பகுதி – 14
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க…
*********
“மதீ… நீயும் வரலாம்ல?” ராஜாத்தி மீண்டும் ஒரு முறை மதியைக் கேட்டுப் பார்த்தாள். லட்சுமாங்குடியில் நடக்கும் திருமணத்திற்கு தனது தாய், கணவன், சகோதரன், மகள் என்று எல்லோருடனும் சென்றால் நிறைவாக இருக்குமே என்று எண்ணினாள்.
ஏனென்றால் இவர்களை சேர்ந்த மாதிரி காணும் உறவுகள் மதி – தவமணி கல்யாணப் பேச்சை எப்படியும் எடுத்து விடுவார்கள். அது தனது கணவனை அந்த விஷயத்தில் கொஞ்சம் துரிதமாக ஒரு முடிவை எடுத்துச் செயல்பட வைத்து விடுமென எண்ணங்கள் கொண்டாள்.
ராஜாத்தியின் வற்புறுத்தலின் பேரில் தவமணி அப்பா கூட என்றுமில்லாமல் அதையொட்டி அன்று இரண்டு நாட்கள் விடுப்பெடுத்திருந்தார். ஆனால் தவமணிக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. மதி மட்டும் வந்தால் கூட போதுமென நினைத்தாள்.
பாப்பா பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது யாராவது வீட்டில் இருக்க வேண்டும் இல்லையா? நீங்கள் திரும்புவதற்கும் சில சமயம் இரவாகிவிடுமே என்று செல்வதை மதி முற்றிலும் தவிர்த்தான். தவமணியும் அதை ஆமோதித்தாள்.
என்னப்போல ஒன்மேல ஆச வச்சவ இல்ல
ஒன்னப்போல உள்ளூரில் மீச வச்சவன் இல்ல
அத்தானே ஒனக்கும் நான் தாலிக்கட்ட போறேன்
ஐயேழு நாளோடு முழுகாம போறேன்
இந்த கதத்தானே இரவும் பகலும் விரிவாக
மாதம் ஏழு போக வளவிப் போட வருவாக
கண்ணால நம் மீது கண் வைக்க போறாக
ஒன்ன நானும் பொத்தி வப்பேன் மண்ணுக்குள்ள வேராக
சின்னச் சின்ன கண்ணம்மா
என்னிரெண்டு வருஷமா
உன்ன எண்ணி பூத்திருக்கா
புத்தம் புது பூவால… நித்தம் ஒரு பூமால…
கட்டி வச்சு காத்திருக்கா…
மூணு மணி நேரப் பரீட்சையை ஒரு மணி நேரத்திலேயே முடித்து, வயிறு வலிக்கிறதென கண்காணிப்பு ஆசிரியரிடம் கதைகள் பல அளந்து மதியை காணும் ஆவலில் அவளுக்கு பிடித்த சினிமா பாடல் வரிகளை முணுமுணுத்தபடி சைக்கிளில் வீட்டிற்கு பறந்து வந்துக் கொண்டிருந்தாள் தவமணி.
வீட்டை அடைந்தபோது மணி பதினொன்றரை. இந்நேரம் தனது மாமா உறங்கிக்கொண்டோ அல்லது தறி வேலைகளிலோ இருக்க கூடுமென நினைத்தவளாய் சத்தங்கள் ஏதும் போடாமல் மெல்ல கதவைத் திறக்க முயன்றாள். உள்ளேப் பூட்டியிருந்தது அதாவது தாழிடப்பட்டிருந்தது.
அவன் தூங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என நினைத்தாள். சத்தமிட்டு அவனை தொந்தரவு செய்யாமல் பின்பக்க கதவு திறந்திருக்கும் பட்சத்தில் அதன் வழியாக உள்ளேச் சென்று ‘மாமா!’ என்று சத்தம் போட்டு அவனை செல்லமாய் தொந்தரவு செய்ய வேண்டுமென திட்டங்கள் தீட்டினாள்.
ஆட்டுக்கொட்டகையைத் தாண்டி கொல்லை புறம் சென்றபோது அந்த வாசல் சாத்தியிருந்தே தவிர தாழிடப்பட்டிருக்கவில்லை. குனிந்து அடுப்படிக் கதவைத் திறந்து கொண்டு கள்ளப்பூனையைப் போல மெல்ல உள்ளேச் சென்றாள்.
ஒரே இருட்டாகக் கிடந்ததே தவிர அவன் உள்ளே இருக்கும் ஒரு தடயமும் அவளுக்குத் தென்படவில்லை. மாமா எங்கே போயிருக்கும் என யோசித்துக் கொண்டே பரீட்சை அட்டை மற்றும் பேனா புத்தகத்தை தறி மேடையின் ஒரு ஓரமாக வைத்துவிட்டுத் திரும்ப அடுப்படிப் பக்கம் வந்து லோட்டாவில் தண்ணீரை எடுத்துக் குடித்தாள். மதியோடு எங்கும் வெளியில் சுற்றலாம் என்றிருந்தவளுக்கு வீட்டில் அவன் இல்லாததைக் கண்டவுடன் மிகவும் ஏமாற்றமாகிவிட்டது.
டிவி பார்க்கலாம் என்றாலும் அதில் நாட்டங்கள் ஓடுவதாகத் தெரியவில்லை. கொல்லைப் பக்கம் வந்தாள். அவள் வீட்டிற்கும் பக்கத்துக்கு வீட்டிற்கும் இடையே இடுப்பளவில் வெறும் மூங்கில் வேலிதான். அதிலும் இரு குடும்பமும் புழங்கிக் கொள்ள இடையே சிறியத் தட்டியும் போட்டிருந்தார்கள். அது திறந்துக் கிடந்ததைக் கண்டுவிட்டு அங்கேயாவது விபரங்கள் கேட்கலாம் எனச் சென்றாள். ஆனால் அங்கேயும் கூட யாரும் இருப்பது போல தெரியவில்லை.
“கிரிஜாக்கா..! கிரிஜாக்கா..!” என்று கூப்பிட்டுப் பார்த்தாள். அப்போதும் எந்த பதிலுமில்லை. திறக்க முயன்றபோது கதவுகள் தாழிடப்பட்டிருந்தன. அது இன்னொரு ஏமாற்றமாக இருந்தது.
வாலைச் சுருட்டிக்கொண்டு ஒழுங்காக பரீட்சை எழுதியிருக்கலாமோ என வருத்தப்படத் துவங்கினாள். ஒரு வேளை குறிப்பிட்ட பாடத்தில் ஃபெயிலாகிவிட்டால் என்ன செய்வது என்றும் கவலையில் ஆழ்ந்தாள். அவள் தேர்ச்சி பெறவும் வாய்ப்புகள் குறைவே என்று உச்சுக் கொட்டி வருத்தப்பட்டாள்.
எப்படியாவது முப்பத்தைந்து கிடைத்துவிட்டால் தேவலை என்று பிரார்த்தனை செய்தாள். எல்லாம் இந்த மாமாவால் எவ்வளவு ஆசையாக சீக்கிரம் சீக்கிரமாக வந்தேன்… இப்போது எல்லாம் வீணாகிவிட்டது என மதியைக் கடிந்து கொள்ள ஆரம்பித்தாள். அந்த வருத்தத்திலேயே எங்கேயும் செல்லப் பிடிக்காமல் அங்கேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தாள்.
அப்போதுதான் அங்கே ஜன்னல் திறப்பது போல ஒரு ‘கீச்’ சத்தம் கேட்க, அப்படியென்றால் கிரிஜா வீட்டில்தான் இருக்கிறாள் என்பதை விளங்கிக்கொண்டு மெதுவாக ஜன்னல் பக்கம் சென்று அவளை பயமுறுத்துவது போல “கிரிஜாக்கா..!” என்று சத்தமாக குரல் கொடுத்தவள், அதிர்ந்துப் போனாள்..! உள்ளே அவளோடு மதியும் இருந்தான்!
அவளை அங்கே அச்சமயம் சட்டென வந்துவிடுவாள் என எதிர்பாராத மதியும் கிரிஜாவும், அவளைக் கண்டதும் நிலைக் குலைந்துப் போனார்கள்.
தவமணிக்கு முகம் கறுத்து, அழுகையும் கோபமும் முட்டிக்கொண்டு வர, அங்கேயே ஓவென அழத் தொடங்கினாள்.
மதி வெளியில் விரைந்து வந்து, “பாப்பா பாப்பா யார்க்கிட்டையும் சொல்லிறாத பாப்பா..!” என்று கெஞ்ச ஆரம்பித்தான். கிரிஜா வெளியில் வராமல் அதிர்ச்சியும் பயமுமாய் உள்ளேயே நின்றுக் கொண்டிருந்தாள்.
தவமணி அழுவதை நிறுத்தவேயில்லை.
“ப்ளீஸ் பாப்பா நீ வருவேன்னு தெரியாது பாப்பா… தெரியாம பண்ணிட்டேன்…” என்று அவளை தொட வந்தவனை, உள்ளங்கைகளால் அவன் மார்பை குத்தி வேகமாய் தள்ளிவிட்டாள்.
“அப்ப நான் வர்றது தெரிஞ்சிருந்தா..?” என்று சத்தமாக கூச்சலிட, தெருப்பக்கம் சென்றுக்கொண்டிருந்தவர்கள் என்ன ஏது என்று வந்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். பெரிய தவறு செய்துவிட்டோமே என்று பரிதவித்தபடி கிரிஜா தாழிட்டுக் கொண்டு உள்ளே மௌனமாக அழுதுக் கொண்டிருந்தாள்.
ஆனால் தவமணியின் அழுகை பெரும்கோபமாக ஊற்றெடுக்கத் துவங்கியது. அவன் சட்டையைப் பிடித்து உன்னை எவ்வளவு நல்லவன் என்று நாங்கெல்லாம் நம்பினோம்..! என்று அவள் பேச துவங்கியதும் அவனுக்கு அவளுடைய தொணி அப்போது மிகவும் வித்தியாசமாக மாறியிருந்ததைக் கண்டு அவன் எதுவும் பேச முடியாமல் தடுமாறி தலைகுனிந்து நின்றான்.
ஆட்கள் கூடிக்கொண்டிருந்ததால் அவளைத் தடுத்தோ, சமாதானம் செய்தோ அவனால் பேச முடியவில்லை. வந்தவர்கள் என்னாச்சு என்னாச்சு என்று பதறிக் கேட்க, அவள் பார்த்ததை கொஞ்சமும் கூட தயங்காமல் எல்லோருமுன்பும் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டாள்!
சத்தமில்லாமல் அவன் கெஞ்சிக் கொண்டிருந்த “வேணாம் பாப்பா வேணாம்!” என்ற பலவீனக் குரல் எல்லாம் அவள் முன் எடுபடாமல் போனது.
செய்தி நாலாபுறமும் தீயாய் பரவத் தொடங்கினாலும் அதில் குடும்பப்பெண் ஒருத்தியின் வாழ்வும் அடங்கியிருந்ததால் அது அணைக்கப்பட்ட கூரையிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த ஈரவாடைப் புகையைப் போல கொஞ்ச நேரத்தில் தணிந்தது போல் காற்றின் மணம் கூட மாறிப்போயிருந்தது.
அப்போது நிலைமையை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வந்தது அந்த பக்கமாக வந்துக் கொண்டிருந்த ஆஞ்சநேயலு மட்டுமே. கூட்டத்தை விலக்கிவிட்டு தவமணியைத் தேற்ற முயன்றார். ஏண்டா இப்படி பண்ணினே என்று மதியை அவரும் தன் பங்கிற்கு கோபமாகப் பார்த்தார்.
அவளுடைய பெற்றோர்கள் வரும்வரை தனது வீட்டில் இருந்துகொள்ள அவருடன் அழைத்தார். ஆனால் எதுவும் பலிக்கவில்லை. மதியை அவர் கோபமாக திட்டத் துவங்கவும், “வாங்க தாத்தா போவோம்…” என்று தானாக அவரோடு நடக்க ஆரம்பித்தாள்.
மதியையும் அங்கே தனியாக விட்டுச் செல்ல மனமில்லை. அவசரத்தில் ஏதேனும் விபரீத முடிவுகளுக்குச் சென்று விடுவானோ என அஞ்சி, ‘சுத்தமாகி வீட்டிற்கு நீயும் வா!’ என்பது போல் சைகை காட்டிவிட்டுச் சென்றார். அவன் பரிதாபமாக தலையைக் குனிந்து கொண்டான்.
ஆனால் அவனால் எங்கும் செல்ல முடியவில்லை. இடிந்துப் போய் வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்திருந்தான். அங்கே நடந்ததெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா என நொந்துக் கொண்டான். தெருவில் இவர்கள் கதை கிசுகிசுக்கப்பட்டது அவனது காதுகளில் விழுந்துக் கொண்டேயிருந்தன அல்லது அப்படி அவனே நினைத்துக் கொண்டான்.
அவனுக்கு அந்த வீடு கூட என்றைக்குமில்லாமல் அன்று அந்நியமானது போல் ஒரு உணர்வு. தனது அக்கா குடும்பத்திற்கு தீங்கிழைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவனைச் சாகச் சொல்லி மிரட்டுவதைப் போல் உணர்ந்தான்.
உடன் பிறந்தவள் அப்படி நினைத்தாலே தவிர தவமணியை அவன் திருமணம் செய்து கொள்ள என்றைக்குமே முழு விருப்பங்கள் இருந்ததில்லை; பெரும்பாலும் அவளை ஒரு குழந்தையைப் போலவே பாவித்தான்.
என்றாலும் இப்படி ஒரு நிலைமையை தனது குடும்பத்திற்கு தேடித் தந்திருக்க வேண்டாம் என கூனிக் குறுகிப் போனான். தனது கீழ்த்தனமான செயலை நினைத்து நினைத்து ஆவென கத்திக் கொண்டு தன்னைத்தானே அறைந்து கொண்டான்.
கிரிஜாவின் கணவன் லாரி டிரைவர் என்பதால் அதிகம் ஊரில் தங்க மாட்டான். அவளது தனிமையும் தாபமும், அவள் மீது இவனுக்கு துளிர்த்து விட்ட மோகமும் எல்லாவற்றிற்கும் தூபம் போடுவது போல ஆகிவிட்டதால் இரண்டு மூன்று வருடங்களாக கள்ளப்பார்வையாக இருந்தது வந்தது அப்போதுதான் தொடர்பு எனும் அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால் அதை மதியும் கிரிஜாவும் திரைப்படங்களில் வருவது போல் புனிதமான காதல் என்று வரையறுத்துக் கொண்டார்கள். மேலும், ஒரு நாள் அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறும் திட்டத்திலுமிருந்தார்கள் என்பது கூடுதல் அதிர்ச்சிச் செய்தி.
ஆனால் இனி எங்கே அதெல்லாம்..?
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
செவ்வாய்கிழமை தொடரும்
Leave a reply
You must be logged in to post a comment.