மின்தூக்கி …. தலைப்பை போன்றே கதையின் நாயகனை மட்டும் மேலே தூக்கிச் செல்லாமல், படிக்கின்ற அனைவருக்கும் முன்னேற்றத்திற்கான வாழ்விற்கு, நம்பிக்கையுடன் உயரே சென்று விடலாம் என உத்வேகத்தை வழங்கும் தன்னம்பிக்கைக்கான உதாரண நூல்.
சுய முன்னேற்ற நூல்களில் இருக்கும் பிரச்சனையே அந்த நூல்களில் இருக்கும் தீர்வுகள் நமக்கு அந்நியப்பட்டு இருப்பதே. மின்தூக்கியில் படித்து முடித்த ஒவ்வொரு இளைஞனுக்குமான வாழ்வியல் செய்தியும், பாடமும் மனதிற்கு நெருக்கமாக, அதை அடையக்கூடியதாக உணர வைக்கப்படுகிறது.
80களின் இறுதியில் பட்டயப் படிப்பு (Diploma) முடித்த ஒரு இளைஞன், பொருளியல் தேவைக்காக வளைகுடா செல்வதும், அதன் மூலம் வாழ்வில், மனதில் ஏற்பட்ட மாற்றங்களை வெகு இயல்பான மொழி நடையில் சிறப்பாக தந்திருக்கிறார் நூலாசிரியர் அபுல் கலாம் ஆசாத்..
ஆரம்பம் முதல் இறுதி வரை ஆரிஃப் பாஷா என்ற அந்த இளைஞனின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான கதவுகளை எப்போது திறக்கும் என்ற உந்துதலுடன் தான் வாசகனும் பயணிக்கிறான்..
DME தான் கெத்து என்று ஆரம்பகட்ட வரிகளில் தெனாவட்டாக வலம் வரும் நாயகன், பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அந்த எண்ணத்தை சுக்கு நூறாக்கும் சூழல்களை தொழில்நுட்ப மொழியில் வெகு இயல்பாக கடத்தியிருப்பார்.
DME கெத்து இல்லை. பி.ஈ.தாம்மா கெத்து என அழித்து எழுதினான். இந்த ஒற்றை வார்த்தை கதை முழுதும் நம்மை துவளவிடாமல் பயணிக்க வைப்பதை தான் நம்பிக்கைக்கான, முன்னேற்றத்திற்கான ஊற்றாக பார்க்கிறேன். வாழ்த்துகள் அபுல் கலாம் அண்ணே..
வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதித்தால்தான் பணம் சேமிக்க இயலும் என்று அவனுடைய சமூகம் புரிந்துவைத்திருந்த இயல்பு என்ற வரிகள் இப்போது வரை மாறாமல் இருப்பது தம் சமூகத்தின் அறியாமையா? நம்முடைய இயலாமையா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லலை. இப்போது வரை உனக்கென்னப்பா துபாய் காசு என்று அசால்ட்டாக சொல்லும் உறவுகளையும், நண்பர்களையும் பெற்றிருப்பதால் அந்த மனநடுக்கத்தை தொட்டு சென்றேன்…
என்பதுகளில் படித்து முடித்த இளைஞர்களின் வறுமையை ஒரிரு வரிகளில் வீரியத்துடன் சொல்கிறார். சவுதி அரேபியா விசாவுக்காக பாம்பே மேன்சனில் இருக்கும் பாசா மற்றும் நண்பர்களின் உடமைகளை பற்றி எழுதும் போது, கட்டிலுக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளின் பாதுகாப்பு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. இந்த உலகில் எந்தத் திருடர்களும் கைவைக்கத் தயங்கும் பெட்டி அவையாகத்தான் இருக்கும்…
தமிழகத்தில் என்ன தான் தொழில் நுட்ப படிப்புகளில் அதிக மார்க் வாங்கியிருந்தாலும், ஆங்கில பேச்சு திறமை என்பது மிக கடினமான ஒன்றாக இருப்பதை சொல்லி, அந்த கடின சூழலை தன் தொடர்ந்த முயற்சிகளால் வென்றெடுக்கும் ஆரிஃப் பாசாக்களை தான் உலகம் உயர்த்தி பிடிக்கும். விமான பணிப்பெண்ணிடம், ஒன் மினிட் மேடம்’ என்பதைத் தவிர வேறெதுவும் அவனால் பேச இயலவில்லை என்ற ஆரம்ப கட்ட தடுமாற்றம், அலுவலகத்தின் முக்கியமான டெண்டர்களில் இடம்பெற வேண்டிய வார்த்தைகளை முடிவு செய்யும் அளவிற்கான முன்னேற்றமாக மாறுவதும், அதற்காக
சென்னையில் இந்து பேப்பர் படி என்பார்கள். இங்கு அரப் நியூஸ் படி, சவூதி கெசட் படி என்ற வரிகளை சொல்வது சிறப்பு. ஆம் துபாயில் நான் கல்ஃப் நியூஸ் படிக்க வேண்டிய கட்டாயந்துக்கும் ஆளானேன் என்பதால்..
ஆல்வேஸ் எய்ம் ஹை’ என்ற சாதாரண வார்த்தைகள் ஒரு தனிமனிதனை எந்தளவிற்கு சிந்தனைவயப்பட்டு தீர்க்கமான, யாரும் இலகுவாக எடுக்க இயலாத கடினமான முடிவுகளை எடுக்க வைத்து, அதில் வெற்றி பெறவும் வைக்கிறது என்பதே மின் தூக்கியின் சிறப்பு.
கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் குறிப்பாக இஸ்மாயில் சார், ஃபெரோஸ், நஸ்சுருத்தீன் போன்றோர் நம்பிக்கையை பேசுவதை விட, நேர்மையுடன் இருப்பதாக சொல்வதும், மின்தூக்கிகளின் பயன்பாடு, செயல்படும் வீதங்களை பற்றிய சிறு குறிப்புகள் நமக்கு பல புதிய விசயங்களை கற்று கொடுக்கிறது.
ஒரு டிப்ளமோ படிச்சுட்டு குடும்ப கஷ்டத்தை போக்க வெளிநாடு வருவதும், அங்கு ஒரு சூபர்வைசர் பதவியை அடைந்து, கல்யாணம், பிள்ளை குட்டி என்று வந்த பிறகும் வாழ்வை தனியாக கடத்தி இறுதியில் தன் மகனுக்கு அதே கம்பெனியில் ஒரு வேலையை உறுதி செய்யும் பெரும்பாலான வளைகுடா வாசிகளுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.
கதை பயணிக்கும் பாம்பே-ஜித்தா-ரியாத்-துபாய் நிலப்பரப்புகளை பற்றிய விவரணைகள் துல்லியமாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. வளைகுடா வாழ் இளைஞர்களின் பொழுதுபோக்கான டெக், கேசட், இளையராசா இசை என பல உணர்வுகளை சரியான கலவையில் செல்கிறது மின்தூக்கி ..
டிப்ளமோ படித்தவனாக வெறுப்படைந்து, பிஈ தான் வாழ்வு என்று இருக்கும் ஒருவன், பத்தாவது பெயிலான நண்பனால், உனக்கென்னப்பா நல்லா படிசுட்டே.. எங்கள மாதிரியா லேபர் வேல பாக்குற என்ற சம்பவங்கள் வாழ்வின் எதிர்பாரா துயரங்களே..
அவன் இன்னொரு இலக்கை நோக்கித் தன் பயணத்தைத் துவங்கினான்….
என்ற வரிகளுடன் முடிவுறும் மின்தூக்கியால், தன் எழுத்துலக வாழ்வில் அடுத்த கட்ட இலக்கை அண்ணன் அபுல் கலாம் ஆசாத் வெகு விரைவில் எட்டி பிடிக்க வாழ்த்துகிறேன் .
அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்… குறிப்பாக படித்து முடித்த, படித்து கொண்டிருக்கும், வளைகுடாவில் இயங்கி கொண்டிருக்கும் அனைவரும்…