(அப்துல் அஹத் நினைவு உலகளாவிய குறு நாவல் போட்டி-2024-ஐ முன்வைத்து)
துரை. அறிவழகன்
(முதல் பரிசு பெற்ற எழுத்தாளர்)
“உணர்ச்சிதான் கலையின் அடிப்படை. உணர்ச்சிப் பெருக்கை ஒதுக்கித் தள்ளிய எழுத்துக்கள் வறட்டுக் கட்டுரைத்தனமாகவே காட்சி பெறுகிறது. உணர்ச்சி இன்றி கலையும் இல்லை, வாழ்வும் இல்லை” என்பார் எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்கள்.
“கேலக்ஸி பதிப்பகம் நடத்திய, ‘அப்துல் அஹத் நினைவு முதலாமாண்டு உலகளாவிய குறுநாவல் போட்டி-2024’ என்ற அறிவிப்பைப் பார்த்த போது எனக்குள் இனம்புரியாத பரவசம் தொற்றிக் கொண்டுவிட்டது. முக்கியமாக எனக்கு உணர்வெழுச்சியைக் கொடுத்தது போட்டி அறிவிப்பின் முதல் விதிமுறை. ‘அப்துல் அஹத் ‘ என்ற நேர்மறை எண்ணம் கொண்ட கதாபாத்திரம் கதைக்களனில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
கற்பனாவாத எழுத்துக்கள் வெகு தூரம் பயணித்து செய்யக்கூடிய அற்புதங்களை யதார்த்தவாத எழுத்துக்கள் நிகழ்த்திவிட முடியாது என்பது எனது எண்ணம். உணர்ச்சிகளுக்குள் தொய்ந்து, நிகழ் தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக எழுதப்படும் எழுத்துக்கள் தொடும் சிகரம் அதிகம்.
உணர்வோட்டத்தை வெறும் தகவல்களாக புறவயமாக சொல்லிச் சொல்லாமல், அகவயமான உணர்வுகளை முக்கியப்படுத்தி, ஆழ்மன ஈடுபாட்டுடன் வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ள எழுத்துக்கள் வெற்றிகரமான எழுத்துக்களாக அமையும் என்பதும் எனது நம்பிக்கை.
இப்போட்டி நிகழ்வுக்கு நான் அனுப்பிய ‘தொன்ம அறம்’ குறுநாவல் எனது சொந்த வாழ்வின் அனுபவப் பதிவேயாகும். சிறிதளவு கற்பனை கலந்த புனைவு இக்குறுநாவல்.
2003-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக மலேசியா சென்றேன். 2018-ஆம் ஆண்டு இறுதியில் மூளை பக்கவாதம் காரணமாக நாடு திரும்பினேன்.
“தொன்ம அறம்” குறுநாவலின் மையப் பாத்திரமாக கட்டமைக்கப்பட்டுள்ள ‘ஒண்டிவீரன்’ பாத்திரமாக இடம்பெற்றிருப்பது என்னுடைய சொந்த அகம் தான். நான் நோயால் அவதியுற்ற நாட்களில் மலேசியா நிலத்தில் எனக்குத் துணை நின்றவன் ‘சாந்தி ராம் தாஸ்’ எனும் வங்கதேசத்து நண்பன். அவனே இக்குறுநாவலில் ‘அப்துல் அஹத்’ எனும் பாத்திரமாக உருப்பெற்றுள்ளான். எனவே இப்பாத்திரத்தை வலிந்து திணிக்க வேண்டிய தேவை எதுவும் எனக்கு இருக்கவில்லை. இந்த உண்மையின் வலுதான் எனது நாவலை வெற்றிபெறச் செய்திருக்க வேண்டும் என முழுமையாக நம்புகிறேன்.
நம்பிக்கை எனும் எண்ண அடர்த்தி சிதைந்து முற்றிலும் செயலிழந்த கணம் என்பதை என் வாழ்வில் நான் சந்தித்தது அந்நிய தேசத்தில்; வாழ்வாதாரம் தேடி நெருக்கடி மிகுந்த காலத்தில் பயணித்த மலேசியா மண்ணில். சொந்தங்கள் பால்ய நாட்களிலும், வளரிளம் பருவத்திலும் உடன் பயணித்த நண்பர்கள் என எவரும் அருகில் இல்லாமல், பாஷைகள் புரியாத நாட்டில் ஒரு குருடனின் கைத்தடியாய் நடுங்கி நின்ற காலம் அது; பாதுகாப்பு கொடுக்கும் வீடு நோக்கி, தாய்நாடு நோக்கி பயணிப்பது என்பது உடனடியாக சாத்தியப்படாத வெளிநாட்டு வாழ்க்கை. கடல் கடந்த அந்நிய தேசத்தில் சிறகுகள் பொசுங்கிய பறவையின் துயர நிலைதான் உடல்நலன் சீர்கெட்டுப் போவது. அந்த வேதனையின் வலி அடர்த்தியை அனுபவித்த நாட்கள் இப்பொழுதும் நினைவில் நின்று என் அகத்தை உறையச் செய்கின்றன.
நோய்வாய்ப்பட்டு இருந்த நாட்களின் நேர்மறை எண்ணங்களுக்காகவும், வாழ்வின் மீதான நம்பிக்கை கொள்வதற்காகவும், நாடு திரும்புவதற்கான விசா ஏற்பாடு கிடைப்பதற்காகவும் அகம் குவிந்து இறைவனை நோக்கி உருகி இறையோடு இறையாகக் கலந்து நின்ற நாட்கள் உடைமர முள்ளாக இப்பொழுதும் என் நினைவு மண்டலத்தில் தைத்து நிற்கிறது.
துயரத்தின் இருள் என்மீது படர்ந்த போது ஞான அறத்தைத் தன் செயல்கள் வழி எனக்குப் போதித்தவன் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சாந்தி ராம் தாஸ் எனும் உன்னத நண்பன்தான்.
இயல்பு வாழ்க்கை முற்றிலும் சிதைந்து நடமாட இயலாமல் இருந்த இருண்மை நாட்களில் சாந்தி ராம் தாஸ் செய்த உதவிகள் என்பது மகத்தானவைகள். பிரதிபலன் எதிர்பார்க்க இயலாத அக்காலகட்டத்தில் மனித நேயம் மிக்க அந்த பங்களாதேஷத்து நண்பன் செய்த உதவியால் மட்டுமே என்னால் நாடு திரும்பி இன்று குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் நிலை அமைந்தது.
பணி செய்ய முடியாமல் அறையில் உள்நோயாளியாக தவித்திருந்த நிலையில் வார்த்தைகளில் விவரிக்க முடியாத உதவிகள் செய்த நண்பன்தான் சாந்தி ராம் தாஸ். தனது நாட்டை சேர்ந்த சக இஸ்லாமிய நண்பர்கள் உதவியுடன் என்னையும் என் தேவைகளையும் அவன்தான் கவனித்துக் கொண்டான். அவன் உத்தரவின் பேரில் இருபத்தி நான்கு மணி நேரமும் என் அருகிலேயே இருந்த அந்த நண்பர்களின் ஒத்தாசையால்தான் என்னால் என் இயற்கை உபாதைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.
2018-ன் செப்டம்பர் மாதத்தில் அந்த நண்பனுக்குத் தெரிந்த ஏஜெண்ட் மூலமாகத்தான் பொதுமன்னிப்பு பெற்று நான் நாடு திரும்பினேன். இத்தகைய அனைத்து முயற்சிக்கும் அவன்தான் பொருளுதவி செய்தான்.
இன்றும் சிகிச்சையை தொடர்ந்தபடி குடும்பத்துடன் சேர்ந்திருப்பதற்கான மகத்தான உதவி அவன் மூலம்தான் எனக்குக் கிடைக்கச் செய்தார் இறைவன். நாடு திரும்பி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் பூரண குணமடையாவிட்டாலும் வேறு வகையில் புத்தொளி பாய்ந்த செயல்பாட்டுடன் வாழ்வு மகிழ்வுடன் பயணிக்க அந்த நண்பன்தான் காரணம். பால்ய காலத்தில் இருந்து எனக்குள் கனலாக எரிந்து கொண்டிருந்த இலக்கிய செயல்பாட்டுடன் இன்று பூரண அமைதியாக வாழ்வின் உண்மை பக்கங்களை உணர்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறேன்.
மொழியாலும், தேசத்தாலும் வேறுபட்டு இருந்தாலும் தன் அறவுணர்வால் எனக்கு புத்துயிர் கொடுத்து என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிய சாந்தி ராம் தாஸு”க்கு என் அகம் குவிந்த நன்றிகள் இரத்தத்துள் நிறைந்து இருந்தாலும், வெளியுலகத்திற்கு தெரியும் வகையில் சொல்லிக் கொள்ள இக்குறுநாவல் மூலம் ஒரு வாய்ப்பு அமைந்ததில் பெரும் மகிழ்வு.
குறுநாவல் என்பது ஒரு புதிய வடிவம். நாவலாக விரிந்த தளத்திலோ, சிறுகதையாக குறுகிய தளத்திலோ வடிவம் கொண்டுவிடாமல் வாசிப்புக்கு ஏற்ற, அதே சமயம் கதைச் சிறகுகள் கச்சிதமாக விரிந்து நிற்கும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு வடிவம். இவ்வடிவமைப்பை போட்டிக்கான வடிவமாகத் தேர்ந்தெடுத்த கேலக்ஸி பதிப்பகத்தாரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இக்காலகட்டத்தில் எத்தனையோ போட்டி நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கேலக்ஸி பதிப்பகத்தார் ஒருங்கிணைத்த இப்போட்டி நிகழ்வின் தனித்த முத்திரை எழுத்தாளர்களுடன் அவர்களின் தொடர்ந்து இணைந்திருத்தல் தான். ஒவ்வொரு நகர்வையும் அவர்கள் தெரியப்படுத்திக் கொண்டே இருந்த பண்பு பாராட்டுக்குரியது. அதுமட்டும் இல்லாமல் நடுவர்களின் கருத்தோட்டங்களையும் தெரிந்து கொள்ளும்படி செய்தது எழுத்தாளர்கள் தங்களை செழுமைப்படுத்திக் கொள்ள உதவும் வகையில் அமைந்திருந்தது.
இறுதிக்கட்டத் தேவில் இருந்த எட்டுக் கதைகளையும் மதிப்புக்குரிய முதன்மை நடுவர், எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்கள் வாசித்து, அது குறித்த அவரது விரிவான வீடியோப் பதிவினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பகிர்ந்திருந்தார்கள். அதில் ஒரு இடத்தில் ‘மீரான் மைதீன்’ அவர்கள் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு இருப்பார்:
உள்ளடக்கத்தால் வெற்றி பெற்று வடிவமைப்பால் தோற்று நிற்கும் கதைகள்; இன்னொன்று வார்த்தைக் கட்டமைப்பு நீர்த்துப் போகும் நடையோட்டம். இவைகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து கவனத்துடன் செயல்பட உறுதிபூண்டுள்ளேன். என்னை வளர்த்துக் கொள்ள இப்போட்டி நிகழ்வு ஒரு தேர்ந்த பயிற்சிக்களமாக இருந்தது. அந்த வகையில் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
——————————-
கட்டுரையாளர்:
துரை.அறிவழகன்,
கோட்டையூர்,
சிவகங்கை மாவட்டம்.