புத்தகப்பார்வை : கீதாரி

பரிவை சே.குமார்

கீதாரி-

சு.தமிழ்ச்செல்வி எழுதியிருக்கும் கிடை போடும் ஆட்டிடையர்கள் பற்றிய நாவல்.

ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அவர்களைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரிதான் கதையாய்தான் நாவல் நகர்கிறது.

கீதாரி என்றால் ஆட்டிடையர்களில் தலைவரைப் போன்றவர், ஊர் ஊராகச் சென்று ஆட்டுக்கிடை போட்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்துபவர்கள். கோடைகாலங்களில் வயல்கள், கொல்லைகளில் கிடை போட்டு அந்த நிலச் சொந்தக்காரர்கள் கொடுக்கும் அற்பத்தொகையை வைத்து வாழ்க்கை நடத்தும் ஆட்டிடையர்கள் இவர்கள். மழை காலங்களில் மேடான இடங்களில் கிடை போட்டுக் கொள்வார்கள்.

இவர்கள் நாடோடிகளைப் போன்றவர்கள்தான்… ஆடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்காகவே ஊர் ஊராய் அலைபவர்கள்… குட்டிக்கிடாப்புக்கள்தான் இவர்களின் வீடு, அதைச் சற்றே உயர்த்தி, சுற்றிலும் அடைத்து வைத்துக் கொள்வார்கள். ஒரு வயலிலோ அல்லது கொல்லையிலோ ஒரு பக்கத்தில் இருந்து கிடை போட ஆரம்பித்து ஒரு நாளிலோ அல்லது இரண்டு நாளிலோ – ஆடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து – கிடையை மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டே செல்வார்கள்.

இவர்கள் கிடை போடும் போது பெரும்பாலான இடங்களில் இரவெல்லாம் விழித்திருந்து ஆட்டை நாய், நரி குறிப்பாக திருடர்கள் தூக்கிச் செல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்.
கீதாரி ராமு தனது மனைவி இருளாயி, மகள் முத்தம்மா மற்றும் தான் எடுத்து வளர்க்கும் வெள்ளைச்சாமி – இவனுக்கு ஒரு தனிக்கதை உண்டு – ஆகியோருடன் இருக்கும் போதுதான் அந்தப் பைத்தியக்காரப் பெண் பிரசவ வலியைச் சொல்ல முடியாத அழுகையுடன் அங்கு வந்து சேர்ந்து இரட்டைப் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள்.

அந்தக் குழந்தைகளை – கரிச்சா, சிவப்பி – யார் வளர்ப்பது என்ற சிக்கலின் தீர்வாய் கரிச்சாவை ராமுவும் சிவப்பியை பணக்காரனான, இரண்டு பெண்டாட்டிக்காரர் சாம்பசிவம் வளர்க்க ஒத்துக் கொள்கிறார். கீதாரி வீட்டில் வளரும் கரிச்சாவும், பணக்கார வீட்டில் வேலைக்காரியாய் வாழும் சிவப்பியும் என்ன ஆனார்கள் என்பதைச் சொல்லும் கதைதான் இது.

சாம்பசிவத்தின் இரண்டு மனைவிகளிடமும் மாட்டித் தவிக்கும் சிவப்பி, வயதுக்கு வந்த பின் சாம்பசிவத்தின் பார்வை வேறு கோணத்தில் இருப்பதை உணர்கிறாள். அங்கிருந்து தன்னைத் தங்கை கரிச்சா கூப்பிட்டாலும் வரமுடியாத நிலையில்தான் இருக்கிறாள். அதனால் அவளுக்கு நேர்வது என்ன..?

ராமு தான் வளர்க்கும் பிள்ளைக்காகவே தன் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறார். திருமணம் என்று வரும்போது ஊராரின் பேச்சு கொடுக்கும் வருத்தத்தில் வெள்ளச்சாமிக்கே கரிச்சாவைக் கட்டி வைக்கிறார்.

வெள்ளச்சாமி தனது உடன்பிறப்பான அண்ணனைச் சந்திக்கும் வரை ராமு கீதாரியை அப்பனாய், அண்ணனாய் பார்க்கிறான். அண்ணனுடன் சேர்ந்த பின் அவனின் நடவடிக்கையில் மாற்றம் வருகிறது. அதன் காரணமாகவே கரிச்சாவுக்கும் அவனுக்குள்ளும் விரிசல் விழ ஆரம்பிக்கிறது… அதன் பின்னான வாழ்க்கை என்னாகிறது..?

வெள்ளச்சாமி உயர வேண்டும் என்று நினைக்கும் ராமு கீதாரி தன் ஆடுகளை எல்லாம் இழந்து, இருக்கும் பத்து ஆடுகளுடன் தனியே போனபின் நடப்பது என்ன..?
இவற்றை எல்லாம் ஒரு புள்ளியில் நிறுத்தி, கதையை அழகாகச் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் சு. தமிழ்செல்வி.

இக்கதைதான் சமுத்திரக்கனி – அமலாபால் நடிப்பில் திரைப்படமாக வர இருக்கிறது.
கீதாரி – வாசிக்க வேண்டிய நாவல்.

கீதாரி (நாவல்)
சு.தமிழ்ச்செல்வி
பக்கம் : 180
விலை : 145
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

0 Comments

  1. rajaram

    அருமையான விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *