ஆர்.வி.சரவணன்
முன்கதை:
காதலினால் ஏற்பட்ட பிரச்சினைகளால் ஊருக்கே வராமல் இருந்த மாதவன் நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் யாரைச் சந்திக்கக் கூடாதோ அவர்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அதன்பின்னான நிகழ்வுகளில் அவன் மனம் ஒட்டாமல் வீட்டுக்குக் கிளம்பிவிடலாம் என்று நினைப்பவனை அங்கிருந்து நகரவிடாமல் ஏதாவதொன்று துரத்துகிறது.
இனி…
மணமகன் அறை என்று பெயரிடப்பட்டிருந்த அறைக்குள் மாதவன் நுழைந்த போது கோட் சூட்டிலிருந்து வேஷ்டி டீசர்ட்டுக்கு மாறியிருந்த சேகர், கண்ணாடியில் தலை வாரி கொண்டே “ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்க சீக்கிரம்” என்றான்.
“ஏன்டா உன் பொண்டாட்டிய சந்திக்க போறதுக்கு நான் எதுக்குடா”
“சொல்றதைச் செய்”
சலித்து கொண்டே பாத்ரூம் சென்று முகம் கழுவி லுங்கி பைஜாமா அணிந்தபடி வெளியே வந்த மாதவன் முன்னே பழத் தட்டை நீட்டினான் சேகர். கூடவே கண்ணாடி டம்ளரில் பால்.
“நீ ஒண்ணும் சாப்பிடல இல்லியா. அதான் கொண்டு வர சொன்னேன். முதல்ல சாப்பிடு… அப்பறம் கிளம்பலாம்”
மறுக்க மனசு வரவில்லை. நறுக்கிய ஆப்பிள் ஒன்றை எடுத்து கொண்டே கேட்டான்.
“கல்யாணப் பெண்ணை மாடிக்கு வர சொன்னது நீதானே”
“நான் இல்லடா. அவ தான்”
“ஆச்சரியமாயிருக்கே.”
“அவள் வர சொன்னது லவ் பண்றதுக்கு இல்ல. என் கூட சண்டை போடறதுக்கு”
“சண்டையா?”
“ம். உன்னை அழைச்சிட்டே சுத்தறது அவளுக்கு பிடிக்கல” சொல்லிக் கொண்டே செண்ட் ஸ்ப்ரே செய்து கொண்ட சேகர், மாதவன் மறுக்க மறுக்க அவனுக்கும் ஸ்ப்ரே செய்தான்.
“அதத்தான் நானும் சொல்றேன். சொன்னா நீஎங்க கேட்கற..?”
“நாளைக்கு வர போறவளுக்காக உன்னை விட்டுட முடியுமா…? சொல்லு” எதிர்கேள்வி கேட்டான் சேகர்.
“இந்த சினிமா டயலாக்கெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்துவராது. இதை இங்க சொன்னதோட நிறுத்திக்க. அங்க போயி அவகிட்டயும் சொல்லித் தொலச்சிடாதே. ரணகளம் ஆகிடும்”
“நான் அங்க டீல் பண்ற விதமே வேற… நீ அதைப் பார்க்கத்தானே போறே”
இருவரும் அறையிலிருந்து வெளி வந்தார்கள். ‘காலையில முகூர்த்தம் இருக்கு இன்னும் படுக்கலையா’ என்று சேகரிடம் கேட்ட அம்மாவிடம் “கொஞ்சம் வாக் போயிட்டு வந்துடறேன்மா” என்றபடி மாதவனுடன் படிக்கட்டில் ஏறினான்.
மொட்டை மாடிக்கு வந்தார்கள்.
எளிமையாய் நேர்த்தியாய் இருந்த கார்டன் அவர்களை வரவேற்றது.
சில்லென்று காற்று முகத்தில் அறைய தூரத்தில் விளக்கொளியில் உச்சிப் பிள்ளையார் கோவில் தெரிந்தது.வாகனங்களின் இரைச்சல் அமைதியை அவ்வப்போது துவம்சம் பண்ணி கொண்டிருந்தது.
இன்னமும் காணோமே என்ற முணுமுணுப்புடன் செல் போனை கையில் எடுக்கவும் திவ்யா எதிரே வரவும் சரியாக இருந்தது.
சேகரோடு மாதவனைப் பார்த்ததும் அவள் முகம் உடனே மாறியது நன்றாகத் தெரிந்தது.
சேகரின் அருகே அவள் வரவும் மாதவன் தள்ளி சென்றான்.
“எப்ப பாரு கங்காரு குட்டிய சுமக்கிற மாதிரி அவரை இழுத்துட்டே திரியறீங்க”
“டார்லிங். நாளையிலிருந்து உன்னை இழுத்துட்டு இது மாதிரி தானே திரிய போறேன். அதுக்கு ட்ரெயினிங்”
“க்கும்”
மாதவன் அதற்கு மேல் அங்கு நிற்பது நாகரிகமில்லை என்பதால் அவர்கள் இருந்த பக்கத்துக்கு எதிர் பக்கம் சென்றான்.
கைப்பிடி சுவரில் கை வைத்த படி வானத்தை வேடிக்கை பார்த்தான்.
எப்படியும் திவ்யா தன்னை பற்றி அவனிடம் சொல்லக் கூடும். சேகருக்கு தான் ஒரு பெண்ணை காதலித்தது மட்டுமே தெரியும். ஆனால் அது மீராவென்று தெரியாது. எதனால் காதல் முறிந்தது என்பதும் தெரியாது. கேட்டவுடன் கண்டிப்பாக அதிர்ச்சி ஆகி விடுவான். இதை முன்பே அவனிடம் சொல்லியிருக்கலாம். முடிந்து போன ஒன்றைச் சொல்லி என்னாகப் போகிறது என்று நினைத்ததால்தான் சொல்லவில்லை. ஆனால் விதி இதோ இங்கே இழுத்து வந்திருக்கிறது. விசயம் தெரிந்த பின் சேகரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் எதிர்க்கொள்ளத்தானே வேணும் என நினைத்துக் கொண்டான்.
அவனுக்கு அருகே கொலுசு சத்தம் கேட்டது.
திரும்பினான்.
மீரா அவனை போலவே வேடிக்கை பார்த்த படி நின்றிருந்தாள்.
பட்டுப் புடவையிலிருந்து காட்டன் புடவைக்கு மாறியிருந்தாள். இந்த புடவையில் இன்னும் அழகாக தெரிந்தாள்.
நான் ஏன் இங்க நிக்கிறேன் என்பதை அவளிடம் சொல்லி விடலாம் என்று நினைத்தவன் “நான் மாப்பிள்ளைக்கு துணையா வந்திருக்கேன்” என்றான் மெல்ல.
“நான் பொண்ணுக்கு துணையா வந்திருக்கேன்” அவளும் பதில் சொன்னாள்.
சில விநாடிகள் மௌனமாய் கரைய-
“நான் இங்க நிக்கறது தொந்தரவுனா சொல்லு. கீழே இறங்கிடறேன்”
“கூட சேர்ந்து படிச்ச பொண்ணுங்கிற முறையிலாவது என் கிட்ட நலம் விசாரிக்க கூட தோணலைல உனக்கு. அந்த அளவுக்கு நான் ஆகாதவளா போயிட்டேன் இல்லையா..?” கைகளை கட்டி கொண்டு அவனை நோக்கி திரும்பிய படி, உடைந்த குரலில் கடுமையைக் கூட்டினாள்.
அவள் நின்றிருந்த தோரணையைப் பார்த்தபோது அப்படியே இரு கைகளாலும் அவளைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் தோன்றியது மாதவனுக்கு.
நினைவுக்குச் சிறையிட்டான்.
“நான் அப்படிலாம் சொல்லலியே. நீ தான் என் மனசை நோகடிச்சிட்டிருக்கே..?”
“பின்னே நீ பண்ணிட்டு போன வேலைக்கு கொஞ்சுவாங்களா..?” அவனை மடக்கினாள்
“காதலிச்ச உன்னை விட்டுட்டு போனதை தவிர வேற என்ன பண்ணேன் நான்…” பரிதாபமாய்க் கேட்டான்.
“என்னை ஏமாத்திட்டு போனதே பெரிய தப்பு. அதை விட மோசமான தப்பு உங்கிட்ட கொடுத்த என் நகைகளை நீ எடுத்திட்டு போனது”
“என்னது நான் எடுத்திட்டு போனேனா. இது அபாண்டம். பொய் சொல்லாதே ” கத்தினான்.
“என்னை வேணாம்னு உதறி விட்டுட்டு போனத கூட என்னால் தாங்கிக்க முடிஞ்சது. ஆனா இப்படி ஒரு திருட்டுத்தனம் பண்ணிட்டு போனது மட்டுமில்லாம ஒரு திருடனா வந்து நிக்கிறீங்களே. அத என்னால தாங்கிக்கவே முடியல” மீராவும் ஆவேசமாய் கத்தினாள்.
மாதவன் இந்த வார்த்தைகளில் அதிர்ச்சியாகி ஆத்திரத்தில் தன் கையிலிருந்த விலையுயர்ந்த செல்போனை கீழே அடித்தான்.
கதைக்குத் தகுந்த படங்களையும் கொடுக்கும் சரவணன் அவர்களுக்கு நன்றி.
செவ்வாய்கிழமை தொடரும்.