வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
————————————————–
மக்காவிலிருந்து ஒரு பெரும் படை மதினாவை நோக்கி வருகிறது என்பதை அறிந்து கொண்ட நபி அவர்கள் ஊருக்குள் அவர்கள் வராமல் தடுக்க வேண்டும் என்று தன் மக்களிடம் சொன்னதால், 313 பேர்களைக் கொண்ட ஒரு சிறிய இஸ்லாமியப் படை மதினாவிற்கு வெளியே பத்ரு என்னும் இடத்தில் காத்திருந்தது.
இதுவரை ஆன்மீக தலைவராக இருந்த முகமது நபி அவர்கள் இன்று தளபதியாக மாறி இருந்தார்கள். வருகின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட படையை 313 பேர்களைக் கொண்டு சமாளிக்க வேண்டும் என வியூகம் வகுத்தார்கள்.
எதிரிகளும் அங்கு வந்து சேர்ந்தார்கள். பத்ருவின் ஒரு பகுதியில் இருந்த குன்றுகளின் மீது அந்தப் படை கூடாரங்கள் அமைத்தது. முதல் நாள் லேசான மழை பொழிந்ததால் தண்ணீர் எல்லாம் பள்ளமான பகுதியை நோக்கி ஓடி அங்கே சேறும் சகதியுமாக இருந்தது.
அங்கிருந்த நீரூற்றுகளை மூடிவிட்டார்கள். நீரூற்று இருக்கும் என்று நம்பி தண்ணீர் தாகத்துடன் வந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அது இருந்தது. அதோடு மனதளவில் சோர்வையும் அவர்களுக்கு கொடுத்தது.
இவர்களுக்கு எதிர்ப்புறமாக அவர்கள் கூடாரங்களை அமைத்தார்கள் மறுநாள் காலையில் போர் துவங்கும். இவர்கள் இறைவனிடம் பிரார்த்தவர்களாக இருந்தார்கள். எதிரிகளோ ஆட்டம் பாட்டம் மது மாது என்று கூத்தாடினார்கள்.
மறுநாள் இரண்டு படைகளும் போருக்குத் தயாராக எதிர் எதிராக நின்றது. சுமையா, யாசீரை கொன்றவர்களும் பிலால் அவர்களை கொடுமைப்படுத்தியவர்களும் அங்கே முன்பாக நின்றார்கள்.
நபிகளார் தனது கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். “இறைவா எங்களுக்கு உதவி செய்வாயாக. நீ எங்களுக்கு வாக்களித்ததை வழங்கு. நாங்கள் அழிக்கப்பட்டு விட்டோம் என்றால் உன்னை வணங்குவதற்கு இந்த பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள். எங்களுக்கு உதவி செய்வாயாக” என்று மன்றாடினார்கள்.
எதிரிகளுக்கு இது ஒரு சம்பவம். ஆனால் முஸ்லிம்களுக்கு இது வாழ்வா சாவா என்ற போராட்டம். கடும் ஆயுதங்களுடன் பெரும் படையுடன் நிற்பவர்களைப் பார்த்து இந்த 313 பேரும் பயப்படவில்லை. எங்களுடன் இறைவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
அப்பொழுதெல்லாம் போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இருவர் மூலவராக சண்டையிடுவார்கள் பிறகு தான் போரை ஆரம்பிப்பார்கள் அப்படி முஸ்லிம்கள் சார்பாக.
நபிகளாரின் சிறிய தந்தை ஹம்சா (ரலி) தம்பி அலி(ரலி) உபைதா (ரலி) ஆகிய மூவரும் களமிறங்கினார்கள்.
எதிரிகளின் சார்பாக உத்துபா, வலீத், ஷைபா ஆகிய மூவரும் களமிறங்கினார்கள்.
அன்றைக்கு ரமலான் மாதம் பிறை 17 ஆக இருந்தது. ஆக்ரோஷமாக நடந்த அந்த சிறிய சண்டையில் எதிரிகளின் மூன்று பேரும் வீழ்த்தப்பட்டார்கள்.
அதைத்தொடர்ந்து கடுமையாக போர் மூண்டது. ‘சிறிய கூட்டம் தானே சீக்கிரம் இவர்களை எல்லாம் காலி செய்து விடலாம்’ என்று நினைத்தவர்களுக்கு 313 பேரும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள்.
எதிரிகள் தாங்கள் இது வரை சந்தித்திறாத போர் வீரர்களை அன்று கண்டார்கள். தங்கள் வீடுகளையும் தங்கள் சொந்தங்களையும் பிரித்து சொத்துக்களை அபகரித்துக் கொண்டு தங்களுடைய நண்பர்களை கொன்று குவித்த அந்த எதிரிகளை சிங்கம் போல் சீறிப்பாய்ந்து சின்னா பின்னம் ஆக்கினார்கள்.
ஒரு கட்டத்தில் எதிரிகள் பின்வாங்கி ஓட ஆரம்பித்தார்கள். போர் முறைகளில் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முகமது நபி அவர்கள் ஏற்கனவே முன்னெச்சரிக்கை செய்திருந்தார்கள். பின்னோக்கி ஓடுபவர்களை துரத்தி சென்று கொல்லக்கூடாது. பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என்று யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பது எல்லாம் சட்டமாக ஆக்கி இருந்தார்கள். ஆகவே பின்னோக்கி ஓடுபவர்களை விட்டுவிட்டு சரணடைந்தவர்களை கைதிகளாக பிடித்தார்கள்.
அந்தப் போரில் எதிரிகளின் முக்கியமான தலைவர்கள் அன்று கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட 70 பேர் கொல்லப்பட்டார்கள் 70 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
முஸ்லிம்களின் சார்பாக 14 பேர் இறந்திருந்தார்கள்.
மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்தது இறைவனுக்கு நன்றி சொல்லிய வண்ணம் மதினாவிற்குள் நுழைந்தார்கள்.
கைது செய்யப்பட்ட எதிரிகள் அங்கே நிறுத்தப்பட்டார்கள். ‘இவர்களை என்ன செய்வது?’ என்று நபிகள் தோழர்களிடம் கேட்டபோது. ‘இவர்களை விட்டால் இவர்கள் ஊருக்குள் சென்று நமக்கு எதிராக இதைவிட பெரிய பலத்துடன் வருவார்கள். ஆகவே இவர்களைக் கொன்று விட வேண்டும்’. என்று சிலர் சொன்னார்கள்.
சிலரோ ‘இவர்களிடம் பெரும் தொகைகளை ஈடாகப் பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்யலாம்’ என்று சொன்னார்கள்.
நபியவர்கள் எதிரிகளின் முன்பாக நின்று ‘உங்களில் யாருக்கெல்லாம் எழுதப் படிக்கத் தெரியுமோ அவர்களெல்லாம் எங்களது பிள்ளைகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டு நீங்கள் விடுதலையாகிக் கொள்ளலாம்’ என்றார்கள்.
எதிரிகளை விட பொருளாதாரத்தை விட கல்விதான் முக்கியம் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களுக்கு ஏத்தி வைத்தார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
மதினாவில் நடந்த இந்தப் போரை, இது ஏதோ இரண்டு ஊர்களுக்குள் நடக்கக்கூடிய சண்டை, இரண்டு குழுக்கள் நடத்திய சண்டை என்றுதான் நினைத்தன ரோம் மற்றும் பாரசீகப் பேரரசுகள். ஆனால் இவர்கள் தான் ரோம பாரசீகப் பேரரசுகளை ஆளப் போகிறார்கள் என்பதை அவர்கள் கனவிலும் நினைத்து இருக்க மாட்டார்கள் .
முஹம்மது நபி (ஸல் )அவர்களுக்கும் இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரியாது. போர் பற்றியோ ஆட்சி முறை பற்றியோ இதற்கு முன் பேசியதும் இல்லை… அதைப் பற்றி சிந்தித்ததும் இல்லை.
‘எதிரி தான் நாம் எந்த ஆயுதத்தை தூக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு.
அப்படிதான் நடந்தது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.