கீதா ரெங்கன்
சக்திக்கு அன்றைய காலை இயல்பாய் விடியவில்லை. ஏதோ ஒன்று மனதைச் சூழ்ந்து அழுத்தியது.
“துரை குடும்பம் எல்லாம் வடக்க கைலாய யாத்திரை, அரித்துவாரு, ரிசிகேஷுன்னு போனாங்கல்ல? கங்கை தீர்த்தம் கொடுத்துட்டுப் போலாம்னு வந்திருந்தாங்க. மாப்பிள்ளைய அங்க பாத்தாங்களாம். இங்க வாராராம் இத்தனை வருஷம் காணாம அங்க கண்டதும் ஆச்சரியமாயி விவரம் சொல்லிட்டுப் போனாங்க. துரையும், சம்சாரமும்”
அம்மாவின் குரல் செய்தி வாசித்தது போல் இருந்தது. திருத்த வேண்டிய தேர்வு பேப்பர் எல்லாம் அவளைப் பார்த்து பயமுறுத்தியது.
கிணற்றடி சென்று பல் விளக்கி முகம் கழுவினாள். குளிர்ந்த நீர் பட்டதும் மனதின் படபடப்பு சற்று அடங்கியது போல் இருந்தது. அங்கிருந்த தோய்க்கும் கல்லின் மீது அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்த மூச்சு விட்டாள்.
ஜூர மூச்சு போல் இருந்ததோ?
தோட்டத்தின் பசுமை கொஞ்சம் இதம் தந்தது. மாங்காய், தேங்காய், முருங்கை, கொய்யா என்று அவள் ஆசையாய் நட்டு வைத்த மரங்களும், செடிகளும் சோடை போகாமல் இதோ இப்போது வரை பூத்துக் காய்த்துத் தலைமுறையை வளர்த்துக் கொண்டிருந்தன. வாழையும் குலையோடு……
‘அன்று பந்தலில் கட்டிய வாழைக்குலை! வாழையடி வாழையாய்…. அதுவே இல்லாதபோது’ ….சக்திக்குப் பெருமூச்சு எழுந்தது.
“ஏட்டி கோட்டி புடிச்சா மாதிரி இங்க வந்து இருக்க?”
‘தான் ஏதேனும் சிந்தனையில் ஆழ்ந்தாலே அம்மாவைப் பொறுத்தவரையில் கோட்டி. யாருக்குக் கோட்டி? தனக்கா?’ சக்தி சிரித்துக் கொண்டாள். விரக்திச் சிரிப்பு.
“துரை அண்ணன் எப்ப வந்திச்சு? தெரியவே இல்லை?”
“காலேல.” கொஞ்சம் நிறுத்திவிட்டு ஒரு வேளை சக்தி மாப்பிள்ளையைப் பத்தி வேறு ஏதேனும் எதிர்பார்க்கிறாளோ? என்று நினைத்த அம்மா தொடர்ந்தாள்.
“வடக்க மலைல ஏதோ ஆஸ்ரமமாம். அங்க கங்கை ஆத்து படித்தொறைல தமிழ்ப் பேச்சு கேட்டதும் துரை ஆர்வத்துல பக்கத்துல போச்சாம். மொதல்ல அடையாளமே தெரியலையாம். முடி எல்லாம் வளத்து, தாடி எல்லாமாம். அப்புறம் பாத்தா நம்ம மாப்பிள்ளைனு…. துரைக்கு சந்தோசம் அதுவும் அவரு இங்க வாரேன்னு சொன்னதும். கூடவே மாப்பிள்ளை காப்பாத்தின ஒரு சின்ன பெம்பிளை பிள்ளையாம். மாப்பிள்ளை மொகத்துல அப்படி ஒரு ஒளியாம்.
துரை சொல்லி சொல்லி முடில. நீ நல்ல உறக்கம். எழுப்ப வேண்டானு அப்புறமா வாரேன்னு போயிட்டாங்க. சரி உள்ள வா காப்பி குடிக்கியா”
‘தன் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டியவனின் முகத்தில் ஒளி!’ விரக்தி கூடியது.
‘அம்மா சொன்னது ஏதோ பக்கத்து வீட்டு விஷயம் சொல்வது போலத்தான் இருந்தது. சந்தோஷமோ, கோபமோ, வருத்தமோ எந்த உணர்வும் இருந்ததாகத் தெரியவில்லை.’
துரை அண்ணனுக்கு சக்தி மீது அத்தனை பாசம். அவள் கல்யாணத்தை முன்னின்று நடத்தியவர். தாலி கட்டும் சமயம் கண்ணில் நீர் மல்க அவளை வாழ்த்தி நின்றிருந்தவரின் முகம் இப்போதும் அவள் மனதில். அதனால்தான் அவர் இப்போது சிதம்பரத்தைப் பார்த்ததும் அவன் வருவதை அறிந்ததும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.
சக்திக்குச் சிதம்பரத்தின் மீது எந்த வெறுப்பும் இல்லை. என்றாலும் சக்தியின் மனநிலையை அவள் உணர்வுகளை யாரேனும் புரிந்து கொண்டிருப்பார்களா?
காலத்தையும் உணர்வுகளையும் கடந்து மனதை வெற்றி கொள்வது என்பது அத்தனை எளிதல்ல. சிதம்பரம் ஒரு வழியில். இவள் வேறு வழியில். சக்தி என்ற பெயர் எதை நினைத்து வைத்தார்களோ? பொருத்தமாகிப் போனதோ. 35 வருடங்கள். பெருமூச்செழுந்தது.
எந்த உறவு, உணர்வுகளிலிருந்து தன்னை மனதளவில் விடுதலையாக்கிக் கொண்டு இத்தனை வருடங்கள் இருந்தாளோ அது மீண்டும் இப்போது.
அடக்கி வைத்தக் குமுறல்களும் கோபமும் எரிமலையாய் வெடித்துவிடக் கூடாது என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா என்ன? அதை அனுபவித்தவர்களுக்குத்தானே தெரியும்.
“ஏம்மா உனக்கு எதுவும் தோணலியா இல்ல எங்கிட்ட காட்டிக்க விருப்பமில்லையா?”
“உன் கழுத்துல தாலி இருக்குல்லா?”
‘ஓ இந்த அடையாளம். 75 ஐ கடப்பவளுக்கு அவளின் நம்பிக்கைகளுக்கு இந்த சமூக அடையாளம் முக்கியம்தான்.’
சக்தியைப் பொருத்தவரையில் அது ஒரு சங்கிலியாகிப் போனது. எந்த உறவையும் பலப்படுத்தும், அடையாளப்படுத்தும் ஒன்றல்ல. மனம்தான் உறவைப் பலப்படுத்தும் அடையாளம். அவள் அனுபவம்! அவள் எத்தனை அன்புடன் காதலுடன் எதிர்பார்ப்புடன் இருந்தாள்? ஒரு மனைவியாக!
‘என்னதான் மனதால் அவனிடமிருந்து பிரிந்து இருந்தாலும் அடையாளத்தை ஏன் களையத் தோன்றவில்லை? விடையில்லை. இந்த அடையாளம் சிலவற்றிலிருந்து அவளைக் காப்பாற்றியதாலோ? இருக்கலாம்.’
“நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம்? இது கழுத்துல இருக்கனால நான் அவரு கூட போய் வாழணும்னு நினைக்கியோ?”
அம்மா பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டாள். சொல்லி இவளின் மனக்குமுறல்களைக் கிளப்பி ஆறிய புண்ணை மீண்டும் கீறி வேடிக்கை பார்க்கும் தைரியம் கிடையாது. அம்மாவும் ஒரு பெண்தானே. தன் கணவன், தன் குடும்பம் என்று வாழ்பவள்.
முருங்கையும், கறிவேப்பிலையும் பறித்துக் கொண்டு போனபடியே, “ஒன் அண்ணனும், அக்காவும் எல்லாரும் வாராங்க” என்று சொல்லிவிட்டுப் போனாள்.
‘அதுவரை செய்தி போய் தன்னிடம் பேசுவதற்கு வருகிறார்களோ? அக்கா பக்கத்தூரில்தான். வேலை நிமித்தம் அண்ணனின் குடும்பம் 3 மணி நேர தூரத்தில்.’
தினமும் அம்மாவுடன் வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் சக்திக்கு எதிலும் ஈடுபட இயலவில்லை.
“அப்பாவுக்குத் தெரியுமா?”
“இன்னும் எந்திக்கலை”. ‘பாவம். நம்பிக்கையுடன் இருந்த அப்பா பின்னர் தளர்ந்து அதிகம் பேசுவதில்லை.’
அன்று அம்மாவுடன் வீட்டு வேலையில் ஈடுபடும் மனநிலையில் இல்லை.
“கொஞ்சம் நான் கிடந்துட்டு வாரேன். நீ எதுவும் செய்யாத. நான் வந்து செய்யுறேன்.”
மனம் லேசுப்பட்டதில்லையே. வருடங்களுக்கு முன்பான தினங்களுக்கு அவளை இழுத்துச் சென்றது.
****
அவள் பெற்றோர் பெரிய படிப்பு என்றில்லை என்றாலும் பள்ளிக் கல்வி கற்றவர்கள். அப்பாவிகள். வயல், தோட்டங்கள் என்று வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. சக்தியின் திருமணம் சீரும் சிறப்புமாய்ப் பார்த்து பார்த்து நடத்தப்பட்டது.
சிதம்பரத்தின் வீட்டினரும் இவர்களின் தரத்திற்கு நிகரானவர்கள்தான்.
அவனுக்கு ஒரு அக்கா. ஒரு தம்பி. சிதம்பரம் மேற்படிப்பும் படித்து கல்லூரியில் ஆசிரியப்பணி. எனவே எல்லாம் திகைந்து வந்தது. ஜோசியம் உட்பட!
சிதம்பரம் ஏதோ சிந்தனைவயப்பட்டவனாகவே இருந்துவந்தான். சக்திக்கு வாசிக்கும் பழக்கமும் இருந்ததால், தான் அறிந்ததன் அடிப்படையில் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிலர் இப்படியும் இருப்பது உண்டுதான்.
காலப்போக்கில் மாறலாம் என்ற எண்ணம். சக்தி நன்றாகக் கவனித்துக் கொண்டாள் சிதம்பரத்தை மட்டுமல்ல புகுந்தவீட்டினர் எல்லோரையும்.
திருமணம் ஆகி ஆறு மாதங்கள் கடந்திருக்குமா? இருக்கும் ஒரு நாள் அதிகாலையில் வீட்டை விட்டுப் போனவன் திரும்பவில்லை. அதுவும் வீட்டில் எதுவும் சொல்லாமல். கக்திக்கு ஏன் என்று தெரியவில்லை. அழுகை வந்தது.
ஒரு வாரம் ஆயிற்று வரவில்லை. வீட்டினரும் விசனப்படவில்லை. சக்தி விக்கித்துப் போனாள்.
“அவென் அப்படித்தான் போவான் வருவான். என் மவன் எதுவும் தப்புத் தண்டாவுக்கெல்லாம் போறவன் இல்ல. ஏதாச்சும் கோயில்ல கிடப்பான்”
சர்வ சாதாரணமாகச் சொன்னார் மாமியார்.
‘எந்தக் கோயில் போயிருப்பான். கோயில் என்றால் தன்னையும் அழைத்துச் சென்றிருக்கலாமே! திருமணமாகி இன்னும் சரியான புரிதலே ஏற்பட்டிருக்கவில்லை. அதற்குள் இப்படி.’
சக்திக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மனம் என்னென்னவோ நினைத்தது. நெஞ்சில் பாரம் அழுத்தியது. அவன் வந்திருவான் என்று சொன்னதால் கொஞ்சம் நம்பினாள். அவள் வேறு யாரிடம் கேட்பாள்?
‘அப்படிப் போய் வருபவன் என்றால் இவர்கள் வீட்டில் ஏன் இப்படிப் போகிறான் என்று யோசித்திருக்க மாட்டார்களோ? யாருக்குமே சொல்லிச் செல்லும் பழக்கமே இல்லை என்பதும் புரிந்தது. மாமியார் உட்பட.’ சக்திக்கு இவை எல்லாமே புதுசாகவும் புதிராகவும் இருந்தது.
அவள் வீட்டிலோ பக்கத்து வீட்டிற்குச் சென்றாலும் கூடச் சொல்லாமல் யாருமே வெளியில் செல்வதில்லை.
நாட்கள் கடந்தன. சக்திக்கு இருப்புக் கொள்ளவில்லை. கவலை அதிகமாகியது.
எப்படித் தேடுவது?
வீட்டில் எந்தக் குறிப்பும் விட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. அவன் மேசை, புத்தக அடுக்குகளை ஆராயத் தொடங்கினாள். ஏதோ ரிஷிகேஷ் ஆஸ்ரமத்து புத்தகங்கள், ராமகிருஷ்ண மடத்து விவரங்கள், புத்தகங்கள். அதனிடையில் சாரதா தேவியின் வாசகங்கள் அடங்கிய சிறு புத்தகம்.
நினைவு தட்டியது. ‘திருமணம் ஆன இரு நாட்களில், திருமணத்திற்கு வர இயலவில்லை என்று ஒருவர் வீட்டிற்கு வந்து ‘ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சாரதா தேவியைப் போல வாழ வாழ்த்துகள்’ என்று வாழ்த்தி இப்புத்தகத்தைத்தானே பரிசாக அளித்தார்!’
‘அவர்களைப் போலெல்லாம் வாழமுடியுமா? சாதாரண மானிடர் நாம்.
அவரைத் தொடர்பு கொண்டால் விவரம் கிடைக்குமா? எப்படித் தொடர்பு கொள்வது?’ வீட்டினர் யாருக்கும் தெரியவில்லை. சிதம்பரத்தின் தம்பி, அக்கா உட்பட. என்ன குடும்பம் இது? ஒரு மாதம் கடந்தது.
சக்தியின் பெற்றோர் ஆடிச்சீருடன் வந்தார்கள். மாப்பிள்ளையை அழைக்கவாம். சக்தி என்ன சொல்வாள்? மெதுவாக விஷயம் அறிந்து வாயடைத்துப் போனார்கள். பேச்சு எழவில்லை. அம்மா, சக்தியிடம் யாரும் அறியாத வண்ணம் மெதுவாகக் கேட்டாள்.
“நீ மாப்பிள்ளை கிட்ட எதமா நடந்துக்கிட்டியா? அவருக்கு மனசு நோவாம? உங்களுக்குள்ள எல்லாம் நல்லா இருந்திச்சா”
சக்திக்குப் புரிந்தது அம்மா எதைக் கேட்கிறாள் என்று. ‘அம்மாவுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.’ “ம்” என்று ஒற்றை எழுத்தில் பதில் சொன்னவளுக்கு அப்போதுதான் சிலது மண்டையில் உரைக்கத் தொடங்கியது.
“மணவறையில உக்காருவானா மாட்டானோன்னு எல்லாரும் பயந்துக்கிட்டிருந்தோம். எப்படியோ எல்லாம் நல்லா முடிஞ்சுருச்சு” என்று யாரிடமோ, திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் வீட்டில் மறுமழுச்சி நடந்த போது சிதம்பரத்தின் அத்தை சொல்லிக் கொண்டிருந்தது. ‘அப்படியானால் அவன் சம்மதம் இல்லாமல் இது நடக்கவில்லை. அல்லது வற்புறுத்தல்?’
‘அவனுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பது அவன் விருப்பம். இல்லறத்தில் இருந்தும் கடைப்பிடிக்கலாம்! இல்லறம் விருப்பமில்லை என்றால் திருமணம் வேண்டாம் என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். பெற்றோரிடம் சொல்லத் தயக்கம்? இப்படிச் சொல்லாமல் போகும் தைரியம் இருப்பவனுக்கு பெற்றோரிடம் சொல்ல என்ன தயக்கம் இருந்திருக்க முடியும்?’
‘அவன் தன்னிடம் இரவின் தனிமையில் வந்தது?’ எங்கோ வாசித்த நினைவு வந்தது. ஆன்மீகத் தேடுதல் இருந்தாலும் உடல் ரீதியான உணர்வுகள் சிறு காலமேனும் சிலருக்கு இருக்கும் என்று. ஓ! அதைத் தீர்த்துக் கொள்ள வேறு விதத்தில் செல்லவும் மனம் இடம் கொடுக்கவில்லை என்பதால் திருமணம்?’
‘தாம்பத்தியம் இல்லாத திருமணம் அபூர்வமே. அப்படியான தாம்பத்தியத்திலும் அன்பும் புரிதலும் கலந்து இருந்தால்தானே அதற்கு அர்த்தம் உண்டு! இல்லை என்றால் அது வெறும் உடல் சார்ந்த உணர்வு, காமம் மட்டுமே என்று வேறு பெயர்தானே அர்த்தமாகிப் போகிறது! ஆன்மீகத் தேடல் என்று சிந்திக்கும் மனதிற்கு இப்படி மனைவியாக்கிய பெண்ணை விட்டுப் போவது நியாயமற்றது என்று தோன்றாதோ?’
அவளுக்கு ஏனோ அருவருப்பு ஏற்பட்டது. எண்ணங்கள் வலுப்பெற்று அவளை உந்தித் தள்ளின.
“அம்மா நான் நம்ம வீட்டுக்கு வந்துடறேன். எனக்கு இங்க இருக்க வேண்டாம்”
“ஏய் என்ன பேச்சு பேசுதே. சும்மாரு. மாப்பிள்ளை வந்துருவாருன்னு ஒன் மாமியார், மாமனார் சொல்லுறாங்கல்ல. அப்ப நீ நம்ம வீட்டுக்கு வரது நல்லாருக்காது. பொறுமையா இரு”
“கல்யாணம் கழிஞ்சு 6 மாசமாவுது. இன்னும் குளிச்ச்சிட்டுதான் இருக்கா.. “
காப்பி, பலகாரம் கொடுத்துக் கொண்டே போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றாள் மாமியார்.
‘எப்படி இப்படி இவர்களால் நாக்கில் நரம்பில்லாமல் பேச முடிகிறது? தன் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில்? நல்லகாலம்!
எதுவுமில்லை.’ சக்திக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
அவன் விட்டுப் போனதுக்கும் இவள்தான் காரணம் என்பது போல பேச்சுக்கள் பேசப்பட்டன. இவளுக்கு அவனை முடிந்து வைத்துக் கொள்ளத் தெரியவில்லையாம். வேண்டாத பேச்சுகள் வேறு எழுந்தது அவளுக்கு அருவருப்பு கூடியது. எப்படி இவர்களிடம் சொல்லுவது? புரிந்து கொள்வார்களா? யாரிடம் பேசித் தீர்வு காண்பது? துக்கம் நெஞ்சைப் பிசைந்தது.
அம்மா, அப்பா விடை பெற்றார்கள். அப்பா எதுவும் பேசவில்லை. அவளைப் பார்க்கும் திராணியும் இல்லை அவருக்கு. சற்றுத் தள்ளாடினாரோ? சக்திக்கு ஒரு புறம் வருத்தம், அழுகை. மறுபுறம் தன் பெற்றோர் ஒரு கேள்வி கூடக் கேட்காமல் செல்கின்றனரே என்ற கோபம். இப்படியும் அப்பாவிகளா என்ற வருத்தம்.
தலைதீபாவளியும் நெருங்கியது. சிதம்பரம் வந்தானில்லை. தேடினார்கள்.
போலீஸுக்கோ, டிவியிலோ, நாளிதழிலோ சொல்லித் தேடுவதை வீட்டினர் விரும்பவில்லை. ரிஷிகேஷ் ஆஸ்ரமத்தையும், ராமகிருஷ்ண மடத்தையும் அவளுக்குத் தெரிந்த வகையில் சக்தி தொடர்பு கொண்டாள். பலன் இல்லை.
சக்தியால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அழுது அழுது மனம் பாறையாகிக் கண்ணில் நீர் வற்றியே போனதுதான் மிச்சம்.
‘அம்மாவும் அப்பாவும் எத்தனை மனமுடைந்து போனார்கள்? ஊராரின், சுற்றத்தின் கேள்விகளும் பேச்சுகளும்!’
தலைதீபாவளிச் சீருடன் மீண்டும் சக்தியின் பெற்றோர் வந்தனர். இம்முறை அவள் அண்ணனும், அக்காவும் கூட வந்திருந்தனர் அவளுக்குச் சௌகரியமாயிற்று. அண்ணனிடமும், அக்காவிடமும், தான் இனி இங்கிருக்க முடியாது என்றும் வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் தீர்மானமாகச் சொன்னாள்.
“மாப்பிள்ளை திரும்ப வந்தாருனா?”
“அப்ப பார்த்துக்கிடலாம்”
அப்பாவின் காதில் அது சொல்லப்பட்டது. அப்பா சிதம்பரத்தின் பெற்றோரிடம் மெதுவாக இங்கிதத்தோடு சொன்னார்.
“சக்தி கொஞ்ச நாள் எங்க கூட வந்து இருக்கட்டுமா?”
கேள்வி கேட்கத் தெரியாத மனிதர். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.
“கூட்டிட்டுப் போங்க. எனக்கென்ன? ஆனா சிதம்பரம் வந்திடுவான்.”
“மாப்பிள்ளை வந்ததும் கண்டிப்பா நாங்க அவளை இங்க கொண்டு விடறோம்மா”
“கோர்ட்டுக்கு எல்லாம் போக………” மாமியார் முடிப்பதற்குள்…
“ஹையோ! எங்க பொண்ணு வாழ்க்கை முக்கியம்மா. அப்படிச் செய்வமா? மாப்பிள்ளை வந்திருவார்னு நம்பிக்கை இருக்கு”
‘அவனே இல்லாத போது கோர்ட்டுக்கு எங்கே போவது? அவன் வந்தால் இங்குதான் அவள் வரப் போகிறாள்.’ சக்தி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
சக்தி பிறந்த வீட்டிற்கு வந்ததும் செய்த முதல் வேலை மேற்கொண்டு படிப்பதற்கான முயற்சிகள். எம்ஃபில், எம்மெட் என்று முடித்தாள். சிதம்பரம் வரவில்லை. பள்ளியில் ஆசிரியை வேலையிலும் சேர்ந்தாள். சிதம்பரம் வந்ததாகத் தெரியவில்லை.
எத்தனையோ வேண்டுதல்கள், பிரார்த்தனைகள். ஆனால் காலத்தின் கணக்கு வேறாகி இருக்கும் போது மனிதர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் காலத்தின் கணக்கு ஒத்துப் போனால் நிறைவேறும் இல்லையேல் இல்லை. ஆனால் பிரார்த்தனைகளின் பின் ஒளிந்திருக்கும் அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை வண்டி குடை சாயாமல் ஓட்டிச் செல்ல ஆசுவாசப்படுத்தி உதவும்.
அப்போது போலீஸுக்குத் தகவலும், தேடுவதற்கான அறிக்கையும் கொடுத்துப் பார்த்தார்கள். சிதம்பரம் என்ன ஆனான் என்பதற்கான எந்தத் தகவலும் இல்லை. அதன் பின் இரு வீட்டாரும் அமைதியானார்கள். சிதம்பரம் வீட்டினருடனான தொடர்பும் விட்டுப் போனது.
விதி என்றனர். தப்பிப்பதற்கு அல்லது மனதைச் சமாதானம் செய்து கொள்ள நல்லதொரு வார்த்தை. சக்தியின் வாழ்க்கை?
அம்மாவும் அப்பாவும் நடமாடிக் கொண்டிருந்தாலும் ஏதோ என்று ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அடி மனதில் விரக்தி என்று கூடச் சொல்லலாம்.
சில விஷயங்கள் அந்தந்தக் காலக்கட்டத்தில் நடந்திட வேண்டும். இல்லையேல் அதற்குப் பயனில்லாமல் போய்விடும். போனவன் போனவன்தான் என்றாகிப் போனது.
வருடங்கள் கடந்தன. அவள் பெற்று சீராட்டி வளர்க்க நினைத்து காலடி வைத்தது பொய்யாகிப் போனாலும், தற்போது அவளது கவனிப்பில் பல ஆதரவற்ற பிள்ளைகள் அவளை அம்மா என்று அழைத்துக் கொண்டு.
குறிப்பாகப் பெண் பிள்ளைகள்.
****
இதோ இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவன் வருகிறான் என்ற செய்தி. ஒரு பெண் குழந்தையுடன். அன்று ஏதோ ஒன்றிற்காக…., இப்போது குழந்தைக்காக? சக்திக்கு இருந்த கோபம் வருத்தம் எதுவும் தற்போது இல்லை
அதனால் வெறுப்பும் இல்லை. எத்தனையோ குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவள் இக்குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு மாட்டேன் என்பாளா என்ன?
அண்ணனும், அக்காவும் வந்த சத்தம் கேட்டு எழுந்து வந்தாள். விசாரிப்புகள் முடிந்து, எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் அக்காவும் அண்ணனும் அவள் என்ன முடிவு எடுப்பதாக இருக்கிறாள் என்று கேட்டார்கள்.
இத்தனை வருடங்கள் யாரும் இதைப் பற்றிப் பேசவில்லை. இப்போது மட்டும் என்ன?
“என்ன சொல்ல இருக்கு? வந்தார்னா பாத்துக்கலாம். இத்தனை வருஷத்துல என்ன முடிவு எடுத்தோம்? காலம் போற போக்குலதானே போயிட்டுருக்கோம்”
காலம் போற போக்குன்னா அப்ப மாப்பிள்ளையோடு போய் வாழலாம் என்ற முடிவு போல.
“எல்லாரும் கொஞ்சம் சும்மாருங்க. மாப்பிள்ளை என்ன நினைச்சு வாரார்னு தெரியாம சும்மா சக்திய போட்டு குடைஞ்சுகிட்டு. எங்க காலத்துக்கப்புறமும் சக்தி நல்லாருக்கணும் அவ யோசிச்சு முடிவு எடுக்கட்டும். என்ன முடிவு எடுத்தாலும் சரிதான்..” – அப்பா
துறவு வாழ்க்கை வாழ்பவனோடு, தன் குடும்பமும், அவன் குடும்பமும் எதிர்பார்ப்பது போல் இனி வாழ முடியுமா? எல்லோரும் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும்.
புரிந்து கொள்வதற்கு முன்னரே பிரிந்து போனவன்…. இப்போது என்ன பேச இருக்கிறது? பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோன்னு கம்ப இலக்கியம் சொல்லும் தெய்வீகக் காதலா என்ன?
சக்தியின் அப்பா அவள் முகத்தைப் பார்த்தார். அவர் கண்ணில் நீர் இருந்ததை சக்தி காணத் தவறவில்லை.
அவள் பேசவில்லை. சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டு தன்னை அமைதியாக்கிக் கொண்டாள்.
“நான் குழந்தைய நல்லா பார்த்துக்குவேன். எந்தப் பிரச்சனையுமில்லை.”
சக்தி மீண்டும் கண்களை மூடிக் கொண்டு அமைதியாகி, நிமிர்ந்தாள். மிக அமைதியான குரலில் அழுத்தமாக “எனக்கு இப்ப கோபம், வருத்தம், எதுவும் துளிக் கூட இல்லை. ஆனா…” நிறுத்தி மீண்டும் நிதானித்தாள்.
இத்தனை வருடங்கள் அவள் மனதினடியில் புரண்டு கொண்டிருந்தது மேலெழும்பியது.
“அவர் அன்னிக்குச் சொல்லாம கொள்ளாம ‘தேடல்’னு போனாப்ல நான் போயிருந்தா எல்லாரும் என்ன சொல்லிருப்பாங்க? என்ன ஆகியிருக்கும்?”
சட்டென்று அங்கு பேரமைதி நிலவியது.
****
(இந்தக் கதை எங்கள் பிளாக் வலைப்பூவில் செவ்வாய் தோறும் வெளியாகும் ‘கேட்டு வாங்கிப் போடும் கதை’ பகுதியில் வெளியானது. எங்கள் பிளாக்குக்கு நன்றி)
நன்றி : படம் ஓவியர் திருமதி. ‘முத்துச்சிதறல்’ மனோ சாமிநாதன்