சுஶ்ரீ
போடிநாயக்கனூர், சேரடிபாறை மேல சொக்கநாதன் கோவில் பக்கம் புருஷோத்தமனின் பழைய கால வீடு அது, பெரிய கூடம்… நடுவுல ஊஞ்சல்… இதுதான் அந்த வீட்டின் சேதப் படாத பகுதி. காலை நேரம் ,அந்த கூடத்தில் யானையாய் தவழ்ந்து 3 வயது பேரன் முகுந்தை முதுகில் சுமந்து சுற்றி வந்தார் புருஷோத்தமன்.
“ ஏய் ஆனை வேகமா போ அச்சிடுவேன்”னு தாத்தாவை தவழ வைத்தான் முகுந்த். வாசலில நிழலாடியது போஸ்ட் மாஸ்டர் புஜங்க ராவ்தான்,நெடுங்கால நண்பர்.
“ என்ன முகுந்துக் குட்டி, தாத்தாவை வாக்கிங் போக விடுவயா”
“மாத்தேன், இது தாத்தா இல்லை , முகுந்த் செல்லத்தோட யானை”
யமுனா முகுந்தோட தாயார், புருஷோத்தமனோட மருமகள், “ ஏய் இறங்கு கீழே, பிரஷ் கூட பண்ணாம, தாத்தாவை தொந்தரவு பண்றயா”
முகுந்த் தாத்தாவின் முதுகை விட்டு இறங்கி புஜங்க ராவை நோக்கி வக்கணை காட்டிட்டு பாத்ரூமுக்குள் ஓடி மறைந்தான்.
புருஷோத்தமன் சிரித்துக் கொண்டே சட்டையை மாட்டிக் கொண்டார்,” யமுனா கதவை சாத்திக்கோம்மா, வாக்கிங் போயிட்டு வந்துடறேன்”
“ சரிப்பா ஜாக்கிரதையா போயிட்டு வாங்கோ, தண்ணி பாட்டில் எடுத்துண்டு போங்கோ”
மருமகளை மகளாக ஏற்றுக் கொண்டார் புருஷோத்தமன், மாமனாரை தகப்பனாராய் பாசம் செய்தாள் யமுனா.
இவ்வளவும் இப்ப இந்த ஆறு மாச நேரத்தில் நடந்த கால மாற்றம் செய்த கோல மாற்றம்.
பையன் ரகு பெங்களூரில் வேலை பாத்துக் கொண்டிருந்தான் பெற்றோரை எதிர்த்து இந்த யமுனாவைத் திருமணம் புரிந்து. முகுந்த் பிறந்தப்ப கூட போய் பாக்கலை. உலகத்தையே புரட்டிப் போட்ட கொரோனா கொடு நோய், இவர்கள் குடும்பத்தையும் விடலை. “தொண்டை கரகரனு இருக்கு யமுனா ,ஒரு சுக்கு காபி போடேன்”னு வந்து படுத்த ரகு ஒரு வாரம் எந்திருக்கலை, அப்பறம் எந்திருக்கவே இல்லை.
யமுனாக்கு திக்கு திசை தெரியலை 2 வயசும் சில மாதங்களுமே ஆன குழந்தை.யாரோ காமன் நண்பர் புருஷோத்தமனுக்கு தெரிவிக்க ஓடி வந்து மருமகளை, பேரனை போடிநாயக்கனூர் கூட்டிட்டு வந்தார்.விவரம் அறிந்து விக்கித்து போன ரகுவோட அம்மாவையும் கொரோனா விட்டு வைக்கலை, அந்த ரகுவோடவே போய் சேந்தா. ஒரு 20 நாள் இடைவெளியில் குடும்பமே நிலைகுலைந்து போனது.
முகுந்த் தன் அம்மாவிடம், ”அம்மா என் யானை எங்கே போச்சு” என்றான்.
யமுனா கண்ணீர் மல்க, ”ஆமாம் அவர் யானை முக வினாயகரா வந்து நம்மளை காப்பாத்தினார். நம் மேல அளவில்லா பாசம் பொழியறார், அவர் இல்லைன்னா சீரழிஞ்சு தெருவுல நின்னிருப்போம்.”
“ ஏம்மா, அழாதேம்மா தாத்தாவை யானைனு சொல்ல மாட்டேன்மா”
“ அதில்லைடா கண்ணா என்ன சுமை வைத்தாலும் சுணங்காமல் நடக்கும் யானை குணம் உன் தாத்தாவுக்கு இருக்கு”
அன்னிக்கு மத்யானம் சாப்பிட உக்காரறப்ப புருஷோத்தமன் மெதுவா யமுனாவை கேட்டார்,” ஏம்மா உனக்கு வயசு 25 ஆச்சா”
“ ஏன்பா என் வயசுக்கு இப்ப என்ன”
“ உனக்குனு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கறது என் கடமை இல்லையாம்மா, எனக்கப்பறம் உன்னையும் என் பாகனையும் யார் பாத்துப்பா”
“ எப்பவும் நீங்க இருக்கணும் என் கூட”
“ புஜங்கன் சொன்னான்,போடி போஸ்ட்ஆபீஸ்ல ஒரு புது பையன் சேந்திருக்கானாம் நல்ல பையன்,ஒரு தடவை பேசலாமானு கேட்டான்.”
“ போங்கப்பா என் மனசை இப்போதைக்கு வேதனை படுத்தாதீங்கோ”
புருஷோத்தமன் அப்பறம் பேசலை . வாடா என் யானைப் பாகா தாத்தா கதை சொல்றேன்னு முகுந்தை தூக்கிண்டு போனார்.
விடாது துரத்தும் விதி யாரை விட்டது. அன்று வாக்கிங் போன புருஷோத்தமனை ரெண்டு பேரா தூக்கிட்டு வந்தாங்க.
விக்கித்துப் போனாள் யமுனா. முகுந்த் சின்னப் பையன் ஒண்ணும் புரியலை, “எந்திரு தாத்தா, விளையாடலாம்”ன்றான்.
புஜங்கராவ், அந்த இளைஞன் ( போடி போஸ்ட்மேன்) கூடவே இருந்து எல்லாம் செய்தார்கள். 14வது நாள் ஹோமம் சுபம் முடிந்தவுடன் போடி போஸ்ட் மேன் யமுனாவிடம் ”நீங்க கவலைப் படாதீங்க பெரியவர் உங்க பேர்ல, உங்க பையன் பேர்ல கணிசமான தொகை என் ஆபீஸ்லதான் டிபாசிட் பண்ணி இருக்கார்.உங்களுக்கு விருப்பம்னா என் பேரண்ட்ஸை கூட்டிட்டு வந்து உங்களுக்கு அறிமுகம் பண்றேன். புஜங்கராவ் அங்கிள் மேற் கொண்டு பேசுவார்.”
முகுந்த் “ அம்மா இனிமே யானை மேல ஏறி விளையாட முடியாதா..?”
விக்கலுடன் வெளி வந்த யமுனாவின் வார்த்தைகள்…
“அந்த யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்”
நன்றி : படம் இணையத்திலிருந்து