பரிவை சே.குமார்
பம்பர சீசன் தொடங்கியதில் இருந்து ஆளாளுக்கு மதி கடையில் இருந்து பம்பரம் வாங்கி வந்து, விடுமுறை தினமென்றில்லாமல் மாலை நேரங்களிலும் மாரியம்மன் கோவில் தரையில் போட்டிபோட்டுக் ‘கிர்ர்ர்ர்…. கிர்ர்ர்ர்’ரெனச் சுற்றவிட்டார்கள்.
ஒரு சிலர் தரையில் சுற்றிய பம்பரத்தை லாவகமாகத் தங்கள் கையில் எடுத்து அடுத்தவரின் கையில் விட்டுச் சந்தோஷப்பட்டனர். அப்படிக் கையில் வாங்கும் போது ஆணி கொடுத்த குறுகுறுப்பில் சிலர் உடலை நெளித்து வளைத்துச் சிரித்தனர்.
ஒரு சிலர் பம்பரம் வாங்கிக் கொடுக்க முடியாது என அம்மாக்கள் பிடித்த அடத்தின் காரணமாக நல்ல வைரம் பாய்ந்த கருவைக் கட்டையை வெட்டி அழகாக செதுக்கி ஆணி அடித்து பம்பரம் ஆக்கியிருந்தார்கள். அந்தப் பம்பரங்கள் சுற்றும் போது சற்றே வித்தியாசம் தெரியத்தான் செய்தது.
மேலத்தெரு முத்துசாமியின் நாலு வயசு சந்தோசுக்கு இப்போ கடையில் புதிதாக வந்திருக்கும் தலைமீது ஆணி வைத்து அதில் சாட்டை கட்டிய பம்பரத்தை வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அவனும் அதைக் கிர்ர்க்கிர்ர்ர்க் என்ற சப்தத்துடன் சுத்தப் பழகிவிட்டான். அவனோட அக்கா பத்து வயசு பாமா அந்தப் பம்பரத்தைத் தன் கையில் எடுத்து லாவகமாச் சுத்தி அவனைக் குஷிப்படுத்தினாள். அதுவும் சாட்டையில் தொங்கியபடி சுற்றுவது அழகாகத்தான் இருக்கு, சில நேரம் என்னைய சுதந்திரமாச் சுத்த விடுங்கடா எனக் கதறுவது போலும் இருந்தது.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்ற முத்து மனசுக்குள் தனது அப்பத்தாவைக் கருவிக் கொண்டான். ‘அம்புட்டுப் பேரும் பம்பரம் வாங்கி பெரும பீத்திக்கிட்டுச் சுத்துறானுங்க…. இந்தக் களவாணிக் கெழட்டுச் சிறுக்கி பம்பரம்தான் வாங்கித் தர விடமாட்டேங்கிது. கட்டயில செதுக்கித் தர்றேன்னு சொன்ன சோலப் பயலயும் போடா வெருவாக்கெட்ட பயலேன்னு வேற திட்டிப்புடுச்சு. இப்ப அதுக்குப் பயந்துக்கிட்டு ஒரு பயலும் பம்பரம் செதுக்கித் தரமாட்டேங்கிறாங்க. வீணாப்போன வெளங்காத கெழவி… கதண்டு கடிக்க… கட்டயில போக’
“ஏய் முத்து தள்ளி நில்லுடா… பம்பரம் குத்தும் போது சும்மா ரெங்கிக்கிட்டு வரும். மண்டகிண்டயில சொட்டுன்னு வந்து அடிச்சிப்புடும். பொட்டுல அடிச்சிச்சின்னா பொட்டுன்னு போயிருவே பாத்துக்க” எனக் கத்தினான் சேகர்.
“ஆமா இங்கிட்டுத்தான் வருது. சும்மா சுத்துடா…. மொட்டக்கட்ட அடிக்கப்போறே… அதுக்கு எம்புட்டு உதாரு விடுறே பாரு…” பம்பரம் இல்லாத கடுப்பில் திரும்பி எகிறினான் முத்து.
“எனக்கென்னப்பா நா சொல்லிட்டேன்… அப்புறம் ஓ இஷ்டம்… அடிபட்டுச்சின்னா ஒங்கப்பத்தா வாயில வந்ததெல்லாம் பேசி எங்களத் திட்டக்கூடாது பாத்துக்க” என்றபடி பம்பரத்தை சாட்டையால் சுற்றி ஆணியின் நுனியை நாக்கால் எச்சில்படுத்தி நாக்கைத் துருத்தி வலது காலைத் தூக்கி வட்டத்துக்குள் இருந்த பம்பரத்தின் மீது குத்தினான்.
“டேய் சோல… எனக்கொரு பம்பரஞ் செஞ்சுதாடா…” மும்மரமாக பம்பரம் சுற்றுவதில் இருந்த சோலையிடம் கெஞ்சலாகக் கேட்டான் முத்தா.
“அட போடாங்… ஒங்கப்பத்தா சோத்த திங்கிறியா பீயத் திங்கிறியான்னு கேக்குது. வெருவாக்கெட்ட பயன்னு சொல்லுது. எங்கம்மாக்கிட்டச் சொன்னா ஒங்கப்பத்தாவோட வாயக்கிழிச்சிப்புடும்… ஆனா வீணாவுல சண்ட வேணான்னு சொல்லல பாத்துக்க. வேண்டாம்ப்பா… ஒனக்கு நாஞ் செஞ்சு தரமாட்டேன். வேற யார்க்கிட்டயாச்சும் கேட்டுச் செஞ்சிக்க.”
முத்து பதில் சொல்லாமால் வட்டத்துக்குள் குத்தி ‘ர்ர்ர்’ரென்ற சத்தத்துடன் வெளியே சீறி, சுற்றிய முருகனின் சிவப்புக் கலர் பம்பரத்தையே பார்க்க, அவன் அதைப் பார்ப்பதைப் பார்த்த முருகன், தனது தலையை ரஜினி ஸ்டைலில் கோதி விட்டுக் கொண்டு, கையிலிருந்த சாட்டையை பம்பரத்தைச் சுற்றி முடிச்சுப் போல் போட்டு ஒரு கையால் டக்கென்று மேலே தூக்கிவிட்டு, உயரப் பறந்து வந்த பம்பரத்தை லாவகமாக கையில் வாங்கி சுத்தவிட்டான்.
“டேய் அதை எங்கய்யில விடுறா…” வெட்கத்தை விட்டு விட்டுக் கையை நீட்டியபடி கேட்டான் முத்து.
“டேய் இங்க பாருங்கடா… தொத்தப்பயலுக்கு பம்பரத்தக் கய்யில சுத்தணுமாம்… நீ விடாதேடா. அவங்கய்யில விட்டியன்னா அடுத்து ஒம்பம்பரந்தான் வட்டத்துக்குள்ள இருக்கும் பாத்துக்க” என்று சொன்ன இளங்கோவிடம் “சும்மா இருடா… யாரு பம்பரம் உள்ள போகுன்னு பாப்போம்” என்ற முருகன் முத்துவின் கையில் விட்டான். கிர்ரெண்று கையில் சுற்றும் போது உச்சந்தலை வரை சில்லிப்பாய் இருந்தது. அடக்க முடியாத சிரிப்பு வந்தது அவனுக்கு.
‘டேய் முத்து… அடேய் இங்க வாறியா… வரவா…?’ அப்பத்தாவின் குரல் கேட்டதும் கடுப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.

வீட்டுக்குப் போனதும் வாசலில் நின்ற அப்பத்தா, “அவனுக பம்பரம் குத்துற எடத்துல நிக்காதேன்னு எத்தன தடவ ஒனக்குச் சொல்லியிருக்கேன்… ஒரு நேரம் மாரிக்கி ஒரு நேரமிருக்காது. அது பாட்டுக்கு படாத எடத்துல பட்டுட்டா என்ன பண்றது.?” கத்தினாள்.
“சும்மா போப்பத்தா… பம்பரந்தான் வாங்கித் தரமாட்டீங்க… அவனுக குத்துறதப் பாக்கக்கூடக் கூடாதாக்கும்?”
“எனக்கென்னப்பா ஒங்காத்தாக்கிட்ட சொல்லி ஒங்கப்பன் வரும்போது வாங்கிட்டு வரச்சொல்லுங்க….”
“நா எங்கப்பாக்கிட்டச் சொல்லி வாங்காரச் சொல்லி இவனுகளோட குத்துறேனா இல்லயான்னு பாரு…” என்றபடி உள்ளே சென்றான்.
மறுநாள்…
“முத்து நா உனக்கு என்னோட செவப்புப் பம்பரத்தத் தரவாடா?” முருகன் அவனிடம் கேட்டான்.
“போடா… நீ சும்மா சொல்லி என்னய வெறுப்பேத்துவே…”
“இல்லடா நெஜம்மாத்தான்…” கண்கள் விரியச் சொன்னவன் “மதி கடயவிட கண்ணங்கடயில சூப்பர் பம்பரமா வச்சிருக்காராம். எங்க செல்லயித்த மயன் குணசேகரு சொன்னான். நான் புதுசா பம்பரம் வாங்கப்போறேன்… அதுனால இத ஒனக்குத் தாறேன்…” என்றான்.
“எப்போ?”
“மத்தியானம் வரும்போது புதுசு வாங்கிட்டு வந்திருவேன்… சாந்தரம் ஒனக்குத் தாறேன்…”
“உண்மயாவா?” ஆச்சர்யமாய்க் கேட்டான்.
“எங்கம்மா மேல ஆணயா தர்றேன்டா… சொல்லிட்டு ஏமாத்தமாட்டேன் இளங்கோவாட்டம்”
“சரி இப்பக் குடு பாத்துட்டுத் தர்றேன்”
“இந்தா…”
வாங்கி எல்லாப் பக்கமும் பார்த்தவன் இடமில்லாமல் ஆக்கர் போட்டிருப்பதைப் பார்த்ததும் “என்னடா இம்புட்டு ஆக்கர் வாங்கியிருக்கு…” முகத்தைச் சுருக்கினான்.
“ஆமா வெளாடும் போது தோத்தா ஆக்கர்தானே போடுவாங்க… பிரியாத்தானே தாரேன்னு சொன்னே… புதுசா வாங்கிக் கொடுப்பாக… வேணானுட்டாச் சொல்லு தங்கராசுக்கிட்ட குடுத்துடுறேன்.”
“இல்லடா சும்மா கேட்டேன்… நல்லாத்தானிருக்கு… எங்கிட்டயே குடு.”
“அப்பறம் வேணான்னு சொல்ல மாட்டியே… ஆக்கர் வாங்குன கட்டயக் கொடுத்துட்டான்னு மத்தவங்ககிட்ட சொல்லமாட்டியே…”
“இல்லடா… எனக்கே கொடுடா… அப்டில்லாம் சொல்லமாட்டேன். இனிமே இதுல ஆக்கர் விழுகாம பாத்துக்கிறேன்…”
“உனக்கு ரொம்ப திமிருடா… வெளாட்டுன்னு வந்தா ஆக்கர் வாங்கம இருக்க முடியாது. உன்னய முதல்ல சேக்குறானுங்களான்னு பாரு… வாயாலதான் நீ கெடுறே போ”
மாலையில் எல்லாரும் கூடி வட்டம்போட்டு பம்பரம் சுற்றத் தயாரானபோது…
“டேய் நானும் வாரேன்டா..” என்றபடி வந்து நின்றான் முத்து.
“டேய் இங்க பாருங்கடா தொத்தப்பய ஆட்டக்கி வாராணாமுடா… ஆமா ஒங்கிட்ட ஏதுடா பம்பரம்… ஒங்கப்பத்தா வாங்கிக் கொடுத்துச்சா…” ஏளனமாக கேட்டான் சேகர்.
“இல்ல முருகன் கொடுத்தான்… எங்கப்பா இந்த வாரம் வரும்போது புது பம்பரம் வாங்கிட்டு வாறேன்னு சொல்லியிருக்காக…”
‘ப்ப்பூ….’ என எல்லாருமாக சிரித்தார்கள்.
“எதுக்குடா சிரிக்கிறீங்க…?”
“புதுசா வாங்கி என்னடா பண்ணப்போறே… உனக்கு பம்பரமே குத்தத் தெரியாது… முதல்ல இதுல பழகு அப்புறம் பாப்போம்… இல்லேன்னா ஒங்கப்பாக்கிட்ட நாலஞ்சி வாங்கிட்டு வரச்சொல்லு… ஒரு ஏழெட்டு ஆட்டம் போடலாம்” தான் என்னவோ பம்பரம் சுற்றுவதில் சாம்பியன் என்பது போல சோலை பேசினான்.
“எதுக்குடா இவனுக்கிட்ட கொடுத்தே… ஆக்கர் வாங்கிறதுக்காவது வச்சிருக்கலாமுல்ல…” மெதுவாக கீறிவிட்டான் இளங்கோ
“அட பொயிட்டுப் போகுதுடா…. பாவம் சுத்திட்டுப் போறான்… நீதான் பழசெல்லாம் பத்தரமா பரணியில் போட்டு வச்சிருப்பே. எனக்கெல்லாம் அதெல்லாம் புடிக்காது”
“சரிடா… ஒனக்கு மூனு சான்ஸ் தர்றேன்… இந்த வட்டத்துக்குள்ள இருக்க என்னோட பம்பரத்து மேல ஒரு தடவயாச்சும் ஆணி பதியிறமாரி, வேண்டாம் லேசாப் பட்டாப் போதும். அப்படி ஒரே ஒரு குத்துக் குத்து பாப்போம்… அப்புறம் ஒன்னய ஆட்டயில சேத்துக்கிறோம்…” என்று சொல்லி மற்றவர்களைப் பார்த்து “என்னடா எல்லாரும் ஒத்துக்கிறீங்கதானே’ எனக் கேட்டு அவர்கள் தலையாட்டலுக்குப் பின் “செய்யிறியாடா” என முத்துக்கு போட்டி வைத்தான் சேகர்.
“சரிடா… வையி….” தயாரானான் முத்து.
“டேய் எதுக்குடா தேவயில்லாம… அவனயும் ஆட்டயில சேத்து அவனோட பம்பரத்த தெறிக்க வப்போமுடா…” என்றான் சோலை.
“நீ இருடா… முதல்ல இவன் வட்டத்துக்குள்ள குத்துறானான்னு பாப்போம்… மாங்காய்க்கி குறிவச்சி மங்கப்புள்ள மண்டய ஒடச்சய பயதானே இவன்”
எல்லாரும் சிரித்தார்கள்.
முத்து சீரியஸானான்.
சாட்டையைச் சுற்றும் போது அது பம்பரத்தின் மீது நிற்காமல் சுத்திக் கொண்டே வர, ‘சாட்டையை எப்படிச் சுத்துறதுனே தெரியல இவரு பம்பரம் சுத்துறாராம். தோத்துட்டேன்னு ஒத்துக்கிட்டு ஓரமா நின்னு வேடிக்க பாருடா’ என இளங்கோ சொல்லிச் சிரிக்கவும் எல்லாரும் சேர்ந்து சிரித்தார்கள்.
ஒரு வழியாகச் சாட்டையை பம்பரத்தின் மேல் சுற்றி ஓங்கிக் குத்த முதல் குத்து வட்டத்துக்குள் விழுந்தாலும் மொட்டைக் கட்டையாக மண்ணில் சுற்றிச் செல்ல “மொதக்குத்து மொட்டக்குத்து… தலயறுத்த கோழி மாறிச் சுத்துதுடோய்” என்று எல்லாரும் ஒன்றாகக் கத்தினார்கள்.
இந்த முறை எப்படியும் ஆக்கர் போட்டே ஆகணும் என்ற முனைப்புடன் மீண்டும் பம்பரத்தின் மீது சாட்டையை நெருக்கமாய்ச் சுற்றி, விரல்களுக்குள் மீதக்கயிறுரை சுற்றிக் கொண்டு கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் பம்பரத்தைத் தலைகீழாய் வைத்து, ஆணியை நாக்கில் வைத்து எடுத்து, வேகமாய்க் குத்த இந்த முறை பம்பரம் தரைக்கே போகாமல் சாட்டை நுனியில் தொங்கியது.
“அடேய் இனி இவன் செம்மத்துக்கும் நம்ம கூட ஆட முடியாது…. முருகன் வச்சிருக்கும் போது எப்புடி ரெங்குன பம்பரம் தொத்த கய்யிக்கிப் போனதும் தொத்தலாகி சாட்டய விட்டே வெளிய வரல. நேத்துவரக்கிம் சீறுன செவப்புப் பம்பரம் செத்துப் போச்சுடா” சிரித்தான் ஆறுமுகம்.
“என்னடா தொத்த… நோத்தாவா எனக்குப் பேரு வச்சா… மூத்தரக்குண்டி…” என்று பதிலுக்கு சிலுப்பினான் முத்து.
“டேய் மூத்தரக்குண்டியின்னு சொன்னே மூக்கப் பேத்துருவேன் பாத்துக்க…” ஆறுமுகம் எகிறினான்.
“இருடா… இன்னும் ஒரு குத்துத்தான்… அவங் குத்தலன்னு வச்சுக்கங்க நாம அவனக் குத்துவோம்… எல்லாரும் ரெடியா இருங்க” என்று ஆறுமுகத்தைச் சமாதானப்படுத்தினான் சேகர்.
‘மாரி… இந்தக் குத்துல பம்பரம் வெளியாகணும்..’ என்று முத்து கண்மூடி மனசுக்குள் சாமி கும்பிடும்போது ‘அடேய் அவனுக்கிட்ட எவன்டா பம்பரத்தக் கொடுத்தது. எங்களுக்கு வாங்கித் தரத்தெரியாமயா இருக்கோம். நீங்கதான் சொல்பேச்சுக் கேக்கலன்னா அவனயும் ஏன்டா கெடுக்கிறீங்க வீணாப்போனவனுங்களா. யாருமேலயாவது பட்டு சண்டக்கி வந்துட்டா… அன்னக்கி மங்கப்புள்ள மண்டயில பட்டமாரிக்கி யாரு மேலயும் பட்டுட்டா. நீங்க ஓடிருவிய, நாங்கள்ல்ல மல்லுக்கட்டிக்கிட்டு நிக்கணும். யேய் மூதேவி… இப்பக் கொடுத்துட்டு வாரியா வரவாடா’ என்று அவனது அப்பத்தா கத்தியபடி வர…
“தொத்த தோக்கப்போறான்… ரெடியா இருங்க…. அவனை வெளுக்கிறதுக்கு…” என்று சேகர் சொல்ல,
“அவன் நாம ஏ வெளுக்கணும். அதான் அவுக அப்பத்தா வெளக்குமாத்தோட வருதே” சிரித்தான் சோலை.
‘ஏய்… ஏய்… கும்மாங்குத்து…. ஏய்… ஏய்… தொத்தக்குத்து’ என எல்லாரும் கோரஸாகக் கத்தினார்கள்.
பம்பரத்தை நாக்கால் எச்சில் பண்ணி, கண்ணை மூடி கையை ஓங்கும் போது அப்பத்தாவும் சுற்றி நின்று சிரிப்பவர்களும் ஒரு முறை கண்ணுக்குள் வர,
நன்றாக கண்ணைத் திறந்து ஓங்கிக் குத்தினான்.
சரியான குத்து…
துள்ளியமாய் வீசிய வீச்சு….
சேகரின் பம்பரத்தில் முத்துவின் பம்பர ஆணி பச்சக் என்று குத்த….
அந்த வேகமான குத்து கொடுத்த தாக்கத்தில் சேகரின் பம்பரம் ரெண்டாக உடைந்து சிதற…
குத்திய வேகத்தில் வாடிவாசல் காளை போல முத்துவின் பம்பரம் எகிறி அவர்களை நோக்கி விளக்குமாத்துடன் வந்த அப்பத்தாவின் நெற்றியைத் தாக்க…
“அய்யோ… யாரயோ பம்பரத்தால அடிக்கப் போறான்னு கத்திக்கிட்டுக் கெடந்தேன். கடசியா எம்மண்டய ஒடச்சிட்டானே பாவிப்பய… வா ஒங்காத்தாக்கிட்ட சொல்லி ஒனக்குப் பூச போடச் சொல்றேன்… பம்பரமா வேணும் பம்பரம்… ஒங்கப்பனுக்கிட்ட சொல்லி மசுர வாங்கிட்டு வரச்சொல்லுறேன்…” என்று கத்தியபடி நெற்றியைத் தடவிக் கொண்டு ஒப்பாரி வைத்தாள்.
அப்பா பம்பரம் வாங்கித் தருவாரா மாட்டாரா என்பது இப்போது முக்கியமில்லை… கேலி பேசியவர்களின் முகத்தில் கரி பூசிய சந்தோஷத்தில் “யாருக்கிட்ட… முத்தா கொக்கா… இனி எங்கிட்ட எவனாச்சும் மோதுவிய… அப்படி மோதுனா… பாத்தியல்ல… இந்தப் பம்பரம்மாரி ஒங்க பம்பரத்தயும் சில்லுச்சில்லாத்தான் பொறக்கணும்…” என கத்திவிட்டு அப்பத்தாவைத் தாக்கி எகிறிய பம்பரத்தை எடுத்துக் கொண்டு “பாத்து வரக் கூடாதாப்பத்தா…. நல்லவேள படாத எடத்துல பட்டிருந்தா ஒனக்குச் சங்காயிருக்கும். நீ கும்பிட்ட சாமி நல்ல சாமி, காப்பாத்திருச்சு” என்று எகத்தாளமாகச் சொல்லிவிட்டு “ம்.. வேற யாருடா வக்கிறா… வச்சிப் பாருங்கடா… தொத்தலாமுல்ல தொத்த… தொத்த இனி தோக்கமாட்டான்டா” என்று சவால் விட்டான் முத்து.
நன்றி : படம் இணையத்திலிருந்து