ஜெஸிலா பானு
நாம் எத்தனையோ ‘கருத்து கந்தசாமிகளை’ சந்தித்திருப்போம். ஏன் நாமே கருத்து கந்தசாமியாகச் சில சமயங்களில் நடந்து கொண்டிருப்போம்.. எதுவுமே தெரியாத மாதிரி சில இடங்களிலும், எல்லாமே தெரிந்தாற்போல் சில இடங்களிலும் நடந்து கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இந்தக் ‘கருத்து’ உதயமாகும் இடம் எது என்று சிந்தித்துப் பார்ப்போமா?
கருத்துகள் உதயமாவது நம் அனுபவத்திலிருந்தா? உணர்வுகளிலிருந்தா? அனுமானத்திலிருந்தா? கற்றலிலிருந்தா? ஆழந்து யோசித்தால் பெரும்பாலான கருத்துகளுக்கு மூலக் காரணம் நம்முடைய அடிப்படை நம்பிக்கைகள்தான் என்பது புலப்படும். நம் அனைவருக்குமே முக்கிய நம்பிக்கைகள் உள்ளன, அதன் மூலம் நாம் உலகத்தைத் தீர்மானிக்கிறோம். அந்த அடிப்படையான மூல நம்பிக்கைகள் நம்முள் வேரூன்றி கிடக்கின்றன. அவை நம்மிடம் இருப்பதைக் கூட நாம் அறிவதில்லை.
நாம் பார்க்கும் நிகழ்வுகள் நாம் எதிர்பார்க்கும் விதத்தில் இருப்பதினாலேயே நமக்குள் இருக்கும் மூல நம்பிக்கை பற்றி நாம் அறிவதில்லை. இந்த சக்திவாய்ந்த அடிப்படை நம்பிக்கைகள் பெரும்பாலும் நாம் இளமையாக இருக்கும்போதே ஏற்பட்டு அழுத்தமாகப் பதிந்துவிட்டவை.
’ஐஸ் கிரீம்’ சாப்பிடாதே சளி பிடிக்கும்.
பருப்பு , உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு உண்டாகும்.
வெயிலில் சென்றால் தலைவலி வரும்.
இதெல்லாமே ஒருவகையான நம்பிக்கைதானே?
நாம் இளமையாக இருக்கும் போது நமது மூளை ஈரமான சிமெண்ட் போன்றது, அது தேவையுள்ள, இல்லாத கருத்துகளைப் பிரித்தறியாமல் அப்படியே பதிந்து வைத்துக் கொள்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் அந்த நியூரான் இணைப்புகளை உறுதிசெய்கிறது. அனுபவங்கள் ஆழ்மனதில் பதிந்து நாம் நம்பக்கூடியவையாகிவிடுகின்றன.
யாரோ எப்போதோ சொன்னதாக இருக்கலாம், எங்கேயோ வாசித்ததாக இருக்கலாம், அனுப்பிய ‘வாட்ஸ்அப் ஃபார்வார்டில்’ பார்த்ததாக இருக்கலாம். நீங்களே அவதானித்திருக்கலாம், வளர்ந்த சூழல் அல்லது சுற்றியிருப்பவர்களின் தொடர்புகள் – என்று ஒவ்வொரு விஷயத்தையும் நம் மனது பதிவாக்கிக் கொள்கிறது.
அந்த அடிப்படை நம்பிக்கை எப்போது உருவாகியிருந்தாலும் அவற்றின் அடிப்படையில்தான் தற்கால நிகழ்வுகளைப் பார்க்கிறோம். அவைதான் நம் கருத்துக்கு அடிப்படையாகின்றன.
எடுத்துக்காட்டாக நான் சிறுமியாக இருக்கும் போது என் தாயார் என்னை அமர்ந்திருந்துதான் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்பார், அதன் காரணம் காரியம் தெரியாமலேயே அதுதான் சரியென்று நம்பிக்கையின் அடிப்படையில் அந்த எண்ணம் மனதில் வேரூன்றி விட்டது. இந்த அறிவுரையை என் மகனிடம் நான் கூறினால் அவன் அதற்குத் தர்க்க ரீதியான காரணத்தைக் கேட்கிறான். என் மூல நம்பிக்கைக்கான முறை, தாய் சொன்னவுடன் அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டது அவன் அடிப்படை நம்பிக்கைக்கான முறை, தர்க்க ரீதியான பகுத்தறிவின்படியே ஏற்றுக் கொள்கிறது. நம்பிக்கை பதியும் முறைகள் வேறுபடுகிறது அவ்வளவுதான்.
இதனால்தான் எதைப் பற்றியாவது கேள்வியாக உங்களிடம் கேட்கப்படும்போது, கூகுள் தேடல்போல் அதனைப் பற்றிய நமக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் ஞாபக அடுக்குகளில் இருந்து நம் அறிவு எடுத்து, நம் கருத்தாக வடிவமைக்கிறது.
அதனால் என்ன? அது நம் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்று நீங்கள் சாதாரணமாகக் கருதலாம். ஆனால் உங்கள் சிந்தனையும் கருத்தும் சேர்ந்ததுதானே உங்கள் நடவடிக்கையாக, நடத்தையாக, ஒழுக்கமாக மாறுகிறது.
ஒவ்வொரு முறையும் ஒரு முக்கிய நம்பிக்கை மீறப்படும்போது, ‘அது அப்படி நிகழ்ந்திருக்கக் கூடாது’ என்று மனம் விரும்புகிறது அவதிப்படுகிறது. மனம் துன்புறுத்தப்படும் போதெல்லாம் அதற்கு வழிவகுக்கும் நம்பிக்கைகளை நியாயப்படுத்தப் பார்க்கிறோம், காரணங்களை முன்வைக்கிறோம். யாரேனும் ஒருவர் நம்மைப் பொருத்தமில்லாத விதத்தில் நடத்தினால், நமக்கு வலுவான உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை ஏற்படலாம், உடனே “அவர்கள் அப்படிச் செய்திருக்கக் கூடாது” அல்லது “அது நியாயமில்லை” என்று நினைக்க வைப்பதற்கும் ஆழ்மன அடிப்படை நம்பிக்கைகள்தானே காரணம்? அதை முழுக்கச் சரியென்று சொல்லிவிட முடியுமா?
அடிப்படை நம்பிக்கை என்பது வண்ணக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்ப்பதைப் போன்றது, இதன் மூலம் நாம் விஷயங்களை வெவ்வேறு விதங்களில் பார்க்கிறோம். ஆகையால் சில சமயங்களில் மிகவும் மாறுபட்ட சாயல் கொண்டவர்களாகி விடுகிறோம். வண்ணக் கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டால் அணுகுமுறை எளிதாகிவிடுகிறது, தொடர்புகள் காரண காரியங்களைப் பார்க்காமல் ஏற்படும். மற்றவரின் செயல் நம்மைப் பாதிக்காது, நம்மால் கடந்துவிட இயலும்.
நம் நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு என்று அதனைச் சார்ந்து நடப்பவர்களை நாம் பழமைவாதிகளாகப் பார்ப்போம். அதெல்லாமில்லை என்று மேலை நாட்டவர்கள்போல் இருப்பவர்களை முற்போக்குவாதியாக ஏற்போம். அப்படிச் சொல்லி கொண்டு நம் ஆழ்மனதில் ஒழுக்கமென்று கருதும் செயலுக்கு மாறாக ஒரு செயலை அந்த முற்போக்குவாதி செய்தால், அவரை ‘ஒழுக்கம் கெட்டவர்’ என்றும் பெயர் தந்தால், நம் ஆழ்மனதில் ஒழுக்கத்தின் வரையறையை அவர் மீறிவிட்டார் என்று பொருள். நமக்குத் தவறாகச் செய்யும் செயல் மற்றவருக்குச் சரியாக இருக்கலாம். அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் நம் கண்ணாடியை கழட்டிவிட்டுப் பார்க்கிறோமென்று பொருள்.
நம் நம்பிக்கையின்படி கதைகளை உருவாக்கிக் கொள்கிறோம். அடிப்படை நம்பிக்கையை மாற்றாமல் நியாயம் கற்பித்துக் கொண்டு இருக்கும்போது துன்பம் பெரிதாகிறதே தவிர, நிவர்த்தி ஏற்படுவதில்லை. நமது நம்பிக்கைகள் நமது விதியாக மாறும்- நம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவைகளை ஆராயாதவரை.
ஒரே மாதிரியான சூழ்நிலையில் ஏன் ஒவ்வொருவரும் வித்தியாசமாக நடந்து கொள்கிறோம்? வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்றோ வேறுபட்ட இடத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலுமே வெவ்வேறு கருத்துகளைக் கொண்டவர்களாக இருக்கிறோமே? அதன் முக்கியக் காரணமே ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தனியான அடிப்படை நம்பிக்கைகளைக் கொண்டுள்ளான் என்பதாலேயே.
மூல நம்பிக்கைகள் என்பது நம்மைப் பற்றியும், நாம் வாழும் உலகம் மற்றும் பிற நபர்களைப் பற்றியும் ஆழமாக நாம் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள். அவை நம் அனுபவங்களையும் செயல்பாடுகளையும், ஈடுபாட்டையும் பாதிக்கின்றன.
1. உலகம் ஆபத்தானது.
2. வாழ்க்கை மிகவும் கடினமானது.
3. எதிர்காலம் நம்பிக்கையற்றது.
4. நான் நேசிக்கும் நபர்கள் எப்போதும் என்னை விட்டு விலகுவார்கள்.
5. என்னை யாருக்குமே பிடிக்காது,
6. நான் ராசியில்லாதவர்.
7. மற்றவர்களை நம்ப முடியாது.
8. மக்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்.
9. மற்றவர்களை நம்புவது பாதுகாப்பானது அல்ல.
இப்படிப்பட்ட எதிர்மறையான சிந்தனைகள் நம் அடிப்படையில் பதிந்திருக்குமானால், விளைவுகள் அதற்கேற்பத்தான் இருக்கும்.
நான் எப்போதும் என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள் வாழ்க்கையில் நிறைவாக இருப்பதாக நினைத்து தனது நத்தைக் கூட்டிற்குள் செளகரியமாக ஒரே வேலையில் நிரந்தரமாக இருந்துவிட நினைப்பார்களே தவிர, அதிலிருந்து வெளிவந்து தனது முன்னேற்றத்திற்காக எதையுமே செய்ய அஞ்சுவார்கள். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், கம்ஃபர்ட் சோன் இல் சொகுசு கண்டவர்கள் வாழ்க்கையில் எந்தக் காலகட்டத்திலும் ‘ரிஸ்க்’ எடுக்க மாட்டார்கள். அதனால் என்ன, அது பாதுகாப்புதானே என்று கேட்கவும் செய்வார்கள். அது தற்காலிக சொகுசுதானே தவிர எதுவுமே நிரந்தரமல்ல, அப்படியானவற்றைப் பல காலமாக பற்றிப் பிடித்திருப்பவர்கள், ஏதோ சூழலில் அதனை இழக்க நேரிடும்போது அதனைப் பிடித்து கொண்டிருக்க எண்ணி, செய்வதறியாது நிற்பார்களே தவிர அடுத்து என்ன, எப்படிச் சமாளிப்பது, மாற்றுத் திட்டம் என்னவென்று நகர்வது சிரமமாகிவிடும்.
யாராவது ஒரு விழாவிற்கோ, விருந்திற்கோ அழைத்தால், எதிர்மறையான ஆழ்மன நம்பிக்கையுடையவர்கள் உடனே சிந்திப்பது, ‘எனக்கு யாரையும் தெரியாவிட்டால் என்ன செய்வது?’ ‘யாரும் என்னுடன் பேசவில்லையென்றால்?’ ’சங்கடப்படும்படி ஏதாவது நேர்ந்த்விட்டால்?’ என்று தேவையற்றதை நினைத்துக் குழப்பிக் கொண்டு எங்கும் போகமலே இருந்துவிடுவார்கள். இது தான் பாதுகாப்பா?
இந்த ஆழ்மன நம்பிக்கையை மாற்றிவிட்டால், நான் சென்றால் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கும், புதிய நண்பர்கள் கிடைக்கும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று பல நல்ல விஷயங்களை மட்டுமே மனது யோசிக்கும்.
நம் அடிப்படை நம்பிக்கையை வைத்து வாழ்வை ஆக்கவும் செய்யலாம் அழிக்கவும் செய்யலாம்.
விளையாட்டுப் போட்டியில் சிறந்த வீரராக வரவேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஒரு சிறுவனுக்கு உடலில் ஹார்மோன் குறைபாடு இருந்ததால் வளர்ச்சியில் பிரச்சனை இருந்தது. இதனால் அவன் ஏளனத்திற்கு ஆளானான். ஆனால் தான் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக வேண்டும் என்று உறுதி அவன் ஆழ்மன நம்பிக்கையில் இருந்ததால் ஒவ்வொரு நாள் இரவிலும் தன் தொடையில் ஹார்மோன் குணமாக்க ஊசி போட்டுக் கொண்டான், உறுதியான அந்த நம்பிக்கையின் மூலம் உலகையே தன் விளையாட்டால் வியக்க வைத்தவர்தான் கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி.
நான் சொல்ல வந்த மூல நம்பிக்கையைப் பற்றி இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு விளங்கியிருக்கும். நான் உங்களிடம் இந்த உலகைப் பற்றி, சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றிக் கருத்து கேட்கிறேன் என்று வையுங்கள். அப்படியெல்லாம் எந்தக் கருத்தும் உங்களுக்கு இல்லை என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆனால் நீங்களே, உங்களைக் கேட்டுப் பாருங்கள், இந்த உலகைப் பற்றி, சுற்றியிருப்பவர்களைப் பற்றி, தனி நபரைப் பற்றி, உங்களைப் பற்றி, இந்தக் கட்டுரையைப் பற்றி என்று ஒவ்வொன்றிற்கும் உங்களிடம் அபிப்பிராயம் கண்டிப்பாக இருக்கும். அந்தக் கருத்தின் அடிப்படையைக் கண்டுபிடியுங்கள். கண்டுபிடிக்கும்போது, உங்களைப் பற்றி நீங்களே ஆராய்ச்சி செய்யும்போது பல திறப்புகள் கிடைக்கும். சரியில்லை என்று நினைக்கும் விஷயங்களைச் சுலபமாகக் களைந்துவிடும் ஆற்றலைப் பெற்றுவிடுவீர்கள்.
அப்படி நடந்துவிட்டால்? இப்படி நடந்துவிட்டால்? என்று தேவையற்ற சிந்தனை எதன் அடிப்படையில் உருவாகிறது என்று ஆராய்ந்தால் அந்த வெற்றிடத்தைக் காலி செய்துவிடலாம்.
நம் மனம் ஒரு மரத்தைப் போன்றது. அடிப்படை நம்பிக்கைகள் நம்மை நங்கூரமிடும் வேர்கள், அதன் தண்டுகளின் மூலமும் கிளைகளின் மூலமும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவது விதிகள் மற்றும் அனுமானங்களின் மூலம். அதில் நமது எண்ணங்கள் மற்றும் நடத்தை என்று இலைகள் வளர்கின்றன. அனுமானமென்றதை ஊற்றி வளர்க்காமல் இருந்தால் இலைகள் சமயங்களில் உதிரலாம்.
ஒருவரை நீங்கள் அழைக்கும்போது அவர் அழைப்பை ஏற்கவில்லையென்றால் சாதாரண மனநிலையில் இருப்பவர் ‘அவர் வேறு வேலையில் மும்முரமாக இருக்கிறார், அதனால் அழைப்பை ஏற்கவில்லை என்றோ’ அல்லது ’அவர் என் அழைப்பை கவனித்திருக்க மாட்டார், பார்த்த பிறகு மீண்டும் அழைப்பார்’ என்றோ நம்புவார். இதுவே ஆழ்மனதில் எதிர்மறை எண்ணம் உடையவர், ’அவருக்கு என்னை இப்போதெல்லாம் பிடிக்காமல் போய்விட்டது’, ’அவர் என்னை வேண்டுமென்றே தவிர்க்கிறார்’ என்றும் நினைக்கத் தொடங்கிவிடுவார். பல பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் அனுமானம்தான்.
இல்லாததை இருப்பதாக எண்ணி, ‘இப்படிதான்’ எனக்கு நன்றாகத் தெரியும் என்று நமது அடிப்படை நம்பிக்கைகளை, நமது எண்ணங்களை மற்றும் நடத்தைகளுக்கு இடையில் விதிகள் மற்றும் அனுமானங்கள் என்ற இடைநிலை நம்பிக்கைகளை உணர்வுப்பூர்வமாகச் சொருகி பலம் சேர்க்கும்போது அனுமான விதிகள் உண்மையாகிவிடுகிறது. அதனை உள்ளுணர்வு என்று ஏற்கிறோம்.
நம் எண்ணங்கள், நடவடிக்கை, மனநிலை எல்லாவற்றிகும் காரணம் அடிப்படை நம்பிக்கையென்றால் நம்ப முடிகிறதா? நம்பிக்கை அதானே எல்லாம். நல்நம்பிக்கையோடு நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
4 comments on “நலம் வாழ: கட்டுரைத் தொடர் 6 – மூல நம்பிக்கை”
rajaram
நல்ல கட்டுரை! நல்ல எண்ணங்களே எல்லா பலனையும், விளைவுகளையும் உருவாக்குகிறது. அனுமானத்தில் இல்லாமல் அவரவர் இடத்தில் இருந்து சிந்திக்கும்போது உண்மை புலப்படுகிறது. சிறப்பு.
முத்து மணி
ஒரு தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு... மனநிலை பற்றிய சரியான பார்வை.. தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறோம். நன்றியுடன் வாழ்த்துகள்..
Sheik Mohideen
வித்தியாசமாக விறுவிறுப்பாக நாம் அன்றாடம் பார்க்கும் கேட்கும் சந்திக்கும் அனுபவங்கள்... Really awesome..
JAZEELA BANU
Rajaram: தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி. முத்து மணி: மிக்க நன்றி. Sheik Mohideen: வாசித்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.