திப்பு ரஹிம்
அந்த மகப்பேர் மருத்துவமனையில் மக்கள் பரபரப்பாக இருந்தார்கள். மகள்களையும், மருமகள்களையும், பேத்திகளையும் பிரசவத்திற்கு சேர்த்தவர்கள் அங்கே அலை மோதிக் கொண்டிருந்தார்கள்.
தன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்து இருந்த செல்வம் பெரும் கவலையோடு அமர்ந்திருந்தார். செல்வத்தைச் சுற்றி தாய் தந்தை, மாமனார் மாமியார் என எல்லாரும் கவலையோடு அமர்ந்திருந்தார்கள். செல்வம் அரசு ஊழியர், அவரின் மனைவி கவிதா அரசுப் பள்ளிக்கூட ஆசிரியை. இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.
ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லாததினால் பெரும் கவலையில் ஆழ்ந்திருந்தார்கள். கை நிறைய சம்பளம், சொந்த வீடு, எல்லாம் இருந்தும் வெளியே தலை காட்டுவதற்குப் பயந்தார்கள். இவர்களை அக்கம் பக்கத்தினர் பார்ப்பதிலும் அந்த பார்வையில் ஒரு நக்கல் இருப்பதும் தெரிவதால் யாருடைய கண்களையும் பார்க்காமல் தலைகுனிந்து வேலைக்குச் சென்று, வந்ததும் வீட்டிலே முடங்கி விடுவது என்று இருவரும் தினம் தினம் மரண வேதனையை அனுபவித்தார்கள்.
கவிதாவின் சொந்த பந்தங்கள் அவளிடம் “உன் கணவன் சரியில்லை உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்” என்று குத்தி காட்டும் போதெல்லாம் கவிதா அவர்களிடம் சண்டைக்குச் சென்று அதனால் நிறைய சொந்தங்களுடன் பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விட்டது.
கணவனுடைய சொந்தங்கள் வந்தால் கவிதாவை சாடை மாடையாக திட்டுவதும் செல்வத்திற்கு இன்னொரு திருமணம் செய்து வைப்போம் என்று மனம் நோக வைப்பார்கள்.
செல்வத்துடைய அலுவலகத்தில் அவனைப் பிடிக்காத சிலர் அவனுடைய குழந்தை பாக்கியத்தை தவறாக அவன் காது படவே சாடை மாடையாக பேசிக்கொள்வார்கள். கிண்டல் அடிக்கிறோம் என்ற பெயரிலே அவர்கள் இருவரையும் கொன்று கொண்டிருந்தார்கள்.
இருவருடைய உடலிலும் எந்த பாதிப்பும் இல்லை. என்று மருத்துவர்கள் சொன்னார்கள் ஆனாலும் குழந்தை தங்குவதில்லை அது அவர்கள் செய்த தவறும் இல்லை. ஆனால் சொந்த பந்தங்களும், நண்பர்களும், சமூகமும் அவர்கள் ஏதோ இந்த நாட்டிற்கே துரோகம் செய்து விட்டார்கள் என்பது போலப் பார்த்தது. ஆரம்பத்தில் அதையெல்லாம் காதில் கேட்பவர்கள் வீட்டிற்கு வந்து கணவனிடம் அவள் அழுவதும் கணவன் மனைவியிடம் சொல்லி வருந்துவதும் என்று பல நாள் பட்டினி கிடந்தார்கள். காலப்போக்கில் அதுவே அவர்களுக்கு கேட்டுக் கேட்டு அவர்களுடைய மனம் மரத்து விட்டிருந்தது. கோயில் குளங்கள் என்று ஏறாத இடங்களும் இல்லை போகாத மருத்துவமனைகளும் இல்லை.
“இனி நமக்குக் குழந்தை பாக்கியம் இல்லை” என்று நினைத்து அதை மறந்து வாழ்ந்தவர்களுக்கு திடீரென்று மனைவிக்கு குழந்தை தங்கியது மிகப்பெரிய சந்தோஷத்தை தந்தது. செய்தியை கேட்டவுடனே செல்வத்தின் மீசை இல்லாத அந்த மேல் உதட்டின் இரண்டு ஓரங்களும் லேசாக துடிக்க ஆரம்பித்தது.
இந்த செய்தியை அப்படியே எடுத்து வெளியே சொல்லி தன்னை யாரெல்லாம் ஆண்மை இல்லை என்று சொன்னார்களோ அவர்களை எல்லாம் அடித்து உதைக்க வேண்டும் என்று செல்வத்துடைய கைகள் பரபரத்தன. “வேண்டாம் அவர்களையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்வோம்” என்று ஒதுக்கிவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான்.
எப்படி எல்லாம் இச்சமூகம் பேசியதோ அந்த சமூகம் தற்பொழுது இவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல துவங்கியது இவர்கள் குழந்தை உண்டானதில் இரண்டு குடும்பத்தார்களுக்கும் அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்தது. ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற நிலையில் இருவரும் வந்து விட்டார்கள் ஆம் தற்பொழுது மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்து விட்டு வெளியிலே தனது குழந்தைக்காக காத்திருந்தான் செல்வம்.
சற்று நேரத்தில் மருத்துவர் வெளியே வந்து “உங்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்று சொன்னதும் செல்வத்திற்கு அந்த செய்தியை தவிர “வேறு எதுவுமே தேவை இல்லை இந்த உலகத்தில்.” நம்முடைய சொத்துக்கள் சொந்தங்கள் ஏன் அந்த நிமிடமே உயிரே பிரிந்தாலும் கவலை இல்லை என்பது போல தோன்றியது. ஐந்து ஆண்டுகள் எத்தனை மன உளைச்சல், எத்தனை அவமானங்கள், அத்தனையையும் தாங்கிக் கொண்டு நடைப்பிணமாக வாழ்ந்த அந்த வாழ்க்கையை சொல்லி முடியாது. ஊரில் எத்தனையோ விதமான மக்கள் வாழ்ந்தார்கள் குற்றவாளிகள் இருந்தார்கள் திருடர்கள் இருந்தார்கள் பணக்காரர்கள் இருந்தார்கள் ஏழைகள் இருந்தார்கள் இப்படி பல்வேறுபட்ட மக்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் அனுபவிக்காத ஒரு துன்பத்தை இவர்கள் இருவரும் அனுபவித்தார்கள். திருமணம் செய்த கொஞ்ச நாளிலே ஒரு குழந்தை பிறந்து விட்டால் அதைப் பற்றிய சிந்தனை யாருக்கும் இருப்பதில்லை சற்று தள்ளி போய்விட்டால் அவ்வளவுதான் “இந்த உலகத்தில் நீங்கள் ஏன் வாழ்கிறீர்கள்?” என்பது போல இச்சமூகமே கேட்கிறது.
வருடங்கள் கடந்து செல்ல…
தற்பொழுது செல்வத்தின் மகன் ரவிக்கு பதினெட்டு வயதாகிவிட்டது அவனுக்கு பிறகு ஒரு பெண் பிள்ளையும் பிறந்து பதினைந்து வயதாகிறது. வாழ்ந்தால் இது போல் வாழ வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அந்த குடும்பம் அவ்வளவு அன்பாகவும் நட்பாகவும் இருந்தது.
“தம்பி ( செல்வம் தனது மகனை தம்பி என்று தான் கூப்பிடுவான்) நீ IAS படித்து நம்ம மாவட்டத்திற்கு கலெக்டராக வேண்டும் இங்கு இருக்கக்கூடிய பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய உதவி செய்ய வேண்டும் அதுபோல உன் தங்கை டாக்டராக வேண்டும் பிறகு நம்முடைய பகுதியிலேயே மகப்பேறு மருத்துவம் பார்க்க வேண்டும்” என்று சொன்னான்.
அதற்கு மகன் ரவியோ “அட போப்பா சும்மா சும்மா எப்ப பார்த்தாலும் ஐஏஎஸ் ஐபிஎஸ்னு எனக்கு அதுல எல்லாம் சுத்தமா விருப்பமே இல்லப்பா நான் மிகப்பெரிய யூடியூபரா ஆகப் போறேன்.”
“டேய் தம்பி நீ எப்ப வேணா யூடியூப்பரா ஆகலாம் ஆனா சமூகத்துக்கு சேவை செய்யணும் இல்லையா? அதற்கு நீ ஐஏஎஸ் படிக்கணும் இல்லையா?” என்றார் செல்வம்.
“அப்பா இப்போது நான் எனது யூடியூப் சேனல் வழியாக நிறைய சேவைகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய பைக் சேனலை வைத்து எத்தனை லட்சம் பாலோவர்ஸ் இருக்காங்க தெரியுமா? அவங்க எல்லாம் அங்கங்க ஏதாவது சேவைகள் செஞ்சுகிட்டு தான் இருக்காங்க.”
அம்மா குறிக்கிட்டு “ரவி உன்ன தவமா தவமிருந்து நாங்க பெற்று இருக்கிறோம். இப்படி பைக்கு பைக்குன்னு சுத்தாதடா”
உடனே ரவி “அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நான் ரொம்ப சேப்டியா பைக் ஓட்டுவமா ஊரிலேயே நான் தான் ரொம்ப சேப்டியா பைக் ஓட்டுறேனு எல்லாம் சொல்லுவாங்க தெரியுமா? நீ வேணும்னா என்னுடைய யூடியூப் சேனல்ல வந்திருக்கக்கூடிய கமெண்ட் குள்ள போய் பாரு.”
ரவி வீட்டிற்கு மிகவும் செல்லப்பிள்ளை என்பதால் அவன் கேட்பதையெல்லாம் தந்தை வாங்கி கொடுத்தார். அப்படிதான் மிக வேகமாக செல்லும் பைக் தனக்கு வேண்டும் என்று ஆடம்பிடித்தான். அம்மாவோ வாங்கி கொடுக்க வேண்டாம் என்று தடை செய்திருந்தாலும் தந்தையால் தட்ட முடியவில்லை.
அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்து சமூகத்திற்கு சேவை செய்ய வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் அவனோ இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் பைக் வீரனாக மாறி இருந்தான்.
அன்று சென்னை கடற்கரை சாலையில் ரவியும் நண்பர்களும் அமர்ந்திருந்தார்கள். அனைவரும் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் நண்பர்களாக இருந்தார்கள்.
“ரவி ப்ரோ நீங்க ரொம்ப சேப்டியான ரோடுல வண்டியை ஒட்டி சாகசம் செய்து உங்கள் யூடியூப் சேனல்ல பேஸ்புக்ல போட்டு நிறைய லைக் வாங்குகிறீர்கள் நிறைய பாலோவர்சையும் சம்பாதிக்கிறீங்க. பட் உங்களால இது போல பிசியான ரோட்ல பண்ண முடியுமா?” என்று ஒருவன் கேட்டான்.
“என்ன ப்ரோ என்னை அவ்வளவு லேசா எடை போட்டுட்டீங்க. எனக்கு எந்த ரோடா இருந்தாலும் பிரச்சனை இல்ல ப்ரோ நான் சூப்பரா ஸ்டென்ட் பண்ணுவேன் ப்ரோ.”என்று ரவி சொன்னதும் கூட்டத்தில் இருந்த மற்றவன்.
“ரவி அவன் சும்மா சொல்றான் அவன் சொல்றானு நீங்க எதுவும் செய்யாதீங்க இங்க டிராபிக் அதிகம் மக்கள் கிராஸ் பண்ணுவாங்க இந்த ரோட்ல ஸ்டன்ட் பண்ணா நாளைக்கு போலீஸ் பிரச்சனை வரும் அதனால செய்ய கூடாது” என்றான் ஆனாலும் ரவிக்கு அது மிகப் பெரிய அவமானமாக தெரிந்தது.
“இல்லை ப்ரோ அவரு இத்தனை நாள் நான் செய்த சாகசங்களை போலித்தனமாக கருதுகிறார். ஆகவே அவருடைய சவாலை ஏற்று நான் இங்கு செய்து தான் ஆக வேண்டும்” என்றான் ரவி. யார் சொல்லையும் கேட்காதவன் சாலையில் இரு சக்கர வாகனத்துடன் இறங்கி வாகன சாகசத்தை செய்ய ஆரம்பித்தான். அத்தனை சாகசங்களையும் அங்கே செய்து முடித்தவன் கேட்டவனுடைய முகத்தில் கறியை பூசினான். அதோடு நில்லாமல் மிக வேகமாகவும் நான் ஓட்டுவேன் என்பதை காண்பிப்பதற்காக அந்தச் சாலையில் அளவுக்கு அதிகமான வேகத்தில் பறந்தான்.
அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காமல் ஒரு இளைஞன் சாலையில் குறுக்கே எதையோ பார்த்து கைகாட்டி கொண்டு வந்து நின்றான். 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரவிக்கு குறுக்கே வந்து நிற்கும் அந்த இளைஞனை பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அத்தனை பிரேக்குகளையும் ஒன்றாக சேர்த்து பிடித்த போது முன்புறம் இருந்த சக்கரம் சடேர் என்று திரும்பியது. முன்புற சக்கரம் சட்டென்று திருப்பிக் கொண்டதால் பின்புறமாக வாகனம் உயர்ந்து அமர்ந்திருந்தவனை தூக்கி வீசியது. இருசக்கர வாகனம் இரண்டாக உடைந்து பறந்து சென்றது. அவனும் தான். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து விட்டது. ரவி அத்தனை ஜாக்கிரதையாக இருந்தும் பாதுகாப்பான ஆடைகள் போட்டிருந்தாலும் அளவுக்கு அதிகமான வேகத்தால் அது எதுவுமே வேலைக்காகவில்லை.
கை கால்கள் எல்லாம் உடைந்து அதிர்ச்சியில் அவன் இதயமும் நின்றிருந்தது. ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். அங்கிருந்து அத்தனை மக்களும் ஓடி வந்தார்கள் நண்பர்களும் தான்.
ரவியோட தந்தைக்கும் தாய்க்கும் செய்தியை சொன்னவுடன் இருவரும் மயங்கி விழுந்தார்கள். செல்வத்துனுடைய இதயத்தை யாரோ உருவிக்கொண்டு சென்றது போலவும் தாயுடைய வயிற்றை யாரோ திருடி சென்றது போலவும் உணர்ந்தார்கள்.
மூன்று நாள் ஆகிவிட்டது எல்லாம் முடிந்தது உலகத்தில் தலை நிமிர்ந்து வாழ இவர்களுக்கு வாழ்க்கைத் தந்த தனது தனையன் இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. தெருவே சோகத்தில் மூழ்கி இருந்தது.
மூன்று நாட்கள் கழித்ததும் சொந்தக்காரர்கள் ஊருக்கு செல்லும் பொழுது…
செல்வத்தின் மாமனார் மகளையும் மருமகனையும் பார்த்து கூறினார்.. “சூதானமாக இருந்துக்குங்க அவனுக்கு பைக்கெல்லாம் வாங்கி கொடுத்த மாதிரி இந்த பொம்பள புள்ளைங்களுக்கும் ஏதாவது வாங்கி கொடுத்து நீங்களே கொன்னுடாதீங்க” என்று சட்டென்று சொல்லிவிட்டார்.
அவ்வளவுதான் செல்வம் தன் நெஞ்சிலே அடித்துக் கொண்டு என் மகனை நானே கொன்று விட்டேன் நானே கொன்று விட்டேன் என்று அழுது துடித்தான்.