கமலா முரளி
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும் இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கேந்திரிய வித்தியாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றியவர். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான ‘சீர்மிகு ஆசிரியர்’ விருதினை 2009 ஆண்டு பெற்றார். இவரது கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது மொழிபெயர்ப்பு நூலான ‘மங்கை எனும் மந்திர தீபம்’ (‘A Lady With The Magic Lamp’) எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘இந்துமதி கல்யாணம் எப்போ?’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவந்திருக்கிறது. கலைமகள் சிறுகதைப் போட்டியில் பரிசும், குவிகம் குறும்புதினப் போட்டியில் சிறப்பு தேர்வையும் இவரது படைப்புகள் பெற்றிருக்கின்றன.
*********
ரத்னகுப்தன் மிகவும் அயர்ந்து சோர்ந்துவிட்டான். வலுவிழந்த கால்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலவில்லை. ஊன்றுகோலைத் தாங்கிய கைகளுக்கு ஓய்வு கொடுத்து, அருகே இருந்த பாறையில் அமர்ந்தான்.
“தாகமாக இருக்கிறது. அருந்த நீர் தா, கலாராணி,” என ரத்னகுப்தன் கேட்டான்.
“ஒரு துளி நீர் கூட இல்லையே ! சற்று அமருங்கள், நான் அருகில் ஏதேனும் சுனை இருப்பின் நீர் மொண்டு கொணர்கிறேன்” என்றாள் கலாராணி.
“அம்மா, நீங்கள் இருங்கள். அப்பாவுக்குத் துணையாக இருங்கள். அவரது ஆடைகளைத் தளர்த்தி, தன்மையான காற்று வர விசிறி விடுங்கள். நான் சென்று நீர் எடுத்து வருகிறேன்” என்று சொல்லியபடி, சிறுவன் சோமன் நடக்கத் தொடங்கினான்.
பெற்றோர் இருவரும் பாறையில் அமர்ந்து இளைப்பாறினர்.
நேரம் கடந்தது. சோமன் திரும்ப வரவில்லை.
சோமனைக் காணவில்லையே எனத் தாயுள்ளம் பதறத் தொடங்கியது.
“சோமா… சோமா…என்று ஓங்கிய குரலில் கூவினாள்.
மலைக்குன்றின் வெளியில் பட்டு, அவள் குரல் எதிரொலித்தது.
கிராமத்தின் மையப்பகுதியில் நாவல் மரங்களின் நிழலில் விளையாடிக் கொண்டிருந்தனர் திலகாவும் அவள் தோழர்களும்.
“ஏதோ சத்தம் கேட்கிறது. யாரோ கூவி அழைக்கிறார்கள்… மலையடிவாரத் திட்டுப்பாறை அருகே இருந்து தான் வருகிறது…” என அனுமானித்த திலகா, “சிவநந்தா, ரம்பை, வரதா….எல்லோரும் வாருங்கள்” என்று கூறியபடியே குரல் வந்த திசை நோக்கி வேகமாக நடக்கத் துவங்கினாள்.
காலடிச் சத்தம் கேட்டு தன் மகன் வந்துவிட்டானோ என நினைத்த தம்பதியினர் ஆசையுடன் திரும்பிப் பார்த்தனர்.
ஒரு சிறு பெண் வேகமாக தங்கள் அருகே வருவதைப் பார்த்தனர்.
திலகா, மிக கம்பீரமாக, “அம்மா, என்ன ஆயிற்று ? ஏன் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?”
“அம்மா, குழந்தை, நீ யாராம்மா ? யாருமில்லா இந்த பாறைப் பகுதிக்கு ஏன் வந்தாய் ?” எனக் கேட்டாள் கலாராணி.
“அம்மா, நான் அருகில் இருக்கும் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவள். ஏதோ ஆபத்துக்குரல் போல இருந்தது. நீங்கள் யார் ? ஏதேனும் உதவி …”
“நாங்கள் வேழ தேசத்தைச் சேர்ந்தவர்கள். வெகு தூரத்தில் இருந்து வருகிறோம். அயர்வாக இருந்தது. நீர் எடுத்து வர எனது மகன் சென்றுள்ளான்.”
“எங்கள் கிராமத்துப் பக்கம் யாரும் வரவில்லையே…”என்றாள் திலகா.
அதற்குள் அவளது நண்பர்களும் அங்கே வந்துவிட்டார்கள்.
”தோழர்களே, நம் கிராமத்துப் பக்கம் புதியவர்கள் யாரேனும் தென்பட்டார்களா ?”
“இல்லயே…யாரும் புதியதாக வரவில்லை என உறுதியாகவே கூறுவேன்” என்றான் வரதன்.
“அம்மா, தங்கள் மகன் எந்தப் பக்கமாகச் சென்றான் ? என வினவ, “குழந்தை, வலது புறம் போயிருக்கிறான் அம்மா”என்றான் ரத்னகுப்தன்.
“நாங்கள் சென்று பார்க்கிறோம்” என்ற திலகா, ”சிவா, நீ விரைந்து நம் கிராமத்துக்குப் போய் இவர்களுக்கு உணவும் நீரும் கொண்டு வா”
“நாங்கள் உங்கள் மகனைத் தேடி அழைத்து வருகிறோம். தங்கள் மகன் பெயர் என்ன அம்மா “ என்று கேட்டாள் திலகா.
“அவன் பெயர் சோமன். சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கிறான் “என பதில் சொன்னாள் கலாராணி.
சிவநந்தன் கிராமத்தை நோக்கி வேகமாக ஓடவே ஆரம்பித்தான்.”அப்படியே, வண்டிக்கார மாமாவையும் அழைத்து வா…சிவா..” என்று கத்தினாள் திலகா.
வரதனும்,ரம்பையும் திலகாவுடன் சோமனைத் தேடக் கிளம்பினார்கள்.
இடது புறப் பாதை சற்று நேரத்தில் இரு வழிகளாகப் பிரிந்தது. ஒன்று முட்புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கும், மற்றொன்று சுனைப்பகுதிக்கும் செல்லும் பாதைகள் ஆகும்.
“சுனைப் பகுதிக்குச் சென்றிருந்தால், இந்நேரம், நீர் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து இருப்பான்.” திலகா.
“அடடா, அங்க ஒரு குளம் இருக்கு. அந்த தண்ணீர் விஷத்தன்மை உள்ளது என என் அப்பா நேற்று தான் என்னிடம் சொன்னர் “ என்று சொன்ன வரதன்,முதலில் வழி நடக்க, சிறுமிகள் அவணைப் பின் தொடர்ந்தனர்.
குளத்தருகே, சோமன் மயக்கமுற்று வீழ்ந்து கிடந்தான். கைகளிலும் கால்களிலும் முட்கள் கிழித்த காயங்கள்.
மூன்று பேரும் சேர்ந்து அவனைத் தூக்கிக் கொண்டு, பாதை பிரியும் இடத்துக்கு வந்தார்கள்.
அதற்குள் வேறு சில நண்பர்களும் அங்கே வந்துவிட்டனர்.
அவர்களிடம் இருந்த நீரை சோமன் முகத்தில் தெளித்தும் அவன் மயக்கம் கலையவில்லை. எல்லோருமாக சோமனை, தம்பதிகள் இருக்குமிடம் தூக்கி வந்தனர்.
கிராமத்துக் குழந்தைகள் கொண்டு வந்த நீரைப் பருகி, சற்றே ஆசுவாசம் அடைந்திருந்த ரத்னகுப்தனும் கலாராணியும் தங்கள் மகனை மயக்கமுற்ற கோலத்தில் பார்த்து அதிர்ச்சியுடன் அழத் தொடங்கினர்.
வண்டிமாடுகள் அசைந்து வரும் மணியோசை !
சிவா வண்டியுடன் வந்ததோடு இல்லாமல், வைத்தியரையும் அழைத்து வந்திருந்தான்.
வைத்தியர் நாடி பார்த்து, விஷம் ஏறிக் கொண்டு இருக்கிறது என முணுமுணுத்தபடி, சில மூலிகைகளைக் கசக்கி அவன் வாயில் பிழிந்தார்.
சோமனையும் அவனது பெற்றோர்களையும் ஏற்றியபடி, வண்டி கிராமத்தை நோக்கிச் சென்றது.
இன்னும் சில விசேஷ விஷ முறிவு மருந்துகளைக் குழைத்து அவன் நாக்கில் தடவினார் வைத்தியர்.
கலாராணி, அருகில் இருந்த கோயிலில் பதிகம் பாடி, பிரார்த்தனை செய்தாள்.
சில மணி நேரம் கழித்து, சோமன் கண்களைத் திறந்து பார்த்தான்.
“இன்னும் ஏழு நாளைக்கி மருந்து சிகிச்சை தீவிரமா செய்யணும். தேறி வந்தா, ஒரு மண்டலம் பத்தியம் இருந்து, மருந்து சாப்பிடணும்” என்றார் வைத்தியர்.
திலகாவின் புத்திசாலித்தனத்தாலும், எல்லாக் குழந்தைகளின் ஒற்றுமையும் உதவும் மனப்பான்மையும் தங்கள் சோமன் உயிரைக் காப்பாற்றியது எனப் புகழ்ந்தார் ரத்னகுப்தன்.
சிகிச்சை காலத்தில், ஓடியாடி விளையாட சோமனுக்கு அனுமதி இல்லை. மர நிழலில் அமர்ந்து, பிள்ளைகளோடு, பரமபதம், ஆடு புலி ஆட்டம், தாயம் விளையாட்டுகளை ஆடி மகிழ்ந்தான் சோமன். கூடிய சீக்கிரத்தில் அவனும், கிராமக் குழந்தைகளின் படையின் பட்டை தீட்டிய வீரனாக மாறி விடுவான்.
நன்றி : படம் இணையத்திலிருந்து