நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
இன்று எல்லா மதங்களிலும் போலியான ஆன்மீக வியாபாரிகள் பெருகிவிட்டார்கள்.
சில நாட்களுக்கு முன் கோயிலில் தீபம் ஏற்றிக் கொண்டிருக்கும் போது ஓர் பெண்மணி வந்தார். “சாமி… ராசிக்கல் மோதிரம் வாங்கியிருக்கிறோம். கொடுத்தவர் கோயிலுக்குச் சென்று ஐயரிடம் சொல்லி அர்ச்சனை செய்து அணிந்து கொள்ளச் சொன்னார்” என்றார்.
“எந்த சாமிக்கு அர்ச்சனை செய்யனும்?” என்று அப்பா கேட்டார்.
“அதெல்லாம் சொல்லலைங்க சாமி! உங்க கிட்ட சொன்னா செஞ்சு கொடுப்பாங்கன்னு சொன்னாங்க” என்றார்.
அப்புறம் அவருடைய ராசி, நட்சத்திரம், அந்த மோதிரம் இவற்றைப் பார்த்து நவக்கிரகத்தில் குருவுக்கு அர்ச்சனை செய்து கொடுத்து அனுப்பினார் அப்பா.
இந்த பெண்மணி ஒரு கோயில் விடுவதில்லை. புத்தகம், டீவி, அக்கம்பக்கம் என எதாவதொன்றில் இந்தப் பரிகாரம் செய்தால் நல்லது எனச் சொன்னால் போது அதை உடனே செய்து பார்த்துவிடுவார். யார் எங்கு குறி சொன்னாலும் அங்கு முதல் ஆளாய் நிற்பார். ஒரு விரதம் விடுவது இல்லை. இப்படிப் பட்ட பெண்மணிகள் இருக்கும் போது வியாபாரம் களைகட்டாமல் என்ன செய்யும்?
குறிப்பாக இந்த ஆன்மீக வியாபாரிகள் பெண்களைத்தான் குறி வைக்கிறார்கள். எந்த பெண் சொல்லி கணவன் அதை மறுத்து இருக்கிறான்? வியாபாரம் ஜோராக நடைபெறுகிறது. எனக்கு தெரிந்த உறவுக்கார பெண்மணி ஒருவரும் இப்படித்தான். கோயில் கோயிலாக சுற்றி வருகிறார். ஆன்மீக இதழ்கள் ஒன்று விடாமல் படிப்பார். அதில் வரும் பரிகாரங்களை எல்லாம் செய்து பார்ப்பார். தன்னோடு விடாமல் அதை தன் சுற்று வட்டத்திலும் செய்ய சொல்லி பரப்புவார். இது போன்ற பெண்மணிகள் வியாபாரிகளிடம் சிக்கிக் கொண்டால் அவர்களுக்கு அட்சயப் பாத்திரம் மாதிரி. கறக்கும் வரை கறந்துவிடுவார்கள்.
பொதுவாகவே நம்மவர்கள் அனைவருக்குமே வாழ்க்கை சந்தோஷமாகவே கழிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. சின்ன சங்கடங்கள், கஷ்டங்கள் எதுவும் இருக்கவே கூடாது என்று எண்ணுகிறோம். எல்லாம் நன்மையாகவே நடைபெறவேண்டும். நினைத்த படிப்பு, நினைத்த வேலை, நினைத்த பெண், நினைத்தபடி வீடு, கார், தோட்டம், துறவு, வெளிநாட்டு வாய்ப்பு என்று ஆயிரம் ஆசைகள். போதும் போதாதற்கு திருமணம் தள்ளிப்போதல், குழந்தைப் பாக்கியம் தள்ளிப் போதல் போன்றவை நமக்கு பெரும் தொல்லைகள்.
பெண்களுக்கு 20லிருந்து 25க்குள் திருமணம் முடிந்துவிடவேண்டும். அதற்கும் மேல் என்றால் எல்லோரும் கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏன்? இப்படி தட்டிப் போகுது? ஜாதகம் பார்த்தீர்களா? பரிகாரம் செய்தீர்களா? என்று அதனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் 22 வயதுக்குள் திருமணம் முடித்துவிட முயற்சிக்கின்றார்கள்.
ஆண்களுக்கு சொல்லவே வேண்டாம். அவன் செட் நண்பர்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் திருமணம் ஆகிப் போக அவனுக்கு அடுத்த செட் நண்பர்களுக்கு கல்யாணம் நடக்க ஆரம்பிக்கையில் கவலை ஆரம்பிக்கிறது. முன்னே முடியும் கொட்டிப் போகையில் சைட் அடித்த பெண்கள் கூட தள்ளிப் போகையில் எப்படா கல்யாணம் என்று ஏக்கப்படுகிறது மனம்.
திருமணம் ஆகி முதல் வருடத்தில் குழந்தை பிறக்கவில்லை என்றால் அது என்னவோ பெருங்குற்றம் போல கருதுகின்றது நமது சமூகம். என்னடா எதுவும் விசேசம் இல்லையா? டாக்டர் கிட்டே பார்த்தீங்களா? கோயில் குளமெல்லாம் போய்வந்தீங்களா? பிதுர் தோஷம் எதுவும் இருக்கா ஜாதகத்துல? ராமேஸ்வரம் போய் தில தர்ப்பணம் பண்ணீங்களா? எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் இருக்கார் போய் பார்க்கிறீங்களா? இப்படி ஆரம்பித்து விடுகிறார்கள்?
மூலைக்கு மூலை இஞ்சினியரிங்க் கல்லூரிகள் முளைத்துவிட 800, 900 மார்க் எடுத்தவர்கள் கூட காசு கொடுத்து ஏதோ ஒரு டிகிரி இஞ்சினியரிங்கில் வாங்கி விட வேலைவாய்ப்புக்கு திண்டாட்டம்? படு மட்டமாக ஏதோ பெயருக்கு தேறி இருந்தால் எவன் வேலை கொடுப்பான்? அது என்னமோ எல்லோருக்குமே இஞ்சினியரிங் ஆகிவிட வேண்டும் என்று ஆசை! அது மட்டுமில்லாமல் பெரிய கம்பெனிகளில் வேலை வேண்டும். வெளிநாட்டு வேலை வேண்டும்! இப்படி ஒரு பட்டாளமே காத்து நிற்கிறது.
இவர்கள் எல்லோரையுமே குறிவைத்து நிற்கிறது ஆன்மீக வியாபார கும்பல். உனக்கு இந்த ராசி சரியில்லை! இந்தக் கல்லை போட்டுக்கொள். இந்த கலர் சட்டையை அணிந்து கொள்! இந்த எந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை செய். இந்த கோயிலுக்கு போய் வா! இந்த பரிகாரம் அந்த பரிகாரம் என்று ஆளுக்கு தகுந்தபடி வசூலித்து விடுகிறார்கள்.
இந்த ஆன்மீக வியாபாரிகளை வகைபடுத்தினால் சாதாரண கிளி ஜோஸ்யனில் ஆரம்பித்து ஸ்டார் ஓட்டலில் தங்கி டீவிக்களில் மார்க்கெட்டிங் பண்ணுபவர்கள் வரை இருக்கிறார்கள். பொத்தாம் பொதுவாக இவர்கள் சொல்லுவது ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் போதும் இவர்கள்தான் தெய்வம் அவர்களுக்கு.
இப்போதெல்லாம் ஆலயங்களுக்கு மக்களை வரவழைக்கக் கூட இப்படி வியாபாரம் செய்யவேண்டிய சூழல் வந்துவிட்டது. இங்கு வந்தால் வீடு கட்டலாம். இங்கு வந்தால் திருமணம் நடக்கும். இங்கு வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். இங்கு நோய் போகும். இப்படி விளம்பரம் செய்தால்தான் கூட்டமே வருகிறது.
புராதன ஆலயங்களில் இப்படி சில பரிகார ஸ்தலங்கள் உண்டுதான். புராணங்கள் உண்டுதான். ஆனால் எல்லோருக்கும் எல்லாம் நடந்துவிட்டால் அப்புறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்?
பிழைக்கவே மாட்டான் என்று நினைக்கிறவன் எழுந்துவிடுகிறான்? நன்றாக இருக்கிறவன் தீடிரென்று இறந்து போகிறான். இதெல்லாம் அப்புறம் நடக்குமா?
கடவுள் வழிபாடு என்பது நமது மனதை ஒருமுனைப் படுத்தி தியானத்தில் ஈடுபட்டு எல்லாம் நீயே என்று இறைவனை சரணடைவதுதான். அதைவிட்டு இதைக் கொடு! அதைக் கொடு! என்று கேட்டு இதை நீ கொடுத்தால் இதை நான் செய்கிறேன் என்பதெல்லாம் வியாபாரமே ஒழிய பக்தி அல்ல.
இப்படி சொல்லப்படும் பரிகாரங்கள் பல செய்தும் பலன் கிடைக்காமல் போனால் ஒர் விரக்தி ஏற்படுகின்றது. சே… இந்த கடவுளை எவ்வளவு பூஜித்தாலும் சோதனைதான் தருகிறான்! இனி எதற்கு இவனை வழிபட வேண்டும்? என்ற நிலைக்கு ஒருவன் தள்ளப்படுகிறான். அதுவரை தினமும் திருநீறு பூசி கோவிலுக்கு சென்று வருபவன் விரக்தியில் கோயில் இருக்கும் பாதை வழிகூட செல்ல மறுக்கிறான். அப்போதுதான் பிற மத வியாபாரிகள் உள்ளே நுழைகிறார்கள்.
உங்கள் கடவுளை நம்பினாய்? எதாவது நன்மை நடந்ததா? என் மதத்தில் சேர்! எல்லாம் நல்லதே நடக்கும் என்று மூளைச்சலவை செய்பவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். ஏற்கனவே பலவித பரிகாரங்கள் செய்த மனசு என்ன நினைக்கும் சரி இதையும் செய்து பார்ப்போமே என்று வியாபாரிகளோடுதானே செல்லும்.
அப்படிச் செல்லும் போது அங்கு ஒரு மனதை மயக்கும் ஹிப்னாடிசம் செய்யப்படுகிறது. ஏற்கனவே விரக்தியில் மனம் நொந்து இருப்பவர்களை ஆழ்நிலை உறக்கத்தில் ஆழ்த்தி மனதை திருப்பி அவர்கள் துயரம் விலகியதை போல காண்பிக்கின்றார்கள். இன்னும் சொல்லுவதென்றால் சந்திரமுகி படத்தில் ரஜினி ஜோதிகாவின் பேயை விரட்டினார் அல்லவா? அதில் ரஜினி தீயில் பாய்ந்ததும் ஜோதிகாவுக்கு நிலை சரியாகும்.
அதுபோலவேத்தான் இங்கும் செய்து காண்பிக்கப்படுகின்றது. போலியான ஒருத் தோற்றம். உடனே இந்த கடவுள் நல்லவர்! நம்ம கடவுள் கெட்டவர் என்ற நினைக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் மதம் மாறுகின்றனர். வெளிநாட்டுப் பணத்தில் நிறைய முழுங்கிவிட்டு சில்லறையை வீசும் வியாபாரிகளிடம் விலைபோகின்றனர்.
இதெல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான்! மீண்டும் அவனுக்கு கஷ்டமே வராதா? வரும்! அப்போது தாய் மதத்திற்கு திரும்பவும் முடியாமல் இருக்கும் மதத்தினை தொடரவும் முடியாமல் ரெண்டுங்கெட்டானாய் பலர் இருப்பர்.
இது பலருக்கும் முதலில் புரிவதில்லை!
யாராய் இருந்தாலும் ஊழ்வினை என்ற ஒன்று இருக்கிறது! அது உறுத்துவந்து ஊட்டும் என்பதும் உண்மை. என் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன். விதியை மதியால் வெல்லலாம்! அதே சமயம் விதிப்படியும் நடந்தே தீரும். இதை நான் எழுதிய ஒரு கதையில் கூட சொல்லியிருக்கிறேன்.
அப்படி என்றால் அவர்களுக்கு மட்டும் நடக்கிறதே எனக்கு நடக்கவில்லையே என்று சொல்லாதீர்கள். ஒரு முகமாக ஒருவனை நம்புங்கள்! உங்கள் முறை வரும்போது நிறைவேறும். இதைத்தான் சொல்ல முடியும்.
ஈசனே கூட பிரம்படி வாங்கினார்! சுடுகாட்டு சாம்பலை பூசி அலைந்தார்.
இராமன் மனித அவதாரம் எடுத்து மனைவியைப் பிரிந்து நாட்டை இழந்து பல்வேறு துன்பங்களை அடைந்தார்.
கிருஷ்ணரும் பல்வேறு சோதனைகளை அடைந்தார்.
சோதனைகள் இல்லாமல் வாழ்க்கையில்லை! அந்த சோதனைகளை நாம் எப்படி கடக்கிறோம் என்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது. எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் நாம் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதான் ஆகவேண்டும். செய்கின்ற தவறுகளை எல்லாம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் நம் பாவம் தொலைந்து போகுமா? தவறு என்றால் அதற்கு தண்டனை கண்டிப்பாக உண்டு. பரிகாரங்களால் அது கொஞ்சம் தள்ளிப் போகலாம். அல்லது கொஞ்சம் குறையலாமே தவிர முழுவதும் சரியாகாது.
இப்புவியில் மனிதப்பிறவி பெரிது. அதை இந்தப் பிறவியில் நல்லமுறையில் பயன்படுத்தினால் பிறவியில்லா பெருநிலை கிடைக்கும். அதைவிடுத்து தீயவழிகளில் செலுத்தி பிறர் மீது பொறாமை கொண்டால் தீமைதான் கிடைக்கும்.
எல்லாம் நானே! எது நடந்தாலும் அதற்கு காரணம் நானே என்றார் கீதையில் கிருஷ்ணர்.
இதை உணர்ந்து, மதங்களை விட மனிதம் மேல் என்பதைப் புரிந்து கொண்டாலே மதத்துக்கு மதம் புற்றீசல் போல் பெருகிவரும் ஆன்மீக வியாபாரிகள் காணாமல் போவிடுவார்கள், ஆன்மிக வியாபாரங்கள் பெருகாது.
Leave a reply
You must be logged in to post a comment.