உள்ளீடு – செயல்முறை – வெளியீடு
இந்த மூன்று செயல்பாடுகளும் உலகின் அறிவார்ந்த அசைவுகள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைகின்றன. ஓர் ஆராய்ச்சி என எடுத்துக்கொண்டால் தரவுகளை சேகரித்து உள்ளீடாகக் கொடுத்து, அதை process செய்து, ஆராய்ந்து, செயலாக்கப்பட்ட தரவுகளாக்கி அதிலிருந்து முடிவுகளை வெளியீடாக எட்டுவதில் அந்த ஆராய்ச்சியின் வெற்றி உள்ளது. ஆராய்ச்சி என்றவுடன் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அளவிற்கு செல்ல வேண்டாம். சமையலுக்கு அரைக்கிலோ புளி வாங்க வேண்டுமென்றால் கூட எந்தக்கடையில் தரமாக இருக்கும், எங்கு விலை குறைவாக இருக்கும் போன்ற தரவுகளை நம் மூளைக்குள் உள்ளீடு செய்து அவற்றை செயல்படுத்தி ஆராய்ந்து, எங்கு வாங்க வேண்டும் என்ற முடிவை எட்ட வேண்டியுள்ளது.
அன்றாட வாழ்க்கை முடிவுகளில் தொடங்கி, செயற்கை நுண்ணறிவு வரை “உள்ளீடு” என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அறிவுச் செயல்பாட்டின் அடிப்படைப் புள்ளியாக, ஆரம்பப்புள்ளியாக அமைகிறது.
மனித மூளைக்கு இந்த உள்ளீடு கேட்பதன் மூலம், பார்ப்பதன் மூலம் எனப் பல வழிகளில் கிடைக்கலாம். ஆனால் படிப்பதன் மூலம் கிடைக்கும் உள்ளீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்த கால அளவில் வெகு அதிக உள்ளீடுகளைக் கொடுத்து மனித மூளையை முடுக்கிவிடுவதில் வாசிப்பிற்கு நிகர் வாசிப்பு மட்டுமே.
வாசிப்பு உள்ளீடாக மட்டும் நின்றுவிடுவதில்லை. சிந்தனைப் போக்கை மாற்றும் செயல்முறையாகவும் பரிணமிக்கிறது. உணவையும் விளைவித்து, தானே உணவாகவும் ஆகும் துப்பார்க்குத் துப்பாய மழை போல.
ஒரு தகரப்பெட்டிக்கும் கணிப்பொறிக்கும் இடையிலான வித்தியாசம் இந்த உள்ளீடு- செயல்முறை-வெளியீடு மட்டுமே. இயற்கை நுண்ணறிவு ஒழுங்காகச் செயல்பட வாசிப்பின் உள்ளீடும், செயல்முறையும் மிக மிக அவசியம். மரத்தை காற்று உலுக்குவதைப்போல சிந்தனையை வாசிப்பு உலுக்கிக் கொண்டே இருக்கும். வாசிப்பு சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனை வார்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிந்தனைத்திறனுடைய மனிதனாக மாற, அல்லது சிந்தனைத்திறனுடைய மனிதனாகத் தொடர வாசிப்பு ஒரு கட்டாயத் தேவை எனக் கூறலாம். ஆகவே வாசிப்போம், தொடர்ந்து வாசிப்போம்.
மருத்துவர். சென் பாலன்