ஆர்.வி. சரவணன்.
முன்கதை:
நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் தன் முன்னாள் காதலியின் குடும்பத்தைச் சந்திக்க நேர்கிறது மாதவனுக்கு. அவளின் அப்பாவோ இப்போதும் மிரட்டுகிறார், அவளோ தன்னைக் காதலித்து ஏமாற்றிய திருடன் என்கிறாள் அவனை. மணமக்கள் இருவரும் மொட்டைமாடியில் சந்தித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட, அவர்களுக்குத் துணையாகச் செல்லுமிடத்தில் இருவருக்குள் நிகழும் வாக்குவாதத்தில் அவளைக் கை நீட்டி அடித்து விடுகிறான் மாதவன்.
இனி…
மாதவன் மீரா அழுவதையே பார்த்து கொண்டிருந்தான். தன் மீதே வெறுப்பு வந்தது அவனுக்கு.
மாதவன் மீராவோடு பழகிய அந்தக் கல்லூரி நாட்களில் அவளை ஒரு முறை கூட அவன் கடிந்து பேசியது இல்லை. மீராவும் அவன் கோபம் கொள்ளும் அளவுக்கு நடந்து கொண்டதும் இல்லை. பேசியதும் இல்லை. இதோ இன்றுதான் முதல் முறையாக அடித்திருக்கிறான். எப்படி சமாதானப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை. அவளிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று அவன் யோசித்து கொண்டிருக்க, மீராவே ஆரம்பித்து விட்டாள்.
“ஏன் என்னை விட்டு போனீங்கன்னு தெரிஞ்சிக்க ஆசைப்படறேன். உண்மையைச் சொல்வீங்களா மாட்டீங்களா..?”
நடந்த விசயமெல்லாம் சொல்ல வேண்டாம் என்று ராஜன் தன்னிடம் சொன்னது மாதவனுக்கு ஞாபகம் வந்தது என்றாலும் இனி அதை மறைப்பதால் நாம்தானே இதுவரை சுமந்த கெட்டவன் என்ற பட்டத்தைக் காலத்துக்கும் சுமக்க வேண்டியிருக்கும். ராஜனுக்காக நான் ஏன் பயப்படணும்..? நான் ஏன் இவள் முன் என்னைக் குற்றவாளி ஆக்கிக் கொள்ளவேண்டும்..? எல்லாத்தையும் சொல்லிடலாம் என்ற முடிவுக்கு வந்தான் மாதவன்.
“நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் எந்த ரகசியமும் இருக்க கூடாதுன்னு அப்பவே முடிவு பண்ணியிருக்கோம் தெரியும்ல” மீரா விடுவதாய் இல்லை, அவளுக்கு நடந்தது என்ன என்ற உண்மை தெரிந்து ஆக வேண்டும் என்பதில் குறியாய் இருந்தாள்.
“நடந்தது அத்தனைக்கும் உங்கப்பா அம்மா தான் காரணம். அவங்களையே கேளு” என முதல் குண்டைத் தூக்கி அவள் முன் வீசினான்.
மீரா அதிர்ந்தாலும் “எங்கப்பா அப்பாவி. அவர் மேல பழி போடாதீங்க ” எனச் சீறினாள்.
“இரட்டை வேசம் போடறவர் உங்கப்பா. உனக்குத்தான் தெரியல. எல்லா பிரச்னைக்கும் மூல காரணம் அவர் தான்”
“அவர் என்ன பண்ணார்?.”
“நாம இறுதி சுற்று படம் பார்க்கப் போயிட்டு வந்த அடுத்த நாள் நீ போன் பண்ணியே ஞாபகம் இருக்கா”
“ம்”
****
செல்போன் தொடர்த்து மூன்றாவது முறையாக அடிக்கவும் பாத்ரூமிலிருந்து பாதி துவட்டிய தலையுடன் நீர் சொட்டச்சொட்ட வெளியே வந்த மாதவன் போனை எடுத்தான்.
மீரா தான் பேசினாள்.
“மாதவ். வீட்ல நிலமை சரியில்ல”
“என்னாச்சு?”
“நாம சினிமாவுக்கு போனது யார் மூலமோ தெரிஞ்சுடுச்சு. வீட்ல பெரிய சண்டை. எங்கப்பாவை விட அம்மாதான் ரொம்பவும் படுத்தறாங்க. சொந்தக்காரப் பையனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதா பேச்சு வார்த்தை நடக்குது. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். என்னைய தொடர்ந்து வாட்ச் பண்ணிட்டே இருக்காங்க. நாம எங்காவது போயிடலாம்”
“ஓடிப் போயிடலாங்கிறியா. தப்பு. உங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்படும்”
“அவங்க நம்மை பிரிச்சிடக் கூடாதுன்னு தான் வெளிலயே போறோம். அவங்களை பின்னாடி பார்த்துக்காம விட்ற போறோமா என்ன. என் குடும்பத்துக்காக உன்னை விட்டுற முடியாது.”
“எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்னா என்ன சொல்வாங்கனு தெரிலயே”
“ராஸ்கல். இந்த ஆம்பளைங்க ஏன் இப்படி இருக்கீங்க. காதலிக்கிறப்ப இதெல்லாம் தோணாதா”
“அப்பவும் தோணுச்சு. பிரச்னை வரப்ப பார்த்துக்கலாம்னு அதை பத்தி திங்க் பண்ணவே இல்ல.”
“மாதவ். நீ தான் என் உலகமே. நீ எங்க வேண்ணா அழைச்சிட்டு போ. நான் எந்த கேள்வியும் கேட்காம வரத் தாயாரா இருக்கேன் “
“சரி கிளம்படலாம்”
“ஓகே. சென்னை போறதுக்கு 24-ம் தேதிக்கு ரயில் டிக்கெட் இன்னிக்கே புக் பண்ணிடு. நான் இன்னிலேருந்து தினமும் கொஞ்ச கொஞ்சமா என்னோட ட்ரெஸ், நகைகளைக் கொண்டாந்து ரேகாகிட்ட கொடுத்து வைக்கிறேன். அவ எல்லாத்தையும் பத்திரமா ஒரு சூட்கேஸ்ல ரெடி பண்ணி வச்சிடுவா. நீ என்ன பண்றே நாம கிளம்பற அன்னைக்குப் போய் அதை வாங்கிட்டு வந்து உங்கிட்ட வச்சிக்க. நைட் ரயில்வே ஸ்டேஷன்ல மீட் பண்ணுவோம்.
“நகையெல்லாம் எதுக்கு? அதெல்லாம் வேண்டாம்”
“பின்னே… நமக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் காசுக்கு என்ன பண்றது?”
“அதுக்காக… எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டான்னு பேரு வரணுமா…? உனக்குப் பின்னால தங்கச்சிங்க இருக்காங்க”
“என்னோட நகைகளைத்தான் எடுத்துக்கிட்டு வர்றேன்னு சொன்னேன். அது இருக்கதுதான் ஆரம்பகால வாழ்க்கைப் பிரச்சினையை சமாளிக்கச் சரியா இருக்கும்”
“ம்… சரி நீ எப்படி வருவே..?”
“ரேகாவை பார்க்க போறதா சொல்லிட்டு கிளம்பி வந்துடுவேன்”
“ஓகே. டன்”
“இந்த ஒரு வாரம் முழுக்க நான் உன்னை மீட் பண்ண வர மாட்டேன். நீயும் என்னை பார்க்க வர வேண்டாம். செல்போன்லயே பேசிக்கலாம். நானே கால் பண்றேன்”
“ம்”
ஒரு வாரம் கடந்தது. இருவரும் சந்தித்து கொள்ளவே இல்லை. கல்லூரியில் சர்ட்டிபிகேட்ஸ் வாங்க வந்திருந்த போது கூட பார்வையாலேயே பேசி கொண்டார்கள்.
அவர்கள் கிளம்ப வேண்டிய அந்த நாளும் வந்தது. ‘ரேகாவிடம் சென்று சூட்கேஸ் கலெக்ட் பண்ணிக்க’ என்று மீரா காலையிலேயே மெசேஜ் அனுப்பியிருந்தாள். மாதவன் ரிசர்வேசன் செய்த ரயில் டிக்கெட்டை மீராவுக்கு அனுப்பினான்.
மதிய வெயிலில் ரேகாவிடம் சென்று சூட்கேஸ் வாங்கி கொண்டு வந்து வைத்து விட்டு அறையிலிருந்த தன் பொருட்களை எடுத்து பேக் செய்து கொண்டிருந்தான்.
கதவு தட்டும் சத்தம் கேட்டது.
குழப்பமாய் எழுந்து சென்று கதவை தயக்கமாய் திறந்தான்.
அங்கே-
மீராவின் அப்பா அம்மா இருவரும் அவளின் தங்கைகளுடன் பதட்டமாய் நின்றனர்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
செவ்வாய்க்கிழமை தொடரும்.
Leave a reply
You must be logged in to post a comment.