ஹேமா
தோள் கொடுக்கும் தோழர்கள்
வெளிநாட்டு வாழ்க்கையென்பது பலரின் கனவு. கந்து வட்டிக்கு கடன் வாங்கி வெளிநாட்டிற்கு சென்றவர்கள், ஏஜென்ட் மூலமாக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளாக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள் என கடை நிலை முதல் எல்லா நிலைகளிலும் ஆயிரமாயிரம் கனவுகளோடு வெளிநாட்டு வாழ்க்கைக்குச் சென்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பலர் வெளிநாட்டு வாழ்வில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். பொருளாதார நிலையில் மேம்பட்டிருக்கிறார்கள். தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும், உறவினர்களையும் பொருளாதாரத்தில் மேம்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இவ்வாழ்வில் எல்லோருக்கும் சமமான வாய்ப்போ மகிழ்வோ கிடைத்துவிடுவதில்லையே.
எத்தனையோ பேர் இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டு வெளிநாடுகளில் நடுவீதியில் நிறுத்தப்படுகிறார்கள். சொந்த ஊருக்கு திரும்பி வர வழி இல்லாமல் எத்தனையோ அவமானங்களையும் இடர்களையும் சந்தித்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று விபத்தாலோ நோய்வாய்ப்பட்டோ இறந்து போனவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. இந்த நிச்சயமற்ற மனித வாழ்வில் நாளை நமக்கு என்ன நடக்கவிருக்கிறது என்பது நாம் அறியாத ஒன்றுதானே.
வீட்டின் பொருளாதாரத்திற்கு ஆதாரமான ஒரு நபர் இங்ஙனம் வெளிநாட்டில் இறந்து விட்டால் தாயகத்திலுள்ள அந்த குடும்பத்தின் நிலை என்னவாகும் என்பது பெரும் வேதனை என்பது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அப்படி இறந்து போனவர்களை அவ்வளவு சாதாரணமாக தாயகம் கொண்டு வந்து விட முடிவதில்லை என்ற சோகமும்தான்.
வெளிநாடுகளில் இறந்து போனவர்களை சொந்த நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்க அரசு உதவியோடு மனிதம் நிறைந்த எத்தனையோ நல்ல மனிதர்கள் தோள் கொடுக்கிறார்கள். அப்படி வளைகுடா நாடுகளில் நிகழும் விபத்துகள் மற்றும் துர்மரணங்களில் ஆதரவற்றவர்களின் குரலாக, நற்செயலாக விளங்கும் உயர்ந்த மனம் படைத்த மனிதர்களைக் குறித்த நெகிழ்ச்சியான கட்டுரையே இது. நிஜ வாழ்வின் நாயகர்களாக நிதமொரு உதவியென கால நேரம் கடந்து, சாதி மத பேதம் கடந்து, சக மனிதர்களுக்காக உதவி செய்யும் மனிதர்களைக் குறித்து பேசுவது அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு செய்யும் மரியாதையாகவே நான் பார்க்கிறேன்.
வெளிநாட்டு வாழ்க்கை என்பது அனைவருக்கும் சொகுசு வாழ்க்கையாக அமைந்து விடுவதில்லை. அங்கேயும் எத்தனையோ பிரச்சனைகள், சொல்லி அழ உறவுகள் இல்லாமல் தனிமையில் நாட்களை கடத்தும் எத்தனையோ மனிதர்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தவறான மனிதர்களின் வழிகாட்டுதலுடன் வெளிநாட்டிற்கு சென்று அவதியுறும் பெண்கள், பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகும் பெண்கள், வேலையிடத்திலும் வேலையிழந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகும் ஆண்கள் என எத்தனையோ ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து பல வருடங்களாக எவ்வித பிரதிபலனும் பாராமல் உதவி செய்யும் அன்புள்ளங்களைக் குறித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பாக்கலாம்.
திரு கௌசர் பெய்க், இவரது பெயரை சமீபத்தில் பல ஊடகங்களிலும் நீங்கள் கேட்டிருக்கக்கூடும். கடந்த பதினோரு வருடங்களாக தன்னார்வலராக எத்தனையோ எளிய மக்களின் வாழ்வாதாரமான தேவைகளுக்கு தன் நேரத்தையும் உழைப்பையும் கொடுத்தவர். வளைகுடா நாட்டில் கெளசர் சென்று சில வருடங்களே ஆகியிருந்த நிலையில் அவர் நண்பரான ஜேசுதாஸ் ஜெயராஜ் என்பவர் மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அவரின் மருத்துவ உதவிக்காக ஏர்ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நேரத்தில் திடீரென்று அவர் இறந்துவிட்டதால் அவரை ஏர் ஆம்புலன்ஸில் அனுப்ப இயலாமல் போனது. கார்கோவில்தான் அனுப்ப இயலும் என்று தெரிய வந்தது. அதன் பின் அதற்கான நடைமுறைகள் என்ன வென்று ஒவ்வொன்றாக தெரிந்துகொண்டு நண்பரின் உடலை தாயகம் அனுப்பி இருக்கிறார். அப்படி அனுப்பிய அந்த பணிதான் இன்று மாபெரும் சேவையாக மாறியிருக்கிறது என்கிறார் கெளசர்.
வீட்டு வேலைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு தவறான வழிக்கு தள்ளப்படும் பெண்களுக்கான உதவி, பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கான மீட்பு நடவடிக்கைகள், ஏஜென்ட் மூலமாக ஏமாற்றப்பட்ட வேலை இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் மனிதர்களுக்கான மீட்பு போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தங்க இடமில்லாமல் இருப்பவர்களைத் தங்க வைப்பதற்காகவே அஜ்மானிலும் பர்துபாயிலும் நண்பர்களின் மூலமாக வாடகை வீடொன்றை எடுத்திருக்கிறார். மேலும் சம்பளம் தராத நிறுவனங்கள், பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு திருப்பித் தர மறுக்கும் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுடன் பேசி உரிய முறையில் சம்பளம் பெற்றுத் தருதல், செட்டில்மெண்ட் பணம் வாங்கித் தருவது போன்ற உதவிகளையும் செய்து வருகிறார். அதுபோலவே உணவின்றி தவிக்கும் மனிதர்களுக்கும் உணவு வழங்கவும் தவறுவதில்லை இவர்.
இரவு பகல் என்று எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் உதவி வேண்டி அழைப்பு வரும். தூக்கத்தை எல்லாம் பார்த்ததில்லை. குழந்தைகளுடன் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் கூட குறைவுதான். இது போன்ற சமூகப் பணிகளுக்கு தான் பெரும்பாலான நேரத்தை ஒதுக்கி வருகிறார் கெளசர்.
இது போன்ற சமூகப் பணிகளில் பல சவால்களைச் சந்தித்திருந்தாலும் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் என்று வரும்போது அதை எளிதாக கடந்து போய்விட முடியவில்லை. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாக அந்நிகழ்வுகளைப் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது என்கிறார்.
சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று இறந்துவிட்டது. அவசரப் பிரிவில் இருந்ததால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பெற்றோர்களால் குழந்தையைப் பார்க்க முடிந்தது. குழந்தை இறந்த பிறகு விதிமுறைகள் எல்லாம் முடிந்து பெற்றோர்கள் கையில் பிள்ளை கிடைக்கவே ஒரு நாளாகிவிட்டது. குழந்தை இறந்து விட்டது என்பதே மிகப்பெரிய வேதனை என்றால் இறந்த குழந்தையை ஒரு நாள் கழித்துதான் பார்க்க இயலும் என்ற நிலை மேலும் கொடூரமானது.
மற்றொரு குழந்தை வளைகுடாவில் பிறந்தவுடன் இறந்துவிட்டது. அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். குழந்தையின் மாமாவும் அம்மாவுமே அக்குழந்தையை தூக்க பயப்படும் நிலையில் இருந்தனர். பொதுவாகவே பிறந்த குழந்தையை மார்போடு அணைத்துக் கொள்வோமே அதைப்போல அவ்விறந்த குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டார் கெளசர். அப்போது ஏற்பட்ட மனவலியைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்தப் பெற்றோருக்கு பொறுமையைத் தருமாறு இறைவனை வேண்டுகிறேன். வேறென்ன சொல்ல என்று தனது கையறு நிலையை விளக்குகிறார்.
வெளிநாட்டில் என் இறப்பு நடந்துவிடக்கூடாது. என் குடும்பம் இப்படி ஒரு சூழலைச் சந்தித்து விடக் கூடாது என்று எப்போதும் நினைப்பேன் என்கிறார் சமூக சேவகர் கெளசர். இவ்வளவு வருடங்களும் தனிமனித சேவைகளாக தொடர்ந்தவைகளை அமைப்பு சார்ந்து நடத்தலாம் என்கிற திட்டம் இருக்கிறது. ஹோப் என்கிற பெயரில் இணையதளம் தொடங்கி செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார். அதன்மூலம் ஒருவேளை வெளிநாட்டில் யாராவது இறந்து விட்டால் சடலத்தை பெறுவதற்கு என்னென்ன விதிமுறைகள் செய்ய வேண்டும் என்பதை இணையதளத்தைப் பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம். அது பொது மக்களுக்கு அவசர நேரத்தில் பேருதவியாக இருக்கும்.
வளைகுடா அரசிடமிருந்தும் இந்திய அரசிடமிருந்தும் பல்வேறு உதவிகளோடு இச்சேவையைச் செய்யமுடிகிறது என்றாலும் இந்திய அரசிடமிருந்து இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைத்தால் மேலும் உதவியாக இருக்கும் என்கிற தன் கோரிக்கையை கூறுகிறார் கெளசர்.
இறந்தவர்களின் உடலை வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டின் சில இடங்களுக்கு கொண்டு வரும்போது குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் அதிகாரி ஜாஃபர் மற்றும் மும்பை விமான நிலையத்தில் அதிகாரி பிரசாந்த் குமார் அவர்களின் பொறுப்புணர்ச்சியை குறிப்பிட்டே ஆகவேண்டும் என்று பாராட்டுகிறார் அதைப் போலவே சில விமான நிலையங்களில் பணம் இருந்தால் மட்டுமே உடலை சரியான நேரத்தில் உரிய நபர்களிடம் ஒப்படைக்க இயலும் என்ற நிலையும் உள்ளது என்பதையும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
வெளிநாட்டில் வேலை செய்ய வருபவர்கள் அவர்களது விலாசம், தொடர்பு எண், நண்பர்களின் எண் எல்லாவற்றையும் குடும்பத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டில் ஒருவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அவர்கள் வீட்டாருடன் தொடர்பு கொண்டு எளிமையாக மீட்க இயலும். இதை வெளிநாட்டில் வாழும் பொதுமக்களுக்கான வேண்டுகோளாக வைக்கிறேன் என்கிறார் கெளசர்.
அடுத்ததாக திரு முகமது ராஸிக் அவர்கள். கடந்த பத்து வருடங்களாக அமீரகத்தில் வசிக்கிறார். கடந்த நான்கரை வருடங்களாக சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். முதலில் அமைப்பு சார்ந்து தொடங்கிய சேவை பிறகு தனிமனித சேவையாக எந்தவித எதிர்பார்ப்புமின்றி பல தளங்களிலும் சேவை செய்துவருகிறார். மேலே குறிப்பிட்டிருந்த சமூக சேவகர் கெளசர் அவர்களுடன் இணைந்து பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்கிறார்.
வெளிநாட்டில் இறக்கும் மனிதர்களின் உடலை தாயகம் அனுப்புவது, அவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க உதவுவது, ஆதரவற்று அனாதைகளாக இறந்து போகும் மனிதர்களுக்கு தேவையான இறுதி காரியங்களைச் செய்வது போன்ற பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். வெளிநாடுகளில் வசிக்கும் தொழிலாளிகளின் விசா பிரச்சனைகள், பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு தரமறுக்கும் முதலாளிகளிடம் பேசி வாங்கி தருவது போன்ற பணிகளையும் செய்து வருகிறார்.
கடந்தமாதம் வளைகுடாவில் போக்கிடமில்லாமல் ஒரு மாதமாக பூங்காவில் தங்கியிருந்த ஒரு பெண்மணியை காப்பாற்றி தேவையான ஆவணங்களை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் ராஸிக் மற்றும் குழுவினர்.
பெரும்பாலும் சமூக சேவை செய்பவர்கள் அனைவரும் பிரச்னைக்குரிய இடத்திற்கு வந்தோ அல்லது அம்மனிதர்களை நேரில் பார்த்தோ உதவி செய்வதில்லை. அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியமுமில்லை. ஆனால் முகம்மது ராசிக் அவர்கள் பெரும்பாலும் களமிறங்கி உதவி தேவைப்படுவோர்க்கு நேரில் சென்று உதவி செய்கிறார் என்பது மிகவும் பாராட்டுக்குரிய முக்கியமான விஷயமாகவே நான் கருதுகிறேன்.
குறிப்பாக இறந்து போனவர்களை அடக்கம் செய்வதற்கு அவரே குழிக்குள் இறங்கி எல்லா இறுதி மரியாதைகளையும் செய்கிறார். மேலும் இறந்தவர்களின் உடலை குளிக்க வைப்பதையும் அவரே உடனிருந்து செய்கிறார். ஒவ்வொரு மதத்திற்கும் இறந்த பிறகு செய்யும் சடங்குகள் வெவ்வேறானவை. அப்படி சகோதர மதத்தில் ஒரு சடங்குதான் இறந்தபிறகு அடிவயிற்றை அமுக்கி கழிவை நீக்குவது. இறந்து போனவர்களுக்கு தானே இச்சடங்கைச் செய்கிறார் ராஸிக் அவர்கள். கீழக்கரையை சேர்ந்த இவர் அங்கிருக்கும் போது இது போன்ற சேவைகளை இறந்தவர்களுக்கு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பீகாரைச் சேர்ந்த முப்பத்திரெண்டு வயதான ஒருவர் இறந்துவிட்டார். இரண்டு நாட்களாக யாரும் கவனிக்காததால் வெயிலிலேயே உடல் கிடந்ததாலும் மேலும் பிணவறையில் இரண்டு மாதங்களாக வைத்திருந்தாலும் மிகவும் மோசமான அழுகிய நிலையில் இருந்தது அவ்வுடல். இதை எதையும் பாராமல் அவ்வுடலை குளிக்க வைத்து சுத்தம் செய்து இறுதி மரியாதை செலுத்தியிருக்கிறார் ராஸிக் அவர்கள்.
மனித வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? முப்பத்திரெண்டே வயதான அம்மனிதன் குடியால் இறந்து போனார். சரியான பாஸ்போர்ட் விசா இல்லாத காரணத்தினாலும், அவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க இயலாத காரணத்தினாலும் அவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல இயலவில்லை. இது போன்ற நிகழ்வுகள் மனதுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது என்கிறார் ராஸிக்.
குடும்பத்தார் கொடுக்கும் ஆதரவினால்தான் இச்சேவையை செய்ய முடிகிறது. வேலை நேரம் போக மற்ற நேரங்களில் இச்சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும் குடும்பத்தார் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்வதால்தான் இச்சேவையை தொடர்ந்து செய்ய முடிகிறது என்கிறார் ராஸிக்.
மாற்றுமத சகோதரர்களின் உடல் தகனம்தான் தான் அதிகளவில் செய்தது. இதற்கு மதமும் மனமும் தடையொன்றுமில்லை. இதற்காக என்னை பாராட்டியவர்கள்தான் இருக்கிறார்களே தவிர குறை சொன்னவர்கள் யாருமில்லை என்கிறார் அவர்.
2011ம் ஆண்டு தன் அண்ணன் சாலை விபத்தில் அடிபட்டு ஐம்பது நிமிடத்திற்கு எந்த ஒரு உதவியுமின்றி தவித்து இறந்துபோனார். அந்நிகழ்வு கொடுத்த தாக்கம்தான் இச்சேவைகளின் தொடக்கம். அது போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என்கிற எண்ணமாகவும் நம்மாலான உதவியை எல்லாருக்கும் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் மனதுக்குள் தோன்றக் காரணம் என்று தன் நெகிழ்வான உரையாடலை முடித்துக் கொண்டார் சமூக சேவகர் ராஸிக் அவர்கள்.
இதற்கிடையில் சமூகப் பணி குறித்து சுருக்கமாக பார்ப்போம். சமூகப் பணி என்பது மனிதனின் செயல்திறனை உருவாக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். சமூகப் பணி என்பது சமூக மாற்றத்தையும் மக்களின் நலனையும் மேம்படுத்த கூடியது. வரலாறு நெடுகிலும் பல துறவிகளும் போப்புகளும் சீர்திருத்தவாதிகளும் கல்வியாளர்களும் மனிதாபிமானவாதிகளும் எழுத்தாளர்களும் சமூக சேவகர்களாக பங்கேற்றியிருக்கிறார்கள்.
பொதுவாகவே சமூக சேவை என்பது மக்களுக்கு உணவு, வீடு, வேலை போன்ற அவசியமான தேவைகளுக்கு உதவுவதுதான். தனிமனித தன்னார்வலர்கள் மட்டுமல்லாது அமைப்பு அல்லது இயக்கம் சார்ந்தும் நிறுவனங்களாகவும் இக்காலகட்டத்தில் இச்சேவை மாறியிருக்கிறது. இலாப நோக்கமற்ற அடிப்படையில் செயல்படும் இங்சேவைகளுக்கு தனியார் நன்கொடைகள், அரசாங்க மானியங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் போன்றவற்றால் நிதி அளிக்கப்படலாம்.
சமூக சேவை என்று கூறும்போது ஆக்னஸ் கோன்ஜா என்ற இயற்பெயருடைய அன்னை தெரேசாவை நினைவு கூறாமல் இருக்க முடியாது. தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பிறந்தவர்.
நல்ல கல்வி அறிவும், நகைச்சுவை உணர்வும் பெற்றிருந்த அன்னை தெரேசா தன்னுடைய 18-வது வயதிலேயே முழுநேர சேவையில் ஈடுபட தொடங்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தியாதான் தன் தாய்நாடு என்று நம்பியவர். குழந்தைகளை குளிப்பாட்டுதல், சாப்பாடு ஊட்டிவிடுதல், குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், ஏழை மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றை செய்தார். ‘பிறர் அன்பின் பணியாளர்’ என்னும் அமைப்பைத் தொடங்கி பலருக்கும் உதவினார். ‘காந்தி பிரேம் நிவாஸ்’ என்னும் பெயரில் நிரந்தர தொழுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார். அன்னை தெரசாவின் கருணை உள்ளத்தை போல கருணை உள்ளம் கொண்டு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சமூக பணியாற்றும் ஒவ்வொருவரும் உயர்ந்தவர்களே.
அடுத்ததாக சமூக சேவகர் திரு. ஃபிர்தோஸ் பாஷா அவர்களைப் பற்றி பார்க்கலாம். இவரை தெரியாதவர்கள் அமீரகத்தில் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அந்த அளவிற்கு அனைவருக்கும் பரிச்சயமானவர். கடந்த பத்து வருடங்களாக அமீரகத்தில் சமூக சேவை செய்து வருபவர். சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படத்தைக் குறித்து நடிகர் சசிகுமார் பேட்டி அளித்தபோது துபாயில் உள்ள இஸ்லாம் சகோதரர் ஒருவர் இது போன்ற சேவைகளைச் செய்வதாக குறிப்பிட்டிருந்ததை நீங்கள் கேட்டிருக்கலாம். அது வேறு யாருமல்ல. அமீரகத்தைச் சார்ந்த பிர்தோஸ் பாஷாதான்.
அவரோடு நடந்த உரையாடலின் தொகுப்பு உங்களுக்காக.
வணக்கம். எப்படி தொடங்கியது இந்த சமுக சேவை எண்ணம்?
தமிழ்நாட்டில் இருக்கும் போது சின்ன சின்ன உதவிகள் செய்திருக்கேன். இங்க அமீரகம் வந்த பிறகு பிறரோட தேவைகளை பார்க்கும்போது மேலும் அதிகமாக பணிகளில் என்னை இணைச்சுக்கிட்டேன்.
என்ன மாதிரியான சமூக சேவைகளை செய்றீங்க?
வெளிநாட்டில் இறந்து போனவர்கள் பலரின் உடல்களை அரசாங்கத்தின் உதவியோடு சொந்த ஊருக்கு அனுப்பி வைச்சிருக்கோம். அமீரகம் மட்டுமல்லாமல் சவுதி, மஸ்கட் போன்ற நாடுகளில் இறந்தவர்களையும் எந்த கட்டணமும் இல்லாமல் சொந்த ஊருக்கு அனுப்பியிருக்கோம். இதற்கு இந்திய தூதரகத்திற்கும் இந்திய துணைத் தூதரகத்துக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். அவங்க துணை இல்லாமல் இது நடந்திருக்காது.
வேறு என்னென்ன உதவிகளை செய்கிறீர்கள் ?
பாஸ்போர்ட் காணாமல் போய் எமர்ஜென்சியாக ஊர் திரும்ப வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவியிருக்கேன். விசா கலாவதி ஆகியோ வேறு சில பிரச்சினைகளினாலோ ஃபைன் அதிகமாகி ஜெயிலுக்கு போக வேண்டிய சூழலிலிருந்தவர்களை தூதரகத்தின் உதவியோடு காப்பாற்றி சொந்த ஊருக்கு அனுப்பியிருக்கிறேன்.
உங்களுடைய வேலை மற்றும் சமூகசேவை இரண்டிற்குமான நேர மேலாண்மையை எப்படி செய்றீங்க?
சில நேரங்களில் நடு இரவில் கூட தொலைபேசி அழைப்புகள் வரும். ஆனா என் குடும்பம் கொடுக்கிற ஒத்துழைப்புதான்தான் என்னை மேலும் உற்சாகமாக செயல்பட வைக்குது.
இந்தப் பத்து வருட தன்னார்வப் பணியில் எத்தனையோ சம்பவங்கள் சந்தித்திருப்பீங்க? உங்க மனம் பாதித்த சம்பவம் ஒன்று சொல்லுங்களேன்?
நிறைய சம்பவங்கள் இருக்கு. சமீபத்தில் மஸ்கட்டில் வீட்டு வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி தற்கொலை செய்துகொள்ள இருந்தார். காலை 6 மணியில் இருந்து இரவு 12 மணி வரை வீட்டு வேலை. அந்த வீட்டு ஓனர் இவங்கள அடித்து காயப்படுத்தி காதிலிருந்த கம்மல் உடைஞ்சி ரத்த காயத்தோட ரொம்ப மோசமான நிலைமையில் இருந்தாங்க. அவங்கள பாதுகாப்பா இந்திய தூதரகம் மூலம் மீட்டெடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வெச்சோம். அவங்க குடும்பமே எனக்கு நன்றி சொன்னாங்க. அவங்க குலதெய்வம் மதுரைவீரன். அந்த சாமி படத்தை என்னோட போட்டோவோட வெச்சி அவங்க கும்பிட்டது எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. அப்படி நான் ஒன்னும் பெரிய உதவி செஞ்சிடல. ஆனா அவங்க நன்றி சொன்ன விதம் என்னால மறக்கவே முடியாது.
அதைப்போலவே சவுதியில் காணாமல் போன ஒரு பெண்மணியை அவங்க மகன் நாலு வருஷமா தேடிட்டு இருந்தாரு. அவங்களையும் அரசு உதவியோடு நாப்பத்தைஞ்சு நாளிலேயே தேடி கண்டுபிடிச்சு சொந்த ஊருக்கு அனுப்பி வைச்சோம். அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது. இந்த இரண்டு விஷயமும் என்னால மறக்கவே முடியாது.
நீங்கள் செய்துவரும் தனிமனித சேவையை அமைப்பு சார்ந்து செய்கிற திட்டம் ஏதாவது இருக்கா?
ஆமாம். அபுதாபி தமிழ்ச்சங்கத்தின் மூலம், அபுதாபி அரசாங்கத்தால் சட்டபூர்வமாக ஒப்புதல் பெற்று இச்சேவைகளை செய்யும் எண்ணம் இருக்கிறது.
இது போன்ற சேவைகளுக்கு அரசு அங்கீகாரம் அளிக்கிறார்களா?
நிச்சயமாக கொடுக்கிறாங்க. கடந்த 72 ஆவது இந்திய குடியரசு தினத்தன்று சிறந்த சமூக சேவகர் விருதை இந்திய அரசாங்கம் எனக்கு அளித்துள்ளது. நிச்சயமாக அரசு இதுபோன்ற பணி செய்பவர்களை பாராட்டி அங்கீகரிக்கிறது.
கொரோனா காலகட்டத்திலோ அல்லது மற்ற நேரங்களிலோ நடந்த சவாலான சம்பவங்கள் ஏதாவது சொல்லுங்க?
கொரோனா காலகட்டத்தில் நிறைய சவால்கள் இருந்தன. நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண்மணி அமீரகத்தில் வேலை செய்யும் தன் கணவனை பார்க்க வந்திருந்தார். உடல் நிலை சரியில்லாத தன் மகளை ஊரில் விட்டுவிட்டு வந்திருந்தார். விமானம் ஏறி அமீரகத்தில் இறங்கும் போதுதான் அவருக்கு தெரியவந்தது நாகர்கோவிலில் உள்ள தன் மகள் இறந்துவிட்டாள் என்று. கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அரசின் உதவியோடு உடனடியாக அவர் அமீரகத்திலே நுழையாமல் விமான நிலையத்திலிருந்தே அடுத்த விமானத்தில் அவர்களைச் சொந்த ஊர் அனுப்பி வைத்தோம்.
அதைப்போலவே அபுதாபியில் ஒருவர் எட்டு மாசமா பூங்காவிலே தங்கியிருந்தார் ஒருவர். சாப்பாடு, தண்ணி எதுவும் இல்லாமல் சரியான மனநிலையில் கூட இல்லாமல் இருந்தார். அவரை இந்தியத் தூதரகத்தின் மூலமாக சொந்த ஊருக்கு நல்லபடியா அனுப்பி வெச்சோம். இதுபோல பல விஷயங்களை சொல்லலாம்.
‘வெளிநாட்டுக்கு வேலைக்கு வரவங்க நல்ல ஏஜெண்டுகள் மூலமா வாங்க. அதைப்போலவே வீட்டு வேல செய்ய வரவங்க நல்ல சம்பளம் கிடைச்சா நம்ம ஊர்லயே வேல செய்யுங்க’ என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் பிர்தோஸ் பாஷா.
இவர்கள் செய்த சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ள இச்செய்திகள் அவர்கள் செய்த சேவைகளின் சில துளிகள் மட்டுமே. அண்ணன் யுகபாரதி சொல்வது போல வாழ்த்துவதற்கு வயதொன்றும் தேவையில்லை. பிறர் தேவைகளை தன் தேவைகளாக உணர்ந்து செய்யும் இவர்களின் மனிதம் வாழட்டும். சாமானிய மக்களுக்கான இது போன்ற சேவையை எவ்வித எதிர்பார்ப்பின்றி, சுயநல நோக்கமின்றி, லாப நோக்கமின்றி இவர்கள் போல சில தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள். தமிழக அரசு சரியானவர்களைத் தெரிவு செய்து, அவர்களை கெளரவிக்கும் வகையில் விருதோ, அங்கீகாரமோ அளிக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் இக்கட்டுரையின் வழியாக வேண்டுகோள் விடுக்கிறோம்.
எளிய மனிதர்களுக்கு உதவும் இவர்களுடனான உரையாடல் கதையல்ல, வாழ்வின் நிஜம்.
குரலற்றவர்களின் குரலாக கதையல்ல வாழ்வு தொடரும்.
ஹேமா
5 comments on “கதையல்ல வாழ்வு – 4 “தோள் கொடுக்கும் தோழர்கள்””
Akila
மக்கள் தொண்டடே மகேசன் தொண்டு என செயல்படும்,திரு.கௌசர் பெய்க், திரு. முகமது ராஷிக் மற்றும் திரு.ஃபிர்தோஸ் பாஷாவும் பாக்கியசாலிகளே.உங்களுடைய இரக்க மனப்பான்மையும் தர்ம சிந்தனையும் என்றும் தொடரட்டும். அருமை.
Rajaram
சிறப்பான கட்டுரை எனக்கு மிகவும் நெருக்கமானதும்கூட, தோழர் பிர்தௌஸ் பாஷா அவர்களும், சகோதரர் கௌசர் அவர்களும் எனக்கு மிகவும் நெருங்கிய பரிச்சயமான நபர்கள் அவர்களின் சமூகப் பணி சொல்லிலடங்காதது அவர்களைப் பற்றிய கட்டுரை என்பதே நெகிழ்வாக உள்ளது. அருமை.
balkarasu
மனிதநேயத்திற்கு இணையான பொருள் அல்லது செல்வம் இவ்வுலகத்தில் எதுவும் கிடையாது. வாழ்த்துகள் ஹேமா
kumar
சிறப்பு. நம் நண்பர்களைப் பற்றிய கட்டுரை என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. வாழ்த்துகள் ஹேமா.
Ahamed Gulam
தன் நலத்தை விட பிறர் நலத்தை முதன்மைப்படுத்தும் இத்தகைய நல்ல உள்ளங்களினால்தான் உலகில் மனிதம் மரிக்காமல் நிலைத்திருக்கிறது. மனதில் நம்பிக்கை துளிர்க்கிறது. இவர்களைப் போன்றவர்களே நற்காரியங்கள் தொடர மற்றவர்களுக்கும் தூண்டுகோலாக அமைகிறார்கள்.