நலம் வாழ: கட்டுரைத் தொடர் 2 – மனம் தெளிநிலை 

ஜெஸிலா பானு

அலுவலகத்திற்குச் செல்லும் முன் வேறொரு சந்திப்பை நிகழ்த்திவிட்டுச் செல்ல வேண்டும் என்று கிளம்பினேன், ஆனால் கடற்கரை குதிரை போல் என் வண்டி தன்னால் அலுவலகத்தை நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தது. நான் மட்டுமா இப்படியென்றால், இல்லை பெரும்பாலானவர்களும் இப்படிதான். என்ன? ’இல்லை’ என்கிறீர்களா? ஓர் அறைக்குச் சென்றுவிட்டு ‘இங்கு எதற்காக வந்தோம்’ என்று யோசித்திருக்கிறீர்களா இல்லையா? செல்பேசியை எடுத்துவிட்டு ‘யாரை அழைக்க இருந்தேன்’ என்றும் தடுமாறியிருப்பீர்கள். ஏன் இப்படி நிகழ்கிறது என்று சிந்தித்திருக்கிறீர்களா? 

இளம் வயதில் இப்படித் தடுமாறினால் ‘காதல்’ நோய் என்று தப்பித்துக் கொள்கிறோம், இளமைக் கடந்த பிறகும் இப்படி நிகழ்ந்தால் ‘வயசாகுது’ என்று ஒரு வார்த்தையில் சொல்லி ஆறுதலடைகிறோம். வயதிற்கும் இப்படியான மறதிக்கும் தொடர்பு உண்டா? இப்படி நிகழ்வதற்குக் காரணம் உண்மையில் வயதென்றா நினைக்கிறீர்கள்? எப்போது இப்படி நிகழ்கிறது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? 

இப்போது என்னோடு சேர்ந்தே சிந்தியுங்கள். அதற்கு முன் இன்னொரு செய்தியைப் பற்றியும் யோசியுங்கள். 

இப்போதெல்லாம் எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது என்பது அரிதாகிவிட்டது. ஒன்றாக உட்கார்ந்து உணவருந்தும்போது வேறொருவர் நம்மோடு சம்பந்தமில்லாமல் உட்கார்ந்திருப்பார். நான் சொல்வது தொலைக்காட்சியை. அதை ஓடவிட்டுவிட்டு பார்த்துக் கொண்டே அல்லது அலைபேசியை நோட்டம்விட்டுக் கொண்டே உட்கொள்வோம். அப்படிச் செய்வதன் மூலம் உணவிலிருந்து கவனம் சிதறுகிறது என்பதை உணர்கிறீர்களா? சிதறினால் என்ன என்றும் கேள்வி வரும். சிதறினால் நாம் தேவைக்கு அதிகமாகவே சாப்பிடுகிறோம், ருசியை உணராமல், என்ன சாப்பிடுகிறோம் என்று மனதில் மட்டுமல்ல உடலிலும் ஒட்டாமலே சாப்பிட்டு எழுகிறோம். இரவு உணவிற்கு முன்பாகவே மதியம் என்ன உணவு உண்டோம் என்பதை மறந்துவிடுகிறோம். நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு அது அவ்வளவு முக்கியமான விஷயமில்லைதான், ஆனால் சின்னச் சம்பவத்தையும் ஏன் மறக்கிறோம்? மனதில் பதிய அவசியமற்றது என்பதாலா? அல்லது கவனமே இல்லாமல் செய்வதாலா? மேலே சொன்னதற்கும் இதற்கும் என்ன தொடர்பு சொல்லுங்கள் பார்க்கலாம்? இரண்டுமே மனம் தெளிந்த நிலையில் இல்லாதபோது நிகழ்வது. 

தொலைக்காட்சியில் படத்தைப் பார்த்துக் கொண்டே நாளை இதையெல்லாம் செய்யவேண்டுமென்று திட்டமிட்டால் மறக்க வாய்ப்புள்ளதுதானே? சமையல் செய்து கொண்டிருக்கும்போதே வெளியில் காயும் துணியை எடுக்க வேண்டுமென்று ஏன் மனம் அலை பாய்கிறது? இவற்றையெல்லாம் பன்முகத் திறன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். பன்முகத் திறன் என்பது அலுவலகத்தில் கணக்குப் போட்டுக் கொண்டே அந்த இலக்கத்தை மடிகணினியில் தட்டுவது, அதோடு வரும் தொலைபேசிக்கும் பதில் சொல்வது. இரண்டு வேலைகளை ஒரே வேளையில் செய்வது. இரண்டு வேலையிலுமே கவனக்குவிப்பைச் செலுத்துவது. ஆனால் இரண்டிலுமே கவனமில்லாமல் தானியங்கியாகத் தோசை சுட்டுக்கொண்டே, சட்னி அரைத்துக் கொண்டே, ‘நாளைக்கு என்ன செய்யலாம்’, ‘நேற்று அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது’ என்று யோசிப்பதைத்தான் தவிர்க்க முடியுமா என்று கேட்கிறேன். 

ஒரு காரியத்தை நாம் செய்யும்போது, நம் கவனம் முழுமையாக அதில் இல்லையென்றால், நம் மூளையில் பதிந்து வைத்துள்ள தானியங்கி செயல்படத் தொடங்கிவிடுகிறது. வண்டி ஓட்டும் போது, சமையல் செய்யும் போது ஏன் கழிப்பறையில் இருக்கும் போதும் நாம் உரிய வேலையை மட்டும் செய்யாமல் கவனக்குவிப்பை அதில் செலுத்தாமல் நம் மனம், கடந்தவைகளைப் பற்றியோ அல்லது நடக்கவிருப்பதைப் பற்றியோ எண்ணிக் கொண்டே இருக்கிறதே தவிர நிகழ்வில் இருக்க மறுக்கிறது. ஒரு செயலைச் செய்யும்போது நம் புலனுணர்வுகள் மீது குவிக்கும் கவனம் அலைபாயாமல் இருந்தால் அதனை முழுமையாகவும், சிறப்பாகவும், ஆற்றலுடனும் செய்ய இயலும். கழிப்பதற்கெல்லாம் என்ன ஆற்றல் தேவையென்று நகைச்சுவையாகக் கடக்காமல் இதிலுள்ள உட்பொருளை விளங்கிக் கொண்டால் எல்லாக் காரியங்களுக்குமே அதற்குரிய கவனம் தேவைப்படுகிறது என்பதை உணர முடியும். 

மன ஓட்டங்களை ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளும் முன் மன அழுத்தம், மனச் சோர்வு, எண்ணக்குலைவு இப்படியான வார்த்தைகளை இப்போதெல்லாம் முன்பைவிட அதிகமாகக் கேட்கிறோமே ஏன்? ”கேட்க மட்டுமா செய்கிறோம் அனுபவிக்கிறோம்” என்று சொல்வதும் கேட்கிறது. இந்த மன அழுத்தம் என்பது என்ன? உதாரணத்திற்கு அலுவலகத்தில் அதிகமான வேலையை உங்கள் தலையில் கட்டுவது, முடிக்க முடியாத அளவு இருக்கும் பணியை, இன்றே முடிக்க வேண்டுமென்று பணிப்பது. இது கூடத் தெரியவில்லையா என்று நகைப்பது, நம் அடையாளத்தைக் கிண்டல் செய்வது, ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது இன்னொன்றை அவசரமென்று அழுத்துவது, இதில் வீட்டுப் பிரச்சனைகள், கடன் சுமை, உடல்நலக் குறைவு என்று எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். பல நேரங்கள் வருமானம் போதாமல் இருப்பதே பெரிய சுமையாகும். இதுவே ஒரு வகையான விரக்தி, கோபம், ஆற்றாமை, அல்லது பதட்டத்தில் கொண்டு வந்துவிட்டுவிடும். இப்படியான குழப்பமான அழுத்தத்துடன் இருக்கும்போது மூளையில் பலவிதமான இரசாயன மாற்றங்கள் ஏற்படும், அந்த ஆபத்துக்கு எதிராக நம் உடலே இயற்கையாகப் பாதுகாக்கும். அப்படித் தொடர்ச்சியாக நிகழும்போது இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் என்று இலவசமாகப் பல உபாதைகள் உடலில் குடியேறத் துடிக்கும். இதனாலேயே பல காரியங்களைக் குறித்து ஒரே நேரத்தில் போட்டு அலட்டிக் கொள்ளாமல் இருந்தால் இவற்றைத் தவிர்க்கலாம். 

மன ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி மனந்தெளிநிலையில் கவனத்தைக் குவிக்கும்போது ஆற்றல் அளவினை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது, பதட்டம் குறைந்து ரத்த அழுத்தம் குறைகின்றது, மன இறுக்கத்தினால் அழுத்ததினால் ஏற்படும் தலைவலிகள் நீங்குகின்றன. தூக்கமின்மை ஒரு பிரச்சனையாக இராது. 

‘கவனச் சிதறலுக்கும் இப்படியான உடல் பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு, நம்பும்படியாகவா இருக்கிறது?’ என்று நீங்கள் கேட்கலாம். முதலில் உங்களை நம்புங்கள். உங்களை நீங்களே நம்பாமல் இருப்பதுதான் உங்கள் முதல் பிரச்சனையே. அதன் பிறகு தேவையற்றவற்றைச் சிந்திக்காதீர்கள். கடந்தவை கடந்துவிட்டன அதைப் பற்றி யோசித்துப் பயனில்லை. நிகழவிருப்பது நிச்சயமில்லாததாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதாவது கண்டிப்பாக நடக்க வேண்டுமென்று திட்டமிட்டால் அதனைக் கவனத்தில் செலுத்தி நிகழ்வில் செய்து பார்க்கலாமே. வேறொரு காரியத்தைச் செய்யும்போது திட்டமிடுவதைவிட அதற்கான நேரத்தில் செயல்படுத்துங்களேன். 

நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை மூளையிலிருந்து வரும் இரசாயனம், மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. மூளையின் இரசாயனம் நாம் நினைக்கும் உணரும் செய்திகளை வைத்து மாறுபடுகிறது என்றால் ஒப்புகொள்வீர்களா? எதிர்மறையான சிந்தனை, சிக்கலான மனநிலை இதெல்லாம் கவனக்குவியலின் போது இருக்காது. அந்தக் கணத்திற்குரியதைப் பற்றி மட்டும் நினைக்கும் போது வேறு எண்ணமே இல்லாதபோது மனம் தெளிவாகிடும் பயிற்சியாகிவிடுகிறது. இது ஒரு வகையான தியானம் என்றே சொல்லிக் கொள்ளுங்கள். இப்போது நான் ஏற்கெனவே சொல்லிய தூக்கமின்மை சரியாவது, ரத்த அழுத்தம் குறைவது இதையெல்லாம் தொடர்புபடுத்திப் பாருங்கள் நான் சொல்வதின் உண்மை விளங்கும். 

இன்னும் புரியவில்லையா? அந்தந்த நொடிக்கான விஷயங்களை அனுபவித்து விழிப்புணர்வோடு செய்துதான் பாருங்களேன் என்கிறேன். அப்படி உங்களால் மனதைக் கட்டுபடுத்த முடிந்துவிட்டால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தின் கடிவாளமும் உங்கள் கையில்தான். 

இந்தக் கட்டுரையை நீங்கள் ஒரே மூச்சாகவா வாசித்து முடித்தீர்கள்? அப்படியென்றால் உங்களால் மனதை ஒருநிலைப்படுத்த முடிகிறது. அதுவும் ஏதாவது வாசிக்கும்போதுதான் முடிகிறதென்றால் நிறைய வாசியுங்கள், மனதை ஒருநிலைப்படுத்தி விழிப்புணர்வோடு இருங்கள். இல்லை வாசித்துக் கொண்டிருக்கும்போது வாட்ஸ் அப்பில் வந்த ‘நோட்டிஃபிகேஷன்’ பார்த்துச் சிரித்துவிட்டுத் தொடர்ந்தேன் என்றால் இந்தக் கட்டுரையை மறுபடியும் வாசியுங்கள். 

நலம் வாழ வாழ்த்துகள். 

ஜெஸிலா பானு 

0 Comments

  1. rajaram

    சிறப்பு, கவனச் சிதறலின்றி ஒரே மூச்சில்தான் இந்தக் கட்டுரையைப் படித்தேன். இக்கட்டுரையை வாசிக்கும்போதே வாட்ஸப்பில் வரும் நோட்டிபிகேசனை கவனிக்கக் கூடாது என்ற மனப் பேச்சை இக்கட்டுரை கேட்டதுதான் இக்கட்டுரையின் அழகே!

  2. Anantha Sankar

    அருமை. சிந்திக்க வைத்த பதிவு.

  3. Thileep

    சீரிய எழுத்து. சிறப்பான கருத்து. வாழ்த்துகள்.

  4. S Sahubar Siddiq

    சிறப்பான பதிவு! அருமை அருமை

  5. ஒ.நூருல் ஆமீன்

    அருமையான முயற்சி. மனதை ஒரு முகப்படுத்தும் சில எளிய பயிற்சிகளையும் தந்தால் கூடுதல் சிறப்பு!

  6. Mohaideen Batcha

    கட்டூரையின் பேசுபொருள் மிக முக்கியமானது, இக்காலத்தின் பிரச்சனையை நுணுக்கமாக கவனித்து பேசியுள்ளார் கட்டூரையாசிரியர். தொடரட்டும் அவர் எழுத்தின் முத்திரைகள். -ஜா.மு.

  7. Mohamed Firthouse

    பதிவு நல்லா இருக்கு. “எதிர்மறை சிந்தனை” சரியான வார்த்தையா? அல்லது “எதிர் சிந்தனை” சரியான வார்த்தையா? யாராவது ஒரே மூச்சில் வாசித்து விட்டேன் என்று சொன்னால் நம்பிடாதீர்கள். ஏனென்றால், ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருமுறை கவனச் சிதறல் ஏற்படுவதாக ஆய்வு.

  8. Mohaideen Batcha

    கட்டுரையின் பேசுபொருள் மிக முக்கியமானது, இக்காலத்தின் பிரச்சனையை நுணுக்கமாக கவனித்து பேசியுள்ளார் கட்டுரையாசிரியர். தொடரட்டும் அவர் எழுத்தின் முத்திரைகள். -ஜா.மு.

  9. kumar

    நல்ல கட்டுரை, இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமோ எனத் தோன்றியது. சிறப்பு… வாழ்த்துகள்.

  10. Marks

    Yes absolutely happening to me as you said . But don’t know whether I can cone out if this immediately but as your words will get trained to live this moment scenario here after Good sister Keep writing All the best

  11. Antony Selvan

    Nantraka vullathu ….naam intha sulnilaikku thallap padukirom & thallap pattom yenpathai vunarum manam inku yarukkum illai kurippaka namma tamil nattu makkal mattum than ippadi irukkom

  12. Sabu

    Bravo ! Good analysis and well written article.

  13. Shankar Mahadevan

    அருமை. பல இடங்களில் நடந்த சம்பவங்கள் சிந்தனையில் மின்னல் போல வந்து சென்றது. அதையும் கடந்து தான் பதிவை மொத்தமாய் படிக்க முடிந்தது.

  14. K.V.V. Sudhakar

    Yes. It happened 2me in my life. Many times in da morning I use 2stand in the front of my building entrance for recalling my yesterday evening memories where did I parked my car? Later I realized this is just happening because of not paying my attent

  15. JAZEELA BANU

    @Mohamed Firthouse நன்றி. நேர்மறை என்ற வார்த்தை இருக்கும்போது எதிர்மறை என்பதில் தவறில்லையே. எதிர் சிந்தனை என்பது வேற்று சிந்தனை என்று பொருள்படும் அபாயம் இருக்கிறதே. ஒரே மூச்சில் வாசிப்பதில்லை என்று சொல்ல முடியாது. பயிற்சியால் எல்லாமும் சாத்தியமே.

  16. JAZEELA BANU

    @rajaram உங்கள் தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி. @Anantha Sankar மிக்க நன்றி @Thileep மிக்க நன்றி @S Sahubar Siddiq மிக்க நன்றி @ஒ.நூருல் ஆமீன் மிக்க நன்றி @Mohaideen Batcha மிக்க நன்றி

  17. JAZEELA BANU

    @சே.குமார் மிக்க நன்றி. அப்படி உங்களுக்குத் தோன்றியதே மகிழ்ச்சியளிக்கிறது. @Marks முடியாதென்று எதுவுமே இல்லை. பயிற்சி அவசியம். உங்களால் முடியும். @Antony Selvan தமிழ்நாட்டு மக்களென்று இல்லை எல்லாருமே அப்படிதான்.

  18. JAZEELA BANU

    @Sabu மிக்க நன்றி @Shankar Mahadevan அலைபாயும் மனது. தொடர்ந்து வாசியுங்கள். @K.V.V. Sudhakar அதேதான். என்ன செய்கிறோம் என்று தெரியாமலே செய்து கொண்டிருக்கிறோம்.

  19. பருத்தி இக்பால்

    உண்மைதான். மனதை பலவாறு பல இடங்களில் மேயவிட்டுக் கொண்டே ஒன்றில் ஒன்றுவதென்பது இரண்டு கண்களில் இரண்டு காட்சி காண்பது போன்றே அச்செயல் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *