அத்தியாயம்-9
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அத்தியாயம்-7
அத்தியாயம்-8
மதன் மேல் மாடிக்கு செல்ல எழுந்தான். விக்கி கையை பிடிக்க, அவனிடமிருந்து விடுவித்து கொண்டு ” நீ ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு நம்ம ரூமுக்கு வந்துடு ” எனச் சொல்லிவிட்டு லிப்ட் மூலம் மேலே வந்தான்.
அப்பாவின் அறைக்குள் அவன் வருவதற்குள் அங்கு நடந்ததை பார்த்து விடுவோம்.
” ஐயா… இதோ கணக்குப் புத்தகம் தேதி வாரியா எழுதி வச்சிருக்கேன்” நாற்காலியில் அமர்ந்து ஒரு கையில் க்ளாஸூடனும் மறு கையில் சிகரெட்டுடன் இருந்த விஜயராகவனிடம் கொடுத்த மூர்த்தியைக் கையிலிருந்த கிளாஸை டீப்பாயில் வைத்து விட்டு பளாரென்று அறைந்தார் விஜயராகவன்.
திடீரென்று விழுந்த அடியில் நிலை குலைந்து விழுந்த மூர்த்தியை எழுந்து வந்து சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்து இழுத்தவர் “என் பையனை எனக்கெதிராப் பேச வைக்கிறியா படவா” என்றார்.
“ஐயா நான் பேச சொல்லலய்யா. அவரா நான் கஷடப்படறேனு பேசியிருக்காரு. பெத்த அப்பாவுக்கெதிரா பிள்ளையை நான் எப்படித் திருப்புவேன்..?”
“நீ பண்ணுவடா. என் பணத்தை திருடினவன் தானே நீ.”
“ஐயா. திரும்பத் திரும்ப அதே வார்த்தையச் சொல்லாதீங்க. நான் திருடலே. யாரோ எடுத்திட்டுப் போயிட்டாங்க. திருட்டுக் கொடுத்திட்டு திருடன் பட்டம் வாங்கிட்டு நிக்கிறேன்.”
“யாருக்கு அதனால் நஷ்டம்?”
“உங்களுக்குதான்யா. அதுக்காக தானய்யா கொடுக்கிற சம்பளத்தை வாங்கிகிட்டு கொடுத்த வேலைகளைப் பார்க்கிறேன். இந்த ஜென்மம் முழுக்க உங்களுக்கு வேலை பார்த்து என் கடனை அடைச்சிடறேன்னும் சொல்லியிருக்கேனே”
“என் பையனுக்கு இந்த விசயம் தெரியாது. தெரிஞ்சுது உன்னை மனுசனா கூட மதிக்க மாட்டான்”
” நான் நிரபராதி அய்யா. ” அழுதார்.
“பணத்தை எங்க இருக்குன்னு கண்ல காண்பிச்சிட்டு உனக்கு சர்ட்டிபிகேட் கொடுத்துதுக்கோ”
மூர்த்தி என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க விஜயராகவன் சொன்னார்.
” இனி ஒரு முறை என் பையன் உனக்காக சப்போர்ட் பண்ணிட்டு வரக் கூடாது. வந்தான்னா பெல்ட்டை எடுத்து உடம்பை ரணமாக்கி விடுவேன். அவன் கிட்டே உன்னோட திருட்டுதனத்தையும் சொல்லிடுவேன்.”
அப்போது மதன் உள்ளே நுழைந்தான்.
அவனை பார்த்ததும் மூர்த்தி கண்களை துடைத்து கொண்டார், புன்னகைத்தார்.
அவரது முகமே அங்கு ஏழு நடந்திருக்கிறது என்பதை சொன்னது.
மதன் வந்தது விஜயராகவனை இன்னும் கடுப்பேற்ற, “என்ன வேவு பார்க்க வந்திருக்கியா..?” கத்தினார்.
“நான் ஏன் வேவு பார்க்கணும். என் வேலைய பார்க்கிறதுக்கே எனக்கு நேரமில்லே. “
“அந்த லிமிட்டோட இரு. “
“நீங்களும் என் விசயத்தில ஒரு லிமிட்டோட இருங்க.”
புரியாமல் அவர் பார்க்கவே, ” என் புரோடியூசர் கிட்ட ஏன் இன்னும் அட்வான்ஸ் கொடுக்கலேனு கேட்டீங்களாமே”
“நான் உன் அப்பா. எனக்கு அந்த உரிமை இருக்கு.”
“நானும் உங்க பிள்ளை தான். எனக்கும் இங்க உரிமை இருக்கு. மூர்த்தி உங்களுக்கு மட்டுமா வேலைக்காரர் . எனக்கும் தானே. மூர்த்தி என் ரூமுக்கு வாங்க கொஞ்சம் வேலை இருக்கு” என்றபடி வெளியில் வந்து விட்டான்.
மதன் ரூமுக்கு வந்து விக்கியுடன் லேப்டாப்பில் அமர்ந்து விட்டான்.
சில நிமிடங்களில் மூர்த்தி அவன் ரூமுக்கு வந்தார்.
“சொல்லுங்க தம்பி” என்றார். சோர்வடைந்திருந்தார்.
“மூர்த்தி என்னாச்சு?”
“ஒண்ணுல்ல தம்பி. நீங்க எனக்காகப் பரிஞ்சு பேசறத அப்பா விரும்பலே. ஏன் நான் உன்னை அதட்ட கூடாதானு கேட்கறார். என் விசயத்தில் நீங்க அவர் கிட்டே எதுவும் கேட்காதீங்க தம்பி.”
லேப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்த மதன் நிறுத்தி அவரை பார்த்தான். அவர் கண்களை வேறு பக்கம் திருப்பி கொண்டார்.
“வேலை இருக்கிறதா வர சொன்னீங்களே”
“ஒண்ணுல்ல. எங்கப்பாகிட்டேருந்து உங்களை தப்ப வைக்க அப்படி சொன்னேன். சீட்ல உட்கார்ந்து ரெஸ்ட் எடுங்க”
அவர் ஏதோ சொல்ல வர , உட்காருங்க என்பது போல் ஜாடை காட்டி டைப் செய்வதைத் தொடர்ந்தான்.
கலங்கிய கண்களை துடைத்து கொண்டு அமர்ந்தார்
அரை மணி நேரம் சென்றிருக்கும். பிரியா ரூமின் வாசலில் நின்றாள்.
மதன் நிமிர்ந்து” என்ன பிரியா” என்றான். உள்ளே வந்தாள்.
“உங்க அம்மா நீங்க இன்னும் சாப்பிட வரலைனு கூப்பிட்டுட்டு வர சொன்னாங்க.”
“இதுக்கெல்லாம் நீ ஏன்மா வரே”
“அப்பா இன்னும் ஐயா ரூமில தான் இருக்காரா..? ” தயக்கமாய் கேட்டாள்.
மதன் புன்னகைத்த படி கை காட்டினான்.
உட்கார்ந்திருந்த அப்பாவை பார்த்ததும் நிம்மதியானவள் , தயங்கிக் கொண்டே கேட்டாள்.
,”எங்கப்பாவும் மனிதர்தானே. தொடர்ந்து ரெண்டு பேருமே வேலை வாங்கினா அவர் உடம்பு என்னாகிறது…”
மதன் அவளை பார்த்தான்.
“வெளியில் இருந்தா மதனோட அப்பா தொந்தரவு பண்ணிட்டே இருப்பாருன்னு தான் இங்க உட்கார வச்சுருக்கான் மதன்” இது வரை பேசாமல் ஸ்கிரிப்ட் சரி பார்த்து கொண்டிருந்த விக்கி தான் பதில் கொடுத்தான்.
பிரியா முகம் மாறியது. “சாரி ” என்றாள்.
அப்பாவுக்கு சுகர் இருக்கு. டயத்துக்குச் சாப்பிடணும்… அவரை அழைச்சிட்டு போறேன்.
தலையாட்டினான்.
“வரேன் தம்பி ” மூர்த்தி கிளம்பினார்.
பிரியா வாசல் வரை சென்றவள் திரும்பி தேங்க்ஸ் என்றாள்.
“மனிதாபிமானத்துக்கெல்லாம் நான் நன்றி எதிர் பார்க்கறதில்லே”
சிரித்தாள்.
“இத்தனை நாள்ல உங்க பொண்ணு சிரிச்சு இப்ப தான் பார்க்கிறேன்”
மூர்த்தி புன்னகைத்தார்.
———–
மறு நாள். காலை 8 மணிக்கே மதனின் அப்பாவும் அம்மாவும் கிளம்பினார்கள்.
பையனிடம் சொல்லி கொள்ளாமலே விஜயராகவன் கிளம்பினார்.
“என்னங்க அவன்கிட்டே போயிட்டு வரேன்னு சொல்லலியா “
“உன் பிள்ளைக்கு ஒரு படம் ஓடின உடனே தலை கால் புரியல. அப்பாவையே எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டார்”
“டாடி… டைரக்டரா ஆகறதுக்கு முன்னாடியும் நான் உங்க கிட்டே ஆர்க்யூமெண்ட் பண்ணிருக்கேன். நல்லதை பேசறதுக்கு ஜெயிச்சிட்டு தான் பேசணும்னு அவசியமில்லே…”
” திரும்பவும் சொல்றேன். உன்னோட டயலாக்லாம் உன் சினிமாவோட வச்சிக்க”
சொல்லி விட்டு காரில் சென்று ஏறிக் கொண்டார்.
“டேய். அவர் கிட்டே கொஞ்சம் பார்த்து பேசுடா”
” அவரையும் என் கிட்டே பார்த்து பேச சொல்லு. சரி மேல் மாடியில ஒரு ரூம் பூட்டியே இருக்கே. அதன் சாவி எங்கே..?”
” என் கிட்டே தான் இருக்கு”
” அதை கொடுங்கம்மா”
” எதுக்குடா..?”
பத்து வருசத்துக்கு முன்னாடி நான் எழுதி வச்ச ஸ்கிரிப்ட் எல்லாம் இங்க எங்கயுமே காணும். அங்க இருக்கான்னு பார்க்கணும்.”
” அங்க தான் இருக்கு. நான் தான் எடுத்து வச்சேன்” என்றபடி தன் பேக்கைத் திறந்து சாவி கொத்தொன்றை எடுத்து நீட்டியவர் ” பார்த்துடா… வெள்ளி பாத்திரம், நகையெல்லாம் இருக்கு”
“அத நான் பார்த்துக்கிறேன்”
“டேய் விக்கி. பையன் சாவிய எங்கனா வச்சிரப் போறான்.பார்த்துக்க…” என்றபடி வந்து காரில் ஏறிக் கொண்டார்.
மூர்த்தியை கை நீட்டி அழைத்தார். அருகில் வந்த மூர்த்தியிடம் ” வேளாவேளைக்கு அவனை ஒழுங்காச் சாப்பிட வச்சுரு”
” சரிம்மா” மூர்த்தி பவ்யமாய் சொன்னார்.
“இங்க வாடா “சொடக்கு போட்டு கூப்பிட்டார் விஜயராகவன்.
அருகில் வந்த மூர்த்தியிடம், ” இங்க ஒழுங்கா இருந்து உன் மான மரியாதைய காப்பாத்திக்கற வழிய பாரு.”என்றவர்.
டிரைவரிடம் கை காட்ட கார் கிளம்பி வெளியில் சென்றது.
ஒரு சில விநாடிகளில் வேறொரு கார் உள்ளே நுழைந்தது.
போர்டிகோவில் வந்து நின்ற காரிலிருந்து பிரியா டீச்சராக பணியாற்றும் பள்ளியின் தாளாளர் இறங்கினார்.
இந்த மேடம் எதுக்கு இங்க வந்திருக்காங்க என்ற குழப்பத்துடன் அவர்களை நெருங்கினார் மூர்த்தி.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.