பரிவை சே.குமார்
இந்தக் காலத்தில் நாட்டுப் புறப்பாடல்களை இசையோடு பாடி தொகுத்து வைக்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் வாய்வழிப்பாட்டுத்தான். அப்படி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் தங்கள் மனதில் தோன்றியதைப் பாட்டாக்கி வைக்க, வழிவழியாகப் பலர் பாடி வந்தாலும் நம்மவர்கள் அந்தப் பாடல்களை எல்லாம் பாதுகாத்து வைக்கவில்லை. எத்தனை பாடல்கள்… எல்லாமே செவி வழியாய்க் கேட்டு ஒவ்வொரு தலைமுறையிலும் தலைமுறைக்கேற்ப மாற்றத்தை உள்வாங்கி நிறைய அழிந்து விட்டது என்றே சொல்லலாம். யாரோ ஒரு பாடி வைத்ததை இன்று மேடைகளில் நாங்களே எழுதினோம் எனச் சிலர் கொஞ்சமாய் மாற்றிப் பாடுவதை நாமும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
சிவகங்கை மாவட்டத்தில் கொல்லங்குடி கருப்பாயி என்றால் அவ்வளவு பிரபலம். அதுவும் நடிக்க வந்திச்சு… ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜனுக்கு அப்பத்தாவாக வரும். அந்தப் படத்துல கூட காட்சிக்கு காட்சி அது நாலு வரி பாடும். எல்லாமே நாட்டுப்புறப் பாட்டுத்தான். ஆனா அது பாடுனதில் முக்கால்வாசிப் பாடல்களுக்கு மேல் தொகுப்பாகவோ சேகரிக்கப்படவோ இல்லை என்பதுதான் உண்மை. பரவை முனியம்மா, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், அனிதா குப்புச்சாமி, சிங்கம்பட்டி தங்கராசு, இப்ப மேடைகளில் கச்சேரி நடத்துபவர்கள் என மிகப் பிரபலமான சிலர் நாட்டுப்புறப் பாடல்களை எல்லாம் கேசட்டுகளாகவும் சீடிகளாகவும் மாற்றி காசு பார்த்தார்கள் என்றாலும் அழிந்து போய்க் கொண்டிருக்கும் நாட்டுப்புற பாடல்களை சேமித்து வைத்தவர்கள் அவர்கள்தான். அவர்களின் தொகுப்புக்கள் எல்லாம் இனி காலங்களுக்கும் நிலைத்திருக்கும் என்றாலும் காடு, மேடு, கழனிகளில் பாடித்திரிந்த பாடல்களைப் போலில்லை இவை. சினிமாப் பாடல்களைப் போல் வடிவம் பெற்று வளர்ந்து நிற்பவைதான் இவை.
நாட்டுப்புறப் பாடல்கள் என்பது செய்யும் வேலைக்கு ஏற்ப வேலையின் கடினம் தெரியாத வண்ணம் பாடுவதே ஆகும். இது பிறப்பில் ஆரம்பித்து இறப்பு வரைக்குமான கிராமத்து வாழ்க்கையில் பாடப்படுகிறது. திருவிழா, விவசாயம், திருமணம், சடங்கு, பிறப்பு, இறப்பு என எல்லாவற்றிற்கும் பாடல் இருக்கிறது. இதில் முக்கியமாக
தாலாட்டுப் பாட்டு
நடவுப் பாட்டு
குலவைப் பாட்டு
மொளக்கொட்டுப் பாட்டு
ஏற்றப் பாட்டு (தண்ணீர் இறைக்கும் போது பாடுவது)
நலுங்குப் பாட்டு
ஒப்பாரிப் பாட்டு
என்பவற்றைச் சொல்லலாம்.
நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி எழுத வேண்டுமென்றால் அது குறித்த அறிவை கொஞ்சமாவது வளர்த்துக் கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும், சும்மா போற போக்கில் எழுதிவிட்டு இதுதான் வரலாறு என்று சொல்வதைப் போல் எழுதிவிட முடியாது . ஆனால் தாலாட்டுப் பாடல் குறித்து அறிந்ததை, கேட்டதை வைத்துக் கொஞ்சம் எழுலாம்.
அன்று கிராமத்தில் பிறந்த குழந்தைகள் எல்லாருமே தாலாட்டுப் பாடல் கேட்டுத்தான் வளர்ந்தார்கள். நகரத்தில் தாலாட்டுப் பாடல் கேட்டு தூங்கிய குழந்தைகள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. இன்று அன்றைய நகரத்து நிலமைக்கு கிராமங்களும் மாறியாச்சு. பிள்ளையை தொட்டிலில் போட்டு ஆட்டி விட்டுவிட்டு டிவியில் பாடலைப் போட்டு விட்டு வேலை செய்ய ஆரம்பித்தவர்கள் இப்போதெல்லாம் செல்போனில் பாடலைப் போட்டுக் குழந்தைக்கு அருகில் வைத்துவிடுகிறார்கள். அதுபோகச் சிலரோ அனிருத் உருட்டுவதை வைத்தால் தூங்குது என அதை காதுக்கு அருகில் டமாரம் அடிப்பது போல் வைக்கிறார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் குழந்தை முகம் பார்த்துச் சிரிக்க் ஆரம்பிக்கும் போது கையில் போனைக் கொடுத்து நாட்டுப்புற, சினிமா, கார்ட்டூன் பாடல்களைக் கேட்கப் பழக்கி விடுகிறார்கள். ஒரு வயதுக்குள் யுடியூப்பில் அது தானகவே பாடல்களை எடுப்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டு திரிந்து விட்டு, மூன்று வயதில் முன்னூறு டாக்டரிடம் போகிறார்கள்.
இரண்டாயிரத்துக்கு முன்பான கிராமங்களில் குழந்தையை தொட்டிலில் போட்டு ‘ரே…ரே..ரே… எங்கண்ணூறங்கு…’ என்று ஆரம்பித்து அழகாகப் பாட, தொட்டிக்குள் கிடக்கும் குழந்தை சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கும். அந்த இசை அற்ற ராகத்தில் மயங்கி அப்படியே தூங்கிப் போகும். எங்க வீட்டில் எங்க அக்காள்களின் குழந்தைகளுக்கும் அண்ணன்களின் குழந்தைகளுக்கும் அம்மா தாலாட்டுப் பாடுவார். கேட்க அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்… அவரோடு அடுத்தடுத்த வரிகளை நம்மளும் பாடுவதுண்டு.
தாலாட்டில் கூட பிறந்து வீட்டுப் பெருமையை அழகாகப் பேசுவார்கள். புகுந்த வீட்டை கொஞ்சம் இறக்கித்தான் வைப்பார்கள். அடிச்சது யாருன்னு கேட்கக்கூட பாடலின் ஊடே
‘மாமன் அடிச்சானோ… மல்லிகைப்பூச் செண்டாலே…
அத்தை அடிச்சாளோ… அரளிப்பூக் கம்பாலே… ‘
அப்படின்னு பாடுவாங்க. அடுத்த வரியில
‘யாரடிச்சி நீ அழுதே… அழுத கண்ணீர் ஆறாச்சு…
அடிச்சாரைச் சொல்லிவிடு அபதாரம் போட்டிடுவோம்… ‘
இப்படிப் பாடுவாங்க.
இதையே இப்ப நாட்டுப்புறப் பாடல்கள் பாடுறவங்க கொஞ்சம் நகைச்சுவை ஆக்கிட்டாங்க…. அம்மா இப்படிப் பாடினதும் அப்பா திண்ணையில் இருந்து
‘யாரும் அடிக்கவில்லை… அபராதம் தேவையில்லை…
தன்னோடு விளையாட தம்பிப்பாப்பா வேணுங்கிறான்’
அப்படின்னு பாடுவதாகச் சொல்லி சிரிக்க வைக்கிறாங்க. இது நகைச்சுவையா இருந்தாலும் நாட்டுப்புறப் பாடலே வாயில் வரும் வார்த்தைகளைக் கோர்த்து வர்ணஜாலம் ஆக்குவதுதானே என்பதால் கோர்வையாய் பாடுவதால் இதுவும் நல்லாத்தான் இருக்கு.
தாலாட்டுப் பாடும் போது அழுகாம கேக்குற குழந்தை, பாட்டை விட்டுட்டா உடனே அழுக ஆரம்பிச்சிடும். அப்புறம் நாலு அதட்டுப் போட்டு… பூனை வருது… மியாவ், நாய் வருது… வவ். மாடு வருது…ம்மா என்றெல்லாம் சத்தம் கொடுத்து அதட்டிப் பார்த்து முடியாதபட்சத்தில் மீண்டும் தாலாட்டை ஆரம்பித்து விடுவார்கள்.
‘ஆராரோ… ஆரிரரோ….
யாராரோ… யாரிவரோ…’
என்று ஆரம்பிக்கும் பாடலில் வரிகள் எல்லாம் ஒவ்வொரு மண்ணுக்குத் தகுந்தவாறு மாறிவரும். வார்த்தைகளைக் கோர்வையாக்கி அழகாகப் பாடுவார்கள். எங்கம்மா கூட தாலாட்டுப் பாட்டை வகைவகையாகப் பாடுவார். ஆனால் எதற்குமே தொகுப்பு இல்லை. ஒவ்வொரு முறை பாடும் பாடலிலும் நல்லதங்காள் கதை, மருது சகோதரர்கள் கதை, மீனாட்சி திருக்கல்யாணம் என எதாவது ஒரு கதையை அழகாய் பாடலாக்கிவிடுவார்கள். தாலாட்டுப் பாடல்களில் வரும் வரிகள் சிலவற்றை கீழே தொகுத்திருக்கிறேன் பாருங்கள். எவ்வளவு அற்புதமாய் இருக்கிறது என்று பாருங்கள்.
“சித்திரை மாசத்துல எங்கண்ணே…
கள்ளழகர் திருவிழாவாம்…
திருவிழாக் கூட்டத்துல எங்கண்ணே…
உங்கப்பா திருதிருன்னு முழிச்சாங்களாம்”
“ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ”
“ஓடும் மான் கண்ணோ என் கண்ணே
நீ கவரிமான் பெற்ற கண்ணோ
புள்ளி மான் கண்ணோ என் கண்ணே
நீ புத்திமான் பெற்ற கண்ணோ…”
“முத்தோ ரத்தினமோ என் கண்ணே
நீ தூத்துக்குடி முத்தினமோ…
முல்லை மலரோ என் கண்ணே
நீ அரும்புவிரியா தேன்மலரோ..”
“மாடு மேய்க்கப் போகயிலே என் கண்ணே
மரிக்கொழுந்து பறிச்சு வாறேன்…
ஆடு மேய்க்கப் போகயிலே என் கண்ணே
அல்லிப் பூவும் கொண்டு வாறேன்…”
இப்போ எந்தக் குழந்தைக்கும் தாலாட்டுப் பாட்டு இல்லை என்பதைவிட தாலாட்டுப் பாடல் தெரிந்த எல்லோருமே முதுமையின் எல்லையில் இருக்கிறார்கள், அவர்களுக்கு அடுத்த தலைமுறைக்கு படப்பாடல்கள் மட்டுமே தெரியும். இப்போது உத்திரத்தில் தொட்டில்கட்டி அதில் குழந்தையை இட்டு, இடையில் குழந்தை முகம் பார்க்க, தொட்டிக் கம்பு வைத்து ‘ரே… ரே.. ரே…’ என்றெல்லாம் பாடுவதில்லை. குழந்தை ஏசியில்தான் படுக்கும்… மெத்தையில் போட்டால் போதும்… இந்த சோப்புத்தான் போடணும்… இந்த எண்ணெய்தான் தேய்க்கணும். சாம்சங் இல்லாடி ஒன்பிளஸ் கொடுக்கலாம் என்றுதான் வளர்க்கிறார்கள். மேலும் இப்போது கிராமத்தில் இருக்கும் பெரியவர்களுக்கும் தொட்டியை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க சக்தியும் இல்லை, அவர்களின் வாரிசுகள் கிராமத்திலும் இல்லை.
இன்னொரு வருத்தம் என்னன்னா அன்னைக்கு ரெண்டு வயசு மூணு வயசு வரைக்கும் எல்லாம் குழந்தைகளுக்கு பால் கொடுத்தாங்க… இன்னைக்கு ரெண்டு மாசம் கொடுக்கிறதே பெரிய விஷயமா இருக்கு… அழகு போயிருமாம்… எனக்கென்னவோ வருடக் கணக்கில் பால் கொடுத்த, அழகம்மைகளும், கருப்பாயிகளும் காளியம்மாக்களும் கடைசி வரைக்கும் அழகாத்தான் இருந்தாங்க… அவங்க அழகுக்காக எந்த அழகு சாதனப் பொருளும் பயன்படுத்தலை.. இருந்தும் கல்லு வச்ச மூக்குத்தியும் காதுல தண்டட்டியுமாக கட்டையில போறவரைக்கும் அழகிகளாத்தான் வாழ்ந்தாங்க… ம்… இதெல்லாம் நமக்குப் புரியாது. நடவண்டி இப்ப எங்கயாச்சும் இருக்கா..? நாமளே இப்ப நடக்க யோசிச்சி மின்சார வண்டியில ஓடிக்கிட்டு இருக்கோம். காலம் மட்டும் மாறவில்லை, நல்லவைகளையும் மறக்கடித்து விட்டது.
ஆராரோ… ஆரிரரோ… என் கண்ணே….
மாசி பொறக்குமடா…
உன் மாமன் குடி ஈடேற!
தையி பொறக்குமடா – உங்க
அப்பன் குடி ஈடேற!
ஆராரோ ஆரிரரோ…
என் கண்ணே கண்ணுறங்கு…’
Leave a reply
You must be logged in to post a comment.