ஆனா இந்த மக்கு டாக்டருக்குதான் ஒரு பெண் தனக்காக காத்திருப்பது தெரியல்லை.
தீபாவளி டைம்ல 3 நாள் நான் வர முடியாது அக்கா வீட்டுக்கு மெட்ராஸ் போறேன்னு பெர்மிஷன் கேட்டேன் இவன் கிட்ட.
“ என்னது 3 நாள் வரமாட்டயா நான் என்ன பண்றது?”
என் முகத்தை இப்பதான் நேரா பாக்கறான்.
“ ஏன், நான் ஒரு சாதாரண இன்டெர்ன், நிறைய லேடி டாக்டர்ஸ் இருக்காங்களே”
“ இதுதான் உன் பதிலா”
“ புரியலை நீங்க சொல்றது நான் லீவ்தானே கேட்டேன்”
“ எனக்கு பெண்கள் கிட்ட ஜாஸ்தி பெர்சனலா பேசி பழக்கமில்லை”
“ அதுக்கு?”
“ இல்லை வீட்ல வயசாகுது மேரேஜ் பண்ணிக்கோனு பேரண்ட்ஸ் பிரஷர் கொடுக்கறாங்க”
எனக்கு இப்ப கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது, திருடன் இவனுக்கும் மனசுல ஆசை இருக்கு, ஆனா சொல்லத் தைரியமில்லை.சரி அவன் வழிலயே கேம் விளையாடலாம்னு என் சிரிப்பை மறைச்சிண்டு,
“ ஆமாம் நல்லதுதானே சொல்றாங்க, பொண்ணு பாக்க ஆரம்பிங்க”
“ அது வந்து, நான் பாத்துட்டேன்,அவங்கதான் என்ன சொல்வாங்க தெரியலை”
“ ஓ பொண்ணு பாத்துட்டு வந்தாச்சா? பிடிச்சிருந்தா ஓகே சொல்லிட்டு தாலியை கட்ட வேண்டியதுதானே, என்ன தயக்கம்”
“ அவ்வளவு சுலபமில்லையே, அவங்களுக்கு என்னை பிடிச்சிருக்கானு தெரியாம எப்படி”
“ஓ இப்ப புரியுது லவ்வா? உங்களுக்கா? கஷ்டம் எந்தப் பொண்ணோட வேளையோ, சரி அவ தலையெழுத்து எனக்கென்ன பேசாம தைரியமா புரொபோஸ் பண்ணுங்க, இல்லை ஏற்கனவே பண்ணிட்டீங்களா?”
தலையக் குனிந்து கொண்டு முனகல் குரலில், “பத்மஜாதான், எப்படி சொல்றதுனு பயமா இருக்கு”
“ அட பார்றா,பேஷண்டுக்கு அதைப் பண்ணு இதைப் பண்ணுனு விரட்டறப்ப மட்டும் தைரியம் வருது.”
தலையைத் தூக்கி என் கண்களை பாக்கவே இல்லை, எனக்கே பாவமா இருந்தது. “சரி,சரி, வேற யாரும் பண்றதுக்கு முன்னால இப்பவாவது புரொபோஸ் பண்ணலாமே”
சட்னு என்னை நிமிர்ந்து பாத்து நான் கேலி பண்ணலைனு புரிந்து கொண்டு டேபிளை சுற்றுமுற்றும் பாத்து ஸ்டெதஸ்கோப்பை ரெண்டு கையாலயும் எடுத்து என் முன் நீட்டினான், “வில் யூ மேரி மீ”
பக்னு சிரித்த நான் அவன் கைகளை பற்றிக் கொண்டேன்.”ஸ்டெதஸ்கோப் கொடுத்து புரொபோஸ் பண்ற முதல் ஆள் நீங்களாதான் இருக்க முடியும்.உன் வாயில இருந்து இது வராதானுதான் காத்திருந்தேன். எஸ் ஐ வில்”
மெதுவே பத்திக்கிச்சு. தீபாவளி லீவ் கான்சல், அக்காவை வேலை பிரஷர் வர முடியலைனு கன்வின்ஸ் பண்ணிட்டேன்.
சினிமால வர மாதிரி லவ் பண்ண வேண்டாம், ஆனா ஒரு கதைல வர மாதிரி கூட பண்ணத் தெரியலை நம்ம ஆளுக்கு.ரொம்ப கூச்ச சுபாவம். அவுட்டிங் கூட்டிட்டு போன இடங்களை பாருங்களேன்,
சொக்கநாதர் கோவில், பேச்சியம்மன் கோவில், சேகர் மெஸ், அரசரடி ஆப்பக்கடை இவைகள்தான் ரொமான்டிக் ஸ்பாட்ஸ்.கார்ல பக்கத்துல உக்காந்து போறப்ப கியர் மாத்தறப்ப தெரியாம கை பட்டா, “சாரி, சாரினு” பதரறான் என்னத்தை சொல்ல.இருக்கட்டும் வச்சிக்கறேன் பர்ஸ்ட் நைட்ல,கடவுள் புண்யத்துல கல்யாணம் ஆனா.
அம்மாதான் முதல்ல கண்டு பிடிச்சா, “ என்னடி ஆச்சு, யாரு அவன், உங்கக்கா மாதிரி நீயும் பண்ணிடாதே தானா சிரிச்சிக்கறே,சாமான் கண்ட இடத்துல வச்சு மறந்து போறே. முதல்லயே சொல்லு ஏதாவதுன்னா.”
அண்ணா அடுத்து கேட்டான்,” பத்துகுட்டி யாரு அது யானைக்கல் பக்கம் கார்ல பாத்தேனே.”
“ ஆமாம்ண்ணா என் பாஸ், டாக்டர் சவுந்தரபாண்டியன் எம்.டி.”
என் வார்த்தைல கொஞ்சம் பெருமை தெரிஞ்சதோ, அண்ணா என்னை ஒரு மாதிரியா பாத்தான்.
“ஆள் நல்லா ஹீரோ மாதிரிதான் இருக்கார். நம்ம ஆள்களா”
போண்ணா உனக்கும், அம்மாக்கும் வேற வேலையில்லைனு சொல்லி பேச்சை வளக்காம கட் பண்ணிட்டேன்.
ஆனா நம்ம ஆளு இந்த விஷயத்துல கொஞ்சம் ஃபாஸ்ட்தான்.அவரோட அப்பா , ராமபத்திரனுக்கு( என் அப்பாங்க , பேரை மறந்துருப்பீங்களே)ஃபோன் பண்ணி ராமபத்திரன் பர்வதத்து( என் அம்மா பேராவது ஞாபகம் இருக்கா) கிட்ட சொல்லி ஞாயித்துக் கிழமை சாயந்தரம் குடும்பமே பொண்ணு பாக்க வந்துட்டாங்க.
எனக்கு சர்ப்ரைசாம் இந்த முசுடு என் கிட்ட கூட சொல்லலை. அம்மா ஞாயித்துக் கிழமை காலைல சொல்றா உன்னை பொண்ணு பாக்க வரானு. நான் யாரோ என்னவோனு பயந்தேன்.
எப்படியோ தமிழ் சினிமால வர மாதிரி வில்லன், மலைமேல துரத்தற சீன்லாம் இல்லாம நல்ல படியா முடிஞ்சது.முசுடுனு நினைச்ச நம்ம ஆளு அவரோட பேரண்ட்ஸ் முன்னால தைரியமா கேக்கறான், பாடத் தெரியுமா, சமைக்கத் தெரியுமானு. நானும் தைரியமா சொன்னேன் தெரியாதுனு சொன்னா பொண்ணை பிடிக்காதானு. இல்லை தெரியாதுன்னா நான் கத்துக்கலாமேனுதான் கேட்டேன்றான். நான் எல்லாம் தெரியும் பயப்படாதீங்கன்னேன். இந்த டிராமாவை பெரிசுகள் ரசிச்சு சிரிக்குதுங்க.
ஒரே மாசத்துல கல்யாணம்,செல்வி அக்கா, அத்திம்பேர் அந்த சின்னக் குட்டி அனுஷா எல்லாரும் ஒரு வாரத்துக்கு முன்னாலயே வந்தாச்சு.அண்ணாவை எல்லாரும் கிண்டல் பண்றா. அக்கா,
“ என்னடா உனக்கு ஒண்ணும் மாட்டலயா, படிப்புல மட்டும் உஷாரா இருந்தா பத்தாது “
அண்ணா “போங்கடி போங்க கல்யாண பந்தத்துல மாட்டிக்கற உத்தேசம் இல்லை இப்ப எனக்கு”
அம்மா, “ டேய் அப்படிச் சொல்லாதேடா, இந்த சின்னவளும் கல்யாணம் பண்ணி போயிட்டா இந்த வீட்ல தனியா ஆயிடுவேன்டா”
நான், “ அதெல்லாம் பயப் படாதேம்மா அண்ணா என் கல்யாணம் ஆகட்டும்னு காத்திருக்கான், பாரு உடனே டிக்ளேர் பண்ணுவான்”
அண்ணா சட்னு எழுந்து “என்னடி உளறரே”
நான், “ ஐய்யா இராசேந்திர சோழரே, அந்த உங்க பழைய டயரில ஏதோ பேர் கூட பின்னால எழுதி ஒரு ஃபோட்டோ, ஹாங் வித்யாலக்ஷ்மிதானே”
“ஏய், ஏய் நான் இல்லாதப்ப என் டேபிளை கள்ளச்சாவி போட்டு திறந்தயா, பாரு உன்னை என்ன செய்யறேன்னு” துரத்தி வந்தான்,
நான் அம்மானு அம்மா பின்னால ஒளிஞ்சிண்டேன்.
என்ன மக்களே என் கதை ரொம்ப இழுக்கறேனா பயப்படாதீங்க அவ்வளவுதான்.கல்யாணம் ஆச்சு. என் ஹப்பியோட கலந்து பேசி சேலம் மாமாவோட பரிபூரண சம்மதத்தோட சேலம் அக்ரகாரம் வீட்டை ஒரு அழகான ஹாஸ்பிடலா மாத்தினோம்.
‘வேதம் மகப்பேறு மருத்துவ மனை’.
எங்க மாமாதான், தன் வேலையை விட்டுட்டு ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் பாத்துக்கறார். பழையபடி அந்த வீட்ல பிரசவ வலி சத்தம், குழந்தை அழற சத்தம்.ஆனா நாங்க ரீசனபிளா ஃபீஸ் வாங்கறோம்.பாட்டி மாதிரி வச்சுக்கொடுக்கற புடவை மட்டும் வாங்கிக்கறது இல்லை.அம்மாவுக்கு தன் அம்மாவோட பேர்ல டிஸ்பென்சரி வச்சதுல பரம சந்தோஷம்.
இன்னும் நிறைய குட்டி தேவதைகள் இங்கே இருந்து வரும்.
நன்றி : படம் இணையத்திலிருந்து