அத்தியாயம்-14
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அத்தியாயம்-7
அத்தியாயம்-8
அத்தியாயம்-9
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
அத்தியாயம்-13
மதன் சிக்னலை பார்த்தான். அது கிளியராக சில நொடிகள் தான் இருந்தது. முத்து வரும் வேகத்தை பார்த்தால் கண்டிப்பாக சண்டை போட தான் வருகிறான் என்பது தெளிவாக தெரிந்தது. ஜனத்திரள் நிறைந்த இடம் .இங்கே தகராறு வேண்டாம் என்று முடிவெடுத்து சிக்னல் க்ளியர் ஆன அடுத்த நொடி காரை வேகமெடுத்தான். இதை எதிர் பார்க்காத முத்து ஓடிப் போய் பைக்கில் ஏறி அமர்ந்து கிளப்பினான். கூடவே அவன் நண்பர்களும்.
அனைவரும் காரை பின் தொடர்ந்தார்கள். இது சைடு வியூ மிர்ரரில் தெளிவாக தெரியவே மதன் அதை கவனித்து கொண்டே காரை ஓட்டினான். பிரியாவும் முன்னும் பின்னுமாக திரும்பி பார்த்து கொண்டிருந்தாள். மதன் ஆளில்லாத ரோட்டில் கொண்டு வந்து காரை நிறுத்தினான். பின்னாடியே வந்த பைக்குகள் நின்றன. முத்து மட்டும் இறங்கி வேகமாக வந்தான். காரை விட்டு இறங்காமல் மதன் அவன் அருகே வரும் வரை காத்திருந்து கேட்டான்.
“என்ன விசயம். ஏன் என்னை பின் தொடர்ந்து வர்றே?”
முத்து மதனுக்கு பதில் கொடுக்காமல் பின் சீட்டில் இருந்த பிரியாவை பார்த்து கேட்டான்.
“என்னை விட சிகப்பான ஆளு. பணம் உள்ள ஆளுன்னவுடனே அவன் கூட சுத்தறே போலிருக்கே”
இந்த வார்தை கேட்ட மாத்திரத்தில் மதன் கோபமாய் கதவை தடாலடியாக திறக்க கதவுக்கு பக்கத்தில் நின்றிருந்த முத்து தள்ளப்பட்டு எகிறி போய் விழுந்தான். நண்பர்கள் சூழந்து கொண்டு அவனை எழுப்பி விட, மதன் இறங்கி முத்துவின் அருகில் சென்று சட்டையை பிடித்தான்.
“நிறுத்துங்க.”
பிரியாவின் குரல் கேட்டது.
திரும்பினான்.
பிரியா அருகே வந்தாள்.
“உங்கம்மாவை ஒரு நாள் அவங்க கூட வேலை பார்க்கிற ஆம்பளை கூட சைக்கிள்ல பார்த்தேன். அப்ப உங்கம்மாவை நான் தப்பா நினைக்கலாமா..? ஒரு ஆம்பளை கூட ஒரு பொண்ணு சேர்ந்து போறான்னா தப்பாவே தான் உனக்கு தெரியுமா..? அது என்ன புத்தி. ராஸ்கல்… சரி நான் யார் கூட பழகினா உனக்கென்ன…”
பிரியா எகிற ஆரம்பித்ததை பார்த்து மதன் ஆச்சரியமானான்.
“பெத்த தாய்க்கு சோறு போட்டு பார்த்துக்க மாட்டானாம். ஆனா இவனை நம்பி ஒரு பொண்ணு வரணுமாம். அதுவும் இவன் ஆசைப்பட்ட பொண்ணே வேணுமாம். “
“நீ ரொம்ப பேசறே…”
“நீ தான் பேசறே. உனக்கு மரியாதை அவ்வளவு தான். இதற்கு மேல உன்னை எங்கேயாவது என் வழில பார்த்தேன். நடக்கிறதே வேற.”
“உன்னை சும்மா விட்டுடுவேன்னு நினைச்சிறாத…”
“என்ன பண்ணுவே. முடிஞ்சா என்னை கொல்றதுக்கு பார்ப்பே. அதானே. அதுக்கெல்லாம் பயபந்துட்டிருக்க முடியாது. உனக்கு மட்டும் தான் ஆசிட் கிடைக்கும்னு நினைக்காத. எனக்கும் கிடைக்கும்”
கத்தியவள் காரை நோக்கி நடந்தாள்.
திரும்பி மதனை பார்த்து தணிந்த குரலில் “நீங்க வாங்க” என்றபடி காரில் ஏறி அமர்நதாள்.
மதன் அவளது ஆணைக்கு கட்டுப்படுவது போல் நடந்து வந்து காரை கிளப்பினான்.
கார் நகர நகர முத்து முறைத்து பார்த்து கொண்டே நின்றான்.
“என்ன பிரியா… உங்களுக்கு கோபம் வரும்னு தெரியும்… ஆனா இவ்வளவு கோபம் வருமா..?”
“சாது மிரண்டால் காடு கொள்ளாது… நீங்க ஹேப்பி மூட்ல இருந்தீங்க. அதை கெடுத்தி்ட்டான்.”
“வாழ்க்கைங்கிற திரைக்கதை அப்படித்தான் ” மதன் சிரித்தான்.
***
வீட்டில் வந்து கார் நின்றதும் பிரியா இறங்கி, ‘தேங்க்ஸ்’ என்ற படி வீட்டிக்கு செல்ல திரும்பினாள். மூர்த்தி வீட்டிலிருந்து வெளி வந்தபடி “என்னம்மா தம்பிக்கு வரவேற்பு சிறப்பா கொடுத்தாங்களா” என்றார்.
“ம்” என்றபடி நடந்தாள்.
மதனுக்கு மூர்த்தியிடம் விசயத்தை சொல்லி விடலாம் என்று தோன்றியது.
“மூர்த்தி ” என்றான்.
“சொல்லுங்க தம்பி “
“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். பிரியாவோட அம்மாவை அழைச்சுகிட்டு என் ரூமுக்கு வாங்களேன். “
“ஏன் தம்பி எதுனா பிரச்னையா..?”
“அதெல்லாமில்ல. நல்ல விசயம் தான். வாங்க”
பதில் எதிர் பார்க்காமல் மாடிப்படிகளில் தாவி ஏறி ரூமுக்குள் வந்தான். ஜூம் மீட்டிங்கில் உதவி இயக்குனர்களோடு பேசி கொண்டிருந்த விக்கி ரெண்டு நிமிடத்தில் முடிச்சிடறேன் என்பதாகஹ் சைகை காட்டினான்.
தலையாட்டியபடியே பாத்ரூம் சென்று உடை மாற்றி கொண்டு வெளியில் வந்தான்.
“உதவி இயக்குனர்கள் கிட்ட இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தாச்சு. இன்னும் ஒரு வாரத்தில் நாம கேட்ட லோகேசன்ஸ் கண்டுபிடிச்சு கொண்டு வர சொல்லிருக்கேன். “
“ம்” என்ற மதன் விக்கி அருகே அமர்ந்தான்.
” இதெல்லாம் விடுடா. சூப்பர் நியூஸ் ஒண்ணு சொல்றேன். “
“என்ன?”
மதன் விக்கியை பார்த்தான். “பிரியாவை எனக்கு பிடிச்சிருக்குடா. கல்யாணம் பண்ணிக்கலாம்னு டிசைட் பண்ணிட்டேன்.”
விக்கி அதிர்ந்தான்.
“என்னடா விளையாடறியா..?”
“இல்லை நிஜம் ”
“என்ன திடீர்னு”
ரொம்ப நாளாவே இந்த பொண்ணை பார்க்கிறப்ப அடுத்து எப்ப பார்க்க போறோம்ங்கிற ஆர்வம் வந்துட்டே இருந்துச்சு. இந்த பொண்ணை மிஸ் பண்ண கூடாதுனு மனசு சொல்லிட்டே இருந்துச்சு. இன்னிக்கு தான் அது ஒரு முடிவுக்கு வந்துச்சு…”
“பிரியா கிட்ட சொல்லிட்டியா”
“இல்ல. மூர்த்திகிட்ட முதலில் சொல்லலாம்னு வர சொல்லிருக்கேன்.”
விக்கி இதை கேட்டு சோர்வானது போல் தெரியவே “ஏன்டா உனக்கு பிடிக்கலியா..?” என்றான்.
“சேச்சே. நல்ல சாய்ஸ் தான். பட் உங்கப்பாவுக்கு என்ன பதில் சொல்றது..?”
“நான் பார்த்துக்கிறேன். “
“நீ பார்க்கிறப்ப தான் என்னை ரவுண்டு கட்டுவாரு.”
“எல்லாத்துக்கும் பயப்படாதடா ” என்றபடி பால்கனிக்கு சென்றான்.
விக்கி அவன் செல்வதை பார்த்து கொண்டே தன் செல் போனை எடுத்தான்.
கேலரிக்கு சென்று அன்றொரு நாள் பிரியாவை தான் எடுத்திருந்த போட்டோவை தொட்டு அதை டெலிட் செய்தான்.
செல்போனை டேபிளில் வைத்தான்.
கலங்கியிருந.த தன் கண்களைத் துடைத்து கொண்டான்.
மதன் உள்ளே வந்த படி கேட்டான். ” டேய் அன்னிக்கு ஒரு நாள் பிரியாவை போட்டோ எடுத்தியே. நான் கூட அத டெலிட் பண்ணிடுனு சொன்னேனே.”
“ஆமா . அதுக்கென்ன”
“டெலிட் பண்ணலைனா எனக்கு அனுப்பேன்.”
விக்கி அவனையே பார்க்கவும் வெட்கப்பட்டான்.
“டெலிட் பண்ணேட்டேன்டா.”
“ஓ சரி ” என்றான் ஏமாற்றத்தில்.
தம்பி என்றபடி மூர்த்தியும் கௌரியும் உள்ளே வந்தார்கள்.
,” வாங்க. உட்காருங்க.”
“அதெல்லாம் வேண்டாம் தம்பி “
மூர்த்தி மதனை பார்க்க, அவன் வேறு பக்கம் பார்த்த படி தொண்டையை செறுமி கொண்டு பேச ஆரம்பித்தான்.
” எப்படி சொல்றதுனு தெரியல. எனக்கு உங்க பொண்ணு பிரியாவ புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்.”
இருவரும் அதிர்ந்தபடி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
“உங்க பொண்ணுகிட்ட இது விசயமா நான் பேசலே. உங்க கிட்ட தான் பேசறேன்.”
மூர்த்தி சிரித்தார்.
” தம்பி ஏற்கனவே உங்கப்பா என்னை போட்டு வறுத்தெடுத்துகிட்டு இருக்காரு. இதை சொன்னீங்கன்னா என்னை உண்டு இல்லேனு பண்ணிடுவாரு. உன் பொண்ணை காண்பிச்சு மயக்கிட்டியாங்கிற ஒரு வார்த்தை போதும். நாங்க நொறுங்கி போறதுக்கு”
“நான் பார்த்துக்கிறேன்.”
“எங்களை விட எங்க பொண்ணை நீங்க சூப்பரா பார்த்துப்பீங்க. அதுல எந்த சந்தேகமும் எங்களுக்கில்ல. ” கௌரி சொன்னாள்.
“பின்னே ஏன் தயங்கறீங்க.” விக்கி கேட்டான்.
“தம்பி கூட சம்பந்தம் வச்சிக்க ஒரு தகுதி வேணும் இல்லியா”
” பணம் மட்டுமே தகுதி கிடையாது”
“இல்லே தம்பி. என்னை மன்னிச்சிடுங்க. எங்களை விட்டுடுங்க. உங்க அப்பா பார்வையில் நான் திருடன். இந்த திருடனோட பொண்ணு உங்களுக்கு வேணாம் ” கை கூப்பினார்.
மதன் சோர்வாகி சோபாவில் அமர்ந்தான். விக்கி அவன் தோள் பற்றி தட்டி கொடுத்தான்.
வாசல் வரை சென்ற மூர்த்தி சொன்னார். ” பொண்ணுக்கு வரன் பார்த்துகிட்டு இருக்கிறதா சொன்னேனே. அது முடிவாகிடும் போல இருக்கு. மாப்பிள்ளை வீட்ல ஓகே சொல்லிட்டாங்க.”
மதன் அதிர்ச்சியாகி பதில் சொல்ல தோன்றாது விக்கியை திரும்பி பார்த்தான்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.