தொடத் தொட தொடர்கதை நீ…. – 12

ஆர்.வி.சரவணன்

முன்கதை:

திர்பாராத சந்திப்பில் முன்னாள் காதலியை மாதவன் எதிர்கொள்ளும் போது தன்னை விட்டு அவன் பிரிந்து சென்ற காரணத்தைச் சொல்லச் சொல்லி சண்டை போடுகிறாள். அதுவரை யாரிடமும் சொல்லாத அவளது குடும்பத்துக்கும் அவனுக்குமான நிகழ்வைச் சொல்ல ஆரம்பிக்கிறான். அந்த காதல் முறிவுக்கான கதையில் மகளை விட்டு விலகச் சொல்லிப் பேசும் குடும்பம் விஷத்தை எடுத்துக் குடிக்கப் போவதாய் மிரட்ட, அரண்டு போகிறான்.

இனி….

மாதவன் ராஜனின் வார்த்தைகளில் சற்றே மிரண்டான்.

மீராவின் அம்மாவும் திவ்யாவும் அதிர்ச்சியில் அவரது கைகளை பிடித்து கொள்ள, கையில் இருந்த செல்போனில் டைப் செய்து கொண்டிருந்த காவ்யா ஓடி வந்து தோள்களை பிடித்து கொண்டாள்.

“என்ன. பிளாக் மெயில் பண்றீங்களா..?” மாதவன் சீறினான்.

” எப்படி வேண்ணா எடுத்துக்கோ”

“வீடு புகுந்து மிரட்டறது கொஞ்சம் கூட சரியில்ல”

“இது மிரட்டல் இல்ல. நடுத்தர வர்க்க குடும்பத்தோட கையாலாகாத்தனம். எங்களுக்கு வேற வழி தெரியல. எல்லாரும் பொண்ணு ஓடி போனவுடனே விஷம் குடிப்பாங்க. நாங்க அந்த அசிங்கம் நடக்கறதுக்கு முன்னாடியே குடிச்சிடறோம்” கண் கலங்கினார்.

திவ்யா “அப்பா வேணாம்ப்பா” என்று கெஞ்சி கொண்டிருக்க, காவ்யா தான் கோபமாய் பேசினாள்.” வாழ வேண்டிய நாம எதுக்குப்பா சாகணும்”

“உங்க அக்காவும் இவரும் தான் வாழ விட மாட்டேங்கிறாங்களேம்மா”

“இந்தக் கல்நெஞ்சகாரன் கிட்ட நீங்க என்ன அழுது புரண்டாலும் அத கண்டுக்கிற மாதிரி தெரியலியே “

மீராவின் அம்மா அவன் இவன் என்று பேசியது மாதவன் தன்மானத்தை உரசினாற் போலாகிவிட்டது. சிடுசிடுத்தான்.

“இந்த ட்ராமாவை வீட்ல உங்க பொண்ணு முன்னால் போய் போடுங்க”

“என் பொண்ணு குடிச்சிக்கோன்னு போய்கிட்டே இருப்பா. அதான் உன் கிட்டே வந்திருக்கோம்”

“நானும் அதே கேரக்டர் தான். கிளம்புங்க” என்று மாதவன் சொன்ன அடுத்த நொடி, ராஜன் பாட்டிலை அவசரமாக எடுத்து திறந்து வாயில் கொண்டு போக, அந்த குடும்பமே அவரிடமிருந்து பாட்டிலை பிடுங்க போராட ஆரம்பித்தது.

மாதவன் கொஞ்சம் அசட்டையாக தான் அவரை கணித்திருந்தான். அவரது அந்த செயல் அதிர்ச்சியை கொடுக்கவே, ஓடி வந்து அவர் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி சுவற்றில் எறிந்தான். பாட்டில் உடைந்து சிதற திரவம் எங்கும் பரவ ஆரம்பித்தது.

“உங்களுக்கு என்ன தான் வேணும். சொல்லி தொலைங்க.”

திடீரென்று ராஜன் கீழே குனிந்து மாதவன் கால்களை பிடித்து கொண்டார்.

“என் பொண்ணை விட்டுடுப்பா. உனக்கு ஆயிரம் பொண்ணு கிடைப்பா. எனக்கு கிடைக்கிற சம்பளத்துல குடும்பம் நடத்தறதே பெரிய விஷயமா இருக்கு. மூணு பொண்ணுங்களை எப்படி கரையேத்த போறோம்னு தெரியாம நிக்கிறேன்.இதுல என் பொண்ணை அழைச்சிட்டு நீ போயிட்டீனா எங்களுக்கு கையொடிஞ்சு போன மாதிரி ஆகிடும் “

தங்கைகள் இருவரும் அழ ஆரம்பித்தார்கள். மீராவின் அம்மா எங்க நிம்மதியை கெடுக்க வந்த சண்டாளா என்பது போல் கோபமாகவே பார்த்து கொண்டிருந்தார். மாதவன் ஒரு முடிவுக்கு வந்து,

“சரி எழுந்திருங்க” என்றான்.

ராஜன் கண்களை துடைத்து கொண்டு எழுந்தார்.

சில விநாடிகள் அங்கே மௌனம் நிலவியது.

“ஒரு குடும்பமே என்னை வேண்டாம்னு எதிர்த்து நிக்கிறப்ப நான் என்ன தான் பண்ணி தொலைக்கிறது” சற்று நிதானித்தவன் “உங்க பொண்ணை விட்டுடறேன். ” சலிப்பாய் சொன்னான்.

“நம்பலாமா..?” ராஜன் தயக்கமாய் கேட்டார்.

மாதவன் வேதனையாக புன்னகைத்தான்.

“என் அப்பா, அம்மா, தங்கை மேல சத்தியம்”

“இது போதும்பா” மீராவின் அம்மா கையெடுத்து கும்பிட்டார்.

“உங்க பொண்ணு கொடுத்தனுப்பிய சூட்கேஸ் அதோ இருக்கு. அதுல துணி மணியோட நகைகளும் இருக்கு. எடுத்திட்டு கிளம்புங்க.”

அவர்கள் அனைவரும் அதிர்ச்சியாய் அவனையும் சூட்கேசையும் மாறி மாறி பார்த்தார்கள்.

“நான் மீராவை கட்டின புடவையோட தான் வர சொன்னேன். அவ கேட்கல”

மீராவின் அம்மா ஓடி சென்று சூட்கேஸ் திறந்தார். துணிகளுக்கு இடையே நகைப்பெட்டி இருந்தது.

மாதவனை நெகிழ்ச்சியோடு பார்த்தார்.

“எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி தம்பி” கை கூப்பிய படி சொன்னார் ராஜன்.

“என்னை சமாளிச்சிட்டீங்க. ஆனா மீராவை எப்படி சமாளிக்கபோறீங்க? நான் எங்க போனாலும் என்னை அந்த பொண்ணு விடாது. தேடி வந்துரும்.”

“அதை நாங்க பார்த்துக்கிறோம்” அம்மா உடனடியாக சொன்னார்.

“நீ மட்டும் இன்னிக்கு இந்த ஊர்லேருந்து கிளம்பிடு.செல்போன் சிம் மாத்திடு”

ராஜன் கெஞ்சலாய் சொன்னார்.

வேதனையாய் தலையாட்டினான்.

காவ்யா, திவ்யா இருவரும் பவ்யமாக வர்றோம் என்று அவனுக்கு தலையாட்டினார்கள்.

அந்த பவ்யம் பார்த்து அவ்வளவு வேதனையிலும் சிரிக்க தோன்றியது அவனுக்கு.

அப்போது தான் காக்கி யூனிபார்மில் தடாலடியாக உள்ளே நுழைந்தார் அவர்.

மாதவன் சட்டையை கொத்தாக பிடித்தார்

“ராஸ்கல் படிக்க வந்தியா. பொண்ணுங்களை டாவடிக்க வந்தியா ” பளாரென்று கன்னத்தில் அடித்தார்.

திணறிய மாதவனை மீண்டும் மீண்டும் இரு கைகளாலும் அறைந்தார். மீரா அப்பா ஓடி வந்து தடுத்தார்.

“அவனை விட்டுடுங்க இன்ஸ்பெக்டர். என் பொண்ணை விட்டு விலகிடறதா சொல்லிட்டான்”

“அதெல்லாம் நடிப்பு. காவ்யாவை போன் ஆன் பண்ணி வைக்க சொல்லி அவன் பேசினத கேட்டு கடுப்பாகி தான் ஓடி வந்திருக்கேன்.”

“சார். தேவையில்லாம கை வைக்காதீங்க.” மாதவன் ஆவேசமாய் கத்தினான்.

“வாடா நீ” என்று உள்ளே வந்த கான்ஸ்டபிள்களிடம் தள்ளினார்.

ராஜனும் அவர் மனைவியும் பதற பதற மாதவனை அழைத்து கொண்டு கிளம்பினார்கள்.

சூட்கேசுடன் மனைவி மகள்களை ஆட்டோ பிடித்து அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த ராஜன் ஸ்டேஷனுக்கு தன் டூவீலரில் விரைந்தார்.

இப்படி அடி வாங்கி அசிங்கப்பட்டதால் ரோசம் வந்து மீண்டும் தன் பெண்ணை தேடி மாதவன் வந்து விட போகிறானே என்ற புதுக் கவலை அவரை ஆக்ரமிக்க ஆரம்பித்தது.

செவ்வாய்க்கிழமை தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *