கேலக்ஸியின் கலை இலக்கியக் குழும மாதாந்திர நிகழ்வு, கதைப்போமா – சனி (12/10/2024) – அபுதாபி
————————————————————
கேலக்ஸி மாதந்திரக் கதைப்போமா நிகழ்வில் முதல் ஆறு பேர் பேசியது, புத்தகங்களின் அட்டைப்படம் வெளியிட்டது, விருந்திருனர்களின் சிறப்புரை என எல்லாவற்றையும் இதற்கு முந்தைய பகிர்வில் எழுதியிருந்தேன். அதன் பின் மேடை மீண்டும் கதைகள் பேச ஆரம்பித்தது.

தம்பி அயாஸ் பிலால் அவர்கள் எழுத்தாளர் ஜெசிலா அவர்களின் நம்நாயகத்தில் இருந்து இரண்டு கதைகளைப் பற்றிப் பேசினார். சென்ற முறை கன்னிப் பேச்சு என்றாலும் கண்ணீர் வந்து விடுமோ என்று எண்ணுமளவிற்கு குமுறலுடன் பேசியவர், இந்த முறை மிகப் பொறுமையாக, மேடைப் பேச்சில் பயப்படுமளவிற்கு எதுவுமில்லை மைக்கின் முன்னால் நின்றால் குரல் கணீரென ஒலிக்கும், கண்ணீரெல்லாம் விலகி ஓடும் என அடித்து ஆடினார். நபி அவர்கள் அறுபத்து வயது வரை வாழ்ந்தார்கள் என்பதால் இதில் அறுபத்து மூன்று கதை இருக்கு என்றவர், எப்போதும் அல்லா துணை என்னும் கதையைப் பற்றி பேசும் போது பயணக் களைப்பில் உறங்கும் நபியை எதிரிப்படையின் கௌரத் (பேர் சரியான்னு தெரியலை) வாளால் குத்த வரும் போது நபி கண் விழித்ததும், உங்களை இப்போ யார் காப்பாற்றுவார் எனக் கௌரத் கேட்கிறார். என்னைப் படைத்த இறைவன் காப்பாற்றுவார் என்று நபி சொன்னதும் கௌரத் பயத்தில் வாளைக் கீழே போட்டுவிட, அதை நபி எடுத்துக் கொண்டு இப்போ உங்களை யார் காப்பாற்றுவார் எனத் திருப்பி கௌரத்திடம் கேட்டதும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல, உங்களைப் படைத்த இறைவன் காப்பாற்றுவான் எனச் சொல்லி வாளையும் அவரிடம் கொடுத்துவிடுவார் நபி. இதிலிருந்து தெரிவது எந்தப் பிரச்சினை என்றாலும் அல்லாவை நினைத்தால் அவன் காப்பாற்றுவான். அடுத்து ஒரு கதையும் மிகச் சிறப்பாகச் சொல்லி முடித்தார் அயாஸ்.
அடுத்து தெரிசை சிவாவின் தாச்சி சிறுகதைத் தொகுப்பில் இருந்து ‘வீம்பு’ என்னும் சிறுகதையைப் பற்றிப் பேச வந்தார் அண்ணன் பாலாஜி பாஸ்கரன் அவர்கள். இவரெல்லாம் எப்படிப் பேசுவார் என்பது எல்லாருக்கும் தெரியும். அதுவும் சாப்பாடு என்றால் சொல்ல வேண்டும் களி கிண்டுவதையும் குழம்பு வைப்பதையும் மனிதர் ரசிக்க ருசிக்கப் பேசினார். இதில் சிவா உளுந்தங்களி செய்வதையும், வெஞ்சனம் செய்வதையும் விரிவாக எழுதியிருந்ததால் அண்ணன் வாயில் எச்சில் ஊறப் பேசினார். அண்ணியாரிடம் வீட்டில் களி செய்து கொடுத்து விடுங்கள், ரொம்பவே ரசிக்கிறார் என்று சொன்னதற்கு ‘திண்ணுட்டாலும்…’ என அன்பாகச் சொன்னார். தாச்சிக்கு எனத் தனியாக நிகழ்வு நடத்தப்படும் என்றவர், வீம்பு என்னும் சிறுகதையின் தலைப்பு எனக்கு ரொம்ப நெருக்கமானது என்றார். வீம்புக்காக விஷத்தைக் குடிப்பவனுங்களை நாம பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இங்கே அவர் அப்படிப்பட்ட மட்டமானவர்களைப் பற்றியெல்லாம் பேசவில்லை.

ஆத்துல குளிக்கிறதுல ஆரம்பித்து தோட்டத்துக்குள் பயணிப்பதைச் சொல்லி, ஏந்தாத்தா எங்கப்பாவோட பேசமாட்டேங்கிறே எனத் தாத்தாவிடம் கேட்கும் பேரனின் குரலில் வந்து நிறுத்தினார். மேலும் ஒரு பக்கம் உளுந்தங்களி ரெடியாயிருச்சு… வெஞ்சனம் – அவங்க பக்கம் அதுக்குப் பேரு தொடுகறி – செய்யிறதைச் சொன்னாரு பாருங்க… காந்தாரி மிளகாய் எடுத்து, உடைத்த தேங்காயை கருங்கல்லில் இடித்து, அங்கிருக்கும் புளியங்காயை இடித்து, கொஞ்சம் உப்புப் போட்டு… எனச் சொல்லி உர்ர்ருன்னு ஒரு இழு இழுத்தாரு பாருங்க, பார்வையாளர்கள் எல்லாருக்கும் எச்சில் ஊறியது. ஒரு குழி வெட்டி அதில் வாழை இலையைப் பரப்பி, அதில் உளுந்தங்களியைக் கொட்டி, அதன் மீது வெஞ்சனத்தைக் கொட்டி வைத்த தாத்தா, சாப்பிடப் போகும் போது பேரன் மீண்டும் அப்பாவுடன் ஏன் பேசமாட்டேங்கிறே எனக் கேட்டதும் கோபத்தில் மண்வெட்டியால் மண்ணை வெட்டி அதன் மீது போட்டு விட்டுப் போய்விட்டார் என்றவர் கதையை இன்னும் விரிவாகப் பேசினார்.
கரகம் சிறுகதையைப் பற்றிப் பேச வந்த நான் அதை விரிவாகப் பேசினேனா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். இந்தக் கதை கரகாட்டம் ஆடும் இரு பெண்களைப் பற்றிப் பேசும். கொரோனாவுக்குப் பின்னான நாட்களில் கரகாட்டக் கலைஞர்கள் மட்டுமின்றி, திருவிழாக்களை நம்பி வாழும் கலைஞர்களின் வாழ்க்கை ரொம்பவே பாதிக்கப்பட்டது. வயிற்றுப் பாட்டுக்காக சாவு வீட்டில் ஆடும் நிலைக்குப் போன கரகாட்டம் ஆடும் இரு பெண்கள், சாவுக்கு ஆடப்போன இடத்தில் படும் பாடுகளையும், அவர்கள் உடை மாற்ற ஒரு நல்ல இடம் கிடைக்காதது, நாள் முழுவதும் ஆடியதால் உடம்பில் ஏற்படும் வலி, இளசு பெரிசு என்றில்லாமல் ஆண்களின் தொந்தரவு, உடலில் கண்ட இடத்தில் கை வைத்து அழுத்திய வலி, எல்லாம் முடிந்து பணத்துக்கு நிற்கும் போது ஆட்டக்காரியதானே என்ற அலட்சியம், பணம் கொடுக்காமல் அப்பறம் தர்றோம் என்ற பணக்காரத் திமிர் என எல்லாம் தாங்கி வீடு வந்து சேரும் போது ஏன்டி உனக்கு வலிக்குதா என தன்னுடன் வந்த வாணியிடைம் கேட்கும் ஈஸ்வரியிடம் லேசான சிரிப்பில் மழுப்பி சாப்பாடு எடுத்துக்கிட்டு வர்றேங்க்கா என அவள் வீட்டுக்குப் போவாள்.

,ஈஸ்வரி வீட்டுக்குப் போனதும் கண் தெரியாத அம்மா கலைமாமணி பொன்னம்மா, என்னடி கோவில் கொடை முடிஞ்சிருச்சா எனக் கேட்க, எல்லா எழவும் முடிஞ்சிருச்சு எனச் சொல்லிப் படுக்கையில் விழும் போது எவனோ அடி வயிற்றில் கிள்ளியது வலிக்க ஆரம்பிக்கும் என்பதாய் முடியும் கதையை நான் இவ்வளவு விரிவாகச் சொல்லவில்லை. பெண்கள் நிறைய இருந்ததால் இதை விரிவாகச் சொல்ல வேண்டுமா என்ற எண்ணத்தில் உடனே முடித்து விட்டேன் என்றாலும் நல்ல கதை… உண்மையான வலியைப் பேசிய கதை.
அடுத்ததாக கேலக்ஸியின் பேச்சுச் சுரங்கம் சகோதரி எழுத்தாளர் ஜெசிலா அவர்கள் கார்த்திகேயன் என்பவர் எழுதிய ப்ளாங்க் செக் என்னும் கட்டுரைத் தொகுப்புப் பற்றிப் பேசினார். இவரது பேச்சு எப்போதுமே சபையைக் கட்டிப் போடும் என்பதை நாங்கள் அறிவோம். சிறப்பான பார்வை… அவர் பேச ஆரம்பிக்கும் போது இது 32 கட்டுரைகளால் ஆன ஒரு நூல், பணம் திட்டமிடுதல் பற்றி குமுதத்தில் வந்த கட்டுரைகள் இவை. நம்மிடம் ஏதும் திட்டமிடல் இருக்கா… இதில் நம்மளுடைய தேடல், அதன் மூலம் கிடைக்கும் வெற்றி, எல்லாருக்குமே வெற்றியும் தோல்வியும் இருக்கும். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் வழி என்ன என்பதைப் பற்றி பேசியிருப்பதுதான் ப்ளாங்க் செக் என்றார். மேலும் பணத்தை எப்படித் திட்டமிட்டு சேர்க்க வேண்டும் என்பதைச் சொல்வதால் இதை வாசித்த பலர் என்னுடைய இருபத்தைந்து வயதில் இதை வாசித்திருந்தால் கண்டிப்பாக நான் சேர்த்து வைத்திருப்பேன் என்று சொல்கிறார்கள்.
நான் இங்கு வரும்போது ஒரு கிராம் தங்கம் முப்பது திர்ஹாம்தான் இருந்தது. அது நூறு திர்ஹாமைத் தொட்டபோது நான் நினைத்துப் பார்த்தேன்… ச்சை இங்கு வந்ததில் இருந்து ஒரு ஒரு கிராமாகச் சேர்த்திருந்தால் கூட இப்ப எவ்வளவு வந்திருக்கும் என்று யோசித்திருக்கிறேன். அப்பவும் நான் சேமிக்க நினைக்கலை… இன்று முன்னூறு திர்ஹாமாகிப் போச்சு. எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் என்று சொன்னார்.
மேலும் இந்தப் புத்தகத்தில் ஒரு இடத்தில் ரஜினியைப் பற்றிப் பேசுகிறார். அபூர்வ ராகங்கள், பதினாறு வயதினிலே போன்ற படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தாலும் அதை எவ்வளவு பெரிதாகப் பயன்படுத்திக் கொண்டார், அதை நம்மை எப்படிப் பேச வைத்தார் என்றவர் நம்மளுடைய வருமானத்தில் தேவைக்கு அம்பது சதவிகிதமும் கேளிக்கைகளுக்கு முப்பது சதவிகிதமும் சேமிப்புக்கு இருவது சதவிகிதமும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார். பிளாங்க் செக் என்னும் தலைப்புக்கு கீழே உங்கள் பாக்கெட்டுகளை நிரப்பும் புத்தகம் என்று எழுதப்பட்டிருக்கும் என்றார்.

அடுத்ததாக எழுத்தாளர் கந்தர்வன் அவர்களின் ‘தண்ணீர்’ சிறுகதையைப் பற்றிப் பேச வந்த பால்கரசு, இந்தக் கதையை கதையாய் சொல்வதைவிட அது கொடுத்த வலியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ஏனென்றால் இராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் பஞ்சம் உள்ள மாவட்டம், மழை பெய்தாலும் மூன்றே நாளில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு போய்விடும் என ஆரம்பித்தார். வலியை விட கதையையே சொல்லிடுவோம் என்பது போல கதைக்குள் மூழ்கிப் போனார்.
இந்தக் கதை பிளாப்பட்டி என்னும் ஊரில் நடப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த ஊரில் இருக்கும் தண்ணீர் பிரச்சினை பற்றியே இக்கதை பேசியிருக்கிறது. எங்குமே தண்ணீர் கிடைக்கலை என்றாலும் இரயிலில் மட்டும் தண்ணீர் இருக்கிறதே என்று நினைக்கும் மக்கள் இரயிலில் போய் தண்ணீர் பிடிக்கலாம் என முடிவு செய்து அங்கு போய் தண்ணீர் எடுக்கப் போகும் போது அதிகாரி அவர்களை விரட்டி விட, பக்கத்து ஊர்க்காரரான அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களுக்கு அனுமதி கிடைக்க, இரயிலில் தண்ணீர் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அது என்னன்னே தெரியலை இந்தத் தண்ணீர்க்குடம் தூக்கும் பெண்கள் தலையில் தூக்கி வைத்த குடம் இன்னும் கீழே வைக்கப்படவேயில்லை… இன்னும் அவர்களின் தலையில்தான் இருக்கிறது என்றார்.
மேலும் இந்திரா பிடிக்கும் குடம் நிறையாத நிலையில் இரயில் கிளம்ப, அவள் குடம் நிறையட்டும் என நினைக்க, இரயில் வேகமெடுக்க, குதிக்க நினைக்கும் போது வடநாட்டுக்காரி ஒருத்தி அவளை உள்ளே இழுத்துப் போட்டு விடுவாள். அதன்பிறகு அவள் எப்படி ஊருக்குத் திரும்பினாள் என்பதை விரிவாக, சிறப்பாகச் சொல்லி முடித்தார். நேரம் கருதி பாதியைக் குறைத்துக் கொண்டேன் என்று அவர் சொன்னபோது பனிரெண்டு நிமிடங்களைக் கடந்திருந்தார் என்றாலும் தண்ணீர் தூக்கும் பெண்களின் தலை வேதனையை நம்முன்னே இறக்கி வைத்தார்.

அடுத்ததாக ஏழு தலைமுறைகள் என்னும் புத்தகத்தைப் பற்றிப் பேச வந்தார் அபுல் ஃபைஸ். இது ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம், இதை எழுதியவர் அலெக்ஸ் ஹேலி என்று சொல்லிவிட்டு இந்தப் புத்தகத்தையே இங்கு எடுத்து வந்ததற்குக் காரணம் அட்டைப்படம்தான் என்றார். இது எதைப் பற்றிய புத்தகம் என்பதை இந்த அட்டப்படம் விளக்குகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கா அதாவது கருப்பின அமெரிக்கர்கள் உருவாக்கிய அமெரிக்காவைப் பற்றிய புத்தகம் இது என்றார்.
மேலும் இந்த ஆசிரியர் ஒருமுறை வெளியில் போகும் போது பொம்மைகளைப் பார்க்கிறார். அதில் புரியாத பாஷை எழுதி இருக்க, இந்த பாஷையைப் பற்றி ஆராய்ந்தவர் அதிலிருந்து மனித குலத்தின் முக்கியமான வரலாறை எடுத்து எழுதியிருக்கிறார் என்று அங்கிருப்பவர்கள் சொன்னதும் தன்னுடைய வரலாற்றை இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தேடிப்போகிறார்.
77-ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி தொடராக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறார்கள். இந்தத் தொடர் வெளிவந்த போது மக்கள் வீடுகளில் இருந்திருக்கிறார்கள், திருட்டுக்கள் குறைந்திருக்கிறது, ஹோட்டல்கள் எல்லாம் கூட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது, விமான நிலையங்களில் விமானத்தின் நேரத்தை மாற்றினார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். விமான நேரம் மாற்றம் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இந்தப் புத்தகத்தைப் பற்றிப் படித்ததும் நான் என்னுடைய மூதாதையர் பற்றிய தேடலில் ஈடுபட்டு எனது ஐந்து தலைமுறைகளைப் பற்றி எனது பாட்டியிடம் கேட்டு அறிந்து என் மகன் பெயரில் ஒரு மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தி அதில் பகிர்ந்து வைத்திருக்கிறேன். அவன் பெரியவன் ஆனதும் எங்களின் தலைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வான் அல்லவா என்றார்.

இறுதியாக நன்றியுரை சொல்ல வந்த சமூகத்தின் சமூகம் சகோதரர் பிர்தோஷ் பாஷா அவர்கள் நன்றின்னு சுலபமாச் சொல்லிவிட்டு சென்று விட முடியாது வசீர் அண்ணனிடம் இடம் கேட்டதும் உடனே தருகிறேன் என்றார்கள். இடம் இருப்பது முக்கியமல்ல அதைக் கொடுக்கும் மனசு வேண்டும்… அந்த மனசு இவர்களிடம் இருக்கிறது, தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என இடமளித்த அதீஃப் குழுமத்துக்கும், அபுதாபியில் எங்களை மதித்து, இந்தியத் தூதரக அதிகாரி அன்று அபுதாபியில் அடிக்கடி இது போன்ற நிகழ்வுகளை நடத்துங்கள் என்று சொல்லியும் ரெண்டு வருடங்களுக்குப் பிறகு வாய்ப்புக் கொடுத்த பாலாஜி அண்ணனுக்கும், இஷ்டப்பட்டு செய்தால் எதுவுமே கஷ்டமில்லை டீச்சர் என்று சொல்லி, நாங்க அங்க – துபை – அடிக்கடி வந்தோமுல்ல ஒரு நாள் வந்துட்டு எம்புட்டுப் பேசுறீங்க என்று சந்தோசமாய் சொல்லி, இந்த நிகழ்ச்சிக்காக உழைத்த சதீஷ்க்கும் நன்றியைத் தெரிவித்தார்.
அன்சாரி அண்ணன் வரமுடியவில்லை என்றாலும் தனது தம்பிகளிடம் கேலக்ஸி நண்பர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள் என்று சொல்லியும் தான் வரமுடியாததற்கு வருத்தத்தைப் பதிவு செய்யச் சொல்லியும் சென்றிருந்தார். மேன் மக்கள் மேன் மக்களே.
மிகச் சிறப்பான நிகழ்வு… அருமையான இரவு உணவு. அலுவலகத்துக்குள் எங்கே அமர்வது என்று யோசித்தவர்களை இங்கெல்லாம் அமருங்கள்… மகிழ்வாக உணவருந்துங்கள் என்று சொல்லிச் சாப்பிட வைத்த அதீஃப்பின் அன்பு உண்மையில் வியக்க வைத்தது. மேலும் அலுவலக ஆட்கள் எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் என வேலைகளை, சுத்தம் செய்யும் பணியை இழுத்துப் போட்டு ஈர்ப்புடன் செய்தார்கள். நிகழ்வின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு ஊழியர் சிறப்பாக போட்டோக்களை எடுத்த வண்ணமிருந்தார். அனைவருக்கும் நன்றி.

மீண்டும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்… கீழே வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சுக்கள் எப்போதும் தீர்வதில்லை, அது நல்ல பேச்சாக இருக்கும் பட்சத்தில். சகோதரி ஆண்டாள் ரேவதியின் கணவருடன் பேசியபோதுதான் நாங்கள் இருவரும் ஒரே கம்பெனியில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. நட்பாகப் பேசினார்.
எல்லாரும் கிளம்பியதும் நாங்கள் சதீஷ் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காவில் போய் அமர்ந்து, பசியாறி, நிறையப் பேசி மகிழ்ந்து கிளம்பினோம். பால்கரசு என்னை எனது இல்லத்தில் இறக்கிவிட்டுவிட்டு இராஜாராம் மற்றும் சங்கருடன் பயணப்பட்டார். அன்றிரவே அறநூறுக்கும் மேற்பட்ட படங்களைப் பால்கரசு பகிர்ந்து கொண்டார் என்றால் மறுநாள் மாலைக்குள் அத்தனை வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து தினம் ஒரு கதை என்னும் தொடருக்கான கதையையும் பாலாஜி அண்ணன் பகிர்ந்து கொண்டார். நான்தான் பதிவெழுத இருநாட்கள் ஆக்கிவிட்டேன்.
இந்தமுறை பதிவை விரிவாக எழுதவில்லை… பேச்சுக்களை விரிவாகப் பார்க்க கேலக்ஸி யுடியூப் தளத்துக்குச் செல்லுங்கள். பார்த்து தங்களின் கருத்துக்களைச் சொல்லுங்கள். குறை நிறைகளைச் சொன்னால் எங்களை நாங்கள் மேம்படுத்திக் கொள்வோம்.
எதிலும் புதுமை என்பது கேலக்ஸியின் மந்திரம்… சிறுகதைப் போட்டி, குறுநாவல் போட்டி, இப்போது கதைப்போமா என எல்லாவற்றிலும் தனி முத்திரை பதித்த நிறுவனம் கேலக்ஸி. அதன் ஒவ்வொரு வளர்ச்சியும் சொல்லி அடிப்பது போல் நடப்பது சிறப்பு. எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள் இங்கே கூடும் நண்பர்களின் எண்ணம் போல் எல்லாம் மகிழ்வாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கதைப்போமா மாதாமாதம் மெருகேறிக் கொண்டிருக்கிறது.

சிறுகதைப் போட்டி, குறுநாவல் போட்டி… அடுத்து என்ன எனக் கேட்கும் நண்பர்களுக்கு 2025-ன் ஆரம்பத்தில் இன்னும் ஒரு மிக முக்கியமான, பெரும் நிகழ்வினை நடத்தும் எண்ணத்தில் கேலக்ஸி பயணித்துக் கொண்டிருக்கிறது… சிறப்பான நிகழ்வாக அது இருக்கும். அதற்கு முன் ஷார்ஜா, சென்னை எனப் புத்தகக் கண்காட்சிகளில் கேலக்ஸியின் புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன என்பதை கேலக்ஸியின் நிறுவனர் பாலாஜி பாஸ்கரன் அவர்கள் இந்த நிகழ்வில் கோடிட்டுக் காட்டியதுடன் அடுத்த இரு நிகழ்வுகளும் எங்கே, எப்போது என்பதையும் அறிவித்தார்.
சிறப்பான நிகழ்வு…
மகிழ்வான நிகழ்வு…
மனம் நிறைந்த நிகழ்வு…
சந்தோசமான நிகழ்வு…
இது இப்படியே தொடரட்டும்.
கேலக்ஸியின் ஒருவனாய் பயணிப்பது மகிழ்வாய் இருக்கிறது. நமக்குப் பிடித்த வேலையைச் செய்யும் போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு எதுவுமில்லை…
படங்கள் : பால்கரசு.
பேச்சாளர்கள் எல்லாரையும் ஒரே படத்தில் கொண்டு வந்திருந்த சகோதரி ஜெசிலா அவர்களுக்கு நன்றி. அதையும் எடுத்துக் கொண்டேன்.
(நீண்ட பகிர்வு என்பதால் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்)
-பரிவை சே.குமார்.