பால்கரசு சசிகுமார்
ஒருவரிடம் உங்களது கருத்துக்களை முன்வைத்து விவாதம் செய்யும்போது, அல்லது அவர்களது குறைகளை சுட்டிக்காட்டிப் பேசும்போது, இருவரும் மென்மையாக உரையாடு முயற்சி செய்யுங்கள், நீங்கள் எப்போதெல்லாம் கோபத்தின் உச்சத்திலிருந்து பேசுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்களிருவரின் மனங்களும் உங்களைவிட்டு வெகுதூரம் தள்ளிச் சென்றுவிடுகிறது.
தூரத்தில் இருக்கும் உங்களது மனங்களை உங்களருகில் கொண்டுவர அல்லது அந்த மனதிற்கு கேட்க வேண்டும் என்பதற்காக நீங்களிருவரும் கத்திப் பேசவேண்டிய சூழல் அமைந்துவிடுகிறது. அந்தச் சத்தம், அதட்டல், கோபம், இவைகள் அனைத்தும் ஒரு கட்டத்திற்கு மேல் உங்களது கட்டுப்பாட்டை மீறி வேறிடத்தில் போய்விடுகிறது.
உங்களது மனம் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அந்தளவிற்கு ஆற்றலை உபயோகித்து கத்திப் பேசவேண்டியிருக்கும் என்பதை உணருங்கள். அதே சமயத்தில் உங்களது பேச்சைக் கேட்காத அந்த மனதின் மீது உங்களுக்கு அதீத கோபமும், வெறுப்பும் சூழ்ந்துகொள்ளும்போது, உங்கள் மனம் தானாகவே விரக்தியடைகிறது.
அதுவே இருவரும், ஒருவருக்கொருவர் அன்பாக பேசும்போது அவர்கள் சத்தம் போட்டு அதிர்ந்து பேசுவதில்லை, அமைதியாக அவர்களது கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு அருகாமையிலே இருக்கிறது, குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் புரிதல் இருக்கும். புரிதல் இருக்கும் இடத்தில் புரியாமல் பேசுபவர் மீது கோபத்திற்குப் பதில் இரக்கமே எற்படும்.
கோபத்தைவிட ஒருவர் மீது ஒருவர் அதீதமாய் அன்பு செலுத்தும் போது என்ன நடக்கும்?
அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேசத் தேவையிருக்காது. புரிதல் கொண்ட மனங்கள் எந்த ஒரு கருத்தையும் பரிமாறிக் கொள்ளும்போது பிரச்சினைகளுக்கு வழி இருப்பதில்லை. அவர்களின் கருத்துகள் எளிதாக பரிமாறப்படுகிறது. இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தைகளே தேவைப்படாது.
அவர்களின் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதே மனதின் எண்ணம் வெளிப்பட்டுவிடும்…!
உறவுகளிடமிருந்து உங்கள் மனசு தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள், மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள். உங்களிடம் பேசுபவர் அந்த மாதிரி வார்த்தைகளைப் பேசினாலும் அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என நினைத்துக் கொண்டு நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
கோபத்தின் வார்த்தைகள் உங்கள் மனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி, இருவருக்கும் இடையிலான தூரத்தை அதிகமாகி, கடைசியில் ஒன்று சேரும் பாதையே அடைத்துவிடும் நிலை ஏற்படும்.
அதனால் உறவுகளிடம் மென்மையாக உரையாடுங்கள்.
அதேபோல் தான் சொல்வதே சரியென நினைக்கும் உறவுகளிடம் உரையாடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து