வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
முகவுரை
மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இதற்கு முன்பாக நடந்த சரித்திரங்கள் சரியாக தெரிந்திருக்க வேண்டும். ஒரு நாட்டுடைய தலைவராக, ஒரு குழுவினுடைய தலைவராக, ஒரு வீட்டினுடைய தலைவராக இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தான் வளர்ந்த, தான் வாழும் முந்தைய தலைமுறையில் நடந்த சம்பவங்களும் சரித்திரங்களும் தெரிந்து இருக்கும் பட்சத்தில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். சரித்திரங்கள் தெரியாமல் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகள் தோல்விகளில்தான் முடியும்.
நான் எழுதும் இந்த தொடர் “மக்கா முதல் மைசூர் வரை”. முகமது நபி முதல் திப்பு சுல்தான் வரை பேச இருக்கிறது. இவர்களுக்கு இடையில் வந்த தலைவர்கள் அவர்கள் ஆட்சி முறைகள் என்று சரித்திரத்தை இந்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லக் கடமைப் பட்டுள்ளேன். காரணம் இந்த தலைமுறை வரலாறுகளைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
மூதாதையர்களின் சரித்திரங்கள் உலக வரலாறுகள் தெரியாமல் வளரும் இளைய சமூகம் அத்தனை ஆரோக்கியமாக இருக்காது. ஆகவேதான் நான் அறிந்து வைத்திருக்கக் கூடிய, நான் படித்த, பார்த்த, பேசிய, உணர்ந்த பல்வேறு விதமான சம்பவங்களை தொகுத்து மிகவும் சுருக்கமாக இந்த வரலாற்று தொடரை இங்கே சமர்ப்பிக்கின்றேன்.
வாசித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.
இனி தொடருக்குள் போவோம்.
******
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளும், சிற்றரசுகளாக இருக்கக்கூடிய அக்கம்பக்கத்து நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். அதற்காக ஊர் ஊராகச் சென்று போர் செய்யும் முறை அன்றைக்கு நிலவியது.
அப்படி மிகப்பெரிய பேரரசுகளாக விளங்கியவர்கள் ரோம பேரரசும் பாரசீகப் பேரரசும் ஆகும். ஐந்தாம் நூற்றாண்டில் இன்றைய அரபு உலகை ரோம பேரரசும் பாரசீக பேரரசும் ஆட்சி செய்தது. பாரசீக பேரரசு இன்றைய சவுதியின் பெரும்பாலான பகுதிகளையும் ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதி என்று மிகப்பெரிய ஒரு நிலப்பரப்பை ஆட்சி செய்தார்கள். மற்ற ஏனைய பகுதிகளை ரோம பேரரசு ஆட்சி செய்தது. ஆனால் இந்தப் பேரரசுகள் மக்காவை மட்டும் கடைசி வரைத் தொடவே இல்லை.
காரணம்…
மக்காவில் வசித்த அன்றைய அரபுகள் மிகவும் மூர்க்கத்தனமான குணம் உடையவர்களாகவும், யாருக்கும் கட்டுப்படாதவர்களாகவும் இருந்தார்கள். ஆகவே தான் பேரரசுகள் கூட அவர்களைத் தொட பயந்தார்கள்.
அப்படிப்பட்ட மக்கள் மத்தியில் மக்காவிலே ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் அப்துல்லா – ஆமினா தம்பதியருக்கு மகனாக பிறக்கிறார் முஹம்மது நபி அவர்கள்.
அன்றைய மக்காவில் மிகவும் பிரசித்தி பெற்ற உயர் ஜாதிக் குலமாகக் கருதக்கூடிய குறைஷி குலத்தில் பிறந்தார்கள். குறிப்பாக மக்காவின் புனிதப் பள்ளியாகக் கருதக்கூடிய காபத்துல்லாவின் நிர்வாகியான அப்துல் முத்தலிப் என்பவரின் பேரன்தான் முஹம்மது நபி அவர்கள்.
உயர்ந்த குலம், செல்வந்தர் என்று இருந்தாலும் தனது சிறு வயதிலேயே தாயையும் தந்தையையும் இழந்த முஹம்மது நபி, உடன்பிறந்தவர்களும் இல்லாத நிலையில் பாட்டனாரின் பாதுகாப்பில் அனாதையாகவே வளர்கிறார்கள். பாட்டனார் இறந்ததற்கு பின்னால்
பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் நபிகளாரை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.
மக்காவில் இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் மிகவும் நல்லவராக, உண்மையாளராக, பிடித்த நபராக முஹம்மது நபி அவர்கள் வளர்கிறார்கள். அன்றைய உலகில் பெருநகரங்களாக மக்காவும் ஷாமும் (சிரியா) விளங்குகிறது. மக்காவிலிருந்து ஷாமிற்கு வாணிபம் செய்பவர்களில் ஒருவராக முஹம்மது நபி அவர்களும் விளங்குகிறார்கள்.
மக்காவிலே மிகப்பெரிய செல்வந்தராக வாணிபக் கூட்டங்களை வைத்திருக்கக்கூடிய கதீஜா (ரலி) அவர்களிடம் வாணிபம் செய்யும் குழுவில் முகமது நபி இருக்கிறார்கள். இவர்களுடைய நேர்மையும் சிறப்பையும் உணர்ந்த கதிஜா நாயகி, இவரைத் திருமணம் செய்கிறார்கள்.
சந்தோசமான அவர்களின் இல்லற வாழ்க்கையில் கிட்டத்தட்ட 40 வயதைத் தொடும்பொழுது அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்தார்கள். அன்றைய மக்காவில் மூட நம்பிக்கையும், தீய பழக்க வழக்கங்களும் மட்டுமின்றி இனவெறி, நிறவெறி, மொழி வெறி என எல்லாமே வேரூன்றி இருந்தது. இதையெல்லாம் கண்டு வருந்தி, அதிலிருந்து விலகி, மற்ற துறவிகளைப் போல வீடு, உறவுகளை துறந்து
மக்காவின் அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு மலைக்குகையில் தவம் இருக்க சென்று விட்டார்கள்.
சிறிது காலம் அங்கே தவமிருந்த நபிகளாரிடம் ஒரு நாள் கடவுளின் செய்திகளை கொண்டு செல்லும் வானவர் என்று சொல்லப்படும் ஜிப்ரில் (அலை) நேரில் வந்து ‘நீங்கள் மக்களிடத்திலேச் சொல்லுங்கள் இறைவனின் பெயர் கூறி ஆரம்பியுங்கள்’ என்று துறவறம் மேற்கொண்டிருந்த அவர்களை மக்களிடத்தில் செல்லுமாறு மீண்டும் ஊருக்குள் அனுப்பி வைத்தார்.
ஊருக்குள் வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு குன்றின் மீது ஏறி மக்களை எல்லாம் அழைத்தார்கள். அவர் கூப்பிட்ட குரலுக்கு மக்களெல்லாம் ஓடி வந்தார்கள். அவர்களிடம்…
“அந்தப் பாறைக்கு பின்புறம் நம்மை தாக்குவதற்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா?” என்று வினவினார்கள்.
உடனே மக்களும் “கண்டிப்பாக நாங்கள் நம்புவோம். ஏனென்றால் நீங்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் பேச மாட்டீர்கள்” என்றார்கள். அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார்கள் முஹம்மது நபி அவர்கள் மீது.
“ஆம் நான் இறைவனின் தூதராக இங்கே வந்திருக்கின்றேன். நீங்கள் வணங்கக்கூடிய இறைவன் ஒருவனே நாம் அனைவரும் ஒரு தந்தையின் பிள்ளைகள்” என்று தனது மூதாதையர்களின் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தவர்களிடம், ஏற்றத்தாழ்வுகளை கடைப்பிடித்தவர்களிடம், ‘நாம் அனைவரும் ஒரு தந்தையின் பிள்ளைகள்… உங்களுடைய சிலை வணக்கங்களை விட்டு விடுங்கள்’ என்று முகமது நபி அவர்கள் சொன்னதும் கடும் கோபம் கொண்ட குறைஷிகள் அவரைத் தாக்குவதற்கு எத்தனித்தார்கள்.
பொதுவாக மக்காவிலே ஒரு பாதுகாப்பு முறையை பின்பற்றினார்கள். ஒரு கூட்டத்தினுடைய ஒருவரை இன்னொரு கூட்டத்தார் கொலை செய்துவிட்டால் எத்தனை தலைமுறை கழிந்தாலும் பலிக்குப் பலி வாங்கி விடுவார்கள். இது உள்ளூர் கூட்டத்தை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு முறைகளாக இருந்தது. அதோடு காபத்துல்லாஹ்வின் பாதுகாவலரின் பேரன் என்பதாலும் முஹம்மது நபியின் மீது தாக்குதல் நடத்த சற்றுத் தயங்கினார்கள்.
ஆனால் இந்த சட்ட திட்டங்கள் எல்லாம் அங்கு வெளியூர்களில் இருந்து தொழில் செய்ய வந்தவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் அங்கு இல்லை.
அடுத்ததாக அடிமை வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். பெரும்பாலும் இவர்கள் கருப்பு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களை வெளியூர்களில் இருந்து விலைக்கு வாங்கி வந்தார்களாகவோ அல்லது போர்களில் பிடிப்பட்ட கைதிகளாகளோ இருப்பார்கள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக அடிமையாகவே வாழ்வார்கள். இவர்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. முதலாளி என்ன வேணாலும் பண்ணிக் கொள்ளலாம். தேவை இல்லை என்றால் பிறருக்கு விற்றும் விடலாம்.
இப்படிப்பட்ட அந்த மக்களைத்தான் முகமது நபி அவர்கள் வென்றெடுத்தார்கள். காலப்போக்கில் மக்காவிலே இந்த கொள்கையிலே அதிகமான இளைஞர்களும் வெளியூர்களில் இருந்து வந்தவர்களும் அடிமைகளும் சேரத் துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் குறைஷி தலைவர்களுக்கு இது பெரும் சவாலாக இருந்தது. ஆகவே ஒரு நாள் முஹம்மது நபியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அங்கே அவர்கள் வைத்த கோரிக்கையின் சாராம்சம் என்னவென்றால்… “முகமது நபியாகிய நீங்கள் உங்களது பிரச்சாரத்தைத் தாராளமாக மேற்கொள்ளலாம். ஆனால் எங்களையும் அவர்களையும் ஒன்றாக கருதுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என்றார்கள்.
முகமது நபி அவர்களோ “ஒரே கடவுள் என்னும் கொள்கையை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்களது விருப்பம் ஆனால் ஏற்றத் தாழ்வுகளை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது” என்று கூறி விட்டார்கள். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சிறிது காலத்திலேயே இனவெறி, நிறவெறி, மொழிவெறி என்று இருந்த அத்தனை கொள்கைகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எரித்தார்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.
Leave a reply
You must be logged in to post a comment.