ஜெஸிலா பானு
நலமா?
நான் நலம்.
இப்படிக் கேட்கவும், சொல்லவும் எல்லோருக்குமே யாராவது ஒருவராவது தேவைப்படுகிறார்கள் அல்லவா?
அதுகூட இல்லையெனும் போது வாழ்க்கையில் விரக்தி ஏற்படும் அல்லவா?
காதலன் பல கனவுகளுடன் தன் காதலியை மிகவும் ரம்யமான காதல் கசியும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பிடித்த ஒரு பொருளை அவளுக்குப் பரிசளித்து, அவள் கண்ணைக் காதலுடன் பார்த்து ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லும்போது, அவள் அதைக் கவனியாமல் அந்தப் பரிசை அந்த இடத்தின் பின்னணியில் தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக்கொண்டு எந்த உணர்ச்சியும் இல்லாமல் ‘மீ டூ டா’ என்று சொன்னால் காதலனுக்கு எப்படி இருக்கும்?
வார இறுதியில் வீட்டில் நடந்த ஒரு முக்கியமான விஷயத்தை நண்பனிடம் சொல்லி சிரிக்க வேண்டுமென்று காத்திருந்து சொல்லும் செய்தியை காது கொடுத்துக் கேட்காமல். “ஓ அப்படியா?” என்று ஒற்றை வார்த்தையில் மறுமுனையில் பதிலாக வரும் போது, ‘ஏண்டா சொன்னோம்’ என்றோ அல்லது ‘இவன்கிட்ட போய்ச் சொன்னேனே’ என்றோ தோன்றுவது உங்களுக்கு நேர்ந்துள்ளதா?
பள்ளிக்கூடத்தில் நடக்கும் விஷயத்தை, குழந்தைகள் அம்மாவிடம் ஒப்புவிக்கும்போது ‘ம் ம்ம்’ மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் தாயார்கள்தான் குழந்தைகள் வளர்ந்த பிறகு, “இப்போதெல்லாம் என் குழந்தை என்னுடன் எதையுமே பகிர்வதில்லை” என்றும் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்களாம்.
திருமண வீட்டில் நிறைய விதமான சத்தத்திற்கு நடுவேயும் தன் குழந்தை அழும் சத்தம் மட்டும் தனியாகக் கேட்டுவிடுகிறது அக்குழந்தையின் தாய்க்கு. அந்தக் கவனம் எப்படி அவளுக்குச் சாத்தியப்படுகிறது?
அலுவலகத்திலிருந்து வரும் கணவனிடம் வீட்டில் நடந்த விஷயங்களை அவன் முகம் பார்த்துச் சொல்லும்போது செல்பேசியை நோண்டிக் கொண்டே ‘அப்புறம், அப்படியா’ என்று சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்லும்போது, “நான் இப்ப என்ன சொன்னேன்னு சொல்லுங்க பார்ப்போம்” என்று மனைவி ‘செக்’ வைக்கும்போது திருவிழாவில் காணாமல்போன குழந்தையைப் போல் முழிக்கும்போதே தெரிந்துவிடுகிறது அவளுக்கு அவன் கவனிப்பதுபோல் நடித்திருக்கிறான், அவள் சொன்னதை அவன் காதில் வாங்கவே இல்லையென்று.
இதையெல்லாம்விட, சுவாரஸ்யமான விஷயம் எனக்கே நடந்துள்ளது. நான் பேசிக் கொண்டே இருப்பேன் ‘அவர்’ மும்முரமாக வேறு எதையோ செய்து கொண்டிருப்பார். ‘கேளுங்க’ என்று வற்புறுத்தினால் ‘செவி கேட்கும்போது இமைக்கென்ன வேலை’ என்பார். நான் சொன்னதை வார்த்தை மாறாமலும் கிளிப்பிள்ளை போல் திருப்பிச் சொல்லுவார். ஆனாலும் எனக்கு அதில் திருப்தியிருக்காது. ஏனென்றால் கேட்பதற்கும் புரிந்து கொண்டு கவனிப்பதற்கும் வேறுபாடுள்ளது. அப்படிதானே?
கல்லூரியில் வகுப்பறையில் இருப்போம், ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கேட்டுக் கொண்டுதான் இருப்போம், ஆனால் மனதில் எதுவுமே நிறையாது. காரணம், கேட்கிறோமே தவிர கவனிக்கிறோமா என்பதுதான் இங்கு கேள்வி. இரண்டும் ஒன்றில்லையா என்றால் இல்லை.
இப்போதுள்ள யுகத்தில் நாம் நிறையக் கேட்கிறோம் – செல்பேசியில், இணையத்தில், தொலைக்காட்சியில், முகம்தெரியாத பலரின் பதிவுகளாக சமூக வலைத்தளங்களில், விதவிதமான காணொலிகளில், ‘ஸ்பாட்டிஃபை’, ’போட்காஸ்ட்’, ‘யூடியூப்’ ‘ரீல்ஸ்’ என்று பலவிதமான இடங்களிலிருந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். இதில் எத்தனை விஷயத்தை உள்வாங்கிக் கொள்கிறோம், அறிந்து கொள்கிறோம், மனதில் நிறுத்திக் கொள்கிறோம்? உங்கள் மனம் எல்லாவிதமான எண்ணங்களாலும் தொடர்ந்து எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுகிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, ஒவ்வொரு மனமும் ஒரு நுட்பமான இடையகச் சுவரை உருவாக்கிக் கொள்ள முயல்கிறது. அவை உங்கள் மனதில் நுழையாது. சமயங்களில் காரணமே இல்லாமல் ஒரு வெற்று மனநிலையை உருவாக்கும். காரணம் அந்த இடையகங்கள் மெதுவாக வளர்ந்து மனதில் எதையுமே அனுமதிக்காமல் இருந்துவிடும். இதுவும் சமயங்களில் நல்லதாக இருக்கலாம். ஆனால் கவனிக்க வேண்டியதையும் கவனிக்க முடியாமலே போய்விட்டால்?
கேட்டல், கவனித்தல், புரிந்து கொள்ளுதல், புரிந்ததைப் பகிர்தல் அல்லது தன்னோடு அதனைத் தொடர்புபடுத்திக் கொள்ளுதல் என்று பல வகையான செயல்பாடுகள் உள்ளன.
“கற்றலின் கேட்டலே நன்று” என்னும் பழமொழி, நூலறிவைவிடக் கேட்டறிதலே சிறந்தது என்பதையே ’செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்’ என்கிறார் திருவள்ளுவர். வாக்கினிலே இனிமை கொண்டு பேசுபவர்களையும் கவனிக்கத் தவறுகிறோம், அதற்கான தடைகளை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். ‘நமக்குத் தெரியாததையா இவர் பேசப் போகிறார்’ என்ற அலட்சியம் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றவர் பேசி முடிக்கும் முன் அதற்கு என்ன எதிர்வினையாற்றுவது என்று யோசிப்பது, பேச்சில் சுவாரஸ்யமில்லையே என்று விலகி நிற்பது, சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்டுப் பேசுவது, அல்லது அவர் ஏதோ சொல்வார் இவர் ஏதையோ சிந்தித்துக் கொண்டிருப்பார். இதெல்லாம் எல்லாருக்கும் நிகழ்வதுதானே – இதில் என்னவென்று நீங்கள் சர்வசாதாரணமாகக் கடந்துவிடலாம். ஆனால் உண்மையில் ஒருவருடைய மனதை வெல்ல, அன்பைப் பெற, உறவை மேம்படுத்த ’கவனித்துக் கேட்பது’ இன்றியமையாதது.
நமக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் இருப்பதே இதற்கான சான்றுதானே? பேசுவதைவிடக் கேட்பதே சிறந்தது என்று புரிந்து கொள்ள, கவனிக்கத் தொடங்க வேண்டும். பொதுவாக நாம் கேட்கும்போது நாம் கேட்க விரும்புவதைதான் கேட்கிறோம், மற்றவர் சொல்ல வந்ததை அல்ல. மற்றவர் பேசுவதை நாம் கவனிக்கும்போது நம் எண்ணங்கள் அதனை நம் முந்தைய அனுபவத்துடன் சேர்த்து இணைத்துப் புரிந்து கொண்டு குறுக்கீடு செய்து கொண்டே உள்ளது. அதனால் சிதைந்த பொருளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறோம், சமயங்களில் மற்றவர் சொல்ல வந்ததை நேர்மாறாகவே புரிந்தும் கொள்கிறோம்.
பெரும்பாலானவர்வகளுடைய பிரச்சனையே தம் பிரச்சனைக்குத் தீர்வு வேண்டுமென்பதல்ல, தன் பிரச்சனையை யாராவது கரிசனையோடு கேட்கவில்லை என்பதே. யாராவது கேட்டாலே, உள்வாங்கினாலே போதுமானதாக, பாதிப் பிரச்சனை தீர்ந்தது போலாகிவிடுகிறது. மற்றவர்கள் பேசுவதைப் பலர் ஒழுங்காகக் கேட்க மாட்டார்கள், அதாவது புரிந்து கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக அறிவுரையை அள்ளி வீசுவது, தன் அனுபவத்தைச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ இலவசமாக வழங்குவது, தன் கருத்தை முன் வைப்பதிலிருக்கும் ஆர்வத்தைக் கொஞ்சமே கொஞ்சம் சொல்ல வருபவரின் வார்த்தையைச் செவிசாய்த்துக் கேட்டால் மட்டும் போதும், பல புதிய அனுபவங்களின் திறப்புக்கு அது வழிவகுக்கலாம்.
காரசாரமான பலத்த வாக்குவாதம் எப்படி வலுப்பெறுகிறது என்று யோசித்தால் – இவர் பேச, அவர் பேச என்று பெரும்பாலும் ’திரும்பத் திரும்பப் பேசுற நீ’ என்பதாகச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஏனெனில் ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்கவில்லை என்று இருவருமே நினைத்துக் கொள்வார்கள். ஒருவர் பேசுவதைக் கேட்காமல் போவதே சண்டை பெரிதாவதற்கான காரணம். ஒருவர் பேசுவதை மற்றவர் மனம் ஒன்றி கேட்டால், அவர் சொல்வதின் நியாயத்தைச் சிந்தித்துப் பார்க்கிறாரோ இல்லையோ அவர் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்தாலே விவாதங்கள் எளிமையாகச் சுமுகமாக முற்றுப் பெறும். நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டுமென்றால், முதலில் நாம் அவர்கள் சொல்வதை அன்போடு கவனித்துக் கேட்க வேண்டும்.
தன் அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி, தாம் ரசித்த திரைப்படத்தைப் பற்றி, பிடித்த பாடலின் வரிகளைப் பற்றி, வாசித்த புத்தகம் பற்றி என்று ஒருவர் சொல்லும்போதெல்லாம் விருப்பத்துடன் மற்றவர் கேட்பாரென்றால் அவர் தன் சொந்த விருப்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தம் வாழ்க்கையின் ஒரு பகுதியை தருகிறார், அத்தருணத்தைச் செலவிடுகிறார், அக்கறை காட்டுகிறார் என்றுதானே பொருள்?
ஒருவர் மிக முக்கியமான ஒரு காரியத்தைப் பற்றி நம்மிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தொலைகாட்சியைச் செயல்படுத்துவது, செய்தித்தாளைப் புரட்டுவது, செல்பேசியில் பார்ப்பது என்று நம் கவனம் சிதறாமல் பார்த்து கொள்வதே அன்பின் வெளிப்பாடு.
கவனித்துக் கேட்பது, பேசுபவரின் எண்ணங்களுக்கு ஆழ்ந்த அக்கறை காட்டுவதை உணர்த்துகிறது. அன்போடு கவனித்துக் கேட்பதும் ஒரு கலைதான். அந்தக் கலையைப் பயிற்சி செய்வதே சவாலானது. செய்ய ஆரம்பித்துவிட்டால் எல்லாமும் கேட்க தொடங்கிவிடும். உங்கள் ஆழ்மனது என்ன சொல்கிறது என்ன பதிந்து வைத்துள்ளது என்பது உட்பட எல்லாமே கேட்கும். மனதை அமைதிப்படுத்தி உங்கள் எண்ணங்களை நீங்களே கவனிக்கத் தொடங்குங்கள். பல ஆண்டுகளாக நீங்கள் சேகரித்த குப்பைகள் நிறைய வெளியே வரும். இந்தக் குப்பையைக் கொட்டுவதற்கு மனசுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் கடிவாளத்தை உடைத்த குதிரை போல் மனம் ஓடத்தான் செய்யும். உங்கள் எண்ணங்களுக்கு நீங்களே சாட்சியாக இருங்கள். கேட்கத் தெரிந்த மனிதனுக்குத் தியானம் செய்யத் தெரியும். தியானம் செய்யத் தெரிந்த மனிதனுக்கு மட்டுமே கேட்க முடியும். தியானமெல்லாம் செய்ய வேண்டாம் கேளுங்கள், கவனியுங்கள். வெளியில் தேடுவதை நிறுத்திவிட்டு உங்களுக்குள்ளே தேட தொடங்கிவிடுவீர்கள்.
காதோடு சொல்லுங்கள்
கவனித்துக் கேளுங்கள்.
என்ன கேட்கத் தொடங்கிவிட்டீர்களா ?
நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு.
8 comments on “நலம் வாழ : கட்டுரைத் தொடர் 4 : கேள்-கவனி”
kumar
கேட்டல் அதிலும் கவனித்துக் கேட்டல் பற்றிய சிறப்பானதொரு பார்வை. போன கட்டுரை விரைவாக முடிக்கப்பட்டது போல் இருந்தது. இது நல்ல விரிவாக - குறிப்பாக பல பாராக கள் இறுதியில் மட்டுமே புள்ளி வைக்கப்பட்டு - விபரமாக எழுதப்பட்டுள்ளது, சிறப்பு. வாழ்த்துகள்.
rajaram
சிறப்பான கட்டுரை, இன்றைய சூழலுக்கு தேவையான ஆலோசனையும்கூட. பெரும்பாலான இடங்களில் இதை அனுபவித்திருக்கிறோம், நாமே செய்திருக்கிறோம். மாற்றிக் கொள்வோம். அருமை.
Jafeer Sahabdeen
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
R Jothi
கட்டுரையின் தொடக்க வரிகளே அவ்வளவு அருமை. இந்த விரக்தியில் தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது. கட்டுரையின் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக அருமையான எழுத்தாக்கம். மேலும் வளர வாழ்த்துக்கள் மா❤️
பால்கரசு
சிறப்பான பார்வை. ஓசைகளைக் கேட்கும் செவி உடைய மனிதர்களே கருணைக்குரியவர்களாக இருக்கிறார்கள். தான் பகிரப்படும் இன்பம் இரட்டிப்பாகவும், பகிர்ந்து கொண்ட துன்பம் பாதியாகக் குறைவதாகவும் மனித மனம் எண்ணுகிறது.
JAZEELA BANU
சே. குமார், ராஜாராம், பால்கரசு - உங்கள் அனைவரது தொடர் வாசிப்பும், கட்டுரையை வாசித்துவிட்டு அக்கறையுடன் தரும் பின்னூட்டமும் என்னை அதிகம் உற்சாகப்படுத்துகிறது. மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.
JAZEELA BANU
Jyoti, உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி. கட்டுரை பயனுள்ளதாக இருப்பதில் மகிழ்ச்சி. Jafeer Sahabdeen, மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.
பருத்தி இக்பால்
திருமண வீட்டில் நிறைய விதமான சத்தத்திற்கு நடுவேயும் தன் குழந்தை அழும் சத்தம் மட்டும் தனியாகக் கேட்டுவிடுகிறது அக்குழந்தையின் தாய்க்கு. அந்தக் கவனம் எப்படி அவளுக்குச் சாத்தியப்படுகிறது? அருமையான எடுத்துக்காட்டு. கற்றல் என்பதே செவி கொடுத்து கேட்பதே.