ஹேமா
பார்வையற்றவர்களின் விசாலமான பார்வை
நாம் கண்களால் மட்டுமே பார்க்கிறோமா? கண்களுக்கும் பார்வைக்கும் மட்டும்தான் தொடர்பிருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் பதிலாக இருக்கும். புத்தரும் காந்தியும் கால்களால் இவ்வுலகத்தைப் பார்த்தவர்கள் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது. பயணத்தால் அது தரும் அனுபவத்தால் இவ்வாழ்வை அளந்த இரு பெருந்தலைவர்கள் அவர்கள். ஆக பார்ப்பதற்கு கண்கள் ஒரு கருவி. கண்கள் இல்லாமலும் பார்க்க இயலும். கண்பார்வை இல்லாமல் தன் அறிவால் மனதால் விசாலமான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் கண்பார்வையற்ற மனிதர்கள்.
காதலுக்கும் கண்களுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருப்பதாகவே திருக்குறள், சங்க கால பாடல்கள் போன்ற பல நூல்களும் குறிப்பிடுகின்றன. ‘உண்டார்கண் அல்லது அருநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று’ மதுவை உண்டால்தான் மயக்கம் வரும். ஆனால் கண்களால் கண்டாலே மயக்கம் தருவது காதல் என்கிறார் வள்ளுவர். சிவ பெருமானின் வலது கண் பெரிய புராணம், இடது கண் திருவிளையாடல் புராணம், நெற்றிக்கண் கந்த புராணம் என்ற ஒரு வாசகம் உண்டு.
‘நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல்’ என்று கண்களை கூர்மையான வேலுக்கு ஒப்பிட்டு கூறுவார் கம்பர். தற்கால திரைப்படத்திலும் கண் பார்வையற்றவர்களின் காதலை மிக நேர்த்தியாக ‘ஆகாசத்த நான் பாக்குறேன், ஆறு கடல் நான் பாக்குறேன் என்று எழுதியிருப்பார் கவிஞர் யுகபாரதி குக்கூ திரைப்படத்தில்.
கண் என்பது நம் புலன்களின் பிரதானமான ஒன்று. கண்பார்வை இல்லாத ஒரு வாழ்வைப் பற்றி நம்மால் நினைத்துக் கூட பார்க்க இயலாது. ஆனால் பிறவியிலேயே கண் பார்வையற்றவர்கள், ஏதேனும் விபத்தில் அல்லது நோயால் கண் பார்வை இழந்தவர்களின் வாழ்வைக் குறித்த புரிதல் நம்மிடம் இருக்கிறதா என்கிற கேள்வி என்னை தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது.
மகாபாரத்தில் திருதராஷ்டிரன் பார்வையற்ற அரசர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் பார்வையற்ற ஒருவர் அரியணை ஏறுவதில் உள்ள பிரச்சனைகளைத் தொகுத்து அவர் மன்னராவதை எதிர்த்தார் விதுரன். ஆனால் பிறவியிலேயே கண்பார்வை நன்றாக இருந்த காந்தாரி தன் கணவனுக்கு கண் தெரியவில்லை என்பதற்காக தன் கண்களைக் கட்டிக்கொண்டு பார்வையை மறைத்துக் கொண்டது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று எனக்கு தோன்றுகிறது. தன்னை வதைத்துக் கொண்டு காட்டப்படும் இந்த அன்பை அவர் கணவர் எப்படி ஏற்றார் என்கிற கேள்வி முக்கியமானது.
கண்கள் ஆன்மாவின் சாளரம் என்கிறார்கள். பிறவியிலேயே கண் பார்வையற்றவர்களின் நிலைமை என்ன? ஏன் அவர்களுக்கு இப்பிறவி கோளாறு ஏற்பட்டது என்று சிந்தித்தால் அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு சில மரபணு மாற்றங்களால் ஏற்படுகின்ற கண்புரை நோய், கர்ப்பகால நோய்கள் மூலமாக பரவும் பிறவிக் கண்புரை, வளர்சிதைமாற்ற கோளாறுகளால் ஏற்படும் பிறவி கண்புரை, குரோமோசோம்களின் அசாதாரணங்களால் ஏற்படும் பிரச்சனைகள், கர்ப்ப காலத்தில் மது அல்லது மாற்று மருந்துகளால் ஏற்படும் கண் புரை என பல்வேறு காரணங்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பிறவி கண் பார்வைக் கோளாறு எதனால் ஏற்படுகிறது என்பதை சரியாக வரையறுக்க இயலவில்லை என்றும் கூறுகிறார்கள். பெரும்பாலும் குழந்தை பிறந்த பின்பே பல கண் பார்வைக் கோளாறுகள் கண்டறிய முடிகிறது.
மனிதக் கண்கள் ஒரு புகைப்படக் கருவியைப் போல செயல்படுகிறது எனலாம். மனிதக் கண்களை கேமரா என்று எடுத்துக்கொண்டால் அதனுடைய மெகாபிக்ஸல் அளவில் 576 என்ற அளவில் இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண்களைப் பாதுகாத்து இன்னமும் நியூயார்க் நகரத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான செய்தி.
கண்பார்வை என்பது எவ்வளவு முக்கியமானது என்று நமக்குத் தெரியும். தலைவலி, வயிற்றுவலி மற்றும் நரம்பு பிரச்சனை என்று மருத்துவமனைக்கு சென்ற சிவபாலனுக்கு சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கண் மருத்துவமனையில் மருந்துகள் கொடுக்கப்பட்டன. மருந்து உட்கொண்டு சில நாட்களிலேயே அம்மருந்து அதிகப்படியான அளவோடு கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
கண் பார்வை மங்குதல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிவபாலன் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ததில் தன்னுடைய கண்களில் ஆப்டிக் நர்வ் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கண்பார்வை தனக்கு முழுமையாக போய்விடும் என்பதையும் உணர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வை பறிபோய் கொண்டிருந்தது சிவபாலனுக்கு. மருத்துவர்கள் தலைவலி, வயிற்று வலிக்காகவும் மற்றும் நரம்பு பிரச்சனைக்காகவும் கொடுத்த மாத்திரைகள் தான் இவரின் கண் பார்வை பறி போவதற்கு காரணம் என்று கூறுகிறார். ஆனால் அவ்வளவு பெரிய மருத்துவமனையை எதிர்த்துப் போராடும் திராணி எனக்கில்லை என்று அவர் கூறும் போது மனம் உடைந்து போகிறது. நீதிமன்றத்தை நாடுவதற்கோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கவோ தன்னால் இயலவில்லை என்று, தன் பார்வையை மருத்துவர்களின் அஜாக்கிரதையால் பறிகொடுத்த ஒருவர் சொல்வது இந்த சமூகத்திற்கு எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
இத்தனை பாதிப்புக்குப் பிறகும் பிறரின் அலட்சியத்தால் தன் கண்பார்வை முற்றிலும் பறி போன பிறகும் யாரைப் பற்றியும் எந்த புகாரும் இல்லை சிவபாலனிடம். மனதளவில் நான் பார்வையற்றவன் இல்லை, என்னால் எதையும் செய்ய இயலும் என்று நம்புகிறார். இப்பொழுதும் அனைவரும் செய்யக்கூடிய வேலையைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். டெலிபோன் ஆபரேட்டராக வேலை செய்கிறேன். என்னுடைய இருபத்தாறு வயதில்தான் எனக்கு கண் பார்வை பறிபோனது. ஆனால் இந்த உலகை அதற்கு முன்பே பார்த்துப் பழகியிருக்கிறேன். அதனால் ஸ்டிக் இல்லாமல் என்னால் தனியாக பிரயாணம் செய்ய இயலும்.
ஐ அம் நாட் பிளைன்ட்(Blind) என்று தீர்க்கமாக கூறுகிறார் சிவபாலன். இந்நிலையிலும் அடிக்கடி தவறாமல் ரத்த தானம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது பிரபல பாடகராக இன்று பல ஊடகங்களும் கொண்டாடும் ஜோதிகலாவின் தாயாருடனான நெகிழ்ச்சியான உரையாடலை இங்கு பதிவிடுகிறேன்.
வயிற்றுக்குள் இருந்த போது எந்த ஸ்கேனிலும் அக்குறைபாடு தெரியவில்லை. கண் பார்வை குறைபாடோடு ஆட்டிஸக் குறைபாடும் சேர்ந்திருந்ததால் சின்ன வயதில் ஜோதிகலாவைச் சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது என்று கூறுகிறார் ஜோதிகலாவின் அம்மா.
ஒற்றைப் பெற்றோராக இப்படிப்பட்ட நிலையில் தன் மகளை வளர்த்து ஆளாக்கி இருக்கிறார். எத்தனையோ சவால்களை கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் சந்தித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். சாதாரண மனிதர்களுக்கும் இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்கும் ஒரே வகையான கல்வி என்பது எப்படி நியாயம்? ஜோதிகலா போன்ற குழந்தைகளுக்கு சாதாரண குழந்தைகளுக்கு நிகராக கல்வி கற்று கொடுப்பதில் பெரிய சவால்கள் இருக்கிறது. அதை முன்னின்று சரி செய்ய வேண்டும் என்கிற தன்னுடைய வேண்டுகோளை அரசுக்கு விடுக்கிறார் ஜோதிகலாவின் தாயார். கண்பார்வையற்ற அவர்களின் கல்வி, வேலை, வாழ்வாதாரம் என்று எல்லாமுமே பெரும் கேள்வியாக இருக்கிறது என்று தன் இயலாமையை விளக்கிறார்.
சமாதானமான மனநிலையில் இல்லாத தன் குழந்தை முதன் முதலில் பாட்டு கேட்ட போது சற்று சமாதானம் அடைந்ததாகவும் அதைத் தொடர்ந்து அவருக்கு பாட்டு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தோம் என்றும் கூறுகிறார். இப்போது எம்.ஏ இசை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறார்.
அதில் பதினான்கு பேப்பரில் முதல் மாணவியாக தேர்ந்திருக்கிறாள். ஆனால் இந்த நிலைக்கு அவரை கொண்டு வருவதற்கு தான் பட்ட பாடு ஏராளம் என்கிறார் ஜோதியின் தாயார் கலைச்செல்வி.
நான் இல்லை என்றால் பிற்காலத்தில் தன் பெண்ணின் நிலை என்ன அல்லது பெற்றோர் இல்லாமல் போனால் இவளைப் போன்ற குழந்தைகளின் நிலை என்ன என்ற கேள்வி என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது என்கிறார் ஜோதியின் தாயார்.
கண்ணம்மா பாடல் புகழ் ஜோதி 1330 குறளையும் பாடுவாள். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் இசையில் நிலவின் நிறமும் என்ற பாடலை அடங்காதே என்கிற திரைப்படத்தில் பாடியுள்ளார். கீபோர்ட் வயலின் போன்ற வாத்தியக் கருவிகளையும் வாசிப்பார்.
பார்வையற்றவர்களுக்கு ஒரு விசாலமான பார்வை உண்டு என்பதை நாம் பாடகி ஜோதி மூலமாகவும் இதற்கு முன்பு பேசிய பார்வையற்ற தோழர் சிவபாலன் மூலமாகவும் மேலும் பல பார்வையற்ற நண்பர்களின் மூலமாகவும் அறிந்து கொள்ள இயலும்.
அந்தந்த வயதுக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் புத்தகம் எழுத வேண்டும் என்று திருவிக கூறியதை சுட்டிக்காட்டுகிறார், கண்களை மூடிக் கொண்டு எழுதும் பழக்கம் உள்ள மதுரையைச் சேர்ந்த தமிழறிஞர் இளங்குமரனார். இளவயது முதலே பல்வேறு கண்பார்வை சிகிச்சைகளுக்கு ஆளாகியிருந்தாலும் தன்னுடைய இறுதிக் காலம்வரை எழுத்துப் பணியை இடைவிடாது செய்தவர் இளங்குமரனார். திருவிக தனக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தபோது அந்த அனுபவத்தை இருளில் ஒளி என்னும் புத்தகமாக மாற்றினார். தனக்கு வயோதிகம் வந்த பிறகு அந்த அனுபவத்தையே முதுமை உளறல் என்றும், படுக்கையில் உடல்நலமின்றி இருந்த நேரத்தில் படுக்கைப் பிதற்றல் என்ற நூலையும் எழுதினார். தன் அனுபவங்களை அந்தந்த வயதிற்கேற்ப திருவிக எழுதியதைப் போல தானும் கண்பார்வை மங்கிய போதும் எழுத்துப் பணியிலிருந்து பின்வாங்காமல் ஓயாமல் உழைத்த இளங்குமரனார் நமக்கெல்லாம் மாபெரும் முன்னோடி என்றால் அது மிகையல்ல.
கண் பார்வையற்றவர்களுக்கு திட்டங்கள், சலுகைகள் போன்றவைகள் சரிவர செயல்படுத்தப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றனர். ‘தான் இறந்து விட்டால் கண் தெரியாத தன் மகளை கருணை கொலை செய்து விடுங்கள். அவளைப் பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லாத நிலையில் அவள் சித்திரவதைகளை அனுபவிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று கண் கலங்குகிறார் கண்பார்வையற்ற ஒருவரின் தாயார் .
நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களை இரண்டு கண்களையும் கொண்ட நாம் கண்களால் மனதால் பார்க்கிறோமா? அவர்களின் இருப்பும் வலி மிகுந்த வாழ்வும் நமக்கு புலப்படுகிறதா? ஆதரவற்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது நம் அரசின் தலையாய கடமை.
குரலற்றவர்களின் குரலாக எளிய மனிதர்களின் குரலாக கதையல்ல வாழ்வு தொடரும்.
ஹேமா
4 comments on “கதையல்ல வாழ்வு – 10 “பார்வையற்றவர்களின் விசாலமான பார்வை””
M.Ayisha
கட்டுரை மனதை வலிக்கச் செய்கிறது. வழி கண்டடைய வேண்டும்.
JAZEELA BANU
மிக அருமையான கட்டுரை. பார்வையற்றவர்களைப் பற்றிய தொகுப்பாக நாம் சிந்திக்கும் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டுரை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண்களைப் பாதுகாத்து வைத்திருப்பதெல்லாம் புது தகவல்.
Akila
உங்கள் கட்டுரையை வாசித்த போது என்னுடன் ஆறாம் வகுப்பு படித்த தோழி ஜூலி நினைவு வந்துவிட்டது. நான் ஏதும் பேசாமல் அவள் முன் சென்று அமர்வேன் அப்போது அவளின் விரல்கள் மெல்ல என் முகத்தில் ஊர்ந்து அடையாளம் கண்டு கொண்டு, அகிலா! என்பாள். கண்ணீருடன் முடிக்கிறேன்
Meera Balaji
Very inspiring stories. Well written article ???? ????